Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 16

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 16

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

ரியலூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் வரிசையில், வரலாற்றுப் பெருமைகளாலும் பேரழகு வாய்ந்த சிற்பங்களைப் பெற்றுள்ளமையாலும் முதல் நிலையில் திகழ்வது 'மேலப்பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்’ என்னும் பழுவேட்டரையர்கள் எடுத்த சிவாலயம்.

தஞ்சாவூர்- அரியலூர் சாலையில் உள்ள கீழப்பழுவூரிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் திருச்சி சாலையில் உள்ளது மேலப் பழுவூர். இந்த ஊர்தான், பழுவேட்டரையர்களின் தலைநகரமாக விளங்கியது. 'மன்னு பெரும் பழுவூர்’ எனக் கல்வெட்டுகள் இதைக் குறிப்பிடுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஊரின் மேல் பாரிசத்தில் ஒரு சிவாலயமும், கிழக்குப் பகுதியான கீழையூர் எனும் இடத்தில்... ஒரே வளாகத்தில் இரண்டு சிவாலயங்களையும் பரிவார ஆலயங்களையும் கொண்ட 'அவனி கந்தர்ப்ப ஈசுவர கிருகம்’ எனும் திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தின் சிற்பக் கருவூலம் எனக் கீழையூர் கோயிலைக் குறிப்பிடலாம்.

மேற்கு நோக்கியவாறு திகழும் கீழையூர் சிவாலயத்துக்கு மேற்கு வாயிலாக மூன்று நிலைகளையுடைய கோபுரம் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழைமையானது, இந்தக் கோபுரம். நுழைவாயிலில், கதையன்றைத் தாங்கியபடி இரண்டு திருக்கரங்களுடன், இரண்டு துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் அழகே, அந்தக் கோயில் சிற்பங்களின் தன்மையை நமக்குப் பறைசாற்றிவிடுகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 16

திருக்கோபுரத்துக்கு நேராக உட்பிராகாரத்தில், தென் வாயில் ஸ்ரீகோயில் எனப்படும் ஸ்ரீஅகஸ்தீஸ்வரம் உள்ளது. இதன் வாயிலில் (திருமுற்றத்தில்) படுத்திருக்கும் ரிஷபத்தைப் பார்த்தால், 'அட... இங்கே காளை ஒன்று படுத்திருக்கிறதே..!’ என்று ஒரு கணம் திகைப்போம். அந்த அளவுக்கு உயிர்த்துடிப்புடன் திகழ்கிறது ரிஷபம்! அங்கே உள்ள வாயில் வழியே கோயிலின் உள்ளே சென்றால், அங்கே மற்றொரு காளை படுத்திருப்பதைக் கண்டு நாம் மிரண்டுவிடுவோம். அந்த மண்டபத்தின் தூண்கள் அத்தனையும் பாயும் சிங்கங்களுடன் இருப்பது, பேரழகு! இந்தத் தூண்கள் பல்லவர் காலப் பாணியிலிருந்து பிறந்த பழுவேட்டரையர்களின் தனிக் கலைப் பாணியைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.

சிம்மத் தூண்களுக்கு இடையே நின்றவாறு அகஸ்தீஸ்வரரான மகாலிங்கத்தைத் தரிசிக்கும் நேர்த்தி அற்புதம்! அங்கு திகழும் துவாரபாலகர் உருவங்களும், ஸ்ரீகங்காதர மூர்த்தியின் சிற்பமும் கொள்ளை அழகு! இரண்டு கரங்களுடன் திகழும் வாயிற்காவலர், அழகிய மலர்களுடன் உள்ள கிரீடத்தை அணிந்திருப்பார்; தலையின் பக்கவாட்டிலிருந்து ஒரு நாகம் படமெடுத்துச் சீறும்; அவர் அணிந்துள்ள காது குண்டலம் ஒன்றின் உள்ளே ஆந்தை அமர்ந்திருக்கும்; ஒரு கரத்தில் கதையைத் தாங்கியவாறும், ஒரு கரத்தைத் தூக்கியவாறும் அவர் நிற்கும் கம்பீரத்தைப் பார்த்துச் சொக்கிப் போவோம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 16

தென் வாயில் ஸ்ரீகோயிலின் விமானம் சதுர வடிவில் மூன்று தளங்களையுடையதாக விளங்குகிறது. சிகரத்தில் காணப்படும் வீணை வாசிக்கும் சிவனாரின் திருக்கோலம், தனி அழகு! ஸ்ரீவிமானத்தின் மூன்று பக்கங்களிலும் காணப்படும் கோஷ்ட மாடங்களை அழகிய மகர தோரணங்கள் அலங்கரிக்கின்றன. தென் கோஷ்டத்தில் மானையும் மழுவையும் ஏந்திய நிலையில், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் சிவனார். இங்கு ஸ்ரீதட்சிணாமூர்த்தி காணப்

படவில்லை. மேலுள்ள மகர தோரணத்தில், நடனமாடும் சிவனாரின் திருவுருவம் உள்ளது. வடக்கு கோஷ்டத்தில் ஸ்ரீபிரம்மா காட்சி தருகிறார். அவருக்கு மேலே உள்ள மகர தோரணத்தில், யானையின் உடலைப் பிளந்து கொண்டு வெளிவரும் ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தியின் திருவடிவமும், அவர்தம் கோலம் கண்டு அஞ்சி, முருகப் பெருமானை இடுப்பில் அணைத்தவண்ணம் ஒதுங்கும் ஸ்ரீஉமாதேவியின் வடிவமும் இடம் பெற்றுள்ளன.

கிழக்கு திசையில் அமைந்த தேவ கோஷ்டத் தில், நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப் பெருமானின் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்.

பொதுவாக, சிவாலயங்களின் ஸ்ரீவிமானத்து பின்புற கோஷ்டத்தில் லிங்கோத்பவர் அல்லது அர்த்தநாரீஸ்வரர் அல்லது திருமால் என திருவுருவச் சிற்பத்தைக் காணலாம். இங்கு இரண்டு கோயில்களிலும் முருகப்பெருமானே இடம் பெற்றிருப்பது, கோயிலின் சிறப்பு அம்சம் என்கின்றனர் பக்தர்கள்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 16

மேலும், சப்தமாதர் கோயிலில் உள்ள அமர்ந்த கோல யோக மூர்த்தியின் சிற்ப வடிவம் குறிப்பிடத்தக்க ஒன்று. ஜடாபாரத்துடன் திருமுகம் விளங்க, மேலிரு கரங்களில் திரிசூல மும் அக்கமாலையும் திகழ, முன் வலக்கரம் அபயம் காட்ட, இடது கரத்தைத் தொடை மீது வைத்தபடி கம்பீரமாகக் காட்சி தருகிறார்.

இரண்டு சிவாலயங்களில், ஸ்ரீஅகஸ்தீஸ்வரத்தில் மட்டுமே இத்தனைச் சிறப்புகள் என்றால், அருகில் உள்ள மற்றொரு கோயிலையும் சிற்பங்களையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கோயிலின் பெயர் சோழீஸ்வரம்!

- புரட்டுவோம்