தொடர்கள்
Published:Updated:

குருவே துணை!

எழுமின்... விழிமின்! ஓவியர் பத்மவாசன்

##~##

 'குருதேவரின் பேரருளால் நான் இப்போது புத்தொளி பெற்றவனானேன். இந்தப் பிரேமை நிறை அனுபவத்தை மட்டும் நான் பெற்றிராமல் இருந் திருப்பேனானால், எனது வாழ்க்கை வறண்டு சுவையற்றதாகப் போயிருக்கும்!'' என்று சுவாமி விவேகானந்தர், தமது சகோதரச் சீடர்களிடம் கூறினார்.

அது என்ன பிரேமானுபவம்?

சுவாமிஜியின் கனவில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றியருளி, 'நரேன்! உனக்கு ராதையைக் காட்டுகிறேன், வா!’ என்றார்.

விவேகானந்தரும் குருதேவரைப் பின்தொடர்ந்து போனார். சற்றுத் தூரம் சென்றபின், விவேகானந்தர் பக்கமாகத் திரும்பிய குருதேவர், ''நீ வேறு எங்குதான் போவாய்?'' என்று கேட்டுக்கொண்டே, பேரழகுமிக்க ராதையாக உருமாறினார்.

குருவே துணை!

இந்த அனுபவத்தைக் கூறித்தான் ஆனந்தப்பட்டார் நம் சுவாமிஜி.

இந்த அனுபவம் இவருக்குக் கிடைக்க வேண்டும் என்று, படுக்கையின்மீது தமது விரல் கொண்டு, 'ஸ்ரீமதி ராதே! நரேந்திரன் மீது அருள்புரி!’ என்று எழுதினாராம் ஸ்ரீராமகிருஷ்ணர். அதன் பலனாக, ஓர் அருட் பெரும் சக்தி ஆட்கொண்டு, விவேகானந்தரிடம் ராதையின் உணர்வு ஏற்பட்டது. இளகிய இதயம் பெற்றவராய் மாறினார்.

ஆரம்பத்தில், பிரம்ம சமாஜத்தின் தொடர்பால் உருவமற்ற பிரம்மமாகவே கடவுளைப் பாடி வந்த விவேகானந்தருக்கு, இந்த தெய்வீக ஆனந்தத்தின் அம்சமாகிய ராதையின் உணர்வைக் கொடுத்ததன் மூலம் பிரேமையை உண்டு பண்ணி, தாம் தொடங்கி வைத்த ஆன்மிகப் பாரம்பரியத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாக நம் சுவாமிஜியை ஆக்கியளித்தார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

அமெரிக்கா செல்வதற்கு முன்னர், அபுரோட் என்ற இடத்தில் சுவாமி துரியானந்தரைச் சந்தித்தார் சுவாமி விவேகானந்தர். கம்பீரமாக சிம்மம் போல வந்த சுவாமிஜியிடம் துரியானந்தர் மிகப் பணிவுடன், ''சுவாமிஜி, நீங்கள் மேலை நாடு செல்கிறீர்கள். அங்கே, கற்றறிந்த அறிஞர்கள் பலர் உங்களைச் சந்தித்துப் பேசுவார்கள். கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், சொற்பொழிவுகள் ஆற்றவும் சில சாஸ்திர நூல்களை எடுத்துச் செல்வது நல்லதன்றோ?'' என்று கேட்டார்.

அதற்கு சுவாமிஜி, ''பயணத்துக்கான செலவுத் தொகையே பிச்சை ஏற்றுக் கிடைத்தது. இதில் புத்தகங்களை வாங்கவும், அவற்றை வைத்து எடுத்துச் செல்ல பெட்டி வாங்கவும் பணம் எங்கே இருக்கிறது, சொல்லுங்கள்?'' என்று அமைதியாகக் கூறிவிட்டு, பின்பு கம்பீரமான குரலில் கூறினார்... ''ஹரிபாய் (சுவாமி துரியானந்தர்)! நான் ஒன்றை மட்டும் கூடவே எடுத்துச் செல்கிறேன். அதுதான் 'குருதேவரின் திருவருள்’. அதற்கு மேல் என்ன வேண்டும்?'' என்றார்.

குருவே துணை!

'''மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் யத் க்ருபா தமஹம் வந்தே பரமானந்த மாதவம்’. அதாவது, 'ஊமையைப் பேச வைக்கும், முடவனை மலையேற வைக்கும் அந்தக் கருணையால் எதைத்தான் செய்ய முடியாது? என்னுடனேயே குருதேவர் இருக்கும்போது, அவர் அருளால் அஸ்வமேதக் குதிரை மீது ஏறி, இந்த அகிலத்தையே வெற்றி வாகை சூடி வலம் வருவேன். அதை யாராலும் தடுக்க முடியாது!'' என்று கண்களில் ஒளி மின்னக் கூறினார் விவேகானந்தர்.

இது எவ்வளவு பெரிய உண்மை! நம் சுவாமிஜி சூடிய வெற்றி வாகையை உலகம் உள்ளவரை பேசிக்கொண்டுதானே இருக்கப் போகிறது மனிதகுலம்!