Published:Updated:

1000 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணாசிரமத்தை உடைத்துபோட்ட ராமாநுஜர்!

1000 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணாசிரமத்தை உடைத்துபோட்ட ராமாநுஜர்!
1000 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணாசிரமத்தை உடைத்துபோட்ட ராமாநுஜர்!

1000 ஆண்டுகளுக்கு முன்பே வர்ணாசிரமத்தை உடைத்துபோட்ட ராமாநுஜர்!

மதங்களையெல்லாம் கடந்து மனித உறவுகளுக்கும் மனிதநேயத்துக்கும் மதிப்பளித்த மகான் ராமாநுஜர் 1,000 வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவம் ஒன்றை ஆன்மிக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ராமாநுஜர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல; பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று, அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய பூஜை நெறிமுறைகளை உண்டாக்கியவர். தற்கால வைணவ நடைமுறைகளை உருவாக்கி, சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றுக்கும் கருத்துச் செறிவுடன் உயிர் கொடுத்தார். இவர் வகுத்துக் கொடுத்த கோயில் நடைமுறைகள்தான் திருமலையிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.

திருவரங்கம் கோயில் நிர்வாகம், வைணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி, பலருக்கும் முன்மாதிரியாகத் திகழந்தார். திருவரங்கம் கோயில் உடைமைகளை சிறப்புற மீட்டெடுத்து நிர்வாகம் செய்ததால், ராமாநுஜரை உடையவர்’ என்றே இன்றும் அவரை அன்போடு அழைக்கின்றோம்.

வைணவத்தின் வளர்ச்சி!

ராமாநுஜர் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் நிலைநாட்டினார். வாதபிரதிவாதங்கள் புரிந்தவர்களை எளிதில் வென்று வைணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மிகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மிகத் தலைவர்களாக்கினார். இது அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய புதிய சிந்தனையாகவும் செயல்பாடாகவும் பார்க்கப்பட்டது. திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்துக்கு மடாதிபதியாக வருவதற்கு வேண்டிய விதிமுறைகளை வகுத்து வழங்கினார்.

சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களிடமும் தாழ்த்தப்பட்ட மக்கள் என சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதும் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டு வர்ணாசிரமத்தை உடைத்துப்போட்டார். எல்லாம் மக்களிடமும் ஒரே மாதிரியான அனபையும் கனிவையும் காட்டியதால், அவரை திருக்குலத்தார் என்றே அழைக்கலானார்கள்.

உங்களைத் தொட்டால்தான் தீட்டு...

உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை!

ராமாநுஜர் ஆற்றில் குளிக்கச் செல்லும்போது நடப்பதற்கு சிரமமாக இருந்ததால், பிராமண சீடர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு நடந்து செல்வார். ஆனால், குளித்துவிட்டு கோயிலுக்குப் போகும் போது மறந்தும் அவர்கள் தோளில் கை போட்டுக்கொண்டு நடக்க மாட்டார். தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லியின் தோளில் கை போட்டபடியே மகிழ்ச்சியோடு நடந்துசெல்வார். ராமாநுஜரின் இந்தச் செயல் அந்தணச் சீடர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் வேண்டுமென்றே ராமாநுஜர் குளித்து விட்டு வரும் சமயம் உறங்காவில்லியை வரவிடாமல் அவர்கள் தடுத்து விட்டனர். பிராமண சீடர்கள் ஓடிப் போய் ராமாநுஜருக்குத் தோள் கொடுத்தனர். ராமாநுஜர் தனது மேல் துண்டை, தண்ணீரில் நனைத்து ஈரமாக்கி சீடர்களின் தோள் மேல் போட்டு அதன் மீது கை வைத்து நடந்தார். ‘ஈரத்துணியை ஏன் எங்கள் மேல் போட்டீர்கள்? என்று அவர்கள் கேட்டதும், “ உங்களைத் தொட்ட தீட்டு வராமல் இருக்கத்தான். இப்படிச் செய்தேன்” என்றார்.

“தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த உறங்காவில்லியைத் தொட்டால் தீட்டு இல்லை. உயர்ந்த ஜாதியில் பிறந்த எங்களைத் தொட்டால் தீட்டு வருமா?” என்று குமுறினர்.

“உயர்ந்த ஜாதி என்கிற அகம்பாவம் உங்களுக்கு இருக்கிறது. உங்களைத் தொட்டால் அது எனக்கு வந்துவிடும். உறங்காவில்லிக்கு அந்த அகங்காரம் இல்லை. அடக்கமும் பண்பும் அவனிடம் உள்ளது. அவனைத் தொட்டால் எனக்கு அந்த அடக்கம் வரும் அல்லவா? என்று முகத்திலடித்தாற் போல் கூறிவிட்டு நடந்து சென்றார்.

இத்தனைத் துணிச்சலுடனான செயலை அவர் 1000 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார் என்றால், அதனால்தான் அவர் எம்பெருமானார் என அழைக்கப்படுகிறார். எல்லோருடைய அன்புக்கும் காரணமாக இருப்பதால் அவர் எம்பெருமனார்.

படம்: காவல்கேணி வெங்கடகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு