Published:Updated:

விதைக்குள் விருட்சம்! - 2

மகத்தான மானிட சக்தி! டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

விதைக்குள் விருட்சம்! - 2

மகத்தான மானிட சக்தி! டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:
##~##

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஆன்றோர் வாக்கு. இறைவனது சிருஷ்டியில், ஆறறிவு படைத்த மனிதனே சக்திகள் பல வாய்ந்த ஜீவ சிருஷ்டி என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

நாம் விரும்பியோ விரும்பாமலோ, மனிதப் பிறவி நமக்குக் கிடைத்துவிட்டது. உயிர் வாழவேண்டிய விருப்பமோ, நிர்பந்தமோ, நியதியோ, சூழ்நிலையோ நம்மையறியாமல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் பெரும்பான்மையோர் நம்பிக்கையோடு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; வாழ விருப்பம் கொண்டிருக்கிறோம்.

மனிதனின் பிறப்பிலும் இறப்பிலும் இருப்பது ஒரு நிச்சயமில்லாத தன்மை. மனித அறிவுக்கும் விஞ்ஞானத்துக்கும் கட்டுப்படாதது, மரணம் என்ற சம்பவம். நிச்சயமாக ஒன்றை நிர்ணயித்துச் சொல்ல முடியாதென்றால், அது ஒருவனின் மரணம்தான். எப்போதாவது கண்டிப்பாக தவறாமல் நிகழக்கூடிய ஓர் உறுதியான சம்பவத்தை, நமக்கு மட்டும் நிகழாதென்றோ, ஏற்படக்கூடாதென்றோ நாம் முழுமையாக நம்புகிறோம்; விரும்புகிறோம். இது ஒரு விசித்திரமான விருப்பம்; போலியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் பல காலம் உயிர் வாழ ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

உலகில் உயிர் வாழ்தல் பெரிதல்ல; எப்படி உயிர் வாழ்கிறோம், ஏன் அல்லது எதற்காக உயிர் வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

விதைக்குள் விருட்சம்! - 2

உயிர் வாழும்போது, என்ன செய்ய விரும்புகிறோம்? ஆனால், எதைச் செய்துகொண்டிருக்கிறோம்? இதைப் பற்றி நிச்சயம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும். இதை வைத்துத்தான், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒரு தனித்தன்மை வெளிப்படுகிறது.

இந்தத் தனித்தன்மையை உருவாக்கிக்கொள்ளும் அதிகாரமும் சக்தியும் நம்மிடமே இருக்கிறதா? அல்லது, நமது சக்தியின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஏதோ நியதிப்படி இது உருவாகிறதா? அல்லது, எந்த நியதிக்கும் கட்டுப்படாமல் மனித வாழ்க்கை தன்னிச்சையாக இயங்கிக் கொண்டிருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண முயலும்போது ஏற்படும் அனுபவம், ஒரு பெரிய சாதனையாகிவிடும். நமது சக்திக்குக் கட்டுப்படாமல், ஏதோ ஒரு நியதியில் நம் வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வழி இருக்கிறதா? அந்த வழி விஞ்ஞான வழியா? அல்லது, சமயங்கள் காட்டும் சாஸ்திர வழியா? அல்லது, நாமே உருவாக்கிக் கொள்ளும் தனி வழியா? ஆராயவேண்டும்.

உயர்ந்த லட்சியத்தோடு உயிர் வாழ்ந்து, தனக்கென ஒரு தனி வழியைக் கடைப்பிடித்து வெற்றி காண, பலர் பலவிதமான தர்மோப தேசங்களைச் செய்வார்கள்.

தர்மம் தலைகாக்கும்;
முயற்சி திருவினையாக்கும்;
முயன்றால் முடியாதது இல்லை;
உண்மை உயர்வைத் தரும்;
சத்தியமே ஜெயம்!

பிறருக்கு உபதேசிப்பது எளிது; ஆனால், நடைமுறையில் கடைப்பிடிப்பது கடினம்!

உழைத்து உழைத்து உருக்குலைந்தவர்கள், முயன்று முயன்று தோற்றுத் துவண்டவர்கள், நாணயம், நேர்மை காரணமாகவே வாழ்க்கையில் முன்னேற முடியாதவர்கள், தகுதியும் திறமையும் இருந்தும், தடுக்கி விழுந்துகொண்டிருப்பவர்கள், தெய்வ பக்தி இருந்தும் வாழ்க்கை யில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இன்றி இன்னலில் தவிப்பவர்கள்... இப்படி எண்ணற்றவர்களை சமுதாயத்தில் நாம் அன்றாடம் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அல்லது, நாமே அவர்களில் ஒருவராக இருக்கிறோம்.

பதினாயிரம் தொண்டர்களில் பத்துபேர்தான் தலைவனாகி, மாலை, மரியாதை, மதிப்பு, பணம், பட்டம், பதவி பெற்று ஏகபோகமாக வாழ்கிறார்கள். மீதிப் பேர், unhonoured, unwept and unsung’ என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல, வாழ்க்கை வசதிகள் எதுவுமே பெறாமல், தொண்டு மட்டும் செய்துவிட்டு, துன்பங்களைச் சுமந்து, முடிவில் பெயர்கூடத் தெரியாமல் மறைந்துவிடுகிறார்கள். இதற்கும் விஞ்ஞான ரீதியாகவோ, தத்துவ ரீதியாகவோ இன்றுவரை யாராலும் விளக்கம் கூறமுடியவில்லை. வேண்டுமானால், 'இது அவரவர் தலைவிதி’ என்று முத்திரை குத்திவிடலாம்; அல்லது, வாழ்க்கையில் தோற்றவனுக்குப் 'பிழைக்கத் தெரியாதவன்’ என்று பெயர் சூட்டிவிடலாம்.

விதைக்குள் விருட்சம்! - 2

இத்தகையோர் வாழ்க்கையில் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் அவர்கள் குற்றமா? திறமை யின்மையா? தகுதியின்மையா? வாய்ப்பு இல்லாத காரணமா? தலைவிதியா? துரதிர்ஷ்டமா? இந்த வினாக்களுக்கான விடையைக் கண்டறிந்தால்தான், இந்தப் பிரச்னைகளுக்கு முடிவு காண முடியும். முடிவு தெரியா விட்டாலும், காரணத்தையாவது தெரிந்துகொள்ள முடியும்.

'தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்!’ என்பது பழமொழி. ஆனால், இன்றைய உலகில் தினை விதைத்துத் திண்டாடும் பல கோடிப் பேரையும், வினை விதைத்து விளைச்சலை அறுவடை செய்து உல்லாசமாக வாழும் சில கோடிப் பேரையும் சமுதாயத்தில் காண்கிறோம். இதெல்லாம் பூர்வ ஜென்ம புண்ய, பாவம் என்று சமயத்தின் கோட்பாடுகளைக் காட்டிச் சமாதானம் சொல்லப்படுகின்றதே தவிர, சரியான காரணங்கள் விளக்கப்படுவதில்லை.

For every action, there is an equal and opposite reaction’ என்று விஞ்ஞானி நியூட்டன், விதி ஒன்றை வகுத்துத் தந்தான். 'ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான, ஆனால் எதிர்மறையான ஒரு செயல் உண்டு’ என்பது அந்த விதி.

இன்றைய சமுதாயத்தில் பலருக்குத் தீயவை, தீயது பயக்காமல், நன்மைகளைத் தந்துகொண்டிருக்கிறது. நல்லவற்றைச் செய்தவர்கள் தீமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது நியூட்டனின் விதிப்படி நடக்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.

இதை ஆதாரமாகக் கொண்டு, தீமை செய்தவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்கும், நாணயம் இல்லாதவர்களுக்கெல்லாம் நலன்கள் விளையும், பொய் சொன்ன வாய்க்குதான் போஜனம் கிடைக்கும் என்று பொதுவிதிகளை வகுத்துவிட முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனென்றால், உழைப்பாலும் உண்மையாலும் உயர்ந்து, உலகத்தோரால் போற்றப்பட்ட உத்தமர்கள் பலரை நாம் அறிவோம். அத்தகையோரை கண்கூடாகப் பார்த்துக்கொண்டும் இருக்கிறோம்.

அதர்மத்தை ஏணியாக்கி, அதிக உயரம் ஏறி, அதல பாதாளத்தில் விழுந்த அற்பர்களின் சரித்திரமும் நமக்குத் தெரிந்ததுதான். சத்தியத்தால் வென்றவர்களும் உண்டு; தோற்றவர்களும் உண்டு. இதற்குக் காரணம், சத்தியத்தின் வலிமை அல்லது பலவீனமா? அன்றி, அவரவர் நல்வினை, தீவினைப் பயனா?

இப்போது பல கேள்விகள் பிறந்துள்ளன. இவற்றுக்கெல்லாம் விடைகள் காண வேண்டும். அவற்றுக்கு ஆதாரங்கள் வேண்டும்; நிரூபணம் வேண்டும். அதற்கு இந்து தர்மத்தையே சோதனைச் சாலையாக்கி, வேத உபநிடதத் தத்துவங்களை உபகரணங்களாக்கி, ஆன்றோர்கள் அனுபவித்ததையும் வகுத்த வழிமுறைகளையும் விதிகளாக்கி, நம் பகுத்தறிவையும் விவேகத்தையும் ஆற்றல் களாகக் கொண்டு ஒரு பரிசோதனை நடத்திப் பார்ப்பதுதான், இந்த கட்டுரைத் தொடரின் நோக்கம்.

- விருட்சம் வளரும்

கடவுளைக் காணலாம்!

விதை முளைப்பதைக் கூர்ந்து கவனியுங்கள். அது மேல் நோக்கியும் வளர்கிறது; கீழ் நோக்கியும் வளர்கிறது. கீழ் நோக்கிய வேர்கள் விருட்சத்தின் ஆதார சக்தியைத் தேடுகின்றன. மேல் நோக்கி வளரும் கிளைகள், இலை- பூ- காய்- பழம் ஆகியவை பிறருக்குப் பயன்படுவதற்காக வளர்கின்றன. அவைதான் அடுத்த சந்ததிக்கான விதையையும் உருவாக்குகின்றன. ஆனால், மனிதன் மட்டும் மேல் நோக்கியே வளர ஆசைப்படுகிறான். அதுவும் தனக்காக மட்டும்! கூடவே, நிலையாக வாழத் தேவையான ஆதார சக்தியையும் அவன் வளர்த்துக்கொள்ள ஆசைப்பட வேண்டாமா?

ஒரு ஆலமரத்தின் கதையைப் பார்ப்போம்.

விதைக்குள் விருட்சம்! - 2

குரு ஒருவர், ஒரு நாள் தன் சீடர்களுக்கு, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப் பற்றிய பாடத்தைச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன், ''குருவே, கடவுளைக் காண முடியுமா?'' என்று கேட்டான்.

''ஏன் முடியாது? சுலபமாகக் காணலாமே!'' என்றார் குரு.

''அப்படியானால், உங்களால் எனக்குக் கடவுளைக் காட்ட முடியுமா?'' என்று மீண்டும் கேட்டான் மாணவன்.

''காட்டுகிறேன். நீ சென்று அந்த ஆலமரத்திலிருந்து ஒரு நல்ல பழத்தை எடுத்துக்கொண்டு வா. ஒரு கத்தியும் எடுத்து வா!'' என்றார் குரு.

மாணவனும் எடுத்து வந்தான். அந்தப் பழத்தைக் காட்டி, ''இது என்ன?'' என்று கேட்டார் குரு.

''ஆலம்பழம்'' என்றான் மாணவன்.

விதைக்குள் விருட்சம்! - 2

''இதை இரண்டாக வெட்டு!'' என்றார் குரு. மாணவனும் பழத்தை இரண்டாக வெட்டினான். ''இதனுள்ளே என்ன தெரிகிறது?''

''ஒரு சிறிய விதை!''

''இந்த விதையை இரண்டாக வெட்டு! வெட்டினாயா? இப்போது என்ன தெரிகிறது?'' என்று கேட்டார் குரு.

''ஒன்றும் தெரியவில்லையே!'' என்றான் மாணவன்.

''நன்றாக உற்றுப் பார். ஓர் ஆலமரமே தெரியும்!'' என்றார் குரு.

விருட்சத்துக்குள் விதைகளாகவும், விதைக்குள் விருட்சமாகவும் இறைவன் எங்கும் வியாபித்திருப்பதை அந்த மாணவன் புரிந்துகொண்டான்.

- உபநிடதக் கதை