தொடர்கள்
Published:Updated:

''கை கொடுத்தது பிள்ளையார்! உயிர் கொடுத்தது..?''

சக்தி சங்கமம்... ஓவிய பிதாமகர் கோபுலுவுடன் வாசகர்கள் கலந்துரையாடல்

##~##

''ஹலோ! வணக்கம். நான் கோபுலு பேசறேன். வாசகர்கள்லாம் வந்தாச்சா? எப்ப கிளம்பி வரீங்க? நான் ரெடி!''

காலை 9:30 மணி. நமது செல்போனில் அன்றைய முதல் அழைப்பு, ஓவியப் பிதாமகர் கோபுலுவிடம் இருந்து!

வயது 92 ஆனாலும், 22 வயது இளைஞனுக்குரிய அதே ஆர்வம், உற்சாகம், செயல்வேகம், துடிப்பு, காலம் தவறாமை... ஓவியர் கோபுலுவிடம்!  

சக்தி விகடனின் சக்தி சங்கமம் பகுதியில், வாசகர்களுடன் கலந்துரையாடப் போகும் அடுத்த வி.ஐ.பி. ஓவியப் பிதாமகர் கோபுலு என்ற அறிவிப்பைப் பார்த்ததும், நம் வாசகர் களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்து குவிந்துவிட்டன. ஓவியர் கோபுலுவைச் சந்தித்து உரையாட விருப்பம் தெரிவித்தும், அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை எழுதியும் ஆயிரக்கணக்கில் வந்திருந்த வாசகர் கடிதங்களைக் கவனமுடன் பரிசீலித்து, அவற் றிலிருந்து சிறப்பான கேள்விகள் அனுப்பிய ஐந்து வாசகர்களைத் தேர்வு செய்தோம்.

''கை கொடுத்தது பிள்ளையார்!  உயிர் கொடுத்தது..?''

அதன்படி, சென்னை வாசகி ஜனனி, அரக் கோணம் வாசகர் சுரேஷ்குமார், திருச்சி வாசகர் முருகேசன், புதுக்கோட்டை- அரிமளம் வாசகர் மாங்குடி, அறந்தாங்கி வாசகர் பால சந்தர் ஆகியோர் ஓவியர் கோபுலுவுடன் கலந்துரையாடத் தேர்வானார்கள். தொலை பேசி மூலம் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.  

குறிப்பிட்ட நாளன்று காலை 9 மணிக் கெல்லாம் நமது அலுவலகத்துக்கு ஆர்வமும் பரபரப்புமாக வந்து சேர்ந்தார்கள் வாசகர்கள். அனைவரையும் உபசரித்து, காரில் அழைத்துச் செல்ல நாம் ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்தான், ஓவியர் கோபுலுவிடம் இருந்து மேற்கண்ட போன் அழைப்பு!

''இதோ கிளம்பியாச்சு, சார்!'' என்று பதில் சொல்லி, அரைமணி நேரப் பயணத்தில், சென்னை- ராஜா அண்ணாமலைபுரம், முதல் குறுக்குத் தெருவில் இருக்கும் ஓவியர் கோபுலுவின் இல்லத்தை அடைந்தபோது, காலை மணி 10:00.

காரில் இருந்து இறங்கி, நாங்கள் உள்ளே நுழைய...

''எல்லோரும் வாங்கோ... வணக்கம்!'' என்று மாடி பால்கனியில் இருந்து கனிவும் கம்பீரமுமாக வரவேற்கிறது, ஓவியர் கோபுலுவின் குரல்.

முன்கூட்டியே தயாராகி, பால்கனியில் காத்திருந்து தங்களை வரவேற்ற ஓவியர் கோபுலுவைக் கண்டதும் வியப்பும் ஆச்சரியமும் பொங்க, வணக்கம் தெரிவித்தார் கள் வாசகர்கள். அவர் அவர்களின் தலையைத் தொட்டு ஆசியும் வாழ்த்தும் தெரிவிக்க... மிக நெகிழ்ச்சியாகக் கழிந்தன அந்தக் கணங்கள்.

''மொதல்ல அறிமுகப் படலம்! ஒவ்வொருத்தரா அறிமுகப்படுத்திக்கோங்கோ!'' என்று கோபுலுவே வேடிக்கையாக ஆரம்பிக்க, வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இளைஞர்களான மாங்குடியும், பாலசந்தரும் பேசும்போது ஆர்வத்துடன் குறுக்கிட்ட கோபுலு, ''உங்களை மாதிரி இளைஞர்கள்லாம் எங்களை, எங்கள் ஓவியங்களை ரசிக்கிறதை நினைச்சால் சந்தோஷமா இருக்கு!'' என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

''கை கொடுத்தது பிள்ளையார்!  உயிர் கொடுத்தது..?''

அதுமட்டுமல்ல... வாசகர்களின் ஒவ்வொரு கேள்வியும் அவரை ரசிக்கவைத்தது என்றே சொல்லலாம்.

அவரது தூரிகையின் ஜாலத்தில் நான்கைந்து கோடுகளே ஆயிரமாயிரம் பாவனைகளோடு அழகிய கோட்டுச் சித்திரங்களாக உயிர்பெற்று எழுமே... அதைப் போன்று வாசகர்களின் கேள்விகள் அவரது முகத்தில் ஆச்சரியம், வியப்பு, சந்தோஷம், சிலிர்ப்பு என அநேக பாவனைகளைத் தோற்றுவித்தன.

குதூகலத்துடன், வெகு அர்த்தம் நிறைந் ததாகத் தொடர்ந்தது அவருடனான வாசகர் களின் கலந்துரையாடல்...

கே: ''ஐயா! ஓர் ஓவியர் என்ற முறையில் உங்களுக்குப் பிடித்தமான விஷயம் எது?'' - முதல் கேள்வி தனதாக இருக்கவேண்டும் என்கிற ஆசையில் எல்லோரையும் முந்திக் கொண்டு ஆர்வத்துடன் கேட்கிறார் வாசகி ஜனனி.

:''சும்மா இருக்கப் பிடிக்கும்!'' என்று சொல்லிப் புன்னகைக்கிறார் கோபுலு. சில விநாடிகளுக்குப் பின், ''சும்மா இருக்கிறது ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி அத்தனைச் சுலபமில்லே! பெரிய பெரிய யோகிகளுக்கே கைவராத கலை அது! 'கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம், கரடி வெம்புலி வாயையும் கட்டலாம், ஒரு சிங்க முதுகின் மேல் கொள்ளலாம், கட்செவி எடுத்தாட்டலாம்...’னு பாடிக்கிட்டே போய், இதெல்லாமே மனுஷனால பண்ண முடியும்; ஆனா, எதுடா பண்ண முடியாதுன்னா, 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது!’ன்னு பாடறார் தாயுமானவர். சும்மா இருக்கிறதுன்னா சாப்பிட்டுட்டு சாப்பிட்டுட்டுத் தூங்கி, சோம்பேறியா காலத்தைக் கழிக்கிறது இல்லே! சிந்தனை ஓட்டத்தையும் ஒருமுகப்படுத்தி, நிறுத்தி, சும்மா இருக்கிறது. அது கை வந்துட்டா, அவன் ஞானியாயிடுவான். அதனால, எனக்கு சும்மா இருக்கப் பிடிக்கும். ஆனா, முடியலை. மத்தபடி, ஓர் ஓவியனுக்கு அவன் கண்ணுல படற எல்லாமே பிடிக்கணும். ரசிக்கணும். அப்படிப் பிடிச்சிருந்தால்தான், அதை அவனால ஓவியத்தில் சிறப்பா கொண்டுவர முடியும்'' என்கிறார் கோபுலு.

கே: ''சார்! நான், இருபத்தைந்து வருஷமா விகடன் படிக்கிறேன்...'' என்று வாசகர் முருகேசன் ஏதோ கேட்க முற்பட, உற்சாகமாகக் குறுக்கிட்ட கோபுலு,

: ''நான் உங்களைவிட அதிர்ஷ்டசாலி! விகடன் இரண்டணாவுக்கு வித்த காலத்துலேர்ந்தே, அதாவது 1940- 42-களில் இருந்தே நான் விகடன் வாசகன். வீட்ல சண்டை போட்டுப் பைசா வாங்கிக்கிட்டு போய் விகடன் வாங்கிப் படிச்ச காலமெல்லாம் உண்டு!'' என்று பெருமிதத்தோடு சொல்லிவிட்டு, ''ம்... நீங்க கேளுங்க!'' என்கிறார்.

''கை கொடுத்தது பிள்ளையார்!  உயிர் கொடுத்தது..?''

கே: ''ஐயா! உங்களுக்கு குருவாக யாரைச் சொல்வீங்க?'' என்று முருகேசன் கேட்டு முடிப்பதற்குள்...

: ''மாலி'' என பதில் வருகிறது கோபுலு விடம் இருந்து. பின்னர், மாலி பற்றிய நினைவுகளில் மூழ்குகிறார் கோபுலு.

''நான் அப்போ கும்பகோணம் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் படிச்சிட்டிருந்தேன். விகடன் தீபாவளி மலர்கள் வந்ததும் ஆர்வமா வாங்கிப் பார்ப்பேன். அதில் வெளியாகியிருக்கும் ஓவியர் மாலியின் படங்களை வெச்ச கண்ணு வாங்காமல் பார்ப்பேன். அந்தப் படங்களைப் போலவே வரைய முயற்சி செய்வேன். அப்போதிலிருந்தே மாலியை என் மானசீக குருவாக வரித்துக்கொண்டுவிட்டேன்.''

கே: ''ஓவியத் துறையில் உங்களின் சீடர்கள்...?'' - வாசகர் மாங்குடியின் இந்தக் கேள்விக்குச் சற்று யோசித்துவிட்டுச் சொன்னார் கோபுலு...

: ''எனக்கு நிறைய ஏகலைவர்கள் உண்டு!''

இப்போது வாசகி ஜனனி கேட்டார்...

கே: ''ஓவியங்களில் என்ன மாதிரியான விஷயங்களை நீங்கள் அதிகம் கையாண்டு இருக்கீங்க?''

: ''கார்ட்டூன், ஹ்யூமர்.''

கே: ''உங்களுக்குப் பிடித்த அல்லது நீங்கள் அதிகம் சென்றுள்ள தலம் எது?'' என்று கேட்டார் வாசகர் சுரேஷ்குமார்.

: ''ஒன்றல்ல, நூறல்ல... ஆயிரக்கணக்கான கோயில்களுக்குப் பலப்பல முறை போயிருக்கேன். எல்லாமே அற்புதமான தலங்கள்தான். அத்தனைக் கோயில்களுமே கலைநேர்த்தியுடனும் தெய்வீகத்துடனும் நிர்மாணிக்கப்பட்டவைதான். அந்த க்ஷேத்திரங் களுக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் ஆலயங்களைத் தரிசிக்கும்போது, சுவாமி முன், கண்மூடிப் பிரார்த்திக்கும்போது நாமெல்லாம் வெறும் தூசு என்ற எண்ணமே மனசில் ஓடும்!'' என்கிறார் கோபுலு.

கே: ''உங்களின் மனம் கவர்ந்த கடவுள் யார்?'' என்று சுரேஷ்குமாரே அடுத்த கேள்வியைக் கேட்க...

:  ''முழுமுதல் தெய்வம் விநாயகர்தான்! என்னை ஈர்க்கும் காந்த சக்தி என்றால், திருப்பதி வேங்கடவன்!''

கோபுலு பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எல்லாருக்கும் பிஸ்கட், மிக்ஸர், தேநீர் கொண்டு வந்து உபசரிக்கிறார் உதவியாளர்.

''எடுத்துக்கோங்கோ! சாப்பிட் டுண்டே பேசலாமே?'' என்று கோபுலு புன்னகைக்க, உரையாடல் தடங்கலின்றித் தொடர்கிறது.

கே: ''நெருக்கடியான தருணங்களில்  இறை நம்பிக்கை உங்களுக்குக் கைகொடுத்துள்ளதா?'' - வாசகர் பாலசந்தர் கேட்க...

: ''இந்தக் கேள்விக்கும் என்னால பிள்ளையாரை இழுக்காம இருக்கமுடியாது. பல ஆயிரம் தருணங்களில் எனக்கு நம்பிக்கை தந்தது தும்பிக்கையான்தான்!'' என்று நெஞ்சில் கைவைத்து வணங்குகிறார் கோபுலு.

கே: ''கடும் நோய்வாய்ப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வந்துகொண்டிருந்த நிலையிலும், நீங்கள் இடது கையால் படம் வரையப் பயிற்சி எடுத்து வரைந்தீர்கள் என்பதை அறிந்து வியந்தோம். இது உங்கள் தன்னம்பிக்கையின் அடையாளமா? தெய்வத்தின் அருள் என்பீர்களா?'' இது, வாசகி ஜனனியின் கேள்வி.

இதற்கான பதிலைச் சொல்லும்போது பெரிதும் நெகிழ்கிறார் கோபுலு: ''அந்தக் கடும் நிலையிலும் நம்பிக்கை அளித்து, என்னை இடது கையால் வரையத் தூண்டிய தெய்வம்- மனித ரூபத்தில் வந்து கை கொடுத்த தெய்வம் என்றால் அது அமரர் டாக்டர் டி.ஜெ.செரியன் அவர்கள்தான். என் தன்னம்பிக்கை வளர்த்து என்னை எனக்குத் திரும்ப கிடைக்கச் செய்த விநாயகர் அவர் என்றுதான் சொல்வேன்''

மாங்குடி அடுத்த கேள்வியை முன்வைத்தார்: ''கடவுள் உருவங்களை வரைவதற்கு சிறப்புப் பயிற்சி ஏதேனும் தேவையா? ஓவியம் வரையத் தெரிந்த எல்லோருமே வரையலாமா?''

இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல; தொடர்ந்து... ஓவியர் மாலி தன்னை கடவுளர் படங்கள் வரையச் சொல்லி ஊக்குவித்தது பற்றியும், ஓவியர் சில்பி பற்றியும், விகடன் தீபாவளி மலருக்குப் படங்கள் வரையச் சென்றிருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தெல்லாம் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஓவியர் கோபுலு. அவை அடுத்த இதழில்!

- சந்திப்பு தொடரும்

''கை கொடுத்தது பிள்ளையார்!  உயிர் கொடுத்தது..?''

அடுத்த சங்கமம்...

வாசகர்களே... எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் கலந்துரையாட உங்களுக்கு விருப்பமா? எனில், அவரைச் சந்தித்து நீங்கள் கேட்க விரும்பும் ஆன்மிகம் மற்றும் திருத்தல அனுபவங்கள் தொடர்பான கேள்விகளை, 19.11.13-க்குள் எங்களுக்குக் கிடைக்கும்படி அனுப்பி வையுங்கள். சிறப்பான கேள்விகளை அனுப்பிய வாசகர்களில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ராஜேஷ்குமாரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுவர்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: 'சக்தி சங்கமம்’, சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2