Published:Updated:

அரவானின் ஒருநாள் இல்லறம்... களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரவானின் ஒருநாள் இல்லறம்... களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா!
அரவானின் ஒருநாள் இல்லறம்... களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா!

அரவானின் ஒருநாள் இல்லறம்... களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா... ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் விமரிசையான விழாக்களில் ஒன்று. இது திருநங்கைகளுக்கான விழா. விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில்தான் திருவிழா நடைபெறும் என்றாலும், அதற்கு முந்தைய வாரமே விழுப்புரம் ஓட்டல்களில் அறை எடுத்துத் தங்குவதோடு `மங்கை இவள் தேவதையோ தேன் சிந்தும் கனி இவளோ...' என்று பாடும் அளவுக்கு மேக்கப் போட்டு வீதிகளில் வலம் வருவார்கள்.

தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவியும் திருநங்கைகள் தங்களது நண்பர்கள், தோழிகள், உற்றார் உறவினர்கள் என அனைவரையும் ஒரே நேரத்தில் சந்தித்து மகிழும் விழாவாகவும் இதைப் பார்க்கின்றனர். அதுசரி... கூத்தாண்டவருக்கும் திருநங்கைகளுக்கும் கூவாகத்துக்கும் என்ன தொடர்பு என்று சிலர் ஆவலுடன் கேட்கக் காத்திருப்பது புரிகிறது. இதோ... அவர்களுக்காக அந்த வரலாற்றுத் தகவல்.

மகாபாரத குருச்க்ஷேத்திரப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அப்பழுக்கற்ற ஒரு மனிதப்பலி நிகழவேண்டும் என்று ஆருடம் கூறுகின்றனர். அதாவது, எந்த ஒரு குற்றமும் செய்யாத சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனித பலி அவர்களது தரப்பில் முதலில் பலியாக வேண்டும் என்பதே அது. பாண்டவர்கள் தரப்பில் அதற்குரிய சாமுத்திரிகா லட்சணம் அர்ஜுனன், அர்ஜுனனின் மகன் அரவான் மற்றும் ஶ்ரீகிருஷ்ணர் ஆகியோருக்கே இருக்கிறது (அர்ஜுனனால் கவரப்பட்டு கர்ப்பமுற்ற வேடுவப்பெண்ணான நாககன்னிக்கு மகனாகப் பிறந்தவர் அரவான்). இத்தகையச் சூழலில், இந்த மூன்றுபேரில் யார் அதற்குத் தகுதியானவர் என்று விவாதிக்கப்படுகிறது.
குருக்ஷேத்திரப் போருக்கு அர்ஜுனனும் கிருஷ்ணரும் முக்கியமானவர்கள் மட்டுமல்ல, அவர்கள்தான் தகுதியானவர்களும்கூட. ஆகவே அவர்களில் இன்னொருவரான அர்ஜுனனின் மகன் அரவான்தான் இதற்கு சரியான ஆள் என்று முடிவெடுக்கப்படுகிறது. அதன்படி அரவானை சம்மதிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

அரவான் அதற்குச் சம்மதித்தாலும் தனது கடைசி ஆசையை நிறைவேற்றினால்தான் பலிகளம் புகுவேன் என்கிறார். `சரி... உன் ஆசை என்னவென்று சொல்' என்று கேட்க, 'பெண்ணொருத்தியுடன், ஒருநாள் இல்லற வாழ்வு வாழ வேண்டும்' என்கிறார். உடனே, அரச குலம் தொடங்கி சாமான்யர்கள் வரை எல்லா இடங்களிலும் பெண் தேடுகின்றனர். ஒருநாள் இல்லறம் நடத்திவிட்டு சாகப்போகிறவனுக்கு எப்படி கழுத்தை நீட்டுவது? என்றுகூறி எந்தப்பெண்ணும் அதற்குச் சம்மதிக்கவில்லை.

வேறு வழியில்லாமல் ஶ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணக்கிறார். அதன்பிறகு ஒருநாள் இல்லற வாழ்வு வாழ்ந்த அரவான் பலிகளம் புகுகிறார். கணவனை இழந்த மோகினி விதவைக்கோலம் தரிக்கிறாள். ஆணான ஶ்ரீகிருஷ்ணர் மோகினியாக அவதாரம் எடுத்ததன் அடிப்படையில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் திருநங்கைகள் தங்களை மோகினியாகக் கருதி தாலி கட்டிக்கொண்டு மறுநாள் தாலி அறுக்கும் நிகழ்வை ஆண்டுதோறும் நிகழ்த்துகின்றனர்.

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக இருக்கிறார். கூத்தாண்டவர் என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயராகும். திரௌபதி வழிபாட்டு மரபிலும் அரவான் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்திய கிராமங்களில் அரவானைத் தெய்வமாக வழிபடும் பகுதிகளில் இருந்து தோன்றியவையாகும். அரவான்... அலி, அரவானிகள், திருநங்கைகள் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். தெற்காசியப் பகுதிகளில் 'ஹிஜிரா' என்று அழைக்கப்படுகின்றனர்.


தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூகாவில் உள்ள கூவாகம் என்ற கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்த விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 25-ந்தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இன்று இரவு சாமி கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது அரவானை மணமகனாகப் பாவித்து, தங்களை மணப்பெண்களைப்போல அலங்கரித்துக்கொண்டு கோவிலுக்குச் சென்று கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். இதையடுத்து நாளை மறுநாள் சித்திரை தேரோட்டம் நடைபெறும். அதன்முடிவில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் தாலியை அறுத்தெறிந்து வெள்ளைச்சேலை உடுத்தி விதவைக்கோலம் பூணுவார்கள்.

இந்த விழாவையொட்டி விழுப்புரம் மற்றும் கூவாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று 'மிஸ் கூவாகம்' என்ற பெயரில் திருநங்கைகளுக்கான அழகுப்போட்டி நடைபெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு