Published:Updated:

தொழிலாளர்களின் உரிமையை ரட்சித்தவர் இயேசு..! #MayDay

2000 ஆண்டுகளுக்கு முன்பே ஏங்கல்ஸைப்போல், கார்ல் மார்க்ஸைப் போல் லெனினைப்போல் சிந்தித்த கம்யூனிசச் சித்தாந்த பொருளாதாரமேதை ஒருவர் உண்டு. 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாத நிலை என்றும் வரவேண்டும்' என போதித்தவர். புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகவே போராடிய உலகின் முதல் கம்யூனிஸ்டு இயேசு நாதர்!

உலகின் போக்கை மிகப்பெரிய அளவில் திசை மாற்றிப்போட்டவர்கள் என்று மூன்று பேரை மட்டும்தான் பட்டியலிட்டுச் சொல்வார்கள். 

1) மனித சமூகப் பரிணாம வளர்ச்சியியலின் தந்தை சார்லஸ் டார்வின் 
2) விஞ்ஞானத்தின் வியப்பான விதியை வகுத்தளித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 
3) சமூகப் பொருளாதார இயலின் தந்தை கார்ல் மார்க்ஸ். 
இவர்கள் அளித்த விந்தைமிக்க கோட்பாடுகள் உலகம் முழுவதுமுள்ள அறிவுஜீவிகளை ஒருசேர அசைத்துப்பார்த்தவை. ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்பாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித சமூக மேம்பாட்டுக்காகச் சிந்தித்தவர். `இரண்டில் ஓர் அங்கியைக் கொடு...' - இயேசுநாதர் தன் மலைப்பிரசங்கத்தின்போது ஆற்றிய உரைகள் காலத்தால் செதுக்கப்பட்ட வைர வரிகளாக இன்றளவும் திகழ்கின்றன.

'உன்னிடம் இரண்டு அங்கிகள் இருந்தால், அதில் ஓர் அங்கியை உன் சகோதரனுக்குக் கொடு' என்கிறார். அப்படிச் சொன்னதோடு நிற்காமல், பொதுமக்களிடம் அதை தொடர்ந்து போதித்தார்; சாகும்வரை போதித்தவர். மறித்து உயிர்த்தெழுந்தபோதும் போதித்தார். அவரே இன்னொரு இடத்தில் சொல்கிறார். உன் சகோதரன் உன்னை 7 மைல்தூரம் தன்னுடன் கூட வர வேண்டுமென அழைத்தால்... அவனோடு ஏழெழுபது முறை சென்று வா என்கிறார்.
 
சகலருக்கும் ஜெப வீடு!

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தச் சமூகத்தில் சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக, மத ரீதியாக நிற வேற்றுமை இல்லாமல், தனது அன்பை, சகலருக்கும் அளித்தவர். பார்வையற்றோர், ஊனமுற்றவர், வாய்பேசாதவர், ஏழை, பிச்சைக்காரர் என சகலரையும் தொட்டு ஆசீர்வதித்து சுவிசேஷ நற்செய்தியை வழங்கியவர். அதனால்தான், 'என்னுடைய வீடு சகல ஜனத்தாருக்கும் ஜெபவீடு' எனப்படும் என எழுதி வைத்தார்.  

முதல் பெண்ணியவாதி!

ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கான நீதியை அறிவுறுத்தி, அவர்களின் விடுதலையைப் பெற்றுத்தந்த முதல் பெண்ணியவாதி. புறக்கணிக்கப்பட்டவர்களுடனேயே தனது ஆயுள் முழுவதும் பயணித்தவர். அதனால்தான், கூட்டத்தில் ஒருவராக பெரும்பாடுடைய பெண் (பெண்களுக்கு உரிய மாதவிலக்கு பிரச்னையால் அவதியுற்ற பெண்) ஒருவர் நம்பிக்கையுடன் தனது உடையைத் தொட்டதும் அவரை குணப்படுத்தினார்.
 
காசுக் கடை ஆக்கிவிடாதீர்கள்!

பைபிளின் புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் வரும் திருவசனங்கள் ஆதிக்கச் சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாகவே இருக்கின்றன. இவரைப்போல் அதற்கு முன்பும் சரி, அதற்கு முன்பும் சரி வேறு எவரும் பணம் படைத்தவர்களை இத்தனை துணிச்சலோடு சாடி இருக்க முடியாது. 

'ஊசியின் ஓட்டைக்குள் ஒட்டகம் போனாலும் போகும். பணம் படைத்தவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது' என்று கூறுகிறார்.  
அன்புமயமான இவர் எப்படி ரௌத்திரமாகிறார் பாருங்கள். சந்தைகளில் வந்தனம் பெற்றுக் கொண்டு மக்களிடம் கள்ளத்தனமாக காணிக்கை வாங்கியவர்களை, ‘என் பிதாவினுடைய ஆலயத்தை காசுக்கடை ஆக்கிவிட்டீர்களே’ எனக்கூறி சாட்டையால் அடிக்கிறார். சூசையப்பர் எனும் தச்சுத் தொழிலாளியின் மகனாக பிறந்ததால்தான் அவர் அப்படிச் சொன்னார்.

இன்று அவரது பெயரை பெரிய அளவில் உச்சரிக்கும் நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக மாறிப்போனதும், தொழிலாளிகளின் நாடான ரஷ்யா, சீனா போன்றவை அவரை மறந்துபோனதும் ஒரு வரலாற்று விசித்திரம்.
உலகின் முதல் முதலாளி கடவுளின் பிள்ளையாக (பிதா,சுதன்,பரிசுத்த ஆவி) பிறந்தவர் சாதாரணத் தொழிலாளியாகவே இருந்தார். தொழிலாளர் தினமான இன்று புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகப் போராடிய இயேசு நாதரை நினைவுகூர்வோம்!