Published:Updated:

சித்ரா பௌர்ணமியில் நலம் பல அருளும் கண்ணகி!

சித்ரா பௌர்ணமியில் நலம் பல அருளும் கண்ணகி!
சித்ரா பௌர்ணமியில் நலம் பல அருளும் கண்ணகி!

'சித்ரா பௌர்ணமி' பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தினம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். 'புத்த பூர்ணிமா' என்று புத்தபெருமானின் சிறப்புகளைப் போற்றும் தினம். அதைவிட மேலாக 2000 ஆண்டுகள் பழமையான, சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட மங்கலதேவி கண்ணகிக் கோயில் திருவிழாவும் இத்தினத்தில்தான் கொண்டாடப்படுகிறது.

யார் இந்த மங்கலதேவி?

கோவலனை இழந்த கண்ணகி மதுரையில் இருந்து, மேற்கு நோக்கிப் பயணம் செய்து மேற்குத் தொடர்ச்சி மலையைச் சென்றடைந்தாள். அங்கிருந்த வேங்கை மரத்தடியில் 14 நாள்கள் அமர்ந்திருந்தாள். அங்கே வசித்துவந்த குன்றக்குறவர்களின் 'குன்றக்குறவை' நடனம் அவளுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. தன் வாழ்வில் நேர்ந்த துயரங்களையும் அவர்களிடம் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் இருந்து புஷ்பக விமானத்தில் தோன்றும் கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்துத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அன்று முதல் 'மங்கலதேவி' என்ற பெயரில் அம்மக்களால் தெய்வமாகப் போற்றி வணங்கப்படுகிறாள் கண்ணகி.

வஞ்சிக்காண்டம் வரந்தரு காதையில்:

"மங்கலமடந்தை கோட்டத் தாங்கண்

வெங்கோட்டுயர் வரைச் சேனுயர் சிலம்பில்"

கண்ணகி 'மங்கலதேவி' என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

கோயில் உருவான வரலாறு:

சேர மன்னன் செங்குட்டுவன் ஒருமுறை இப்பகுதிக்கு வேட்டையாட வந்தான். மன்னனிடம், பழங்குடி மக்கள் மங்கல தேவியின் வரலாற்றைக் கூறினர். இவர்கள் சொல்வது கண்ணகியைத்தான் என்று புரிந்துகொண்டான். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சேரன், கண்ணகிக்கு இங்கே கோயில் எழுப்ப விரும்பினான். இமயத்தில் கல் எடுத்து, கங்கையில் நீராட்டி, இங்கே கோயில் கட்டி, தேவியின் சிலையைப் பிரதிஷ்டை செய்து வணங்கினான்.

எங்கே இருக்கிறது கண்ணகிக் கோயில்:

தேனி மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகே பளியன்குடி என்னும் கிராமம் உள்ளது. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் மங்கலதேவிக் கோயில் அமைந்துள்ளது.

சுரங்கப்பாதையைப் போல் இருக்கும் அறைக்குள் சென்றால், அங்கே சந்தனத்தால் செயற்கையாக செய்யப்பட்ட சிலையில் வெள்ளியாலான முகத்துடன் 'மங்கலதேவி' காட்சி தருகிறாள்.

கண்ணகிக் கோயில் திருவிழா:

ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தில் இக்கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. வருடத்தில் சித்திரை முழுநிலவு அதாவது சித்ரா பௌர்ணமி தினத்தில் மட்டுமே இங்கு வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அன்று மட்டும் காலை முதல் மாலை வரை நடை திறந்திருக்கும். மங்கலதேவிக்கு அவல், பால், நெய், கற்கண்டு, வாழைப்பழம், பேரீட்சை, சர்க்கரை, ஏலம் ஆகியவை சேர்க்கப்பட்ட கலவை படைக்கப்படுகிறது. வழிபடும் பக்தர்களுக்கு திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவை பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் சித்ராபவுர்ணமி அன்று இங்கே அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இங்கே வந்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலியாக வாழலாம்.

கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் மீண்டும் ஒன்றுசேர இங்கு வந்து வழிபடலாம்.

அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்' என்ற தத்துவத்தை மெய்ப்பிக்கும் வகையில் கற்பில் சிறந்த கண்ணகி தேவிக்கு, சேரன் செங்குட்டுவனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. தேவியின் மேன்மையைப் போற்றும் விதமாக இன்றளவும் பலர் இந்த ஆலயத்தை நோக்கிச் செல்கின்றனர். கண்ணகி தேவி வழிபாடு சமூகத்தில் அறநெறிகளை வளர்க்க உதவும், தர்மச் சிந்தனைகளை அதிகரிக்கச் செய்யும்.