Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்:17

ஒரு கதை...ஒரு தீர்வு! அருண் சரண்யா

விடை சொல்லும் வேதங்கள்:17

ஒரு கதை...ஒரு தீர்வு! அருண் சரண்யா

Published:Updated:
##~##

''வாங்க, வாங்க. உட்காருங்க. உங்க நண்பர் பேங்குக்குப் போயிருக்கார். இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவார்.  கொஞ்சம் கிச்சன்ல வேலை இருக்கு. தப்பா நினைச்சுக்காதீங்க!'' என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தாள் மாலதி.  

ஹாலில் இருந்த நாளிதழைப் புரட்டினேன். ராஜனின் அம்மா மட்டும் இங்கே இருந்திருந்தால், இப்படி ஒரு நிமிடம்கூட மௌனத்தில் கழியாது. எங்கிருந்துதான் அவ்வளவு கேள்விகளை ஸ்டாக் வைத்திருப்பார்களோ! ஆனால், அந்தக் கேள்விகள் எல்லாம் அக்கறையுடன் கேட்கப்படுபவையாக இருக்கும். அல்லது, தெரிந்தவர்களின் தற்போதைய நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக இருக்கும். யாரைப் பற்றியும் குயுக்தியாகப் பேசமாட்டார்.

பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ராஜன் வந்து சேர்ந்தான்.  ''எப்ப வந்தே? ​ரொம்ப நேரமாச்சா?'' என்று கேட்டான்.  

நான் நினைத்ததைச் சொன்னேன். ''நாளைக்கே போய் அம்மாவை அழைச்சுக்கிட்டு வரணும். ஆனா, அண்ணனும் அண்ணியும் அம்மாவை அனுப்ப சுலபத்திலே சம்மதிக்கமாட்டாங்க. அம்மாவோட பாசம் அப்படி!'' என்றான்.  

அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டே சமையல் அறையிலிருந்து வெளியே வந்த மாலதியின் முகத்தில் ஒரு கேலிச் சிரிப்பு. என்னிடம், தான் கொண்டு வந்த காபி டம்ளரை நீட்டிய பிறகும்கூட அந்தச் சிரிப்பு தொடர்ந்தது.  

''எதுக்காக இப்போ இந்த நமுட்டுச் சிரிப்பு?'' என்று கேட்டான் நண்பன்.  

''ஒண்ணுமில்ல'' என்றபடி அங்கிருந்து நகரத் தொடங்கினாள் மாலதி.  

''கொஞ்சம் இருடா!  நான் போன பிறகு விஷயத்தைச் சொல்வாங்கன்னு நினைக்கிறேன்'' என்றேன்.  அதில் தவறொன்றும் இல்லை;  கணவனுக்கும் மனைவிக்கும் அந்தரங்கங்கள் இருப்பது இயல்புதானே!  

ஆனால் மாலதி, ''சேச்சே... நீங்க இருக்கிறதுக்கும் நான் சொல்லத் தயங்கினதுக்கும் சம்பந்தம் இல்லை.  சரி... உங்க முன்னாடி சொல்றதுக்கு என்ன... உங்க நண்பர் சொன்னதில் சிலதை என்னால் ஏத்துக்க முடியும்;  சிலதை ஏத்துக்க முடியாது'' என்றாள்.  

குழப்பத்துடன் அவளைப் பார்த்த ராஜன், ''எதை ஏத்துக்க முடியும்? எதை ஏத்துக்க முடியலை?'' என்றான்.  

''உங்க அம்மா பாசமானவங்க தான். அவங்களை தாராளமா நீங்க இங்கே அழைச்சுட்டு வரலாம். ஆனா, உங்க அண்ண னுக்கும், அண்ணிக்கும் அவங் களை அனுப்ப மனசே வராதுன்னு சொன்னீங்களே, அதுதான் இடிக்குது'' என்றாள்.  

சட்டென ராஜனின் முகத்தில் கோபம் எட்டிப் பார்த்தது.  ''அண்ணனுக்கும் அண்ணிக்கும் அம்மாவை வெச்சுக்கறதுலே இஷ்டம் இல்லேன்னு சொல்றியா?'' என்றான்.

''ஆமாம்'' என்றாள் மாலதி.

''உளறாதே!'' என்றான் நண்பன் கடுமையாக.

''நீங்க இன்னும் ரெண்டு நாளைக்கு சைலன்டா இருந்து பாருங்க. உங்க அண்ணன் உங்களுக்கு ஃபோன் பண்ணி, 'அம்மாவை கூப்பிட்டுக் கலையா?’னு கேட்பாரு!''  

''நிச்சயம் அப்படி நடக்காது.  உனக்காக, நீ சொல்றது தப்புன்னு நிரூபிக்கிறதுக்காக வாவது இன்னும் மூணு நாளைக்கு அம்மாவை அழைச்சிட்டு வராம இருக் கேன்'' என்றான் நண்பன்.  

எனக்குத் திகைப்பாக இருந்தது. ''நீங்க பேசுவதில் தலையிடுவதாக நினைக்க வேண்டாம். உங்கள் பேச்சைக் கேட்டால் வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் செய்த விவா தம்தான் என் நினைவுக்கு வருது!'' என்றேன்.

இருவரும் சுவாரஸ்யம் காட்ட, தேவலோகத் தில் நடந்த அந்த விவாதத்தை விளக்கத் தொடங்கினேன்.

ன்னன் அரிச்சந்திரன் மிகவும் நேர்மையாக அரசாட்சி செய்து வந்தான். வசிஷ்டர் அவனுக்குக் குலகுருவாக விளங்கினார்.

ஒருமுறை தேவலோகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ''உலகிலேயே மிக நேர்மையான மனிதன் யார்?'' என்று கேட்டான் தேவேந்திரன்.

''சந்தேகமே வேண்டாம். மன்னன் அரிச்சந்திரனுக் குத்தான் அந்தப் பெருமை. எந்தச் சூழலிலும் பொய் பேசாதவன் அவன்'' என்றார் வசிஷ்டர்.

வசிஷ்டருடன் பல விஷயங்களில் ஒத்துப் போகாத விஸ்வாமித்திரர், அவருக்கு எதிரான கருத்தை முன்வைத்தார்.  ''தேவேந்திரா, வசிஷ்டர் கூறுவது உண்மையல்ல. சோதனை வந்தால் அவனும் பொய் கூறுவான்.  தன்னுடைய சிஷ்யன் என்பதற்காக, வசிஷ்டர் அரிச்சந்திரனை உயர்த்திக் கூறுகிறார்''என்றார் விஸ்வாமித்திரர்.

விடை சொல்லும் வேதங்கள்:17

வாதம் தீவிரம் அடைந்தது.  

''அரிச்சந்திரனைப் பொய் சொல்ல வைப்பேன்'' என்றார் விஸ்வாமித்திரர். ''அது நடக்காத காரியம்'' என்றார் வசிஷ்டர்.

வஞ்சக முறையில் அரிச்சந்திரனைச் சத்தியம் செய்ய வைத்து, நாட்டிலிருந்து அவனைக் குடும்பத் துடன் வெளியேற்றினார் விஸ்வாமித்திரர்.  ஒரே ​ஒரு பொய் சொன்னால், மீண்டும் ராஜ்ஜியத்தை அளிப்பேன் என்று விஸ்வாமித்திரர் கூறியதை அரிச்சந்திரன் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனைவி சந்திரமதி மற்றும் மகன் லோகிதாச னுடன் காசியை நோக்கிப் பயணம் செய்தான் அரிச்சந்திரன். இந்த நிலையில், எப்போதோ மன்னன் தானம் அளிப்பதாகச் சொன்ன தொகையையும் அவனிடம் கேட்டார் விஸ்வாமித்திரர்.

சுடுகாட்டில் ​வெட்டியானுக்கு உதவியாக அரிச்சந் திரன் பணிபுரிய, மனைவி சந்திரமதி ஒருவனுக்கு அடிமை சேவகம் செய்தாள். இப்படியாக அவர்கள் வாழ்க்கை நடக்கும்போது, பாம்பு தீண்டி மகன் லோகிதாசன் இறந்தான்.  

அப்போதும், ஒரே ஒரு பொய் கூறினால், எல்லா துரதிர்ஷ்டங்களும் நீங்கும் என விஸ்வாமித்திரர் கூறினார்.  அந்த நிலையிலும் மன்னன் அரிச்சந்திரன் பொய் பேச மறுத்தான்.  விஸ்வாமித்திரர் வியந்தார்.  தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

நான் கதையைக் கூறி முடித்ததும், ''இவங்க விவாதம் நன்மையில்தானே முடிந்தது? அது போன்று, எங்கள் விவாதமும் நல்லதில் முடியக் கூடாதா?'' என்றாள் மாலதி புன்னகையுடன்.

''உங்க விவாதத்தின் முடிவு எனக்குத் தெரியாது. ஆனால், இரண்டு பேர் விவாதத் தினால் வேறு ஒருவரைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து. வசிஷ்டரும் விஸ்வாமித்திரரும் பல நேரங்களில் விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், மேலே சொன்ன விவாதத்தில் அரிச்சந்திரன் பலிகடா ஆகிவிட்டான். அவன் பெருமை இதனால் பரவி யிருக்கலாம். ஆனால் வாழ்க்கையில் அவன் பட்ட சிரமங்கள் எவ்வளவு! அப்படித்தான், உங்கள் விவாதத்தால் பாதிக்கப்படப் போவது ராஜனின் அம்மாதான். எனவே, இது மாதிரி விவாதங்கள் வேண்டாமே!'' என்றேன்.  

மாலதியின் முகத்தில் ஒரு தெளிவு.  அவள் நான் சொல்ல வந்ததைச் சரியாகவே புரிந்து கொண்டிருப்பாள் என்று தோன்றியது.

- தீர்வுகள் தொடரும்...