தொடர்கள்
Published:Updated:

நாரதர் கதைகள்! - 16

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

##~##

சிவனடியார் ரூபத்தில் சிவனார் வந்திறங்கியதும், திருவண்ணாமலை நகரமே பிரகாசமாயிற்று. வல்லாள அரசன் பரபரப்பானான். ''யார் வந்திருப்பது?'' என்று விசாரிக்கச் சொன்னான். வந்தவரை முறைப்படி வரவேற்று உபசரிக்கச் சொன்னான். அவனே வாசலுக்கு விரைந்து வந்தான். சிவனடியார் வருவது கண்டு, காலில் விழுந்து வணங்கினான். அவரைக் கைப்பிடித்துத் தன் அரண்மனைக்குள் அழைத்துப்போய் உட்கார வைத்தான்.  அவர் பாதங்கள் குளிர்விக்கப்பட்டன.

உடம்பு சுத்தமாகத் துடைக்கப்பட்டது. வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டன. குடிப்பதற்கு மோரும் இளநீரும், சுவையான பானங்களும், உணவும் தரப்பட்டன.

கம்பீரமான ஆசனத்தில் அமர்ந்த சிவனார், மனம் குளிர வல்லாள மகாராஜனை ஆசீர்வதித்தார்.

''மிக அற்புதமாக தான தர்மங்கள் செய்கிறாய் என்று கேள்விப்பட்டேன். அதன் பொருட்டே இந்தப் பக்கம் வந்தேன். நான் நினைத்ததைவிட மிகச் சிறப்பாக உன் தேசம் இருக்கிறது. மிகச் சீரிய முறையில் தான தர்மங்கள் செய்கிறாய். நீ செய்யும் தொண்டுகள் உன் தேசத்தைச் சிறக்கச் செய்கின்றன. மனித இனத்துக்கே நீ திலகமாகத் திகழ்கிறாய். நீ வாழ்க!'' என்று ஆசீர்வதித்தார்.

சிவனடியாராக வந்த சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் வல்லாள மகாராஜன் சந்தோஷம் அடைந்தான்.

''உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? சொல்லுங்கள்; செய்து தருகிறேன்!'' என்று வற்புறுத்தினான்.

''எனக்கு ஒரு தேவை இருக்கிறது. ஆனால், அதை உன்னிடம் எப்படிக் கேட்பது என்று தயக்கமாக உள்ளது!'' என்றார் சிவனடியார்.

நாரதர் கதைகள்! - 16

''என்னிடம் இல்லாததையா கேட்கப் போகிறீர்? இந்தத் தேசத்தில் என்ன இருக்கிறதோ, எதுவானாலும் கேளுங்கள்; அதை உங்களுக்குத் தர நான் சித்தமாக இருக்கிறேன். என் அரச பதவியையும்கூட உங்களுக்குத் தர நான் ஆவலாக இருக்கிறேன்'' என்று பணிவுடன் சொன்னான் அரசன்.

''அரச பதவியா? எனக்கா? அதெல்லாம் வேண்டாம். நான் கேட்பது மிகச் சாதாரணமான விஷயம். ஆனால், ஒரு மன்னனிடம் போய் இதை யாசிப்பதா என்று தெரியவில்லை.''

''என்னால் கொடுக்க முடிவதாக இருந்தால், அதைக் கொடுப்பது என் கடமை. தயக்கமின்றிக் கூறுங்கள்; என்ன வேண்டும்?''

''நான் பரதகண்டம் முழுவதும் சஞ்சரித்து வருகிறேன். இரவு, பகலாக நடக்கிறேன். கடும் தவங்கள் செய்கிறேன். கண் மூடி உள்ளுக்குள் ஆழ்ந்துவிடுகிறேன். சிலசமயம் நாள் கணக்கில் உணவு, உறக்கம் இல்லாது ஓர் இடத்திலேயே உட்கார்ந்திருக்கிறேன். இதனால் உடம்பு சூடு அதிகரிக்கிறது. என்னுடைய ஜீவ சக்தி இறுகி, உடம்பில் ஒரு வாதையை ஏற்படுத்துகிறது. எனவே, அதை வெளியேற்றுவதற்கான உபாயம் வேண்டும்.''

''என்ன உபாயம்?''

நாரதர் கதைகள்! - 16

''பொதுமகளிர் வேண்டும். அவர்களோடு கூடி இன்பம் பெறுவதால், உடம்பின் சூடு குறைந்து, நான் நன்கு தூங்கி எழுந்திருக்க முடியும்; நன்கு உணவு உண்ண முடியும். இதனால் என் உடம்பு பழைய நிலைக்கு வரும்; பழைய சுறுசுறுப்பைப் பெறும்...''

''அவ்வளவுதானே... நிச்சயம் ஏற்பாடு செய்கிறேன். மிகச் சிறந்த கணிகை ஒருத்தியை உங்களுக்குக் கொண்டு வரச் சொல்லுகிறேன்'' என்றான் அரசன். அவ்வாறே உத்தரவிட்டான்.

ஆனால், திருவண்ணாமலையில் அவன் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் உள்ள கணிகையர் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் அவனுக்கு எட்டியது. எந்தக் கணிகையும் அதை மீறுவதற்குத் தயாராக இல்லை. ''இரவு வருகிறேன் என்று சொல்லி, அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டார். அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வது அழகல்ல! வருபவர் யாராயினும் அவரை ஏற்பது எங்கள் கடமை. எனவே, மன்னிக்கவும்... அரச உத்தரவே ஆனாலும், எங்கள் வாக்கினை மீறி, வருவதற்கு இயலாது!'' என்று கணிகையர் அத்தனைப்பேருமே மறுத்துவிட்டார்கள். தன்னைச் சோதிப்பதற்காக சிவனடியார் ரூபத்தில் வந்துள்ள சிவனாரின் ஏற்பாடே இது; அவரின் பூத கணங்களே மானிட வடிவில் சென்று அத்தனைக் கணிகையரையும் ஏற்பாடு செய்துகொண்டுள்ளனர் என்கிற விஷயம் அரசனுக்குத் தெரியாது.

கணிகையர்கள் சொன்னது அரசனுக்கு நியாயமாகவே பட்டது. எனவே, அவர்களை அவன் வற்புறுத்தவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தான். இரவு நேரம் நெருங்கியது. சிவனடியார் காத்திருக்கிறார் என்று அவனுக்குச் சொல்லப்பட்டது. 'எதுவானாலும் நிறைவேற்றித் தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டோமே, எதிர்பாராமல் இப்படியரு சிக்கல் நேர்ந்ததே, இப்போது என்ன செய்வது’ என்று தெரியாமல் தடுமாறினான்.

அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார் கள். வல்லம்மை, சல்லம்மை என்பது அவர்களின் பெயர்கள். அரசனுடைய கவலை அறிந்து, அவர்களும் கவலைகொண்டனர். அரசனின் இரண்டாவது மனைவியான சல்லம்மை அரசனிடம் வந்தாள். ''உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனில், உங்கள் துயரம் தீர்க்க நான் ஓர் உபாயம் சொல்கிறேன். இங்கு கணிகை எவரும் கிடைக்கவில்லையெனில், சிவனடியாருக்குக் கணிகையாக நான் போகிறேன். இன்று இரவு அவரோடு நான் இருக்கிறேன். அவரை அமைதிப்படுத்துகிறேன். இதற்காக நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஆனால், நீங்கள் மனப்பூர்வமாக அனுமதிக்க வேண்டும்'' என்று கை கூப்பினாள்.

''எனக்கு உயிர் கொடுத்தாய், தோழி! எது குறித்து எனக்குக் கெடுதல் வந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருக்கும் நேரத்தில், என் தேசத்துக்கு வந்த சிவனடியார் வைத்த வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல் வாக்குத் தவறிவிடுவேனோ என்று துக்கப் பட்டுக்கொண்டு இருக்கும் நேரத்தில், நீ உதவி செய்ய முன்வருகிறாய். எனக்கு மிகுந்த சந்தோஷம்; சம்மதம். என்னோடு, வா!'' என்று அவளை அழைத்துக்கொண்டு சிவனடியாரிடம் போனான்.

நாரதர் கதைகள்! - 16

''என்னுடைய தேசத்திலேயே மிக அழகான பெண் இவள். இன்று இரவு இவள் உங்களை மகிழ்விப்பாள். நான் விடைபெறுகிறேன்'' என்று கை கூப்பி வணங்கிவிட்டு, வெளியேறினான்.

''நான் போய் அலங்கரித்துக் கொண்டு வருகிறேன்'' என்று சிவனடியாரிடம் சல்லம்மை உத்தரவு பெற்றுக்கொண்டு, விரைவாக தன் அந்தப்புரம் சென்றாள். நன்கு குளித்து, வாசனைத் திரவியங்கள் பூசிக்கொண்டு, புத்தாடை உடுத்தி, திலகம் இட்டு, மிக அழகாகத் தன்னை ஒப்பனை செய்துகொண்டு, அவர் இருப்பிடம் போனாள்.

சிவனடியார் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு மெல்ல விசிறிவிட்டாள். அவர் பாதங்களை இதமாகப் பிடித்து விட்டாள். இரவு நெருங்கியது. எழுப்ப முயன்றாள். அவர் எழுந்திருக்கவில்லை. அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தாள். அப்போதும் எழுந்திருக்கவில்லை.

'இப்போது என்ன செய்வது? இவர் எழுந்து சந்தோஷம் அடைந்தால்தானே என் கணவர் இவருக்குக் கொடுத்த வாக்கு நிறைவேறினதாக அர்த்தம்!’ என நினைத்தவளாக, சிவனடியாரை ஆரத் தழுவிக்கொண்டாள். கன்னங்களில் முத்தமிட்டாள். சட்டென்று அந்தச் சிவனடியார் பச்சிளம் குழந்தையாக மாறிப் போனார். சல்லம்மை திடுக்கிட்டாள். அந்தக் குழந்தையை வாரியெடுத்து அணைத்துக் கொண்டாள்.

''என்ன இது மாயம்! வந்தவர் சிவனடியார் அல்லவா? அந்தச் சிவனே இவர்தானோ?'' என்று திகைத்தாள். உடனே, அரசனை அழைத்து வர ஆள் அனுப்பினாள். அரசன் ஓடோடி வந்தான். குழந்தையைப் பார்த்தான். வாரித் தழுவிக் கொண்டான்.

''என் குறை தீர்க்க நீரே குழந்தையாக வந்தீரா? எனக்கு மகனாக வந்தீரா? வாரும், வாரும்!'' எனக் குழந்தையை முத்த மாரி பொழிந்தான். மூத்த மனைவியையும் அழைத்து, அவள் மடியிலும் குழந்தையைப் போட்டான். அவர்கள் மூவரும் சந்தோஷத்தின் எல்லையைத் தொட்டார்கள். தங்களைச் சோதிக்க சிவபெருமானே வந்ததைப் புரிந்துகொண்டார்கள். தங்களுக்கு மகன் சிவன் என்ற பெருமையை அடைந்தார்கள்.

சட்டென்று அந்தக் குழந்தை மறைந்தது. அவர்கள் துயரமுற்றார்கள். ''ஏன் மறைந்துவிட்டீர்கள்?'' என்று கதறினார்கள். விம்மி விம்மி அழுதார்கள்.

நாரதர் கதைகள்! - 16

சிவனார் மனமிரங்கி, அவர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

''வாழையடி வாழையாய் என் வம்சம் தழைக்க எனக்கு ஒரு மகன் வேண்டும். இதுவே என் பிரார்த்தனை!'' என்று அரசன் கை கூப்பிக் கேட்க, சிவனார் சிரித்தார்.

''உனக்கு மகனாக நாமே பிறந்தோம். உன் மனைவியர் எமக்குத் தாயானார்கள். உன்னால் அள்ளியெடுத்து அணைக்கப்பட்டோம். எனவே வல்லாளா, நீ வருந்தாதே! உன் அரசு மிகச் சிறப்பாக ஆட்சி செய்யப்படும். உனக்குப் பின்னரும் நல்லவர்கள் இங்கே பிறந்து, வளர்ந்து, இந்தப் பகுதியை நல்ல முறையில் ஆட்சி செய்வார்கள். எனவே, உனது தேசத்தைப் பற்றிக் கவலைப்படாதே!

உனக்கு மகனாக நான் பிறந்ததால், நீ இறந்த பின்பு உனக்குச் செய்யவேண்டிய நீத்தார் கடனை நானே செய்வேன். நீ என்னிடத்தில் வந்து சேர்ந்துவிட்டாய். எனவே, உனக்கு நீத்தார் கடனே அவசியம் இல்லை. ஆனாலும், உலகத்தாருக்கு உன் புகழையும் பெருமையையும் தெரிவிக்கவேண்டி, உன் சரித்திரத்தைக் காலாகாலமாய் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டி, ஒவ்வொரு வருடமும் நீ இறந்த திதி அன்று நானே குளக்கரையில் உனக்குத் தர்ப்பணம் செய்வேன்'' என்றார்.

இதுவரை யாரும் பெறாத ஓர் உன்னதமான நிலையை வல்லாள மகாராஜன் அடைந்தான். கடவுளே அவனுக்கு நீர் தாகம் தணிக்கின்ற தர்ப்பணம் செய்கிற காரியம் இன்றளவும் நடைபெற்று வருகிறது. நாரதருடைய யோசனைதான் அவனை இந்த உச்சநிலைக்குக் கொண்டு போயிற்று; அவருடைய முயற்சிதான் அவனைச் சிறக்க வைத்தது.


ஒருவர் நல்லவராக இருந்தால் போதும்; முனிவர்களும், யோகிகளும், தவச்சீலர்களும், தேவர்களும் அவனுக்கு அருகே வந்து, அவனை மேலும் உயர்த்துவார்கள். உலகம் முழுவதும் அவன் புகழைப் பரப்புவார்கள்.

- தொடரும்...