Published:Updated:

நுனியில் பிரம்மன், அடியில் சிவபெருமான், நடுவில் நாராயணன்... துளசியின் சிறப்புகள்!

நுனியில் பிரம்மன், அடியில் சிவபெருமான், நடுவில் நாராயணன்... துளசியின் சிறப்புகள்!
நுனியில் பிரம்மன், அடியில் சிவபெருமான், நடுவில் நாராயணன்... துளசியின் சிறப்புகள்!

துளசி என்றால், ஒப்பில்லாதது என்று பொருள். துளசி இலையின் நுனிப்பகுதியில் பிரம்மனும், அடிப்பகுதியில் சிவபெருமானும் , நடுவில் நாராயணனும் வசிக்கிறார்கள். அதுபோக பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினொரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், இரு அசுவனித் தேவர்கள் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்கள் அனைவரையும் போற்றி வழிபடவே, வீடுகளில்  மாடம் வைத்து துளசிச் செடியை வணங்கி வருகிறோம். மேலும் எல்லா ஜீவ‌ராசிக‌ளும் சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசித்து ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ தாத்ப‌ரிய‌த்திலேயே இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் கடைப்பிடிக்கப்படுகிறது.

துளசி மாடம் வீட்டின் வாசல்பகுதி, முற்றம், கொல்லைப்புறம் ஆகிய காற்றோட்டமிக்க இடங்களில்தான் இருக்க வேண்டும். இதை  அபிஷேக நீர், புனித தலங்களில் கிடைக்கும் தீர்த்தங்கள், மற்றும் பால் ஊற்றி வளர்க்க வேண்டும் .

காலை மற்றும் மாலையில் விளக்கேற்றி பூஜை செய்து மனமுருகி வேண்டிக்கொண்டால், நினைத்தது நிறைவேறும். மாடத்துக்கு நாம் பூஜை செய்யும்போது, வேறொரு துளசிச் செடியில் பறித்த துளசி இலைகளைக் கொண்டுதான் பூஜிக்க வேண்டும். துளசிச் செடி உள்ள வீடுகளில் எந்த துஷ்ட சக்தியும் உள்ளே நுழையாது.

வைணவ ஆலயங்களில் மூலவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும். நமக்கு தீர்த்தமாகவும் துளசி நீர் தீர்த்தமே தரப்படுகிறது. பூஜை முடிந்த பின்பு நமக்கு பிரசாதமாகவும் கிடைக்கும். இதில் இருந்தே நாம் இதன் மகத்துவத்தை அறியலாம். துளசியின் மகிமையை அந்த கிருஷ்ண பரமாத்மாவே உணர்த்திய சிறுகதையைப் பார்ப்போம்.

ஒருமுறை சத்தியபாமா தன்னை விட்டு கிருஷ்ணன் பிரியாமல் இருக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் நாரதர் அங்கு வரவே நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதரோ, 'கிருஷ்ணனை யாருக்காவது தானமாகக் கொடு' பின்னர் நீ ஏதேனும் பொருள் கொடுத்து, அவர்களிடம் இருந்து திரும்பி வாங்கிக்கொள். இப்படிச் செய்தால், கிருஷ்ணன் இறுதிவரை உன்னுடனே இருப்பான் என்றார். உடனே சத்தியபாமா 'உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானம் தருகிறேன்' என்று நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தார்.

நாரதர் சத்யபாமாவிடம், 'கிருஷ்ணனை நான் உனக்கு மீண்டும் தர வேண்டும் எனில் நவரத்தினங்களையும் தங்கத்தையும் எனக்குத் தர வேண்டும்' எனக் கேட்டார்.

'சரி' என்று ஒப்புக்கொண்ட சத்தியபாமா எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும், கிருஷ்ணன் இருந்த தராசுத் தட்டு மேலே வரவில்லை.

அந்த நேரம் அங்கு வந்த ருக்மணி தேவி, 'என்ன செய்யலாம்?' என்று நாரதரிடம் வருத்தத்துடன் கேட்டாள். நாரதரும், 'விலைமதிப்பில்லாத ஒரு பொருளை இரண்டாவது தட்டில் வைத்தால், கிருஷ்ணர் இருக்கும் தட்டு சமநிலைக்கு வரும்' என்றார். ருக்மணிதேவியும், 'கிருஷ்ணார்ப்பணம்' என்று துளசித் தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுகளும் சமமாயின. துளசியின் மகிமையை அனைவருக்கும் உணர்த்த கிருஷ்ண பரமாத்மா, நாரதருடன் இணைந்து நடத்திய நாடகமே இது.

துளசிக்கு இருக்கும் மருத்துவ குணங்கள்:

அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால், அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம்.

துளசிச் செடி காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுகிறது.

வீட்டில் வளர்ப்பதால், நமக்கு நல்ல காற்றும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கிறது.

துளசி இலையைப் பறித்து, அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளித் தொந்தரவுகள் குறையும்.

குழந்தைகளுக்கு இது சஞ்சீவி மருந்து. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலைப் போக்கவல்லது.

துளசி இலையைப் பறிக்கக் கூடாத நாட்கள் :

அமாவாசை, பௌர்ணமி, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் பறிக்கக் கூடாது. கிரஹண காலங்கள், மதியம், மாலைவேளை மற்றும் இரவு நேரங்களில் பறிப்பதைத் தவிர்க்கவும். சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில்  பறிக்கக் கூடாது. இலையை நகங்களால் கிள்ளக் கூடாது.

துளசித் தீர்த்தமானது கங்கைக்கு நிகரானது, அதனால்தான் மும்மூர்த்திகளும், தேவர்களும் துளசியில் வாசம் செய்கிறார்கள். பெண்கள் துளசி மாடம் வைத்து, தினமும் பூஜை செய்து வந்தால், தீர்க்க சுமங்கலிகளாக வாழலாம். நம் முன்னோர்களும் புராணங்களும் நமக்குக் காட்டிய வழியில் துளசியை நாளும் வணங்கி நன்மைகள் பெறுவோம்.