தொடர்கள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! 17

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

பொதுவாக, சோழர் காலக் கோயில்களின் கட்டட அமைப்பு மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றை மூன்று பிரிவாகப் பிரிப்பார்கள். விஜயாலயச் சோழன் காலம் (கி.பி.846) வரை உள்ள படைப்புகளை, முற்காலச் சோழர்களின் கலை என்பார்கள். இந்தக் காலகட்டத்தில் படைக்கப்பட்ட சிற்பங்களும், செப்புத் திருமேனிகளும் கலைச் சிறப்பால் முதலிடத்தில் திகழ்கின்றன.

முற்காலச் சோழர்களின் கலைப் படைப்புக்கு, அவர்களுடன் இணைந்து ஆட்சி புரிந்த சிற்றரசர்களான கொடும்பாளூர் வேளிர்களான இருங்கோளர்களின் பங்களிப்பும், பழுவூர் பகுதியை ஆட்சி புரிந்த பழுவேட்டரையர்களின் பங்களிப்பும் பெரிதும் துணை புரிந்தன. கீழையூரில் உள்ள அவனி கந்தர்ப்ப ஈஸ்வரகிருகம் எனும் இரட்டைச் சிவாலயங்களில், கோயில் வளாகத்தின் வடபுறம் உள்ளது, வடவாயில் ஸ்ரீகோயில்!

இந்தக் கோயிலும் தென்புறக்கோயில் போன்றே மேற்கு திசை நோக்கியே அமைந்துள்ள ஆலயம். தற்காலத்தில் இந்த ஆலயத்தை அருணாசலேஸ்வரம் என்றும் சோழீஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோயிலின் ஸ்ரீவிமானம் இரண்டு தளங்களுடன் விருத்த (வட்ட வடிவ) சிகரம் பெற்றுக் கற்றளியாகவே விளங்குகிறது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 17

கருவறைச் சுவரில் உள்ள தேவ கோஷ்டங்களில் வடக்கில் ஸ்ரீபிரம்மாவும், தெற்கில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியும், கிழக்கில் அமர்ந்த கோலத்தில் முருகப் பெருமானின் திருவுருவங்களும் இடம் பெற்றுள்ளன.

திருச்சுற்றில் எட்டு பரிவார ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீகணபதியார், ஸ்ரீமுருகன், ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசப்தமாதர், ஸ்ரீசண்டீசர் போன்ற பரிவார தெய்வங்கள் மிகப் பழைமையானவை.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 17

ஸ்ரீகணபதியாரின் திருமேனி தனித்தன்மையுடன் திகழ்கிறது. மேல் வலக்கரத்தில் ருத்திராட்ச மாலையும், மேல் இடக்கரத்தில் அங்குசமும் உள்ளன. கீழ் வலக்கரத்தில் ஒரு பழமும், கீழ் இடக் கரத்தில் ஒரு பழமும் இருக்க, மற்றொரு பழத்தை துதிக்கையால் எடுத்து வாயில் இடும் காட்சியை இந்தக் கோயிலைத் தவிர, வேறு ஆலயங்களில் காண்பது மிகவும் அரிது எனப் போற்றுகின்றனர் சரித்திர ஆர்வலர்கள். வயிற்றில் உதரபந்தம், மணிகள் கோக்கப்பெற்ற முப்புரிநூல், அழகிய மகுடம் ஆகியவை கணபதியை அலங்கரிக்கின்றன.

சப்தமாதர் கோயிலில் ஒருபுறம் கணபதியும், மற்றொருபுறம் யோக மூர்த்தியாக சிவபெருமானும் அமர்ந்திருக்க, இடையே ஸ்ரீபிராம்மி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீவராகி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீசாமுண்டி ஆகிய அன்னையர் ஏழு பேரும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மரபு கலைப் படைப்புக்களாகத் திகழும் சப்தமாதர் சிற்பங்கள் வரிசையில் முதலிடம் பெற்றுத் திகழ்பவை இவை என்றால், மிகையில்லை!

சேதி சொல்லும் சிற்பங்கள்! 17

தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புற கோஷ்டத்தில் ஸ்ரீசந்திரசேகரரான சிவவடிவமும் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியது என்பார்கள். அவருக்கு மேல் காணப்படும் மகரதோரண வேலைப்பாடுகள், செம்பில் வார்த்தெடுக்கப்பட்டவைதானோ எனும் அளவுக்கு அத்தனை நேர்த்தியுடன் தத்ரூபமாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள விதம் போற்றுதலுக்கு உரியது.

அந்த மாடத்தில் திகழும் ஸ்ரீசந்திரசேகரர், மான்- மழு ஆகியவற்றை ஏந்தியவராக, ஒரு கரத்தால் அபய முத்திரை காட்டி, மறு கரத்தைத் தன் தொடை மீது இருத்தியுள்ளார்.

இந்தச் சிற்பத்தைப் போன்றே ஸ்ரீகந்தபிரானின் வடிவமும் அற்புத மாகக் காணப்படுகிறது. நெருங்கித் தொடுக்கப்பட்ட சிறிய மாலையுடன் மகுடம் சூடிய கந்தவேள், சன்ன வீரம், உதர பந்தம், அழகிய இடுப்பாடை ஆகிய வற்றைத் தரித்துள்ளார். மேலிரு கரங்களில் வஜ்ராயுதமும் சக்தி ஆயுதமும் திகழ, வலக்கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தைத் தொடை மீது இருத்தியுள்ளார்.

மேலப் பழுவூர் செல்வோர், கீழையூரில் உள்ள இரட்டைக் கோயில் களான அவனி கந்தர்ப்ப ஈஸ்வர கிருகத்தைக் கண்டு தரிசித்து, சிற்பப் பேரழகை ரசித்துவிட்டு, அதையடுத்து சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று, அங்கே உள்ள கலைப் பொக்கிஷத் தையும் கண்ணாரக் கண்டு களியுங்கள்! விலை மதிக்கமுடியாத அற்புதங்கள் பலவற்றையும் அங்கே சிற்பங்களாகத் தரிசிக்கலாம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 17

குறிப்பாக, அழகு ததும்பக் காட்சி தரும் ரிஷபத்தைப் பார்த்தால், 'அட..!’ என்று வியந்து போவீர்கள். கீழப்பழுவூருக்குச் சென்று, திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருவாலந்துறையார் கோயிலையும், அருகில் இடிபாடுகளுக்கு இடையே உள்ள கோயில் சிற்பங்களையும் காணலாம்.

இவை அனைத்தும் பழுவேட்டரையர்கள் என்ற அரச மரபினர் தமிழகத்துக்குத் தந்த பெருங்கொடை!

- புரட்டுவோம்