மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

? 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த இன்னும் சீரிய சட்ட திட்டங்களும், சீர்திருத்தங்களும் தேவை’ என்கிறான் நண்பன் ஒருவன்.

வேறொரு நண்பனோ, 'நல்ல மனம் இருந்தால் போதும்; சட்டதிட்டங்களோ, சீர்திருத்தங்களோ, பிறர் சொல்லிச் செய்யும் நிலையோ தேவை இருக்காது. நல்ல விஷயங்களை சுயம்புவாகவே செயல்படுத்துவது நமது இயல்பாகிவிடும். மனம் செம்மையுற ஆன்மிகம் உதவும்’ என்கிறான்.

இதற்குத் தங்களின் விளக்கம் என்ன?

- கே.இராமநாதன், அம்பாசமுத்திரம்

னம் படைத்தவன் மனிதன். மனத்தை மறந்தால், மனித இயல்பு அகன்றுவிடும். மனத்தெளிவும் மன உயர்வும் பெற்றவன் வாழ்வின் சுவையை உணர்வான். ஆறறிவு அற்ற விலங்கினம், உடல் வளர்ப்புடன் நின்று விடும். ஆறறிவு பெற்றவனுக்கு மன வளர்ச்சி தேவை. லோகாயத சுகங்கள் உடலோடு நின்றுவிடும்; உள்ளத்தைத் தூய்மையாக்காது.

இது நல்லது; இது கெட்டது; இது உண்மை; இது பொய்; இது இருப்பது; இது இல்லாதது; இது அழிவது; இது அழியாதது; இது இன்பத்துக்குக் காரணம், இது துன்பத்தை விளைவிக்கும், இதை ஏற்க வேண்டும், இதை இழக்க வேண்டும்... இந்தப் பாகுபாடுகள் சிந்தனை வளம் பெற்றவனிடம் தென்படும். இதை விவேகம் அல்லது பகுத்தறிவு என்று சொல்லலாம். உடலை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்தால், அதில் சத்தான- உண்மையான- அழிவற்ற ஆன்மாவை அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆன்மாவைத் தவிர மற்ற உறுப்புகள் எல்லாம் அழிவைச் சந்திக்கும். அழியாதது ஆன்மா; அழிவது உடல். அது, பகுத்தறியும் பக்குவ மனம் படைத்த சிந்தனையாளர்களுக்கு மட்டுமே இலக்காகும்.

அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?

* எனில், மனமது செம்மையானால் மற்ற விஷயங்களும் நன்மையில் முடியுமா?

ஆமாம்! இன்பத்தையும் துன்பத்தையும் உணர்வது மனம். மனத்தின் உறுப்புகளான புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவை செயல்பாட்டைத் திசைதிருப்பி நடைமுறைப்படுத்துகின்றன. தூய்மையான, தெளிவான, உயர்ந்த மனமானது, சிறப்பான செயல்பாட்டை நடைமுறைப்படுத்த தனது உறுப்புகளுக்குப் பரிந்துரைக்கும். பிறப்பு சிறப்பாக மனத் தூய்மை அடிப்படைக் காரணம். ஊண், உறக்கம், உடலுறவு ஆகியவற்றுடன் மட்டுமே வாழ்வின் எல்லையை வரையறுக்கக்கூடாது. இவை, மனத்தின் தொடர்பு இல்லாமலேயே செயல்படும். மனம் குன்றியவனிடம் இம்மூன்றும் இருக்கும். விலங்கினமும் இந்த மூன்றோடு இணையும். அது, அவற்றின் இயல்பு. ஆறாவது அறிவு, விலங்கினத்திலிருந்து மனிதனை மாறுபடுத்திக் காட்டுகிறது.

* இயல்பிலேயே நல்ல மனம் இருந்தால் சரி! இல்லையெனில், மனத்தைப் பழக்கப்படுத்த அல்லது பக்குவப்படுத்த சட்டதிட்டங்கள், சீர்திருத்தம் தேவையா? ஆன்மிக அறிவு மட்டுமே போதுமா?

ஓர் உதாரணம் மூலம் இதைப் பற்றி விவாதிப்போம். அதாவது, இயற்கை வளங்களைச் சரிசமமாக எல்லோருக்கும் கிடைக்கும் படியாகப் பங்கிட்டு வாழவேண்டும் எனும் பண்பு இயல்பாக இருக்க வேண்டும். அதை ஒரு தத்துவமாகக் கருதி போதிக்கக் கூடாது.

காட்டில் வாழும் விலங்கினம்கூட, தான் உண்ட மிச்சத்தைப் பிறவற்றிற்குப் பகிர்ந்தளிக்கும். காகம் தன் இனத்துடன் பங்கிட்டு உண்ணும். சிங்கம் தனது பசி தீர்ந்ததும், மிச்ச உணவைப் பல மிருகங்கள் பங்குபோட்டு உண்ண இடமளிக்கும். சட்டதிட்டம் இல்லாமலேயே காட்டு வளத்தைப் பகிர்ந்து உண்ணும் பாங்கு விலங்கினங்களில் உண்டு. ஆனால், தனக்கு மிஞ்சினதை தானமாக வழங்கும் விலங்கினத்தின் பாடம்கூட நம் மனத்தில் பதியவில்லை!

இப்படியான அறப் பண்புகள் தானாக வரவேண்டும். எல்லோருக்கும் உரிமை பெற்ற இயற்கை வளத்தைப் பங்கு போட்டு அளிக்க ஒரு சீர்திருத்தவாதி வேண்டும் என்பதில்லை. அந்த நாட்டாமை வேலையை யார் அளித்தார்கள்?! ஆக, பொதுச் சொத்து, பொது விநியோகத்தில் சட்டதிட்டம் குறுக்கிடக்கூடாது. மனத்தூய்மையும் மனஉயர்வும் அதை நடைமுறைப்படுத்திவிடும். அப்படியான மனத்தைப் பெற மனிதனுக்கு ஆன்மிகமும், மனவியலும் வேண்டும். அப்போது, சட்டத்தால் செய்ய இயலாத செயல் பாடுகளையும் எளிதில் நிறைவேற்ற இயலும்.

பஜனையின்போது சுண்டல் விநியோகிப்பவன் சீர்திருத்தவாதி யாக மாட்டான். பண்புடனும் பாசத்துடனும் வாழ ஆன்மிகம், ஆராதனை, பூஜை- புனஸ்காரங்கள், பண்டிகைகள், சம்பிரதாயங்கள், கொண்டாட்டங்கள், கோரிக்கைகள், கூத்துக்கள் ஆகிய அனைத்தும் வேண்டும். இவை, மனத்தைப் பதப்படுத்தும்.

அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?

தங்கள் வாதம் ஏற்புடையது அல்ல. மனித வளம் பற்றிய அறிவீனமே தங்களை அப்படிச் சொல்லவைத்தது. சீரான வாழ்க்கைக்கு ஆன்மிகச் சிந்தனையோ, உள்ளத் தூய்மையோ ஒரு பொருட்டு அல்ல!

- இப்படியான கருத்து கொண்டவர்களும் உண்டு. அவர்கள் தரப்பு விளக்கங்களையும் கேள்வி- பதிலாகவே பார்ப்போம்.

* ஆன்மிக அறிவு தேவையில்லையா, ஏன்?

இயற்கையின் செல்வம் உயிரினங்கள். அவை வாழ்வதற்கும் மடிவதற்கும் உணவை யும் தன் மடியையும்அளித்திருக்கிறாள் இயற்கை அன்னை. வாழ வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ள ஆறாவது அறிவையும் இணைத் திருக்கிறாள். உடல் அழியும்போது அதனுடன் இணைந்த ஆன்மாவும் அழிந்துவிடும். பிறக்கும்போது ஆன்மா இணைந்துவிடும். பேருந்து, ரயில்பயணங்களில், அவற்றை இயக்குபவரை நினைத்துக் கவலைப்படுவது இல்லை. நமது எண்ணங்களை நிறைவேற்றுவதில்தான் கவனம் இருக்கும். பசியால் வாடுபவனுக்கு உள்ளத் தூய்மை நினைவில் வராது. உறக்கத்தில் ஆழ்ந்தவனுக்கு உலகமே தெரியாது. புலன்களின் வாயிலாக உண்மையான இன்பத்தை உணர்கிறோம். ஆகவே, நமது தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆன்மிக அறிவு தேவையில்லை.

* எனில், மனித குலத்துக்கான நோக்கம் எப்படிப் பூர்த்தியாகும்?

நுகரும் உணர்வு மனத்துக்கு உண்டு. தேவையற்றதை அலர்ஜிபோல் வெளியே தள்ளிவிடும். தேவையை ஏற்று மகிழும். அதற்கு ஆன்மாவின் சிபாரிசு தேவையில்லை. வாயில் மெல்லும் உணவில் கல்லோ, ரோமமோ தென்பட்டால், அதை அனாயாசமாகத் தள்ளிவிடும். உணவை மட்டும் ஏற்றுக்கொள்ளும். தள்ள வேண்டியதையும் ஏற்கவேண்டியதையும் பற்களும் நாக்கும் தெரிந்துகொண்டு சடுதியில் செயல்பட்டுவிடும். நமது உடலானது வெப்பத்தையும் தட்பத்தையும் அடையாளம் கண்டு, பாதுகாப்பைத் தேடிக்கொள்ளும். கொசு கடித்தால் கைகள் தாமாகவே இயங்கி அவற்றை அழித்துவிடும். இரண்டு இமைகளும் தூசுபடாமல் கண்களைக் காப்பாற்றும். மூக்கில் இருக்கும் ரோமங்கள், காற்றில் கலந்து வரும் தூசை அகற்றி, சுத்தக் காற்றை உள்வாங்க உதவும். உடலமைப்பையே சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அமைத்துத் தந்திருக்கிறாள் இயற்கை அன்னை. மனம் விரும்பியபடி வாழ மனிதன் பிறந்திருக்கிறான். அவனது சுதந்திரத்தில் ஆன்மிக சட்டதிட்டங்களின் இடையூறு வரவேற்கத்தக்கது அல்ல!

விருப்பப்படி வாழும் உரிமை மனிதனுக்கு வேண்டும். பூஜை, புனஸ்காரங்கள், ஆன்மிகம், சம்பிரதாயம் போன்றவை அவனது விருப் பத்திலிருந்து திசை திருப்பி மாற்று வழியைக் காட்டுகின்றன. ஆகையால், இயற்கை வளத்தை மனிதவளப் பெருக்கத்தோடு இணைத்து வாழ்வதுதான் சிறப்பு. இருக்க இடம், பசிக்கு உணவு- இரண்டையும் இயற்கை அளித்திருக்கிறது. உடலுறவுக்கான இணையும் உண்டு. இனப்பெருக்கத்தில் மனித வளம் தானாகப் பெருகி வளர்கிறது. இம்மூன்றையும் பெற்று மகிழ, ஆன்மாவின் அறிவு தேவையில்லை.

தேவைகள் பூர்த்தியான பிறகு காலக்ஷேபத்துக் காகவே பூஜை, புனஸ்காரங்கள், பண்டிகைகள், நாடகம், கூத்து, சம்பிரதாயங்கள் ஆகியன பயன்படுகின்றன. அதை வாழ்க்கைத் தேவையாக இணைப்பதில் பயன் இல்லை. பசியில் பத்தும் பறந்து போகும். பயத்தில் செயல்பாடுகள் ஒடுங்கிவிடும். பாதுகாப்பின்மை யில் சிந்தனை நின்றுவிடும். தாழ்வு மனப் பான்மையில் சிந்தனை திசை திரும்பும்.  இந்த நிலையில் மனத்தைத் தூய்மைப்படுத்துவதோ, உயர்த்துவதோ, இல்லாத ஒரு சுகத்தை எட்ட வைப்பதோ நடைமுறைப்படுத்த இயலாத ஒன்று. முடியாத காரியத்தில் வீண் முயற்சி தேவையில்லை. எது முடியுமோ, அதில் செயல் பட்டுத் திருப்திப்படுவது, மனித இயல்பு. அதை அவன் எட்டிவிட்டான். அவனது இலக்கு முழுமை பெற்றுவிட்டது.

இனி, மூன்றாவது கோணத்தைப் பார்ப்போம்.

ஆன்ம அறிவு தேவையில்லை என்ற கூற்று, வளம் பெறாத சிந்தனையின் சிதறல்கள். ஆன்மிகத்தோடு இணைந்தது மனித வளம். உயிரற்ற உடலுக்கு எந்த வளமும் இராது. மனத்துக்குச் செயல்படும் தகுதி இருந்தாலும், இயக்கத்துக்கு ஆன்மாவின் இணைப்பு வேண்டும்.

* ஆன்மாவுக்கு அப்படியென்ன முக்கியத்துவம்?

உடலின் இயக்குநர் ஆன்மா; செயல்படுவது மனம். கலங்கின மனம் சரியான வழியில் செயல்படாது. மன இயல்பையும், அதில் ஆன்மாவின் பங்கையும் தெரிந்துகொண்டவன் மனிதன். மனனம் என்பதற்குச் சிந்திப்பது என்று பொருள். சிந்திப்பதுதான் மனம்.

எல்லோரோடும் இணைந்து வாழ, மனித சிந்தனை வழிகாட்டும். சிந்தனைக்குத் தகவலை அளிப்பது புராணங்கள், இதிகாசங்கள், பூஜை, புனஸ்காரங்கள், சம்பிரதாயங்கள் போன்றவை. பூகோளம், சரித்திரம், கணிதம் போன்றவற்றை மனத்தில் உள்வாங்கி, சிந்தனையில் அதன் நுணுக்கத்தை வளர்த்து, மனித வளத்தை மேம்படுத்தி உலகுக்கு உதவு கிறான். தகவலை வாங்கிக்கொள்ளும் மனம், தனியாக தகவலை உருவாக்காது. பசிக்கு உணவு போல் சிந்தனைக்குத் தகவல் வேண்டும். வேதம், புராணம் இதிஹாசம், தரிசனங்கள், பூஜை- புனஸ்காரங்கள், சம்பிரதாயங்கள் போன்றவை சிந்திக்க உகந்த தகவலை மனத்துக்கு அளிக்கும். அதை உணர்ந்து, அது தூய்மை பெற்று, நல்வழியில் பயணித்து, பிறருக்கு வழிகாட்டும். இன்பமான வாழ்க்கைக்கு ஸனாதனம் மருந்து. அது மட்டும்தான் உண்மையை உணரவைக்கும்.

அறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமா?

* ஆனால், ஆன்ம அறிவும் ஆன்மிக அறநெறிகளும் மனிதனின் விருப்பத்துக்கு இடையூறு என்கிறார்களே..?

மற்ற உயிரினங்களோடு மனித இனத்தை இணைக்கக்கூடாது. உருவத்திலும், உடல் அமைப் பிலும், இயல்பிலும், அறிவின் முதிர்ச்சியிலும் மனிதன் முற்றிலும் மாறுபட்டவன். தான் மட்டும் வாழாமல் பிறரையும் வாழவைக்க வேண்டியவன். சுயசிந்தனையில் வளம்பெற்று மகிழ வேண்டியவன். பண்டைய அறநூல்கள் அவனைப் பணிக்காது; சிந்திக்கச் சொல்லும். அவன் மனத்தில் உள்ள மாசுகளை அகற்றுவது அவற்றின் வேலை. அவன் மனத்தை அவனே தூய்மையாக்க வேண்டும். அதற்கு மூலப்பொருளை அவை அளிக்கும். மனிதனை மனஉயர்வோடு மகிழ வைக்க பண்டைய அறநூல்கள் தோன்றின. அறம் இன்றி, மனிதன் அரைகுறை! அறம் தான் அவனை நல்வழிப்படுத்தும். பண்டைய நூல்களில் அறத்துக்கு முன்னுரிமை இருக்கும். கதை வாயிலாகவும் காலக்ஷேபம், பூஜை- புனஸ்காரங்கள், சம்பிரதாயங்கள் வாயிலாகவும் அறம் புகட்டப்படும். சிறுவர்கள் முதல் முதியோர் வரை, பண்டிதன் முதல் பாமரர் வரை அறத்தை அறிந்துகொள்ள, சனாதனம் மாறுபட்ட வழிகளைக் கையாளுகிறது.

பூமியில் பிறந்த அத்தனைப் பேருக்கும் அறிவு, மனத்தெளிவு விட்டுப்போகாமல் இருக்க, அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு வேதம், புராணம், தரிசனம், சம்பிரதாயம் போன்ற மாற்றங்களைக் கையாண்டார்கள். இவை எல்லாம் மனத்தைப் பதப்படுத்தப் பயன்படும் கருவிகள். ஆன்ம அறிவும் மனத்தெளிவும் மனிதனை முழுமை யாக்கும். லோகாயதம் போதாது; ஆன்மிகம் வேண்டும். சமுதாயம் கொந்தளிக்காமல் அமைதி பெற அறம், ஆன்மிகம் இரண்டும் தேவை. உபதேசங்கள், பயமுறுத்தல், சட்ட திட்டங்கள் எதுவும் பயன் தராது.

* வேதம், புராணம், இதிகாசம் எல்லாம் மனத்தை அமைதிப்படுத்தும்; மனம் திருந்தும் என்கிறீர்கள். அதனால் என்ன பலன்?

மனம் திருந்தினால் மனிதனாவான்.அதுதான் மனித வளம். உபதேசங்கள் காதோடு நின்றுவிடும். சட்டதிட்டங்கள் ஆரம்பத்தில் அமைதி தரும். பிற்பாடு கொந்தளிப்பு பொத்துக்கொண்டு வரும். பயம் விலகினால், சமுதாயம் படாதபாடு படும். மனம் கண்ணாடி போன்றது. எல்லாம் அதில் பதிந்துவிடும். வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் ஊறு விளைவிக் கும் தகவல்கள் அதில் பதிந்திருந்தால், கொந்தளிப்புக்கு வித்திடும். அந்தத் தூசை அகற்ற, மனத்தில் நல்லவற்றைப் பதிய வைத்தால், நாடு முன்னேறும். அத்துடன் அவனும் முன்னேறிவிடுவான்.

சீர்கெட்ட மனம் சீரழிப்பதைப் பார்க்கிறோம். அதற்கு, மனம் திருந்தவேண்டும். அதற்கு நமது பண்டைய பண்டிகைகள், ஸம்பிரதாயங்கள், கேளிக்கைகள், காலக்ஷேபங்கள், புராண இதிஹாச சொற்பொழிவுகள் அத்தனையும் உதவும். சீர்திருத்தவாதிகளுக்கு சிலை வைப்பது,

நினைவிடத்தில் மலர் வளையம் வைப்பது, அவர்களின் உரைகளை அச்சிட்டு விநியோகிப்பது, அவரது பெருமைகளைப் பறைசாற்றுவது, அவர்களுக்கு விழா எடுப்பது, அவர்களது குடும்பங்களுக்கு உதவி செய்வது, அவரது நினைவு நாளில் விடுமுறை அளிப்பது, அவர்களைக் கடவுளாக மதிப்பது, அவர்களது பெருமையில் பெருமிதம்கொள்வது ஆகிய வற்றை எல்லாம் உருப்படியான செயல் களாக எண்ணும் மனம், பண்டைய அற நூல்களை அறவே ஒதுக்குவது அறிவீனம்! அந்த அறநூல்கள்தான் இன்றும் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.

ங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

உடலில் சந்தனம் பூசினால் குளிர்ச்சியை மனம் உணரும். உடம்பில் அடிபட்டால், வேதனையை மனம் உணரும். உள்ளதை உள்ளபடி உணர மனத் தெளிவு வேண்டும். அதை அளிக்கும் திறன், பண்டைய அறநூல் களுக்கு உண்டு. மாற்றுவழி இன்று வரை உருவாகவில்லை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.