தீபாவளி திருக்கதைகள்!
சிறப்பு கட்டுரை
Published:Updated:

விதைக்குள் விருட்சம்! - 1

மகத்தான மானிட சக்தி!சேவாரத்னா டி.எஸ்.நாராயணஸ்வாமி

##~##

புராண, இதிகாசக் கதைகளைத் தெரிந்து கொள்வதால் தனி மனிதனின் ஆற்றல் அதிகரித்துவிடுமா? அவனது பிரச்னைகள்தான் தீர்ந்துவிடுமா?

கஷ்டப்படுகிறவனை போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றும், சுகபோகங்களில் வாழ்பவனை புண்ணியம் செய்தவன் என்றும் நியாயப்படுத்திவிடுகிறது இந்து தர்மம். அதுதான் விதி என்றால், சமயம் எதற்கு? வழிபாடு எதற்கு? முயற்சிதான் எதற்கு?

தற்கால வாழ்க்கையில் கடைப்பிடிக்கமுடியாத கரடுமுரடான உபதேசங்களைச் சொல்லிப் பிரசாரம் செய்கிறீர்கள். 'உண்மையே பேசு’ என்று உபதேசம் செய்வதைவிட, தற்கால உலகில்  உண்மை பேசி உயரும் வழி உள்ளதா என உங்களால் உறுதியாகச் சொல்லமுடியுமா?

கத்தான மானிட சக்தி வாழ, வளர, வளம் பெற வழிதான் எது? கடவுளை வழிபட்டால் கஷ்டங்கள் தீர்ந்துவிடுமா? ஆன்மிக வளர்ச்சியால் அன்றாட வாழ்க்கை வளம் பெற்றுவிடுமா? நாம் பின்பற்றும் சமயம் மற்றும் தர்மத்தால் இன்றைய பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா?

விதைக்குள் விருட்சம்! - 1

'உலகில் உழைத்தால் மட்டும் உயர்ந்துவிடமுடியுமா? உழைப்புக்கேற்ற ஊதியமும் வேண்டுமல்லவா? தகுதிக்கேற்ற பதவி வேண்டும்; திறமைக்கேற்ற வசதி வேண்டும்; வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்; கடமையை நிறைவேற்றவேண்டும்; அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பெறவேண்டும். புகழோடு வாழவேண்டும். இந்தப் பலன்களைத் தரக்கூடிய விஷயங்களை இந்து தர்மம் சொல்கிறதா?’

'இன்றைய கால கட்டத்தில் இவ்வுலகில் நேர்மை திண்டாடுகிறது; ஒழுக்கம் ஊசலாடுகிறது; அநீதியும், அக்கிரமமும், ஒழுங்கீனமும் உள்ள பலர் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஒழுக்கமும், கட்டுப்பாடும் ஒருவனை நல்ல மனிதனாக ஆக்கலாம். ஆனால், நல்லவர்களெல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதில்லையே! நல்லவர்களும் வாழ்க்கையில் வெற்றி பெற இந்து சமயம் வழிகாட்டுகிறதா?’

விதைக்குள் விருட்சம்! - 1

'நான் ஒரு பெண். பக்தியும், ஒழுக்கமும் உள்ளவள். இருந்தாலும், கணவனின் அன்பு கிடைக்கவில்லை. புகுந்த வீட்டாரின் கொடுமைக்கு ஆளாகியுள்ளேன். எனது பிரச்னைகள் தீரவேண்டுமென்றுகூட நான் வேண்டவில்லை. கொடுமைகளை எதிர்த்துப் போராடி, சாதனை புரிய வழி ஏதாவது இருக்கிறதா? இந்து தர்மத்திலுள்ள கோட்பாடுகளைக் காட்டி, 'கஷ்டங்களைத் தாங்கிக்கொண்டு பொறுமையுடன் இருங்கள். காலம் மாறும்; கவலைகள் தீரும்’ என்று சாவித்திரி, சந்திரமதி கதைகளைச் சொல்லிச் சமாதானம் காட்டாதீர்கள். கொஞ்சம் சயின்டிஃபிக்காக வழிகாட்டுங்கள்!’

இவை, காலம் காலமாக இந்து தர்மத்துக்கு விடப்பட்டுள்ள சவால்கள். இவற்றுக்குச் சரியான பதில்களைக் கூறா விட்டால், இன்றைய சூழ்நிலையில் இந்து தர்மத்தை இந்துக்களிடையேகூட வலியுறுத்த முடியாது. இவற்றுக்கு விடை காணும் முயற்சியே இந்தத் தொடர்.

ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு மகத்தான மானிட சக்தி ஒளிந்துகொண்டிருக்கிறது - விதைக்குள் வாழும் விருட்சம் போல! விதை முளைத்து, செடியாகி, மரமாகி, பூத்துக் காய்த்துக் குலுங்கி, உலகோர்க்குப் பயன்படுகிறது அல்லவா! அதுபோலவே இந்த மானிட சக்தியும் தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.

'நடந்தது எப்படி இருந்தாலும், இனி நடப்பது நல்லதாக இருக்கும்’ என்ற நம்பிக்கையோடு வாழும் மனித இனத்தின் நிழலாகவுள்ள நம்பிக்கைகளை நிஜமாக்க, இந்து தர்மம் காட்டும் சாஸ்திர ரகசியங்களின் அடிப்படையில், ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுள் புதைந்து கிடக்கும் அற்புத சக்திகளை உணர்ந்து, அவற்றைச் செயல்திறனாக மாற்றி, வாழ்க்கையில் வெற்றி காணும் வழிமுறைகளை இந்தத் தொடர் பிரதிபலிக்கும்.

- விருட்சம் வளரும்

விதைக்குள் விருட்சம்! - 1

குவளையில் விழுந்த தவளைகள்!

பால் குவளைகளை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள் பால் பண்ணை ஆட்கள். அப்போது, அருகில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் தாவிக் குதித்துக்கொண் டிருந்த இரண்டு தவளைகள், உற்சாக மிகுதியில் கொஞ்சம் அதிகமாகவே எகிறியதில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு  பால் குவளையில் விழுந்துவிட்டன. பால் பண்ணை ஆள் இதைக் கவனிக்காமல் குவளைகளை மூடி சீல் வைத்து வண்டியில் ஏற்றிவிட்டான். தவளைகளின் பயணம் தொடங்கியது.

முதல் குவளையிலிருந்த தவளை, தான் ஒரு குவளையில் அடைக்கப் பட்டுள்ளதை உணர்ந்தது. தப்பிக்கத் துடித்தது. வேகமாக மேல் நோக்கிப் பலமுறை தாவியதில், மூடியில் அதன் தலை பலமாக அடிபட்டு, பாலிலேயே அது தன் உயிரைத் துறந்தது.

இரண்டாவது குவளையில் உள்ள தவளையும் தப்பிப்பதற்காக முதலில் மேலே தாவிக் குதித்தது. அதன் தலை மூடியில் இடித்தபோது அதற்கு வலித்தது. அது வெளியேறும் வழியல்ல என்று சுதாரித்து, வேறு வழியைப் பற்றிச் சிந்தித்தது. தன் பலம் என்ன என்பதை ஆராய்ந்தது. தனக்கு நீந்தும் சக்தி உண்டு என்பதை நினைவுகூர்ந்து, பாலில் நீந்தத் தொடங்கியது. அதன் வேகமான கால் அசைவினால் பால் கடையப்பட்டு, வெண்ணெய் திரண்டு பாலில் மிதக்கத் தொடங்க, தவளை அந்த வெண்ணெய் உருண்டையின் மேல் அமர்ந்து களைப்பாறியது. குவளைகள் கீழே இறக்கப்பட்டு, பண்ணை ஆட்கள் மூடியைத் திறந்ததுமே அந்தத் தவளை தாவி, வெளியே குதித்தது. ஆக... தவளையும் பிழைத்தது. பாலும் பிழைத்தது.

நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ நம்முள்ளே அடங்கியிருக்கும் சக்தி வெளிப்படும்போது, வெற்றி கிட்டுகிறது!