##~##

'பள்ளம் என்று ஒன்று இருந்தால், மேடு என்று ஒன்று இருக்கும்’ என்பார்கள். இருட்டு இருந்தால், வெளிச்சமும் இருக்கும்! இதைக் கருத்தில் கொண்டுதான், 'உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்’ என்று கவிஞர் வாலிகூடப் பாடல் எழுதியிருக்கிறார்.

பள்ளமும் மேடுமாக இருக்கிற இந்தப் பரந்துபட்ட மானிட வாழ்க்கையில், இருட்டும் வெளிச்சமாகக் கலந்திருக்கிற இந்த வாழ்க்கைப் பயணத்தில், அவ்வப்போது உறவுச் சிக்கல்கள் தோன்றி ஆளைப் பிரித்துப் போடுவதும், பேசாது முகம் திருப்பிக் கொள்ளச் செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

உறவில் ஏற்படுகிற விரிசல்களுக்கு அதீத எதிர்பார்ப்பும், அதிகப்படியான உரிமைகளுமே காரணமாக அமைந்துவிடுகின்றன. விட்டுக்கொடுக்கிற மனோபாவம் இல்லாமல், 'தான் சொல்வதே சரி’ என்கிற கர்வம் உறவு களுக்குள் தலைகாட்டத் துவங்கினால், அங்கே விரிசல்களும் உரசல்களும் எழத்தான் செய்யும். 'நீ என் முகத்துலயே முழிக்காதே’ என்கிற ஆவேசமான, தடித்த வார்த்தைகள் விழுந்து, பிரிவை ஒரு பெரிய பிளவாக மாற்றி, உறவையும் நேசத்தையும் குலைத்துப் போட்டுவிடுகின்றன.

குருவருள்... திருவருள்! - 3

''இணக்கமா இருக்கிற குணம் மெள்ள மெள்ளக் குறைஞ்சிக்கிட்டே வருதோன்னு கவலையா இருக்கு. வீட்டுக்கு வீடு யாராவது ஏதாவது ஒரு காரணத்தால, உறவினர் யாருடனாவது பிணக்கமா இருக்கிறது வழக்கமாயிடுச்சு. அண்ணனும் தங்கையுமோ, அக்காவும் தம்பியுமோ, கணவனும் மனைவியுமோ, சித்தப்பா பையன் பெரியப்பா பையன்னோ... யாரோ யாரையோ கோவிச்சுக்கிட்டு, பேச மாட்டேன், பார்க்கமாட்டேன்னு முகத்தைத் திருப்பிக்கிட்டு, முறுக்கிக்கிட்டுப் போற அவலம் நம்ம ஊர்ல காலங்காலமா இருந்துகிட்டேதான் இருக்கு.

ஆனாலும், எப்பேர்ப்பட்ட முன்கோபியாக இருந்தாலும், வறட்டுச் சிந்தனையாளராக இருந்தாலும்... அவர்கள், வாழ்வில் ஒரு முறையேனும் எழுச்சூர் சிவபெருமான் சந்நிதிக்கு முன்னே வந்து ஒருநிமிடம் நின்று, தரிசித்தால் போதும்... அவர்கள் உறவுக்கு ஏங்குபவர்களாக மாறிவிடுவார்கள். அன்பு செலுத்துவதில் பெரியோராகி விடுவார்கள்!'' என்கிறார் பக்தர் ஒருவர்.

சென்னை, தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஒரகடம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது எழுச்சூர் கிராமம்.

குருவருள்... திருவருள்! - 3
குருவருள்... திருவருள்! - 3

''பிரிந்துவிட்டோமே என்று ஏங்கிக்கொண்டிருப்பவர்களும், உறவு வேண்டுமே என்று விரும்புபவர்களும், ஒருமுறை இங்கே வந்து நல்லிணக்கேஸ்வரரைத் தரிசித்துச் சென்றால், அடுத்த முறை அவர்கள் வரும்போது, பிரிந்துபோன உறவு மீண்டும் கிடைத்துவிட்ட திருப்தியிலும் சந்தோஷத்திலுமாக வருவதை நிறையவே பார்க்கிறேன்.எல்லோருக்குள்ளேயும் இணக்கமானதொரு சூழலையும் மன அமைதியையும் தரவல்லவர், ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர்'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார், எழுச்சூர் கோயிலில் பணிபுரியும் ராமமூர்த்தி.

குருவருள்... திருவருள்! - 3

உண்மைதான். விவாகரத்துக்காக வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் வரை வந்த நிலையில்... கணவர் மீதும் குழந்தைகள் மீதும் அளவற்ற அன்பு கொண்ட அந்தப் பெண்மணி இங்கு தொடர்ந்து திங்கட்கிழமைதோறும் வந்து, ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரை வணங்கி, வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாராம். அதன்பின் மூன்றே மாதத்தில், தம்பதிக்குள் புரிதல் ஏற்பட்டு, இருவரும் மனம் விட்டுப் பேசி, பரஸ்பரம் மன்னிப்புக் கேட்க... இன்றைக்கு கணவன், மனைவி, குழந்தை என மூவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகிறார்கள் எனும் தகவலை எழுச்சூர் கிராம மக்கள், ஆச்சரியத்துடனும் பெருமிதத்துடனும் தெரிவிக்கிறார்கள்.

குருவருள்... திருவருள்! - 3

''நல்லிணக்கேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். காஞ்சி சங்கர மடத்தின் வியாஸாசல சுவாமிகள், தமது நித்தியப்படி பூஜைகளையும் அனுஷ்டா னங்களையும் செய்த தலம் இது. 'இல்லறத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் இறையருள் கிடைத்தால்தான், இந்தச் சமூகம் மிகச் சிறப்பான சமூகமாக, தர்ம சிந்தனையுள்ள உலகமாக இருக்கும்; அவர்கள் அறநெறி பிறழாமல் வாழ்ந்தால்தான், அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த சத்காரியங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்’ என்று சுவாமிகள் தமது நித்தியப்படி பூஜைகளைச் செய்து முடிக்கும்போது அருகில் உள்ள சிப்பந்திகளிடம் சொல்வாராம்.

''இந்த லோகம் க்ஷேமமா இருக்கப்போறது. மக்கள் எல்லாரும் சுபிட்சமா வாழப் போறாங்க. கூடி வாழ்ந்தால் கோடி நன்மைங்கிறதை உணர்ந்து, எல்லோரும் ஒற்றுமையா இருக்கிற காலமும் வரும். அதுக்கு நல்லிணக்கேஸ்வரர், தன் பேரருளை இந்த உலகுக்குத் தந்தருள்வார். அவரைக் கெட்டியாப் பிடிச்சுக்கோங்கோ!'' என்று சுவாமிகள் அருளியதை சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், எழுச்சூரில் உள்ள பெரியோர்கள்.

குருவருள்... திருவருள்! - 3

''எந்த நாளில் வேண்டுமானாலும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரைத் தரிசிக்கலாம். அது சிறப்பு தரும். செழிப்பைக் கொடுக்கும். குறிப்பாக, பிரதோஷ நாளில் இங்கு வந்து நம் குறைகளை முறையிட்டால் போதும்.... மலை போலான பிரச்னைகளும் பனி போல் விலகிவிடும். முக்கியமாக, இங்கே உள்ள அதிகார நந்தியின் கல் விக்கிரகத் திருமேனி கொள்ளை அழகு. ரிஷபத்தின் திருமுகத்தைப் பார்த்தால், நம் குறைகளை அதன் செவியில் சொல்லும்போது எப்படி உன்னிப்பாகக் கூர்ந்து கேட்குமோ... அந்த பாவனையில் அதன் முகம், கண்கள், செவிகள் இருப்பதைப் பார்க்கலாம்.

இந்த அதிகார நந்தியிடம் நம் மனக்கிலேசங்களை, எண்ணங்களை, விருப்பங்களைச் சொல்லி, நந்திதேவரையும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வணங்குங்கள். நம் எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்தருள்வார் சிவனார்'' என்கிறார் சென்னையில் உள்ள அன்பர் சிவகுமார்.

பிரியமான விஷயங்களை ஈடேற்றித் தந்து, பிரிந்தவர்களையும் ஒன்று சேர்த்து வைக்கும் அற்புதமான தலமான எழுச்சூர்... நாம் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய சிறப்பான திருத்தலம்!

- அருள் சுரக்கும்

படங்கள்: ரா.மூகாம்பிகை

குருவருள்... திருவருள்! - 3

'திரைப்பாடல்கள் மட்டுமல்ல, பக்திப் பாடல்கள் எழுதுவதிலும் தனக்கு விருப்பம் உண்டு’ என்கிறார் கவிஞர் அண்ணாமலை. சென்ற இதழிலும், இந்த இதழிலும் இடம்பெற்றுள்ள ஆன்மிகக் குறுங் கவிதைகள் இவருடையதே!

 ''பிறர் புகட்டும் விஷத்தையும்கூடத் தான் ஏற்று, தொண்டையில் நிறுத்திக்கொள்பவனும், பிறர் பொருட்டுப் பழிச்சொல்லையும் அவமானங்களையும் அதனால் ஏற்படும் துன்பங்களையும் தாங்கிக்கொள்பவனும், எட்டி உதைத்தாலும் கட்டி அணைத்து அன்பு காட்டும் குணம் கொண்டவனும் எவனோ, அவனே இறைவன்! அவன் நமக்குள்ளும் இருக்கிறான் என்பதே இறைத் தத்துவம்!'' என்கிற இவரது கடவுள் பற்றிய விளக்கம் கன கச்சிதம்!