Published:Updated:

திருமலை - திருப்பதிக்குப் புகழ் சேர்த்த மாமணிகள்!

திருமலை - திருப்பதிக்குப் புகழ் சேர்த்த மாமணிகள்!
திருமலை - திருப்பதிக்குப் புகழ் சேர்த்த மாமணிகள்!

திருப்பதி என்றதுமே நம் மனதில் உற்சாகப் பெருவெள்ளம். அதைத் தொடர்ந்து பல வித எண்ணங்கள். திருப்பதி ஏழுமலையானின் மீது மாறாத பாசமும் பக்தியும் கொண்ட தெய்வங்கள், மகான்கள், மாமுனிகள், மனிதர்கள் என்று பலரும் நம் நினைவுகளில் வந்துபோவார்கள். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு புகழ் சேர்த்த நன்மணிகள் பலரும் உண்டு. அவர்களில் நம் நினைவுகளில் தவறாது இடம் பிடிக்கும் திருமலை - திருப்பதிக்குப் புகழ் சேர்த்த மாமணிகள் யார் யார் என்று பார்ப்போம்.

பத்மாவதி தாயார்: ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் பிறந்ததால், பத்மாவதி என்று அழைக்கப்பட்டார். சீனிவாசனாக பிறவி எடுத்த  வெங்கடேசப் பெருமாள் இவரை மணப்பதற்காகத்தான் குபேரனிடம் கடன் பெற்றார் .

ஆகாசராஜன்: புராண காலத்தில் திருப்பதி பகுதியை ஆட்சி செய்தவர். இவர் மகளாகத்தான் பத்மாவதி தாயார் வளர்ந்து வந்தார். 
வகுளாதேவி: யசோதையின்  மறுஅவதாரமாக வகுளாதேவி பார்க்கப்படுகிறார். சீனிவாசன் இவரது ஆசிரமத்தில்தான் தங்கி இருந்தார். இவர் சமைத்த உணவைத்தான் விரும்பி சாப்பிடுவார். இன்னமும் திருமலையில் இருக்கும் மடப்பள்ளியில் இவரது திரு உருவச்சிலை வைக்கப்பட்டிருக்கும். இவரது மேற்பார்வையில்தான் நைவேத்தியத்துக்கு உரிய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆண்டாள்: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் மகிமையைப் போற்றும் வண்ணம் இப்போதும் பிரம்மோத்ஸவத்தின் போது ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு அணிந்த மாலையை கொண்டுவர அதை பெருமாள் பரம சந்தோஷத்துடன் அணிந்து கொள்கிறார். ஆண்டாளின் மேன்மையான பக்தியைப் போற்றும் விதமாக மார்கழி மாதத்தில் சுப்ரபாதம் இசைக்கப்படுவதில்லை அவரது திருப்பாவை மட்டுமே பாடப்படுகின்றது.


தொண்டைமான் சக்கரவர்த்தி: திருப்பதி ஏழுமலையான் குடி கொண்டிருக்கும்  ஆனந்த நிலையம், தங்கத்தகடுகளால் ஜொலிக்கும் பேரழகு, எல்லோரையும் கவரும் ஓர் அரிய அம்சம். அந்த ஆனந்த நிலையத்தை அமைத்தவர் தொண்டைமான் சக்கரவர்த்தி.

ஶ்ரீராமாநுஜர் :  திருமலையில் வெங்கடேசப் பெருமாளுக்கு  வைகானாஸ முறைப்படி ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் அத்தனை பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்குக் காரணம் இவரே. உடையவர், யதிராஜர் எனப் பலராலும் அன்போடு அழைக்கப்படும் இவர், திருமலை முழுவதும் பெருமாளே என்று அபிப்பிராயமும் நம்பிக்கையும் உள்ளவர். அதனால் இவர் முழங்காலிட்டுதான் திருமலைப் படிகளைக் கட்ந்து வந்து சாமி தரிசனம் செய்தார். இப்போது நடக்கும் ஆர்ஜித சேவைகள், பிரமோத்ஸவம் எல்லாமே இவரது கட்டளைப்படியே நடந்து வருகின்றன.

திருமலைநம்பி: ஶ்ரீராமாநுஜரின் தாய்மாமன். அவருக்கு ஆசிரியராக இருந்து பலவற்றையும் கற்றுத்தந்தவர். கோவிந்தப் பெருமாளின் மேல் மாறாத பக்தி கொண்டவர். பெருமாளின் அபிஷேகத்துக்கு உரிய புனித நீரை தினமும் ஆகாச கங்கையிலிருந்து  சுமந்து வந்து பூஜித்தவர். ஶ்ரீராமாநுஜரால் வைகானஸ ஆகம முறைப்படி திருமலையில் இன்று வரை நடைபெறும் கைங்கர்யங்களுக்கு காரணகர்த்தா இவர்தான்.


குலசேகர ஆழ்வார்: செடிகொடிகள் போல அடர்ந்திருக்கும் தீய வினைகளை அகற்றும் திருமாலே! உன் கோயிலின் வாசல் படியாகக் கிடந்து, அடியவர்களும் வானவரும், அரம்பையரும் ஏறி இறங்கும் படியாகக் கிடப்பேன் என பாசுரங்கள் பாடி பெருமாளின் அன்பைப்பெற்றவர். 

கிருஷ்ண தேவராயர் : விஜய நகர பேரரசர். வெங்கடேசப் பெருமாளின் பரம பக்தர். இவர் வழங்கிய நகைகளும் நன்கொடைகளும் இன்றளவும் திருப்பதியின் பெரும் சொத்தாகத் திகழ்கின்றன. ஆந்திராவிலிருக்கும் நாகலாபுரம் இவரது தாயார் பிறந்த ஊராகும். திருப்பதி வெங்கடேசப்பெருமாளின் பெருமையை நிலைநாட்டும் விதமாக, இவரது ஆட்சிகாலத்தில், தமிழகத்திலும்,ஆந்திராவிலும் கட்டப்பட்ட பெருமாள் கோயில்களின் எண்ணிக்கை ஏராளம். வைணவம் தழைக்க இவர் ஆற்றிய பணிகள் அளவிடமுடியாதவை.

அன்னமய்யா: -  தாளப்பாக்கம் அன்னமய்யாவின் கீர்த்தனைகள் பெரும்புகழ்பெற்றவை. பெருமாளின் மீது பக்தி ரசம் சொட்டும் 32 ஆயிரம் கீர்த்தனைகளைப் பாடியவர்.

தரிகொண்ட வெங்கமாம்பா:- பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தவர். அன்று தொடங்கிய அன்னதானம் தங்கு தடையின்றி இன்றுவரை நடந்து வருகிறது. ஒருநாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.

ஹாதிராம் பாவாஜி: கடவுளைத் தேடி வட இந்தியாவிலிருந்து வந்தவர். திருமலையிலிருப்பவரே தெய்வமென தங்கிவிட்டார். திருமலை இன்று லட்சக்கணக்கான மக்கள் செல்லுமிடமாக இருக்கிறது. ஒரு காலத்தில் இவரது ஆசிரமத்தைப் பார்க்க பெரும் கூட்டம் சென்றுவந்தது.

பிரதிவாதி பயங்கரம் அண்ணன்: - திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு சுப்ரபாதம் இயற்றிப் பாடியவர்.   மணவாள மாமுனிகள் கேட்டுக்கொண்டதற் இணங்க  73 ஸ்லோகங்களாக சுப்ரபாதத்தைப் பாடினார். சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி :-  இவர் பாடிய சுப்ரபாதத்தில் மயங்காதவர் யார்? விடியற்காலையில் இதைக்கேட்டால் மனம் எங்கிருந்தாலும் பெருமாள் வசம் வந்து சேரும். சுப்ரபாதம் பாடல் அடங்கிய ரெக்கார்டர்கள், கேசட்டுகள், சிடிக்கள்விற்பனையின் மூலம் கிடைத்த கிடைக்கும் பணம் அனைத்தையும் பெருமாளுக்கே காணிக்கையாக்கினார். கோடிகளைத் தாண்டிய அந்தப் பணம் முழுவதும் பெருமாளுக்கும் அவர்தம் பக்தர்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது. ஆந்திர அரசாங்கம் இவரது சேவையைப் பாராட்டி, இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக திருப்பதியில் சிலை அமைத்து மரியாதை செய்துள்ளது,

கண்டசாலா:  திரைஉலகின் கறுப்பு வெள்ளை காலத்தில் எடுக்கப்பட்ட வெங்கடேசப் பெருமாளைப் பற்றி இவர் பாடிய பாடல்கள் ஏக பிரசித்தம். திருமலையில் பங்காரு வாகிலியைத் (தங்க நுழைவாயில்) தாண்டி அங்கேயே அமர்ந்து பாடல்கள் பாடும் பேறு பெற்றவர். இவரது பகவத் கீதை  உரை கேட்பதற்கு அத்தனை அற்புதமாக இருக்கும், இன்றும் திருமலையிலும், அதன் மலைப்பாதையிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டே படியேறுவது மற்று மொரு சுவாரஸ்யம். கண்டசாலாவின் குரல் கந்தர்வக் குரல் கேட்கும்போதே நம்மை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச்செல்லும் வலிமை வாய்ந்தது.


என்.டி.ராமராவ்: - திருப்பதிக் கோயில் பெருமையை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தார். திருப்பதி என்றாலே, ஆந்திர மக்களும், தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சில சமூகத்தினரும் சென்று வந்த நிலையில் அவரை மக்கள் தெய்வமாக்கி எல்லோரிடமும் கொண்டுபோய் சேர்த்த பெருமை இவருக்கு உண்டு,

திருப்பதி போய் வர நிறைய செலவாகுமே என்ற நிலையை மாற்றினார். இலவச லாக்கர், இலவச தங்கும் இடம், இலவச கழிப்பிடங்கள், இலவச காலணிகள் பாதுகாக்குமிடம், இலவச முடிகாணிக்கை செய்யுமிடம்,  இலவச தரிசனம், இலவச லட்டு பிரசாதம், இலவச அன்னதானம் என அனைத்தையும் இலவசமாக வழங்கி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணியை விரிவாக்கி அதற்கு பெருமை சேர்த்தவர். ஏழைகள் பயனடையும் வகையில், திருமலையில் கிடைக்கும் அனைத்து இலவசங்களுக்கும் காரணம் இவரே.