மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 43

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

'ஸ்ரீமகா பாகவதம்’பி.என்.பரசுராமன்

##~##

ரவாசுதேவனின் புகழ்பாடும் நூல்கள் பல உண்டு. அவற்றில் தலைசிறந்து விளங்குபவை - ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் ஆகியன. இவற்றில் ராமாயணமும், மஹாபாரதமும், கம்ப ராமாயணம் - வில்லிபாரதம் எனப் பாடல்களாகவே உருவாக்கப் பெற்று, மக்கள் மத்தியில் ஒன்றாகவே பரவியிருக்கின்றன. ஆனால்...பாகவதமோ, அந்த அளவிற்கு மக்களிடையே பரவவில்லை.

ஞானப் பொக்கிஷம்: 43

பாகவதத்தில் உள்ள நரசிம்மாவதாரமும், வாமனாவதாரமும், கம்பராமாயணப் பாடல்களில் இருந்து, உபந்யாஸ கர்த்தர்களாலும் சொற்பொழிவாளர்களாலும் கையாளப்பட்டு வருகின்றன.

சுதாமாவின் வரலாறே, மஹாவித்வான் பிள்ளைவாள் அவர்களின் 'குசேலோபாக்கியானம்’ என்ற நூலில் இருந்து, பெரும்பான்மையாகக் கையாளப்பட்டு வருகிறது. மற்றபடி, கம்பராமாயணம் - வில்லிபாரதம் போல, பாகவதம் முழுமையாக (பாடல்களாகவே உள்ளன) மக்களிடையே பரவவில்லை.

அந்தக் குறை நீங்குவதற்காக, அருளாளதாசர் என்பவரால் இயற்றப்பட்ட 'ஸ்ரீமகா பாகவதம்’ என்ற நூலில் இருந்து ஒரு சில தகவல்களைப் பார்க்கலாம். அருளாளதாசர் எழுதிய 'ஸ்ரீமகா பாகவத்தில்’ ஒன்பதாயிரம் பாடல்களுக்கும் அதிகமாகவே உள்ளன. அனைத்துமே அருந்தமிழ்ப் பாடல்கள்.

ஞானப் பொக்கிஷம்: 43

இரண்டு பாகங்களாக அமைந்துள்ள இந்நூலின் முதற் பகுதியில்... பாகவத லக்ஷணம் என்ற பகுதி இடம் பெற்றுள்ளது. அதில் ஏழு விதமான பாகவதங்களின் பெயர்கள், அதைச் சொன்னவர் - கேட்டவர், இடம் பெற்றுள்ள தகவல்கள் என அபூர்வமான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

அத்துடன் இந்நூல், 350 வருடங்களுக்கு முன் உருவானதாக, 1891-ல் வெளியான நூலின் முகப்புப் பகுதி தெரிவிக்கிறது. இதன் மூலம் இன்றைய கால கட்டத்தில், 470 ஆண்டுகளுக்கு முன்பு இந்நூல் உருவாகி இருப்பதை உணரலாம்.

திருவரங்கப்படலம் என, அரங்க நாதரைத் தொழுது துவங்கும் இந்நூல், திருவரங்கத்தை மட்டுமல்லாது அங்கு எழுந்தருளியிருக்கும் அரங்க நாதரைத் திருவடி முதல் திருமுடி வரை துதித்துத் துவங்குகிறது. ஒவ்வொன்றும் நான்கு வரிகளைக் கொண்ட பாடல்கள். (நாம் ஒரு வரியைத்தான் பார்க்கப்போகிறோம்)

காரார் பொழில் சூழ் திருக்காவிரி வாழி வாழி

அரங்கம் ஈசர் அடியிணை வாழியே.

பீதாம்பர முதல் கண்கள் வரை வாழியே

மகுடமுற்ற மணிகளும் வாழியே...

என்றெல்லாம் துதித்தும் அரங்கநாதரின் திருக்கரங்கள், அவரது ஆயுதங்கள், அரங்க நாயகி, அஞ்சனை சிறுவன் (என ஆஞ்சநேயர்) என விவரித்து, நம்மை அரங்கநாதர் சந்நிதியிலேயே நிறுத்துகிறது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீமகாபாகவதம், நம்மைத் திவ்ய தேச யாத்திரைக்கு அழைத்துப் போய், அங்கெல்லாம் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களைத் தரிசனம் செய்து வைக்கிறது. அடுத்து... ஆழ்வார்களையும், ஆசார்ய புருஷர்களையும் தரிசிக்க வைக்கிறது.

ஞானப் பொக்கிஷம்: 43

இறையருளும் குருவருளும் இருந்தால்தான், பாகவதத்தை நாம் அனுபவித்து உணர முடியும் என்பதைப் போல அமைந்துள்ள அருமையான நூல் 'ஸ்ரீமகாபாகவதம்’. பாகவத வரலாறுகளை, இந்நூல் ஒரு நேர்முக ஒலிபரப்பைப் போல வர்ணித்துள்ளது. ஓர் உதாரணம்... கஜேந்திர மோக்ஷக்கதை.

கஜேந்திரனின் காலைப் பற்றிய முதலை, அதைப் பலமாக இழுக்கிறது. யானை பயத்தில் மூழ்குகிறது. போராட்டம் பல காலம் நீடிக்க, முதலைக்குப் பலம் அதிகரிக்கிறது. யானையோ, உடல் பலம் இழந்து - கண்கள் இருண்டு, என்ன செய்வதென்று அறியாமல் திகைக்கிறது.

இந்நிகழ்ச்சியைச் சொல்லும் ஸ்ரீமகா பாகவதப் பாடல். ஒருமுறை அப்படியே வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்! யானையின் பயம், முதலையின் ஆற்றல், யானையின் துயரம் - திகைப்பு முதலானவை தெளிவாகத் தெரியும்.

பாய் பகடிங்ஙன் வலிக்க இடங்கர்

பயத்துள் அழுந்திடவே

ஆயிர வருடம் இவ்வண்ணமுறைந்திட

வயமுனு நக்கிரமெய்ப்

பாயுரம் விஞ்சிப் பருவரை இவர்கரி

பாதமு மெய் முரணும்

ஓய்வுற நயனம் இருண்டு செய்வகை

இலதாகி உளைந்ததரோ

(ஸ்ரீமகாபாகவதம் கெசேந்திரன் மோட்சப் படலம் - 69)

இதை அடுத்து, 'கபிலப் படலம்’ என்று பகவான் கபிலவாசு தேவராக அவதரித்து, தன் தாயாருக்கு உபதேசம் செய்த பகுதியில்... கரு உற்பத்தி யாகும் விதம் தொடங்கி, அது பிறக்கும் காலம் வரையில், ஆச்சரியகரமாக அருந்தமிழ்ப் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. ஓர் பாடல்...

ஐந்து நாளையிலயத்துறு குமிழி போலாகிச்

சந்தமாகிய தசையதாய்த் தச தினத்து உருண்டே

அந்த மாகி ஓர் திங்களில் சிரங்கை காலாகி

உந்திமெய் செறி உரோமம் முத்திங்களில் உறுமால்

இப்பாடலில், ஐந்து நாள் தொடங்கி மூன்றாவது மாதம் வரை, கரு உற்பத்தி எப்படி என்பதைச் சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து 'நாரசிங்கப் படலத்தில், நரசிங்கம் வெளிப்பட்டதும், உடனே பிரகலாதன் பக்திப் பரவசத்தில் ஆடி-எழுந்து-விழுந்து- மகிழ்ந்து-வேதமயமான துதிகளைப் பாடி, வலம் வந்து வணங்கியதைச் சொல்லி, நம்மையும் நரசிம்மனை வணங்கச் செய்கிறது.

நரசிம்மம் தூணிலிருந்து வெளிவந்ததைச் சொல்லும் பாடல் பகுதி:

ககனமோடு அண்டமும் வெடிபட

நீள் கனகன் உள(ம்) நடுங்கிடவே

மொகு மொகு மொகுவென

மா நரசிங்க(ம்) முழங்க நகைத்ததரோ

தூணிலிருந்து நரசிம்மம் வெளிப்பட்டது. ஆகாயத்தோடு அண்டமும் சேர்ந்து வெடித்தது. பயமே அறியாத இரணியகசிபு நடுங்கினான் - என்று சொல்லும் இப்பாடல், 'இதற்கெல்லாம் காரணமான அந்தப் பெரிய நரசிம்மமோ சிரித்தது’ என ஸ்வாமியின் சிரிப்பு ஓசையையும் வெளிப்படுத்துகிறது.

இரணியகசிபு நடுங்கினானே தவிர, பிரகலாதனோ, ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைப் பார்த்ததும்... ஆடினான், எழுந்தான், விழுந்தான், மகிழ்ந்தான், வேதமயமான துதிகளைப் பாடி வலம் வந்து வணங்கினான். இக்கருத்தைச் சொல்லும் பாடல்...

நீடிய தறியினுளே நரகேசரி

நின்று முழங்கிடலும்

சேடுறு குமரன் உயர்ந்து வியந்து

சிறந்த கல் படியின் மிசை

ஆடி எழுந்து விழுந்து மகிழ்ந்து

ஆரண நூல்கள் எலாம்

பாடி வயங்கியவெழுவினை வலமுற

வந்து பணிந்தனனால்

ஞானப் பொக்கிஷம்: 43

இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் நாச்சியார் திருவவதாரப் படலம் தொடங்கி ருக்மிணி தேவியார் திருக்கல்யாணப் படலம் வரை, குறைந்த பட்சம் ஒருவார காலமாவது 'ருக்மிணி கல்யாணம்’ சொல்லக்கூடிய அளவுக்கு அரும்பெரும் தகவல்கள், அருந்தமிழ்ப் பாடல்களாகவே உள்ளன. ஸ்ரீமகா பாகவதம் மக்களிடையே பரவினால், பகைமை நீங்கும்; பகவத் பக்தி வளரும்; கண்ணன் அருளோடு, கூடவே கன்னித் தமிழும் வளரும். 1891-ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீமகா பாகவதம், தற்போது ஒரு சில ஆலயங்களில் நூல் நிலையங்களிலும், அரங்கன் அடியார்கள் நூலகங்களிலும், ஒரு சில பெரிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது.

அதை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு உபன்யாஸகர்த்தர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர் களுடையது.

அதற்கு...

அரங்கன் அருளட்டும்! அல்லல்கள் நீங்கட்டும்!

- இன்னும் அள்ளுவோம்..