Published:Updated:

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

ஏவி.எம். சரவணனுடன் வாசகர்கள் கலந்துரையாடல் சக்தி சங்கமம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

''இஷ்ட தெய்வம், பிடித்த மகான் என்று எனக்கு எல்லாமே ஷீர்டி ஸ்ரீசாயிதான். உஷத் காலத்தில் விழிப்பு, மனதும்உடம்பும் குளிரக் குளிர அதிகாலை நீராடல், அடுத்து ஒரு மணி நேரம் டி.வி-யில்... ஷீர்டி சந்நிதானத்தில் தினமும் நிகழும் பூஜை யின் நேரடி ஒளிபரப்பைப் பார்ப்பது; கூடவே, மனத்துக்குள் பிரார்த்தனை கள். அடுத்து, ஸ்டூடியோவுக்குச் சென்றதும் ஏவி.எம் விநாயகர் தரிசனம்... இதுதான் எனது ஆன்மிகப் பக்கம்!''

தனக்கேயுரிய பாணியில் கைகளைக் கட்டிக்கொண்டு, புன்னகையுடன் பதிலளிக்கிறார் திரைப்படத் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன். வாசகர்கள் ஆர்வத்தோடு கேட்ட கேள்விகளுக்கு அதே ஆர்வத்துடன் பதில் சொல்லி அவர் புன்னகைக்க, நெற்றிக் குங்குமமும் சேர்ந்தே சிரிக்கிறது.

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

அடுத்தடுத்து... குலதெய்வம், குடும்ப கோயில், பலித்த தெய்வப் பிரார்த்தனைகள், மகான்களுடனான அனுபவம் என அவர் பகிர்ந்துகொண்ட தகவல்களும் கருத்துக்களும் அந்தக் கலந்துரையாடலை மிகவும் சுவாரஸ்யப்படுத்தின.

'திருக்கயிலாய யாத்திரை, சிறப்பு பூஜைகள், முன்னோர் ஆராதனை என ஆன்மிகப் பணி ஆற்றிவரும் சக்தி விகடன், தனது வாசகர்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் ஆன்மிகப் பக்கத்தையும் வெளிக்கொண்டு வரலாமே!’ எனப் பலரும் கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தங்களின் விருப்பத்தை முன்வைத்தார்கள். வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களையே பிரபலங்களோடு சந்திக்க வைத்து கலந்துரையாடல் நிகழ்த்தி, அதை சக்தி விகடனில் கட்டுரையாக வெளியிடத் தீர்மானித்தோம்.

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

அந்த வகையில், வி.ஐ.பி-களின் பங்களிப்பு குறித்து நம்மிடம் விருப்பம் தெரிவித்திருந்த வாசகர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்தோம். அவர்கள் சந்திக்கப் போகும் பிரபலம் ஏவி.எம் சரவணன் என்றதும், மிகுந்த ஆர்வத்துடன் வந்து கலந்துரையாடலில் கலந்துகொண்டார்கள்.

னியதொரு காலைப் பொழுது. ஏவி.எம். ஸ்டூடியோ அலுவலகத்தில் வாசகர்கள் எழில்வண்ணன், சுந்தர், ஜெய்குமார், ஸ்ரீநாத், பரிமளா ராஜகுமாரன், புவனேஸ்வரி மணிகண்டன் ஆகியோர் தம்மைச் சந்திக்க வந்திருப்பது தெரிந்ததும், உதவியாளர் ஒருவரை உடனே அனுப்பி அவர்களை அழைத்து வரச் சொன்னார் ஏவி.எம். சரவணன். அதைத் தொடர்ந்து கலகலப்பாகத் தொடங்கிய கலந்துரையாடல் இதோ, இங்கே..!

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

?''உங்களைச் சந்திக்கப்போறோம்னு சொன்னதுமே, என் மனசில் முதலில் தோன்றிய கேள்வி இதுதான், சார்! சரவணன், குமரன், குகன்... இப்படி உங்க குடும்பத்தில் முருகன் பெயர்கள் அதிகமா இருக்கே, இதுக்கு என்ன காரணம்?'' என்று கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் எழில்வண்ணன்.

! ''எங்கள் தந்தையார் ஏவி.மெய்யப்பன் தீவிர முருக பக்தர். ஆண் குழந்தைகளுக்கு முருகன் பெயர்களையும், பெண் குழந்தைகளுக்கு அம்பாள் பெயர்களையும் வைக்கவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். முருகன், குமரன், சரவணன், பாலசுப்பிரமணியன் என்றே எங்களுக்குப் பெயர் வைத்தார். எங்கள் மகன்களுக்கு கார்த்திக், ஷண்முகம், குகன், குருநாத் என்று பெயர்கள் வைத்தோம். பெண் குழந்தைகளுக்கு உமா, புவனேஸ்வரி, உஷா என்று அம்பாள் பெயர்களையே வைத்திருக்கிறோம். என் மகள் உஷாவின் மகன் டாக்டர் சித்தார்த் சரவணன். என் மகன் எம்.எஸ்.குகனின் மகள்கள் அருணா, அபர்ணா'' என்றார் சரவணன்.

?''உங்களின் குலதெய்வம் எது சார்?'' - ஆவலோடு கேட்டார் புவனேஸ்வரி மணிகண்டன்.

!''காரைக்குடியிலிருந்து நாச்சியார் புரத்துக்குச் செல்லும் வழியில் உள்ள இளங்குடி அய்யனார்தான் எங்கள் குல தெய்வம். நகரத்தார்கள் அதிகம் உள்ள 73 ஊர்களுக்கு, ஒன்பது கோயில்கள் உண்டு. ஒவ்வொரு குடும்பமும் ஒரு கோயிலைச் சார்ந்ததாக இருக்கும். எங்கள் குடும்பத்துக்கு, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில்!''

?''தீபாவளி கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. இதுபோன்று பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி...'' - சுந்தரம் தனது கேள்வியை முடிப்பதற்குள் பளிச்சென்று வருகிறது பதில்...

!''தீபாவளி, பொங்கல் என்று எந்தப் பண்டிகையையும், பிறந்த நாள், திருமண நாள் என்று எந்த நாளையும் குறிப்பிட்டு நான் கொண்டாடுவது இல்லை; கொண்டாட வேண்டும் என்று மனதில் தோன்றியதும் இல்லை. ஜஸ்ட் ஒன் மோர் டே... மேலும் ஒரு நாள் என்றே அதைப் பார்க்கிறேன்'' என்று புன்னகைத்தவர், தொடர்ந்து பேசினார்...

''நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களது பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் வாழ்த்து சொல்வேன். அது அவர்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தரும். எனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று என் தாயார் சொன்னார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே, கொண்டாடவில்லை. இதை அறிந்த என் நண்பர் நல்லி குப்புசாமியும் தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்று அறிந்தேன்.

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

மற்றபடி... என் மகள் உஷா, மருமகள் நித்யா, பேத்திகள் ஆகியோருக்குப் பண்டிகை காலங்களில் அவர்கள் விரும்பும் புத்தாடைகளை வாங்கித் தருவதற்காகக் கடைக்கு அழைத்துச் செல்வேன். பண்டிகைக் காலம் என்றில்லை; பொதுவாகவே, என் மனைவிக்குப் புடவைகள் வாங்க நான்தான் அழைத்துச் செல்கிறேன். நான் செலக்ட் செய்கிற புடவைகள் என் மனைவிக்குப் பிடிக்கிறது என்றே நம்புகிறேன்.''

?''சார்! நீங்க நிறைய வெளிநாடுகளுக் கெல்லாம் போயிட்டு வந்திருப்பீங்க. அப்போ அங்குள்ள கோயில்களுக்குப் போனது உண்டா? அந்த அனுபவம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று கேட்டார் ஜெய்குமார்.

!''யெஸ்! நிறைய கோயில்களுக்குச் சென்ற அனுபவம் உண்டு. உதாரணமா... ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் ஒரு கோயில்; ரொம்ப அற்புதமா பராமரிக்கிறாங்க. முருகன், சிவன், பெருமாள், அம்மன், ஐயப்பன்னு பல தெய்வங்களுக்கு தனித்தனி சந்நிதிகள் அமைச்சிருக்காங்க. குளிர்சாதன வசதி, குளிர்காலத்தில் ஹீட்டர் வசதி, தாராளமான கார் பார்க்கிங் வசதின்னு ரொம்ப ஹைடெக்! தினமும் நிறையப் பேர் அங்கு வந்து, ஆத்மார்த்தமா வழிபாடு செய்யறாங்க. மிகவும் ரம்மியமான, சுத்தமான, அமைதியான அந்தக் கோயிலின் சூழல் மனசுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது!''

?''சார், இப்ப என்னோட சாய்ஸ்! மறக்கமுடியாத பொக்கிஷமாக நீங்கள் கருதும் ஆன்மிகப் புத்தகங்கள் என்னென்ன? - பரிமளா ராஜகுமாரனின் கேள்வி இது.

!''நான் ஒரு புவர் ரீடர். புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை. ஆனந்த விகடனில் 'பொக்கிஷம்’ பகுதியில், பழைய விகடன் இதழ்களிலிருந்து முக்கியமான சில விஷயங்களை எடுத்து மறு பிரசுரம் செய்கிறார்கள். அதை விரும்பிப் படிக்கிறேன். மற்றபடி, தினமும் தவறாமல் தினசரிகள் படிப்பது உண்டு. ஏழெட்டுப் பத்திரிகைகளாவது படிப்பேன். ஹெட்லைன் செய்திகள் மட்டும்... நுனிப்புல் மேய்கிறேன் என்று சொல்லலாம். முக்கியமான விஷயங்களாக இருந்தால், முதல் பாராவையும் கடைசி பாராவையும் படித்தால் விஷயம் ஓரளவு புரிந்துவிடும்.''

?''உங்களைப் பொறுத்தவரை, பாவ- புண்ணியம் இவற்றுக்கு விளக்கம் என்ன?''

!எழில்வண்ணனின் இந்தக் கேள்விக்குச் சற்று யோசித்துவிட்டு பதில் சொன்னார் ஏவி.எம். சரவணன்.

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

''நல்லது பண்ணணும், நல்லது பேசணும், எல்லோருக்கும் நல்லதையே செய்யணும். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதை நாம் அவர்களுக்குச் செய்யாதிருக்க வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

முன்னெல்லாம் காலையில் வாக்கிங் செல்லும்போது, மெரினா பீச் பிளாட்ஃபாரங்களில் இருக்கும் சிலருக்கு தினமும் பத்து ரூபாய் நோட்டு கொடுப்பது வழக்கம். இப்போது பத்து ரூபாய் நோட்டுகள் அதிகம் கிடைப்பதில்லை என்பதால், வாரத்துக்கு ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று, அங்கு இருப்பவர்களுக்கு, ஆளுக்கு ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன். இந்தச் சின்ன உதவியைச் செய்வதில் எனக்குத் தனி சந்தோஷம்! எளியவர்களுக்குப் பணம் கொடுக்கும்போது, ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படம் வெளியே தெரியும்படி மடித்துக் கொடுப்பேன். என் பர்ஸிலும் ரூபாய் நோட்டுக்களை அப்படித்தான் மடித்து வைத்திருப்பேன். காந்தியின் படத்தைப் பார்த்தாவது நல்ல சிந்தனைகள் வளரவேண்டும் என்பது என் எண்ணம். பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்குச் சற்று கூடுதலாக உதவி செய்வேன். என்னால் முடிந்த புண்ணிய காரியங்கள் என்றால், இதுதான்.

மற்றபடி... நான் மதுபானங்கள் அருந்துவதில்லை; புகைக்கும் பழக்கம் இல்லை; குதிரை ரேஸ் போவதில்லை; இவையெல்லாம் எனக்குச் சந்தோஷம்!''

பிளாட்ஃபாரங்களில் இருப்பவர்கள், எளியவர்கள் என்றுதான் ஏவி.எம். சரவணன் குறிப்பிட்டாரே தவிர, மறந்தும் பிச்சைக்காரர்கள் என்று சொல்லவில்லை என்பதைக் கவனித்த வாசகர்களுக்கு அவர் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் இன்னும் பன்மடங்காக உயர, இன்னும் ஆர்வத்தோடு கேள்விகளைத் தொடர்ந்தார்கள்...

?''நீங்கள் தினமும் சொல்லும் மந்திரங்கள்..?''

!''செய்யும் தொழிலே தெய்வம்! மற்றபடி, ஸ்லோகங்கள், மந்திரங்கள் எதுவும் நான் சொல்லுவதில்லை.''

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

?''சிக்கலான தருணங்களில் 'கடவுள்தான் காப்பாற்றினார்’ என்று சிலர் சொல்வதுண்டு. அதுபோன்ற இறை அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டது உண்டா?''

!''சிக்கலான நேரங்களில் மட்டுமல்ல, எல்லாமே கடவுள் செயல்தான், எப்போதுமே அவன் ஆட்டுவித்தபடி ஆடுகிறவர்கள்தான் நாம் என்று முழுமையாக நம்புகிறவன் நான். எனக்காகவும் என் மனைவிக்காகவும் என்று தனியாக கடவுளிடம் எதையும் வேண்டு வதில்லை; எல்லோருக்காகவும் வேண்டுவேன். சில தருணங்களில், நாம் யாருக்காகப் பிரார்த்தித்தோமோ அவர்களுக்கு ஒரு நன்மை நடந்தது என்றால், மனத்துக்கு சந்தோஷமாக இருக்கும். அதேநேரம், எனது பிரார்த்தனையால்தான் அது நிகழ்ந்தது என்ற எண்ணம் எனக்கு வராது. மற்றவர்களின் பிரார்த்தனைகளில் எனது பிரார்த்தனையும் ஒன்று என நினைப்பேன்'' என்றவர், வாழ்த்துத் தெரிவிக்க பூச்செண்டு கொடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

''திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அநேகம் பேர் தம்பதிக்கு வாழ்த்துச் சொல்லி, பூச்செண்டு கொடுப்பது ஃபேஷனாகிவிட்டது! அதைத் தப்பு என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பூச்செண்டு கொடுத்த மறு நிமிஷமே அதை ஓரமாக எறிந்துவிடுகிறார்கள்.  

என் நண்பர் சுதர்ஸன் தமானே (Sudarsan Dhamane), தனது 60-வது பிறந்தநாள் விழாவில் ஒரு புதுமை செய்தார். பொன்னாடை, பூச்செண்டு, பரிசுகள் ஆகியவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். ஏதாவது அன்பளிப்பு தர விரும்புபவர்கள், அதைப் பணமாகவோ அல்லது 'அவ்வை நிலையம்’ என்ற பெயரில் காசோலை எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த transparentt உண்டியலில் போடும்படி கேட்டுக்கொண்டார். பலரும் அப்படியே செய்தனர். மொத்தப் பணமும் அவ்வை ஹோமுக்குச் சென்றது. அதை நான் பாராட்டுகிறேன். என் கொள்கையும் அதுதான்!''!

?''ஜோசியம், நல்ல நேரம் பார்ப்பது போன்றவற்றில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா, சார்?'' என்று கேட்டார் ஸ்ரீநாத்.

!''இல்லை. ஜாதகம், ஜோசியம், நியூமராலஜி எதையும் நான் பார்ப்பதில்லை. என் திருமணத்தின்போதும் ஜாதகம் பார்க்கவில்லை.

என் தந்தை, தன் கார் நம்பரின் எண்ணிக்கை 2 அல்லது 4 வரும்படி ஏற்பாடு செய்வார். ராசியா, அதிர்ஷ்டமா தெரியாது. நான் வாங்கிய முதல் காரின் (பியட்) நம்பர் 7670. தொடர்ந்து என் எல்லா கார்களுக்கும் அதே நம்பர்தான்!

“எனக்கு எல்லாமே ஸ்ரீஷீர்டி சாயிதான்!”

எங்கள் ஸ்டுடியோவில் 60 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும், விளம்பரப் பிரிவைச் சேர்ந்த எஸ்.பி.அர்ஜுனன்தான் (இப்போது வயது 87) நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களின் பூஜை, ரிலீஸ் தேதி ஆகியவற்றைக் குறித்துக் கொடுப்பார். அவர் குறித்துக் கொடுக்கும் நாட்களில்தான் பூஜை, ரிலீஸ் எல்லாம் செய்கிறோம். அவர் சொல்வதை ஏற்பது எங்கள் வழக்கம். ராகு காலம், நல்ல நேரம் என்று நான் எப்போதும் பார்ப்பதில்லை. ஆனாலும், இந்த விஷயத்தில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

'ராமு’ படத்தில் நடிப்பதற்கு ஜெமினி கணேசன் அவர்களை என் தந்தை புக் செய்தார். 'அட்வான்ஸ் தருவீர்களா?’ என்று ஜெமினி கேட்டார். கொடுத்தோம். 'இன்று செவ்வாய்க்கிழமை ஆயிற்றே, பரவாயில்லையா?' என்றார். 'முருகனுக்கு உகந்த நாள்தானே!’ என்றேன். அவர் பதிலுக்கு, 'இப்போது ராகு காலம் ஆயிற்றே, பரவாயில்லையா?’ என்று கேட்டார். 'எனக்கொன்றும் இல்லை; உங்களுக்குப் பரவாயில்லை என்றால், எனக்கு ஓகே!’ என்றேன். 'பணம் வருகின்ற எல்லா நாளும், எல்லா நேரமும் எனக்கு நல்ல நாள்தான்; நல்ல நேரம்தான்!'' என்று சிரித்தார் ஜெமினி. ராகு காலத்தில் என்னிடம் அட்வான்ஸ் பெற்ற ஜெமினிக்கு, தொடர்ந்து எட்டுப் படங்கள் ஒப்பந்தமாயின. ஜெமினியே இதை என்னிடம் சொல்லியிருக்கிறார்.

அதேபோன்று, எங்கள் 'வீரத்திருமகன்’ படத்தை இயக்குவதற்கு, டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தருக்கு ராகு காலத்தில்தான் அட்வான்ஸ் கொடுத்தேன். அவர், தொடர்ந்து எங்களுக்காக 17 படங்கள் இயக்கி, அவை அனைத்தும் வெற்றிப் படங்களாக ஆகியிருக் கின்றன. என் திருமணத்தின்போது மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவரும் அவர்தான்!'' என்றார் ஏவி.எம். சரவணன்.

?''அடிக்கடி நீங்கள் செல்லும் கோயில் எது?'' - ஏதேனும் முருகன் கோயிலைச் சொல்லுவார் என்பது வாசகர் சுந்தரத்தின் எதிர்பார்ப்பு.

!''மகாபலிபுரத்துக்கு 10 கி.மீட்டருக்கு முன்பாக இருக்கும் ஷீர்டி ஸ்ரீசாயிபாபா கோயிலுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும்  செல்கிறேன். ரமணி என்ற சாயி பக்தர் தனியரு ஆளாக 110 கோடி ரூபாய் செலவழித்து, அற்புதமாக அந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். அவரது முயற்சியை, பக்தியை, பணியைப் பார்த்துப் பிரமிக்கிறேன்.

அவர் மிகவும் எளிய வாழ்க்கை வாழ்பவர். எல்லாமே பாபாதான் என்பது அவருடைய வாழ்க்கைத் தத்துவம். யாராவது அந்தக் கோயிலில் பணம் காணிக்கை தந்தால், அதை அப்படியே ஷீர்டி கோயிலுக்கு அனுப்பிவிடுவார். அந்தக் கோயிலில் எதற்கும் கட்டணம் வசூலிப்பதில்லை. ஸ்ரீசாயி பாபாவின் பெரிய சிலையை அங்கு வைத்திருக்கிறார். பக்தர்கள் தரையிலும் உட்காரலாம்; நாற்காலிகளிலும் உட்காரலாம். நாம் எடுத்துப்போகும் பிரசாதங்களை பாபாவுக்கு நிவேதனம் செய்து, நாமே பக்தர்களுக்கு வழங்கலாம். பாபாவுக்கு சங்கு மூலம் ஜல அபிஷேகம் செய்கிறார், அங்கிருக்கும் அர்ச்சகர் விஷ்ணு. அபிஷேகம் முடிந்ததும், சிறு குழந்தைக்குத் துடைத்துவிடுவதுபோல பகவான் பாபாவின் சிலையை அவர் துடைப்பதே தனி அழகு! பக்தி சிரத்தையாக மந்திரங்கள் சொல்லுவார்.''

இதைச் சொல்லும்போது, ஏவி.எம் சரவணன் முகத்தில் அப்படியொரு பக்திப் பரவசம்!

?''சார்... உங்ககிட்டே இந்தக் கேள்வி யைக் கேட்காம இருக்கமுடியலே! நீங்க எப்பவும் கையைக் கட்டிக்கொண்டு இருக்கிறீர்களே, ஏன்? சுவாமி விவேகானந்தரும் கையைக் கட்டிக் கொண்டுதான் இருப்பார். 'தன்னம்பிக்கை அதிகம் உள்ளவங்கதான் இப்படிக் கையைக் கட்டிக்கிட்டு இருப்பாங்க’ ன்னு எதிலோ படிச்சிருக்கேன்.

நீங்க சொல்லுங்க, உங்களோட இந்தப் பழக்கத்துக்குக் காரணம் தன்னம்பிக்கையா, தன்னடக்கமா?'' - எழில்வண்ணன் இந்தக் கேள்வியைக் கேட்டதும், ஏவி.எம் சரவணனிடம்

மெல்லிய புன்னகை.

!''பாரதத்தின் தவப்புதல்வர்களில் முக்கியமானவர் விவேகானந்தர். அவரோடு என்னை ஒப்பிடுவதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை, கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருப்பதைவிட, கட்டிக்கொண்டு இருப்பது சௌகரியமாக இருப்பதால், அப்படிச் செய்கிறேன். அதைத் தன்னடக்கம் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. அதற்காகவும் செய்யவில்லை. கார் ஓட்டிச் செல்லும்போதுகூட சிக்னலில் காரை நிறுத்த வேண்டி வந்தால், அனிச்சையாகக் கைகளைக் கட்டிக்கொள்வேன். ரொம்பக் காலமாக இருந்து வரும் பழக்கம் இது.

என் தந்தையின் சில புகைப்படங்களில், அவரும் தன் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்திருக்கிறேன். ஆக, என் தந்தையிடமிருந்து இந்தப் பழக்கம் இயல்பாக எனக்கு வந்திருக்கலாம்!''

?''உங்கள் மனம் கவர்ந்த மகான்கள் பற்றி...'' - ஸ்ரீநாத் கேள்வியை முடிக்கும் முன் பாய்ந்து வந்தது பதில்...

!''காஞ்சிப் பெரியவர்! நடமாடும் தெய்வமெனப் போற்றப்படும் மாமுனிவர் பரமாச்சார்யரை கலவையிலும், ஆந்திராவிலும் தரிசித்திருக்கிறேன்.

இப்போது ஆன்மிகத் துறையில் பல பெரியவர்கள், மகான்கள் இருக்கிறார்கள். எனது நெருங்கிய நண்பர்களில் சிலர், அந்த மகான்களின் நெருக்கமான சீடர்களாக, அவர் களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள்.

எனக்கு எல்லாமே ஷீர்டி சாயிபாபாதான்!''

சந்திப்பு ஏற்பாடு: எஸ்.ரஜத்

  படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு