Published:Updated:

சங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்!

Vikatan Correspondent

சின்னாளப்பட்டி ஸ்ரீசதுர்முக முருகன்

ஸ்வாமியின் சிறப்பு: நான்முகக் கடவுளான ஸ்ரீபிரம்மாவிடம் பிரணவத்தின் பொருளைக் கேட்டு, விளக்கம் தெரியாமல் தவித்த பிரம்மாவை சிறையில் அடைத்தார் அல்லவா, சிவமைந்தன்?! அதை நினைவுகூரும் வகையில் நான்முகனாக, சதுர்முகத்துடன் அமைக்கப்பட்டுள்ளார் முருகப்பெருமான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. வடக்குப் பார்த்தபடி அருள்கிற ஸ்ரீசதுர்முக முருகக் கடவுளுக்குத்தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இப்படி நான்கு முகங்களுடன் முருகக் கடவுளைத் தரிசிப்பது மிக அரிதான ஒன்று!

சங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்!

வழிபாடு: செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகித்தால், செவ்வாய் தோஷம் நீங்கும்; சத்ரு பயம் விலகும்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம்! சஷ்டி விழா இங்கே விசேஷம்! சஷ்டி விரதம் இருந்து கந்தவேளைத் தரிசித்தால், எதிரிகள் முதலான சகல தொல்லைகளும் நீங்கும். சங்கடங்கள் விலகி, சந்தோஷங்கள் பெருகும்.

சங்கடங்கள் விலகும்... சத்ரு பயம் நீங்கும்!

மற்ற ஸ்வாமிகளும் வழிபாடு முறைகளும்: கன்னிமூலையில் ஸ்ரீகணபதியும் வாயுமூலையில் ஸ்ரீதண்டாயுதபாணியும் ஈசான்ய மூலையில் ஸ்ரீபைரவரும் இங்கு சந்நிதி கொண்டிருப்பது சிறப்பு என்பார்கள். தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீபைரவருக்கு தயிர்சாதம், வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், சத்ரு உபாதைகள் நீங்கும்;

அதேபோல், இங்கே உள்ள ஸ்ரீபாலதிரிபுரசுந்தரிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்; அங்காரகன் வழிபாடும் இங்கு விசேஷம்! செவ்வாய்க்கு அதிபதியான கந்தக் கடவுளுக்கு செவ்வாய்க் கிழமைகளில், துவரம்பருப்புடன் அச்சுவெல்லமும் கலந்து படைத்து வேண்டிக்கொண்டால், வீடு- மனை சம்பந்தமான பிரச்னைகள் யாவும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.

ஸ்வாமி: ஸ்ரீசதுர்முக முருகன்

தலம்: சின்னாளப் பட்டி முருகன் கோயில்

எங்கே உள்ளது?: திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில்!

- உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்