Published:Updated:

தீபமேற்றினால்... கல்யாண வரம்!

வடமதுரை - ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் கார்த்திகை தரிசனம்!

தீபமேற்றினால்... கல்யாண வரம்!

வடமதுரை - ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் கார்த்திகை தரிசனம்!

Published:Updated:
##~##

தலத்தின் சிறப்பு:

சிவாலயங்களில், பெருமாளுக்குச் சந்நிதி இருப்பதுண்டு. ஆனால், பெருமாள் கோயில்களில் சிவலிங்கத் திருமேனியைக் காண்பது அரிது! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயிலில், சிவனாருக்கும் சந்நிதி இருப்பது சிறப்பு! தாயாரின் திருநாமம்- ஸ்ரீசௌந்தரவல்லித் தாயார்.

தீர்த்த மகிமை:

திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ளது வடமதுரை. ஊருக்குள் பிரமாண்டமாக அமைந்துள்ளது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். பாரத யுத்தம் முடிந்து ஸ்ரீகிருஷ்ணருடன் வந்துகொண்டிருந்த அர்ஜுனனுக்குக் கடும் தாகம். வழியில்... இடையர் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தண்ணீர் கேட்க, உடைந்த கலயத்தில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார் அவர். அதை வாங்கி, அர்ஜுனன் தாகம் தணிய... அதேவேளையில் கலயத்தில் இருந்து தரையில் சிந்திய தண்ணீர்த் துளிகள், பாலாக மாறியதாம்!

தீபமேற்றினால்... கல்யாண வரம்!

இதில், நெகிழ்ந்துபோன அந்த இடையர், ஸ்ரீகிருஷ்ணரிடம், ''இந்த ஊர், தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. எப்போதும் தண்ணீர் கிடைக்கும்படி, ஊற்று ஒன்று தந்தருளுங்கள்'' என்று வேண்ட, அதன்படி அங்கே ஊற்று ஒன்று தோன்றியது. அதிலிருந்து பால் போன்ற வெண்மை நிறத் தண்ணீர் பீறிட்டது. இப்போதும் கோயிலுக்கு அருகில் உள்ளது அந்த ஊற்று.

பாண்டிய மன்னனால் கட்டப்பட்டு, அடுத்து பல மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்ட ஆலயம். பாண்டியர்களின் மீன் சின்னத்தை, தாயாரின் சந்நிதிக்கு மேலே விதானத்தில் காணலாம். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி யுடன் கருவறையில் அழகு ததும்ப நிற்கிறார் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள்.

திருக்கார்த்திகை விழா:

கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில், திருக்கார்த்திகை தீப விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் ஐந்தாயிரம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்! அப்போது கோயில் முழுவதும் தீப ஒளிகளால் ஜொலிக்கும் காட்சி, காணக் கிடைக்காத அற்புதம். தவிர, அன்றைய தினம், பெருமாள் சர்வ அலங்காரங்களுடன் திருவீதியுலா வருவார். பிறகு, சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெறும்.

தீபமேற்றினால்... கல்யாண வரம்!

கல்யாண வரம்:

திருக்கார்த்திகை தீப நாளில், பெருமாளுக்கு கல்கண்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி, துளசி மாலை சார்த்தி வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்!

தாயாரின் கருணை:

ஸ்ரீசௌந்தரவல்லித் தாயார், மிகுந்த வரப் பிரசாதி. இவளுக்கு 21 நாள், குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால், வீட்டில் ஐஸ்வரியம் பெருகும்; சுபிட்சம் நிலவும் என்கின்றனர், பக்தர்கள். நின்ற திருக்கோலத்தில், கருணைப் பார்வையுடன் காட்சி தரும் தாயாருக்கு, சனிக் கிழமைகளில் மஞ்சள் பட்டு அணிவித்து வணங்கினால், தொழில் வளம் சிறக்கும்.

தீபமேற்றினால்... கல்யாண வரம்!

சனிக்கிழமைகளில், பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, தாயாரை மனதாரப் பிரார்த் தித்து வழிபட்டால், விரைவில் குழந்தை பாக்கி யம் கிடைக்கப் பெறலாம் என்கிறார் தேவராஜ் பட்டாச்சார்யர்.

சிவ சந்நிதி:

இங்கு, நந்தியம்பெருமான் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரில் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார் சிவனார். திங்கள், பிரதோஷம் முதலான நாட்களில் இவருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

மற்ற ஸ்வாமிகளும் சிறப்புகளும்!

சித்திரை நட்சத்திர நாளில், ஸ்ரீசக்கரத்தாழ் வாருக்குக் கல்கண்டு வைத்து, அர்ச்சித்து வழிபட்டால், தொழில் வளம் பெருகும். உத்தியோகத்தில் உயர்வு நிச்சயம்! அதேபோல், இங்குள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை, துளசி மாலை அல்லது சம்பங்கி மாலை சார்த்திப் பிரார்த்தித்துக் கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; மனோ தைரியம் கூடும் என்பது நம்பிக்கை! ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கும் இங்கு சந்நிதி உண்டு.

  - உ.சிவராமன்

படங்கள்: வீ.சிவக்குமார்