தொடர்கள்
Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

'சாணி உருண்டையில் ஊடுருவிய நெருப்பு, கனலாக மாறி வெப்பத்தை உமிழ்ந்து சுற்றுச்சூழலைச் சூடாக்கி, கடும்குளிரில் முடங்கிக்கிடந்த மாணவனை உசுப்பி, படிப்பில் கவனம் செலுத்த வைக்கும்’ என்கிறது சாஸ்திரம் (காரீஷோத்யாபயதி). ஒருவனைப் படுக்கவைத்துவிட்ட குளிரானது, வெப்பத்தின் தாக்கத்தில் மறைந்து அவனை சுறுசுறுப்போடு இயங்கவைத்தது. இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கும் மாணவனை ஆதவனின் கதிர்கள் தட்டி எழுப்பி இயங்க வைக்கின்றன.

வெப்பத்தின் தாக்கத்தால் அசதியில் ஆழ்ந்தவன், இரவு சந்திர கிரணத்தின் குளிர்ச்சியில் உறக்கத்தைத் தழுவுவான். மேய்ந்து வீடு திரும்பிய பசுவின் குளிர்ந்த பார்வை, பாலுக்காகக் காய்ந்து கிடக்கும் கன்றின் மேல் பட்டதும் மடி சுரந்து, கன்றின் பசியைத் தணிப்பது உண்டு. தண்ணீரில் இதழ்மூடி திகழும் தாமரைமொட்டு, கதிரவனின் வெப்பத்தில் மலர்ந்துவிடும். ஜடமான சூரியகாந்தக் கல்லானது, சூரிய கிரணத்தின் தொடர்பில் வெப்பத்தை உமிழும். சந்திரகாந்தக் கல், சந்திரனின் தொடர்பில் குளிர்ச்சியை உமிழும்.  கோடைகாலத்தின் கும்மிருட்டில் ஆழ்ந்தவனுக்கு முழுநிலவு உற்சாகத்தை அளிக்கும். இங்கெல்லாம் விகிதாசாரத்தோடு இணைந்த வெப்பதட்பங்கள், சிந்தனை மாற்றத்துக்கும் காரணமாகின்றன.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

ஆட்டோ மீட்டரை சூடாக்கினால்தான் திரிசமன் செய்ய இயலும். கறந்த சூட்டுடன் இணைந்த பாலை குளிரவைத்தால் மட்டுமே நாம் விரும்பிய நேரம் வரையிலும் பாதுகாக்கலாம். குளிர் அகன்றதும் மீண்டும் சூடேற்ற வேண்டும். அப்போதுதான் அது பயன்படும். வாழைக்காய், மாங்காய் போன்றவை வளர்ச்சி முற்றிய நிலையில், கதிரவனின் வெப்பம் பட்டு பழமாகப் பரிணமிக்கின்றன. செயற்கை முறையில் வெப்பத்தைச் சந்திக்கவைத்து பழுக்க வைப்பதும் உண்டு. கெமிக்கல் வாயிலாக சூடேற்றப்பட்ட பழங்கள் அங்காடிகளில் தென்படுகின்றன. நீரின் தொடர்பில் தோன்றிய வீக்கத்தைத் தணிக்க சூடான ஒத்தடம் பயன்படும். குளிர் காயும் வேளையில், கைகளைத் தேய்த்துச் சூடாக்கி உடம்பைத் தடவிக்கொண்டு குளிரைத் தணிப்பதும் உண்டு.

இப்படி, அசையாத பொருளிலும்... அதாவது, சைதன்யம் அற்ற ஜடத்திலும் வெப்பதட்பங்களின் சேர்க்கையானது புது பரிணாமத்துக்குக் காரணமாகிறது. கடும் குளிரில் உடல் ரோமங்கள் குத்திட்டு நின்று, உள்ளிருக்கும் வெப்பத்துக்கு ஒரு 'ஸ்டெபிலைஸர்’ போன்று பாதுகாப்பு அளிக்கும். உள் வெப்பம் அளவுக்கு மீறி இருந்தால், உடல் ரோமங்கள் வடிகாலாக மாறி வழி விட்டு, வெப்பத்தை வெளியேற்றி பாதுகாப்பு அளிக்கும்; மாறுதலுக்கு வெப்பதட்பம் காரணம் என்று நமக்கு உணர்த்தும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

பூஜையில் நீராடலும் தீபாராதனையும் இணையும். உத்ஸவத்தில் பட்டாசும் வெடிக்கும்; ஆராட்டும் இருக்கும். இறைவனை கும்ப நீரிலும், வேள்வித் தீயிலும் இருத்தி வழிபடுவோம். ஆண் மகனின் வெப்பமான பீஜம், பெண்ணின் கருவறை நீரில் இணைந்து சிசு உருவாகும். அளவோடு இணைந்த வெப்பதட்பம் ஆகாசத்தில் பரவி, சுமுகமான சூழலை உருவாக்கும். பூமியின் வெப்பத்தோடு மழையின் தட்பம் இணைவதால் விதைகள் வளர்ந்து பயிராகின்றன. கடல் நீரில் வாழும் உயிரினங்களை, அதில் ஊடுருவியிருக்கும் வெப்பம் வாழவைக்கிறது. வெப்ப மிகுதியில் தோன்றும் புழுக்கமான சூழல் மழையைச் சந்திக்கும் வேளையில், ஈசல்கள் உருவாகும். தோற்றத்துக்கும் மாற்றத்துக்கும் தட்பவெப்பத்தின் இணைப்பு தேவை.

தாங்கமுடியாத வெப்பமானது உடலில் இருக்கும் நீரை உறிஞ்சி உயிரை வெளியேற்றும். அதேபோன்று, தாங்க முடியாத குளிரானது உடலில் இருக்கும் வெப்பத்தை வெளியேற்றி உயிர்துறக்க வைக்கும். கோயில் வளாகத்தில் பக்தர்களின் ஆரவாரத்தால் வெப்பச்சூழல் உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கு, அந்தக் கோயிலின் முன் தென்படும் நீர் நிரம்பிய தடாகங்கள் ஒத்துழைக்கும். கருவறையில் நீராடிய இறைவனுக்கு தீப ஒளிகளை இணைத்து, ஆராதனைக்கு உகந்த சூழலை உருவாக்கி முழுமை பெறச் செய்வது உண்டு. நாக்கு வறண்டு போனால் தண்ணீர் மருந்தாகிறது. ஜலதோஷத்தில் இருப்பவன் நீராவி பிடித்து நிம்மதி பெறுவான். முதலில் தோன்றிய நீரில் வீர்யம் (வெப்பம்) இணைந்ததும் முட்டை வடிவில் உலகம் உதயமானது என்கிறது புராணம் (அபஏவஸஸர்ஜாதௌ...). நெற்றிக் கண்ணில் இருந்து வெளிவந்த நெருப்பானது சரவணப் பொய்கையில் நீரோடு இணைந்தபோது, ஆறுமுகன் தோன்றினார்.

கற்பனையில் பிறந்த பன்னிரண்டு ராசிகளுக்கு வெப்பதட்பத்தின் கலவை உருவமாகத் தென்படுகிறது. மீனம் - நீர் ராசி; மீன்கள் வாழ முழு அளவு நீர் வேண்டும். கடகம்- நீர் ராசி; நண்டு ஈரப்பதமான இடங்களில் வளையவரும். கன்னி- நீர் ராசி; கையில் நெற்கதிருடன் பெண்ணொருத்தி ஓடத்தில் அமர்ந்திருப்பாள். ஓடம் நீரில் மிதந்து செல்லும். மகரம்- நீர் ராசி; மகர மத்ஸ்யம் (மீன்) நீர் வாழும் உயிரினம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

மேஷம்- வெப்ப ராசி; வறண்ட பூமியில் வாழும் இனம் ஆடு. ரிஷபம்- வெப்ப ராசி; கட்டாந்தரையில் காலத்தைக் கழிக்கும் காளை மாடு. மிதுனம்- வெப்பராசி; மனிதர்கள் வாழும் செப்பனிட்ட இடம். சிம்மம்- வெப்ப ராசி; சிங்கம் காட்டில் வாழும் இனம். வெப்பமும் தட்பமும் சேர்ந்து காடு உருவானாலும், அங்கு வெப்பத்தின் தாக்கம் மேலோங்கியிருக்கும். துலாம்- வெப்ப ராசி; நாகரிக மனிதர்கள் வாழும் இடம். அங்கு இரண்டும் தென்பட்டாலும் வெப்பம் முன்னுரிமை பெறும். விருச்சிகம்- வெப்பராசி; தேள்கள் தோன்றவும் வாழவும் வெப்பச்சூழல் உதவும். தனுசு- வெப்ப ராசி; வில்லோடு இணைந்த மனிதன் தரையில் வாழ்பவன். கும்பம்- வெப்ப ராசி; தோளில் தாங்கிய குடத்தோடு மனிதன் தென்படுவான். அந்தக் கும்பத்தில் நீர் இருக்காது. ஆக, 4 தட்ப ராசிகளும், அதன் இருமடங்கு அளவு வெப்ப ராசிகளும் இணைந்தது ராசிச் சக்கரம்.

சந்திரன், புதன், சுக்கிரன், குரு ஆகிய நான்கும் தட்பக் கிரகங்கள். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய ஐந்தும் வெப்பக் கிரகங்கள். தட்பக் கிரகங்களை, 'ஸெளம்ய க்ரஹம்’ என்றும், வெப்பக் கிரகங்களை 'க்ரூர க்ரஹம்’ என்றும் பெயரிட்டு அழைக்கிறது ஜோதிடம்.

பெண் ஜாதகத்தில் 8-ல் பாபக் கிரகம் இருந்தால், கணவனை இழப்பாள். அதேவேளையில், 2-ல் சுபக் கிரகம் இருந்தால் கணவனுக்கு முன்பு அவள் உயிர் பிரிந்துவிடும் என்கிறது ஜோதிடம்.

பெண் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 7-ம் வீடு கணவனின் லக்னம். அதன் இரண்டு (அதாவது பெண்ணின்  8) மாரக ஸ்தானம். அதில் வீற்றிருக்கும் வெப்பக் கிரகம், 7-வது முழு பார்வையாக கணவனின் 8-ஐ அதாவது பெண்ணின் மாரக ஸ்தானமான 2-ஐ பார்ப்பதால் கணவன் இழப்பு நிகழ்கிறது என்று விளக்கமளிக்கும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

பூமியின் இயல்பு செவ்வாய் கிரகத்துக்கு உண்டு என்கிறது ஜோதிடம். அவனுக்கு 'குஜன்’ என்ற பெயர் உண்டு. 'கு’ என்றால் பூமி; 'ஜன்’ என்றால் பிறந்தவன் என்று பொருள். பூமியின் இயல்பு வெப்பம். அதிலிருந்து வெளி வந்தவனுக்கு வெப்பம் இருக்கும். தன்னிடம் இருக்கும் வெப்பத்தை சூரியன் வெளியே வாரியிறைத்து, சுற்றுச் சூழலை வெப்பமயமாக்குவான். பூமி தனது வெப்பத்தை உள்ளடக்கி வைத்திருக்கும். அடங்கி இருக்கும் வெப்பம் பலம் பெற்றிருக்கும். சூரியனைவிட செவ்வாயின் வெப்பம் முழு அளவு பெற்றிருக்கும்.

'பார்வை’ என்பது அதன் இயல்பு வெளியேறும் வடிகால். செவ்வாய்க்கு, 'கொடூரப் பார்வை உடையவன்’ என்ற பெயர் உண்டு. 'க்ரூரத்ருக்’ என்று சுட்டிக்காட்டும் ஜோதிடம்.

பெண் ஜாதகத்தில் 8-ல் இருக்கும் செவ்வாய், தனது பார்வை வாயிலாக வெப்பத்தை... கணவனது ஆயுள் பாவமான 8-ஐ, அதாவது பெண்ணின் 2-ல் முழுமையாகப் பரவி இறப்புக்கு வித்திடு கிறான். தட்பத்தின் சந்திப்பு வெப்பத்துக்கு இல்லாதபடியால் அது வென்றுவிடுகிறது. (படம் 1-A)

தேநேரம், பெண் ஜாதகத்தில் 2-ல் குளிர்ச்சி கிரகமான குரு இருந்தால், அதன் பார்வை 8-ல் இருக்கும் செவ்வாய்க்குப் பரவி அதன் வெப்பத்தைத் தணித்துவிடுவதால், செவ்வாயின் வெப்பம் செயலிழக்கும்; அதன் பார்வையில் மரணம் நிகழவில்லை. முழு அளவு தட்பக் கிரகமான குருவின் பார்வை, முழு அளவு வெப்பக் கிரகமான செவ்வாயில் விழுந்து வெப்பத்தை தணிக்கவைத்தால், அதன் பார்வை செயலிழந்து கணவன் உயிரைத் தக்க வைத்தது என்று விளக்கம் தரும் ஜோதிடம். (படம் 1-B)

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

தட்ப வெப்பக் கிரகங்கள் இரண்டின் சேர்க்கையைவிட, பார்வைதான் பல மாறுதலுக்குப் பொறுப்பேற்கும். செவ்வாய், குரு என்ற இரண்டு வெப்பதட்ப கிரகங்களின் சேர்க்கையில், இயல்புகள் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுவதால், இரண்டில் ஒன்றை வலுவிழக்கச் செய்யும் தகுதி முழுமை பெறாது. புளியும் உப்பும் சேரும்போது, நாம் உட்கொள்ளும் தகுதியை ஏற்படுத்துமே தவிர, இரண்டில் ஒன்று மறையாது. 'ஒரு பார்வையானது இன்னொன்றை வென்றுவிடும்’ என்று கூறி, சேர்க்கையைவிட, பார்வைக்கு மாற்றத்துக்கு ஒத்துழைக்கும் தகுதி உண்டு என்று சொல்லும்.

ட்டில் வெப்பக் கிரகம் செவ்வாய். இரண்டில் இருக்கும் இரண்டு கிரகங்கள் பார்வை முழுமையாக 8-ல் பரவும். (படம் 2) 8-ல் உள்ள வெப்பக் கிரகம் செவ்வாய்க்கு முதலில் தட்பக் கிரகமான குருவின் பார்வை படும். வெப்பக் கிரகம் இருந்தால், அதன் எதிரிடையான தட்பக் கிரகம்தான் முதலில் பார்க்கும் என்ற நியதியை ஜோதிடம் வலியுறுத்தும். 'மைனஸ்’ (-) இருந்தால் 'ப்ளஸ்’ (+) இணையும். 'ப்ளஸ்’ (+) இருந்தால் முதலில் 'மைனஸ்’ (-) இணையும். '8-ல் சுபக் கிரகம் இருந்தால், பாபக் கிரகம் முதலில் பார்க்கும். பிறகு அதோடு இணைந்த சுபக் கிரகம் பார்க்கும்’ என்ற நியதியை ஜோதிடம் ஏற்கும்.

இங்கு 8-ல் வெப்பம் (செவ்வாய்) இருப்பதால், 2-ல் இருக்கும் சுபக் கிரகமான குரு அதாவது தட்பக் கிரகம் முதலில் பார்க்கும். அதன் பார்வையில் வெப்பம் தணியும். அப்படி தணிந்த வெப்பத்தை... சனியின் பார்வையானது (வெப்ப பார்வை), குருவின் செயல் பாட்டை அழித்து, செவ்வாயின் வெப்பத்தைத் தக்கவைத்துவிடும். அதாவது, குருவின் பார்வை அந்த பாவத்தை பாதிக்காது; அந்த வெப்பத்தைத் தணிக்க முற்பட்டு தகுதி இழந்துவிடும். அடுத்து வரும் சனியின் பார்வை, குருவின் பார்வையில் ஏற்பட்ட மாறுபாட்டை மட்டுமே அழிக்கும். செவ்வாய்க்கோ, அந்த பாவத்துக்கோ எந்த மாறுபாட்டையும் விளைவிக்காது. இப்படி, குருவின் பார்வையில் விளைந்ததை சனியின் பார்வை அகற்றும்போது, இடையூறு விலகி செவ்வாயின் பார்வை உயிர்பெற்றுவிடும். ஆகையால் கணவன் இழப்பை நடைமுறைப்படுத்தும் என்று விளக்கும்.

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் ஒரு மணியை (ரத்தினக் கல்) இணைத்தால், எரியும் சக்தி மறைந்து விடும். அதேவேளையில், மற்றொரு மணியை ஏற்கெனவே உள்ள மணியுடன் இணைத்தால், மறைந்த சக்தி வெளிப்பட்டு கொழுந்துவிட்டு எரியும். இங்கு, முதல் மணியானது நெருப்பை அணைத்தது. அதனுடன் இணைந்த இரண்டாவது மணியானது, முதல் மணியின் தகுதியை இழக்க வைத்தது. தகுதி இழந்தவுடன்- தடை விலகியவுடன் அது எரிய ஆரம்பித்தது. இரண்டாவது மணி நெருப்பை அணைக்கவோ, கொழுந்து விட்டு எரியவோ செய்யவில்லை. முதல் மணியின் செயல்பாட்டை மட்டும் பாதித்தது என்ற நியதியை தர்க்க சாஸ்திரம் உறுதிப்படுத்தியிருக்கிறது (உத்தேஜகமண்ய பாவஸ்ய காரணத்வாத்). அதை ஏற்று, ஜோதிடமும் தனது தகவலுக்கு உண்மைத்தன்மையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

குருவின் பார்வை செவ்வாயின் வெப்பத்தை பாதித்தது. சனியின் பார்வை குருவின் பார்வையைச் செயலிழக்க வைத்தது ஆக, ஏற்கெனவே இருக்கும் செவ்வாயின் பார்வை அமலுக்கு வந்தது என்ற தகவலை ஜோதிடம் வெளியிடும்.

பார்வையில் முழு சக்தியும் கிரகத்தில் இணையும். சேர்ந்து இருக்கும்போது, சேர்க்கையில் மாறுதல் அடைந்த வெப்பமோ தட்பமோ முழுமையான அளவில் செயல்பட இடமிருக்காது. இப்படியிருக்க நமது குடும்பச் சூழலையும் சச்சரவையும் கிரகங்களுக்கும் ஏற்படுத்தி, நமது அதாவது பாமர சிந்தனைகள் கிரகம் வாயிலாக வெளி வருகிறது என்ற தோற்றத்தை உண்டு பண்ணுவதில் தேர்ச்சி அடைந்துவிட்ட ஜோதிடர்கள் வளைய வருவது நமது துரதிருஷ்டம்!

சூரியனின் புதல்வன் சனி. சனியின் புதல்வன் குளிகன். சந்திரனுக்கு தாரையின் வழியில் பிறந்த மகன் புதன். அப்பாவும் மகனும் எப்போதும் சண்டை-சச்சரவில் இருப்பவர்கள். குருவின் மனைவியை சந்திரன் கவர்ந்ததால், அவர்கள் பரஸ்பரம் எதிரிகள். உச்சன் உச்சனைப் பார்த்தால் பிச்சை எடுப்பான். காலைப் பிடித்த பாம்பு கடிக்காமல் விடாது... இப்படி, பாமரத்தனமான சொல்வளத்தால், தாங்கள் சொல்லும் தகவலுக்குச் சான்று அளிப்பது, சிந்தனை வளம் பெற்றவர்களுக்கு அழகல்ல. படித்து உணர்ந்து பாமரர்களை உயர்த்த வேண்டும். கதையை விட்டு கருத்துக்கு முதலிடம் அளிக்கப் பழக வேண்டும்.

- சிந்திப்போம்...