Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

Published:Updated:
##~##

'பாரடா இப்படியே யுகங்கள் தோறும்
பார்தனில் நானிருந்தேன் பலகோடி ஆண்டு
ஆரடா என்னைப்போல் அறிவாருண்டோ
ஆதியென்ற சித்தருக்கும் ஆதியானேன்.
வீரடா விமலரிடம் செல்லும்போது
வெற்றியுடனெனை எடுத்து முத்தமிட்டார்
காரடா கயிலையின்மேல் இருக்கச்சொன்னார்
காகமென்ற ரூபமா யிருந்தேன் பாரே...’

                      - காகபுஜண்டர்

காகபுஜண்டர்! சித்த புருஷர்களில் மிகுந்த ஆய்வுக்குரிய சித்தர் இவர் என்றால், மிகையே இல்லை. சித்தர்களின் தொடக்கம் சுந்தரானந்தரில் இருந்து தொடங்குகிறது என்பது ஒரு கணக்கு.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரப் பெருமான்தான் சுந்தரானந்த சித்தராக மதுரையில் நடமாடி, மொத்த மதுரை மக்களையும் தன் பேரழகால் மயக்கி, சித்து வேலைகள் பல செய்து, பின் இந்திரனால் கட்டப்பட்ட ஆலயத்துக்குள் பாண்டிய அரசனின் முன்னால், கல் யானைக்குக் கரும்பு கொடுத்து, பாண்டியனுக்கும் பிள்ளைப் பேற்றை அளித்துச் சென்றவராவார்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

இப்படி, சுந்தரேசப் பெருமானே சுந்தரானந்த சித்தனாக வந்து, சித்தர் வரிசை தொடங்கியது. அதற்கு முன் முனிவர்கள், ரிஷிகள் என்போரே இருந்த நிலையில், சித்தர் என்றொரு வரிசை ஈசனால் தோற்றுவிக்கப்பட எது காரணம் என்பதற்குத் தெளிவான ஒரு விடையை இதுநாள் வரையில் எவரும் கண்டதாகத் தெரியவில்லை.

நிலையாய் ஓரிடத்தில் அமர்ந்து தவத்தில் முனைந்து, சுவாசத்தால் ஓரங்குல அளவை எட்டுபவன்தான் முனிவன். இந்த நிலையில், சமாதி நிலை ஏற்பட்டு பேரின்பப் பெருநிலை உருவாகி, பலப்பல ஆண்டுகள் இந்த சமாதி நிலையிலேயே அமர்ந்திருப்போர் பலர் உண்டு. நாமெல்லாம் இந்த ஓரங்குல சுவாச கதியை அடைவது என்பது, கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியாத ஒரு விஷயமாகும். நாம் எதுவும் செய்யாமல் சாதாரணமாக அமர்ந்திருக்கும் நிலையில், நம் சுவாசம் 12 அங்குல அளவுக்கு உள் சென்று திரும்புகிறது. நடக்கும்போதோ 16 அங்குலம்; ஓடும்போது 25-ல் இருந்து 30 அங்குலம்; உறங்கும்போது 36 அங்குலம்; உடலுறவு கொள்ளும்போது 64 அங்குலம் என்பது நமது அன்றாட சுவாச கதி ஆகும். இப்படிப்பட்ட நாம் எப்படி ஓரங்குல அளவை அடைய முடியும்?

நம் சுவாச அளவு குறையக் குறையத்தான் நமக்கான ஆரோக்கியத்தில் இருந்து பல அதிசய சக்திகள் நமக்குள் தோன்றும். நமது சராசரி அளவான 12 அங்குலத்தில் இருந்து ஓர் அங்குலம் குறைத்து, 11 அங்குல அளவுக்கு நாம் சுவாசித்தாலே, பல அதிசயங்கள் நடக்கத் தொடங்கிவிடும். அதாவது, 11 அங்குல சுவாசம் நமக்குப் போதும் என்றாகிவிட்டால், உலக இச்சை நம்மை விட்டுப் போய்விடும். அதுவே இன்னமும் குறைந்து 10 அங்குலமானால், யாரும் உபதேசிக்காமலேயே நமக்கு நாமே ஞானியாகிவிடுவோம். இன்னோர் அங்குலம் குறைந்து 9 அங்குல அளவுக்கு நமது சுவாசம் செயலாற்றும்போது, எதை எப்படிச் செய்யவேண்டும் என்பது புலனாகிவிடும். எட்டு அங்குல அளவை அடையும்போது, அடுத்து நடக்கப்போவதை முன்கூட்டியே உணர முடியும். இப்படிக் குறையும் சுவாச கதி இரண்டு அங்குல அளவை எட்டும்போது, சுலபமாக உடம்பை விட்டே நம் ஆத்மாவை வெளியேற்ற முடியும். அதாவது, கூடுவிட்டுக் கூடு பாயலாம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

இப்படி சுவாச கதிக்கான போக்கில்தான் மனிதனின் அடுத்த பரிமாண நிலைப்பாடுகள் உள்ளன. யோகப் பயிற்சியும், தகுந்த குருநாதரின் வழிகாட்டலும், அருள்பலமும்தான் இதில் நமக்கான பரிமாண நிலை எது என்பதை முடிவு செய்கின்றன. இதைக் கொண்டு, முனைந்து கடைத்தேறுபவன் முனிவன். பின், முனிவனே அடுத்த நிலையாக ரிஷி எனும் பதவிக்குச் செல்கிறான். ஒரு முனிவன் தன்னை வென்றவனாவான். ரிஷி என்பவன் தன்னை வென்றதுடன், உலகின் சகலத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, அதையும் வெல்ல முடிந்தவனாவான். இந்த இரு நிலைப்பாடு கடந்து அல்லது இந்த இரு நிலைப்பாடு போதாது என்று மூன்றாம் நிலைப்பாடாக வந்ததே சித்தம். அந்த சித்தத்தை உலகுக்கு அறிமுகப் படுத்தி, முதல் சித்தனாக வந்தவன் அந்த ஈசன்.

முனியோ, ரிஷியோ சுயமாக ஆக முடியாது. குருவருளாலும், மந்திர உபதேசத்தாலும் மட்டுமே முனியும் ரிஷியும் உருவாக முடியும்.

இவர்களுக்குச் சிஷ்யர்கள் தோன்றக் கூடும். ஆனால், இவர்கள் சமுதாய நலனை முன்னிறுத்திப் பெரிதாக எதையும் செய்பவர்கள் இல்லை; சொல்பவர்களும் இல்லை. சொல்ல ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் எனும் கேள்வியின் பின்புலத்தில் உருவானவனே சித்தன். இந்த சித்தன் உடம்பை அறிந்து, அதை வென்றவன்; பிரபஞ்சம் அறிந்து அதைக் கடந்தவன். இதைச் சுயமாக, தன்முனைப்பால் கண்டவன். அந்தச் சுயமான தன்முனைப்புக்குப் பின்னே முற்பிறப்பும், அதில் ஈடேற்றிய அருட்செயல்களும் அடக்கம்.

இவன் எப்படி இருப்பான் என்பதற்குப் பதில் போலவும், இப்படியும் இருக்கலாம் என்பது போலவும் ஒரு திருவிளையாடற் செயலாக தன்னைச் சுந்தரானந்த சித்தனாக ஆக்கிக்கொண்டு, நிரம்பிய சித்துக்களைச் செய்து காட்டினான் அந்த சிவன். ஒரு திருவிளையாட்டாக, தானே நேரில் வந்து சித்த பரம்பரையைத் தொடக்கியவன், அதற்கும் முன்பே காகபுஜண்டர் வடிவில் அந்தப் பரம்பரையைத் தொடங்கிவிட்டான். காலத்தை ஊடுருவிப் பின்னோக்கிச் சென்று பார்த்தால் இதை உணரலாம் என்று கூறி, அந்த வகையில் பார்த்தால், சுந்தரானந்தர் முதல் சித்தர் இல்லை. அவரினும் முன்னதான அகத்தியரும் சித்தர் இல்லை. அவர் ஒரு முனிவர். பின்னர், மகரிஷியாக தன்னை உயர்த்திக்கொண்டவர்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

சித்தன் என்றால்... அதிலும் முதல் சித்தன் என்றால், அது காகபுஜண்டர்தான் என்பது சிலரது கருத்தாகும். எதனால், எப்படி என்பதை இனி காண்போம்.

கயிலையில், ஒருநாள் அம்மையும் அப்பனும் ஆனந்த நடனம் ஆடத் தொடங்கினர். அவர்கள் இருவரும் ஆடுகிறார்கள் என்றால், ஒரு கோணத்தில்தான் அது நடனக் காட்சி. உண்மையில், பிரபஞ்சவெளியில் பல மாறுதல்கள் அதனால் உருவாகத் தொடங்கிவிட்டன என்பதே, அந்த நடனத்தின் பின் உள்ள பேருண்மை. இந்த நடனக் காட்சியை, கயிலாய பூதகணங்கள் முதல் சக்தி கணங்கள் வரை சகலரும் கண்டு இன்புற்றிருக்க, இவர்களுடன் சப்த ரிஷிகளும் நவநாயக முனிவர்களும் அடக்கம்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

ஓர் ஆச்சரியம் போல, இந்த வேளையில் சிவபெருமானின் சிவகலையில் இருந்து காகம் ஒன்று தோன்றியது. அதேநேரம், சக்தியின் கலையில் இருந்து அன்னம் ஒன்று தோன்றியது. ஒன்று வெண்ணிறமானது; பாலையும் நீரையும் கலந்து தந்தாலும், பிரித்து உண்ணத் தெரிந்தது. காகமோ, பிரிக்கத் தெரியாமல் கிடைப்பதை உண்பது. இரண்டும் நேர் எதிரானவை. அழகு, குணப்பாடு என அனைத்திலும் மாறுபாடு உடையவை. எப்போதும் இந்த உலகில் ஒன்று இரண்டாகவே உள்ளது. அது இரண்டாக இருந்தால்தான், அந்த ஒன்றை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

பொழுது எனும் ஒன்று இரவு, பகலாக உள்ளது. சுவை எனும் ஒன்று இனிப்பு, கசப்பாக உள்ளது. குணம் எனும் ஒன்றோ சாந்தமும் கோபமுமாய் உள்ளது. இவ்வாறு இருவிதமாய் இருந்தால்தான் அதனதன் தன்மையை நாம் தெளிவாக உணர முடியும்.

இங்கேயும் ஏகாந்த நடனத்தில்... இப்படி ஒரு பேருண்மையை உணர்த்தவே, அன்னமும் காகமும் தோன்றியதாகக் கொள்ளலாம். அவை இரண்டும் கூடின. அதன் விளைவாக 21 முட்டைகளை அன்னம் இட்டது. அதில் 20 அன்னங்களும், ஒரு காகமும் தோன்றின. சிவ கலையான காகம் அழிவில்லாத தன்மையைப் பெற்று, பிறப்பைத் தொடர்ந்தது. அன்னக் குஞ்சுகள் அன்னமாய் வாழ்ந்து முக்தியை அடைந்துவிட்டன. கயிலையில் பிறந்த இந்தக் காகத்தின் அடுத்த பிறப்பே காகபுஜண்டர் எனும் மானுட வடிவாகும். அப்போது இவருக்கு இப்பெயர் வாய்த்திருக்கவில்லை. இப்பெயர் பின்னால்தான் ஏற்பட்டது.

இந்த காகபுஜண்டர் எனும் பெயருக்குப் பின்னால் பெரும் காரணங்கள் ஒளிந்துள்ளன. முன்னதாக, காகம் எனும் பெயர்க் காரணத்தை நாம் ஆராய்வது நலம்.

'கம்’ என்றால் அடங்கியிருத்தல் என்பது பொருளாகும். லிங்கம் என்றால், அதனுள் எல்லாம் அடக்கம் என்று பொருள். ரங்கம் என்றால், அனைத்தும் புறத்தில் அடக்கம் என்று பொருள். தங்கம் என்றால் 'தண்’ எனும் ஒளி அடக்கம். 'தண்’ என்பதுதான் 'தங்’ என மருவி வழக்குச் சொல்லாயிற்று என்பர்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 29

இவ்வகையில் 'கா’ என்பது காலத்தைக் குறிக்கிறது. அதாவது காகம் காலத்தின் ஒரு வடிவமாகும். காலம் என்பது, உண்மையில் இருள் சார்ந்தது. சூரியனால்தான் ஒளி தோன்றி பகல் உண்டாயிற்று. எப்போதும் இருப்பது இருளே! இதனால், வந்து மறைவதே ஒளி! எனவே, காகத்தின் நிறம் கறுப்பானது. இது, தன் குரலாலும் காலத்தையே உரைக்கிறது. காலை, மாலை நேரத்தில் காகங்கள் கூட்டாகக் கரையும். அதேபோல், இவை குரல் கொடுப்பதன் பின்புலத்தில் ஒரு காரண- காரியம் இருக்கும்.

ஒரு வீட்டில் உள்ள மரத்திலோ, கூரை மீதோ ஒரு காகம் அமர்ந்து கத்தினால், அந்த வீட்டுக்கு உரியவரை எண்ணியபடி உறவினர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது பொருள். காகத்தின் குரலை ஒரு செய்தியாக எடுத்துக்கொள்ளலாம். எப்போதும் காலத்தால் நடக்க இருப்பதையே இது எதிரொலிக்கிறது. பறவைகளில் இது மட்டும்தான் மனிதன் உண்ணும் அனைத்தையும் உண்ணக்கூடியது. அதாவது, பிற பறவைகள்போல பச்சையாகவும் உண்ணும்; வெந்ததையும் இது உண்ணும். மனிதர்களிடமோ பிற மிருகங்களிடமோ இதற்கு அச்சம் கிடையாது. இதனால்தான் மானுட வாழ்வு முடிந்து அமரர்களாகிவிட்ட நம் முன்னோர், பித்ரு லோகத்தில் இருந்து, இதன் வடிவில் பூ உலகுக்கும், தங்கள் தொடர்புடையவர் வீட்டுக்கும் வந்து, அவர்கள் இடும் அன்னத்தை உண்டு திருப்தியுற்று, 'கா கா’ என்று ஆசீர்வதித்துச் செல்வார்கள். 'காகா’ என்றால் 'காலத்தால் காப்பேன்’ என்பது பொருள். நாமும் 'காகா’ என்று அழைக்கும்போது, 'காலத்தால் எங்களை காக்க வருக’ என்று அழைக்கிறோம். சிலர் 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்’ என்பதன் சுருக்கம் என்பர்.

இப்படி, காகம் எனும் பறவையின் பின்புலத்தில், நாம் உணர்ந்திட அனேக விஷயங்கள் உள்ளன. இப்படிப்பட்ட தன்மை பொருந்திய காகம், கயிலையில் சிவகலையாக வந்தது. பின், அது மானிடப் பிறப்பெடுத்தது. சிவ கலைக்கு அழிவில்லாததால், அது காலத்தால் பிறவிகளைத் தொடர்ந்தது. அண்டமாகிய உலகமானது, காலத்தின் வடிவாகிய காக வடிவெடுத்தவரால், அவருடைய புஜத்தில் தாங்கப்படுகிறது. இதுவே காகபுஜண்டர் என்றானது என்பர். தூய தமிழில் காகபுசுண்டர் என்பர். அதாவது, காலத்தைத் தாங்கி நிற்பவர் எனும் பொருளில் காகபுஜண்டர் பார்க்கப்படுகிறார். இந்தப் பெயர்க் காரணத்தை மறுப்பவர்களும் உண்டு.

- சிலிர்ப்போம்...