Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஸ்ரீதியாகராஜருக்கு அள்ளிக்கொடுங்கள்!வி.ராம்ஜி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

நெல்லை - இடைகால் தியாகராஜ ஸ்வாமி கோயில்

தென்கயிலாயம் எனப்படும் பொதிகை மலையில், சிவபூஜையில் ஈடுபட்டிருந்தார் அகத்திய மாமுனி. இது சிவ கட்டளை. 'தெற்கில் இருந்துகொண்டு, சில காலம் தவத்தில் ஈடுபடு!’ என்பது சிவனாரின் உத்தரவு. அனுதினமும் சிவபூஜையில் திளைத்திருந்த அகத்தியருக்கு, ஒருநாள் அப்படியரு ஆசை எப்படித்தான் வந்ததோ..?!

'என் சிவனே... அடுத்த யுகம் குறித்தும், அந்த யுகத்தில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளின் நிலை குறித்தும் அறிய விரும்புகிறேன். தாங்கள் உபதேசம் செய்து அருளுங்கள்’ என வேண்டினார் அகத்தியர். 'அவ்வளவுதானே... உன் சீடன் திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் தலத்துக்கு வா! அங்கே உபதேசம் நிகழும்’ என அருளினார் சிவனார்.

அதன்படி, திருவூல முனிவர் அமர்ந்து தவம் செய்யும் திருஉளம்பற்றி எனும் ஊருக்கு வந்தார் அகத்தியர். குருநாதரைக் கண்டதும் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் திருவூல முனிவர். அதன் பின்பு, ஓங்கார சொரூபினியாக, சிவ உபதேசத்துக்காக வந்தருளினாள் உமையவள். அவளைக் கண்டதும், இருவரும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

''உங்களுடன் எனக்கும் இங்கே உபதேசம் கிடைக்கப் போகிறது. அப்படி உபதேசம் மட்டும் கிடைத்துவிட்டால், இதோ... இங்கே இருந்தபடி அனைவருக்கும் கல்வியையும் ஞானத்தையும் வழங்கச் சித்தமாக உள்ளேன்'' என்று அருளினாள் தேவி.

அவளின் எண்ணப்படியே, சிவபெருமான் குருவாக இருந்து மனைவி உமையவளுக்கும், அகத்திய மாமுனிவருக்கும், திருவூல முனிவருக்கும், பின்னர் இன்னும் பல முனிவர் பெருமக்களுக் கும் உபதேசம் செய்து அருளியதோடு, அனைவருக்கும் ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருள்பாலித்தார். இத்தனை மகத்துவமான சம்பவங்கள் நிறைந்த திருஉளம்பற்றி கிராமம், திருநெல்வேலிக்கு அருகில் இருக்கிறது. அந்த ஊர் தென் திருவாரூர் என்றும், இடைகால் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆலயம் தேடுவோம்!

தமிழகத்தில், பஞ்ச குரு திருத்தலங்கள் எனப் போற்றப் படுபவை, மதுரைக்கு அருகில் உள்ள தென் திருப்புவனம், திருப்புடைமருதூர், அத்தாளநல்லூர், அரிகேசவநல்லூர் மற்றும் தென் திருவாரூர் எனப்படும் இடைகால் ஆகியவை. குருவாக இருந்து உபதேசம் செய்ததால், பஞ்ச குரு தலங்களில் ஒன்று எனப் போற்றப்படும் இடைகால் சிவாலயத்துக்கு வந்து எவர் வேண்டினாலும், அவர்கள் ஞானமும் யோகமும் அமையப் பெறுவார்கள் என்பது ஐதீகம்!

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்துக்கு அருகில் உள்ளது இடைகால் இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இவரின் திருநாமம்- ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி. அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசிவகாமி அம்பாள்.

சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்ட ஆலயம் இது. நெல்லைச் சீமை என்பது பாண்டிய நாட்டுக்குள் இருக்கிற பகுதிதான் என்றாலும், இந்தப் பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னர்கள் திருப்பணிகள் மேற்கொண்ட சிவாலயம் இது.

ராஜராஜ சோழன், தில்லையம்பதியில் இருந்து திருமுறைப் பாடல்களின் ஓலைச்சுவடிகளை உலகுக்கு அளித்தான்; அதேபோல், அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனும் இங்கே, இந்தத் தியாகராஜ ஸ்வாமி கோயிலில் வேத விற்பன்னர்களை வரவழைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, தென்பாண்டி தேசத்தில் திருமுறைகளைப் பரப்பினான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு.

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயம், இன்றைக்கு வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாமல், சர்வ அலங்காரங்களும் வீதியுலாக்களும் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது என்பதுதான் வேதனை. ஐப்பசி அன்னாபிஷேகமும், திருக்கார்த்திகை தீபமும், ஆனிப் பெருந்திருவிழாவும், மார்கழித் திருவாதிரையும் கோலாகலமாக நடைபெற்ற ஆலயத்தில், இன்றைக்கு ஒருகால பூஜை நடப்பதற்குக்கூட வழியோ வசதியோ இல்லை என்பதுதான் கொடுமை.

ஆலயம் தேடுவோம்!

''தென் திருவாரூர்னு போற்றப்படுகிற இடைகால் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கோயில், ஒருகாலத்தில் பிரசித்தி பெற்ற கோயிலா இருந்திருக்கு. இங்கே நடைபெறும் விழாக்கள்ல கலந்துக்கறதுக்காக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, முக்கூடல், கடையம், தென்காசின்னு பல ஊர்களிலேருந்தும் மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்திருக்காங்க. ஸ்வாமியையும் அம்பாளையும் தரிசனம் பண்ணிட்டு, சந்தோஷமாப் போயிருக்காங்க. அன்னாபி ஷேகத்தின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடக்குமாம். அதேபோல, திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்னிக்கிக் கோயிலும் ஊருமாச் சேர்ந்து ஒளி வெள்ளத்துல மிதக்குமாம்.

ஆனா, கொஞ்சநாள் முன்பு வரைக்கும் ஸ்வாமிக்கு விளக்கேத்தக்கூட எண்ணெய் இல்லாத நிலை இருந்துச்சு. ஒருகால பூஜைகூட செய்யமுடியாம இருந்துது. அன்பர்களின் உதவியோடு, இப்ப ஒரு கால பூஜை நடக்குது; விளக்கேத்தவும் ஓரளவு எண்ணெய் கிடைக்குது. ஆனால், கோயில் திருப்பணிகள் முடிஞ்சு, சீக்கிரமே கும்பாபிஷேகம் நடந்து, கோயில் பழைய கலகலப்புக்குத் திரும்பணும்கறதுதான், இடைகால் மக்களோட நெடுங்காலத்துக் கனவு, ஆசை எல்லாமே!'' என்கிறார் கோயில் திருப்பணியில் ஈடுபட்டு வரும் ரவிச்சந்திரன்.

நெல்லைச் சீமையில் உள்ள தென் திருவாரூர் எனப்படும் கோயிலில், பழையபடி வீதிகளில் தேரோட வேண்டாமா? ஸ்ரீதியாகராஜ ஸ்வாமியும் ஸ்ரீசிவகாமி அம்பாளும் சர்வ அலங்காரத்துடன் இடைகால் கிராமத்தை வலம் வரவேண்டாமா? முக்கியமாக, கோயிலானது சீரமைக்கப்பட்டுப் பழைய பொலிவுக்கு வந்தால்தானே, அந்தக் காலம் போல இன்றைக்கும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசித்துச் செல்வார்கள்?

ஸ்ரீஅகத்தியருக்கு அருளிய தலத்தை அழகுபடுத்துவது நம் கடமை அல்லவா? திருமுறைகளை தென்பாண்டி நாட்டில் பரப்புவதற்கு அடித்தளமிட்ட ஆலயத்தில், வேத கோஷங்கள் மீண்டும் முழங்குவதற்கு நம்மால் முடிந்த உதவிகளை, திருப்பணிக்குச் செய்ய வேண்டாமா?

ஸ்ரீசிவகாமி அம்பாளுக்கு ஆனியில் எப்போதும்போல் விமரிசையாக விழா நடக்கவும், புதுப்புது வஸ்திரங்களும் நைவேத்தியங்களுமாக சந்நிதியே களை கட்டவும் வேண்டுமல்லவா? அதற்கு ஒவ்வொரு சிவனடியாரும் தன்னால் இயன்றதைச் செய்தால்தானே சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில் பொலிவு பெறும்; கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெறும்?!

இடைகால் ஈசனுக்கு, அவன் குடிகொண்டிருக்கும் கோயிலுக்கு நம்மால் முடிந்ததைச் செய்து, திருப்பணியில் பங்கேற்போம். ஒரு குறைவும் இல்லாமல், அவன் அருளால் அவன் தாள் பணிந்து, நிம்மதியும் நிறைவுமாக வாழ்வோம்.

படங்கள்: தி.ஹரிஹரன்

எங்கே இருக்கிறது?

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலுக்கு அருகில் உள்ளது இடைகால். திருநெல்வேலியில் இருந்து முக்கூடல் வழியாகச் செல்லும் பேருந்தில் பயணித்தால், சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது இடைகால் விலக்கு பேருந்து நிறுத்தம். திருநெல்வேலியில் இருந்து கடையம் வழியே பாபநாசம் செல்லும் பேருந்துகள், இடைகால் ஊருக்குள்ளேயே செல்லும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு