தொடர்கள்
Published:Updated:

வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?

கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

? 'வாழ்வில் ஒருவன் ஜெயிப்பதற்கும், தோற்பதற்கும் முன்ஜென்ம விதிப்பயனே காரணம்’ என்கிறேன் நான். ஆனால், தற்போதைய தலைமுறையான என் பேரனும் அவன் சகாக்களும் எனது இந்தக் கருத்தை மறுக்கிறார்கள்.

உண்மையில் பூர்வஜென்ம பலாபலன்கள் அடுத்தடுத்த பிறவியிலும் தொடருமா? எனில், எப்படி வெளிப்படும்? எல்லாமே விதிப் பலனின் விளைவுகளே என்றால், மனித முயற்சிகளும் உழைப்பும் வீண்தானா? தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

- கே.ரெங்கராஜன், காஞ்சிபுரம்

ருத்துவர் பிணியின் தரத்தை ஆராய்ந்து உகந்த மருந்தை அளிக்கிறார். ஆனால், பிணி அகலவில்லை; மருத்துவம் தோற்றுப் போய்விட்டது. இந்த மருந்து, எத்தனையோ பேரின் பிணியை அகற்றியிருக்கிறது. இங்கு மட்டும் ஏன் செயல்படவில்லை? மனம் கலங்குகிறார் மருத்துவர். விடை கிடைக்கவில்லை. நன்கு படிக்கும் மாணவன் தேர்வு எழுதினான்; வெற்றி பெறவில்லை. துயரத்தைத் தழுவுகிறான். திறமையான ஓட்டுநரும் விபத்தில் சிக்கி உயிர் துறக்கிறார்; ஏனென்று தெரியவில்லை. நிலநடுக்கத்தில் எண்ணற்ற உயிர்ப்பலி. ஆனால், அதனால் விளைந்த இடிபாட்டில் சிக்கிக் கொண்ட ஒரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது!

படிப்பு, உழைப்பு, நல்ல வேலை என எல்லாமே இருந்தும் பொருளாதாரத்தில் மேம்படாத நிலையே தொடர்கிறது. அழகும், அறிவும், பட்டமும், பதவியும் உண்டு; திருமணம் நெருங்கவில்லை. கணவன்-மனைவி இருவரது உடல்நிலையையும் நன்கு பரிசோதித்து

விட்டார் மருத்துவர். கணவனுக்கு ஜீவாணுக்களின் எண்ணிக்கை போதுமான அளவு உள்ளது. பெண்ணுக்கும் உயிரோட்டம் உள்ள முட்டைகள் செழிப்பாக உள்ளன. ஆனால் குழந்தை உருவாகவில்லை. வாடகைத் தாய் தயார். மருத்துவர் பீஜத்தையும் சோணிதத்தையும் இணைத்தும் குழந்தை உருவாகவில்லை; கவலைப்படுகிறார்கள்.

வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?

அறுவை சிகிச்சையில் தேர்ந்த மருத்துவர் அவர். ஆனால் அவரே, ஒரு பிரசவ சிகிச்சையில் குழந்தையை வெளியே எடுக்கும் தருணம் தாயின் உயிர் பிரிந்தது. அந்த சிகிச்சை தோல்வி அடைகிறது. காரணம் தெரியவில்லை. அதேபோன்று சாலை விபத்தில் தாய்- தந்தை இறந்துவிட, குழந்தைகள் தப்பிவிடுகிறார்கள். காரணம் தெரியவில்லை. முதியோர் பென்ஷன் எல்லோருக்கும் உண்டு. ஆனால், கிராமத்தில் வாழும் முதியோர் சிலருக்குக் கிட்டாது.

? நீங்கள் சொல்ல வருவது புரிகிறது.  இப்படியான விநோதங்களுக்குக் காரணம் தலைவிதிதான் என்கிறீர்களா?

இவை அத்தனைக்கும் சிந்தனையாளர்கள் மாறுபட்ட விளக்கங்களை அளிப்பார்கள். ஆனால் எதிலும் சான்று இருக்காது. விஞ்ஞானமும் கைவிரித்துவிடும்.

இன்னும் பல விநோதங்களும் உண்டு!

ஒருவனுக்கு குருபலம் இருந்தும் திருமணம் எட்டவில்லை. மற்றொருவனுக்குக் குருபலம் இல்லை; ஆனால் திருமணம் நிறைவு பெறுகிறது. ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவை 75 விழுக்காடு மனிதர்களிடம் இருக்கும். அவர்கள் அத்தனைபேரும் துயரத்தில் ஆழ்வதில்லை. அதேநேரம், ஒருவரின் ஜாதகத்தில் சனி நல்லநிலையில் தென்படுவான். ஆனால் அந்த ஜாதகன் துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்பான்.

வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?

கல்வியும் வேலை வாய்ப்பும் பிறப்புரிமை என்கிறது சட்டம். ஆனால், திறமை இருந்தும் வேலைவாய்ப்பில் ஏமாற்றம் அடைகிறார்கள். பாம்பாட்டிக்கும், யானைப் பாகனுக்கும் அவர்கள் வளர்த்த பாம்பும் யானையுமே எமனாக மாறுகின்றன. சட்டம் உண்டு, காப்பாளர்களும் நிறைய இருக்கிறார்கள். ஆனாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன. சமயவாதிகளிடம் அல்பத்தனம் ஒளிந்துகொண்டிருக்கிறது.சீர்திருத்தவாதிகளிடம் விஷமம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சில நீதியரசர்களிடமும் நெறிதவறு தென்படுகிறது. பகுத்தறிவு இருந்தும்  பாரபட்சம் அகலவில்லை. வெளியே தியாக மூர்த்தியாகத் தோன்றினாலும் இயல்பில் போகமூர்த்தியாக இருப்பார்கள்.

பொதுவாக, பாதிப்பைச் சந்தித்தபிறகு அதற்கான காரணத்தைத் தேடி ஒட்டவைப்பது தான் நம்மவர்களின் வழக்கம். அதன் உண்மைத்தனத்துக்கு உத்தரவாதம் இருக்காது.நமது சிந்தனைக்கு எட்டாத ஒரு சக்தி, மாறுபட்ட விளைவுக்குக் காரணம் ஆகலாம் என்பதை நம் மனம் ஏற்காது, தவிப்பை ஏற்றுக் கொண்டு மௌனத்தைக் கடைப்பிடிப்போம்.

? அப்படியான சக்திக்குத்தான் 'விதி’ என்று பெயரா?

'முயற்சி முழுமையாகச் செயல்பட்டாலும், பலன் எதிரிடையாக மாறுவதற்குக் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தியே காரணம் என்கிறது சாஸ்திரம். அதை அத்ருஷ்டம், தைவம் என்கிற பெயரில் சுட்டிக்காட்டுகிறது. அதை 'விதி’ என்றும் அழைப்பார்கள்.

கடவுளுக்கு, 'ஸத்ய ஸங்கல்பன்’ என்றொரு சிறப்புப் பெயர் உண்டு என்பார்கள். அவர் மனத்தில் தோன்றிய எண்ணம் உண்மையாகி விடும். அல்லது, உண்மை மட்டும்தான் அவர் மனத்தில் உருவாகும் என்று சாஸ்திரம் விளக்கும்.

மனித சிந்தனைக்கும் அவரது சிந்தனைக்கும் உள்ள வேறுபாடு கடவுளை உயர்த்திக்காட்டும் என்பதை ஒப்புக்கொள்ளாமல், மனித இனம் தனது சிந்தனையை உண்மையாக எண்ணி செயல்பட்டு விபரீதத்தை சந்திப்பது உண்டு.

? இதைத்தான் 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்று சொல்லி வைத்திருக்கிறார்களோ?

ஆமாம், அப்படியும் சொல்வது உண்டு! மனித சிந்தனையில் விதியும் உருவாகும்; முயற்சியும் உருவாகும். அவனது முற்பிறவி செயல்பாடு, நடப்பு வாழ்க்கையில் அவன் மனத்தோடு இணைந்து சிந்தனையில் வெளிப்பட்டு பலனை ஏற்கவைக்கும். முயற்சி வலுப் பெற்று, விதி வலுவிழந்து இருந்தால், மோதலில் முயற்சி வெற்றி பெறும். முயற்சி வலுவிழந்து விதி வலுப்பெற்றிருந்தால் விதி வெல்லும். இதை தைவம், புருஷகாரம் என்ற பெயரில் சாஸ்திரம்  விளக்கும்.

வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?

? அதென்ன தைவம், புருஷகாரம்?

தைவம் என்றால் கண்ணுக்குப் புலப்படாத முன்ஜென்ம செயல்பாட்டின் வாசனை. புருஷகாரம் என்பது நடப்பு வாழ்வில் ஆராய்ந்து முனையும் சிந்தனையின் செயல்வடிவம். ஆக, விதி என்பது இல்லை என்று வாதித்தாலும், அதன் விளைவு அனுபவத்துக்கு வந்துவிடும். காரணம் தெரியாத பல விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது 'விதி’.

மனித ஆற்றல் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் இன்றைய நாளில், தங்களின் வாதம் எடு படாது. சிந்தனை முடக்கமுற்று செயல்படாத நிலையில், விதியை நுழைத்துத் தப்பிப்பது பொருத்தம் இல்லை.

கைப்பேசியின் மூலம் உலக நிகழ்வுகளை ஒரு நொடியில் சந்தித்து மகிழும் அளவுக்கு, சிந்தனையின் தரம் இமாலயத்தைத் தொட்டு விட்டது. மனித சிந்தனைக்கு எட்டாத ஒன்றும் இருக்காது. இருந்தால், சிந்தனைக்கு எட்டிவிடும். இதுவே, அவனது சிந்தனை தரத்துக்கு உதாரணம்.

மனித சிந்தனையே கடவுள் உருவத்தை வரையறுத்தது. ஆறு தரிசனங்களும் கடவுள் அனுபவத்தை மனிதனுக்கு ஊட்டின. பூத உடல் மறைந்த பிறகு செயல்பாடு மட்டும் அழியாமல், அடுத்த பிறவியிலும் அடையாளம் கண்டு அவனைப் பற்றிக்கொள்ளும் என்பதற்கு சான்று இல்லை.

இப்படி, சான்றில்லாத விதியை முன்வைத்து மனித சிந்தனையின் தோல்விக்குக் காரணம் காட்டுகிறீர்கள். பலனை வைத்து காரணத்தை தேடிப்பிடித்து ஒட்ட வைப்பதும், சான்றில்லாத காரணத்தைக் காட்டி முற்றுப்புள்ளி வைப்பதும் ஒன்றுதான்.

? எனில், பிரபஞ்ச சிருஷ்டியில் பதிலறிய முடியாத விஷயங்களுக்குக் காரணம் எதுவென்று கருதுகிறீர்கள்?

இலையில்லா மரங்கள், பூவில்லா மரங்கள், காய் இல்லா மரங்கள், இலை இல்லா மரங்கள்... இவை எல்லாம் நிலத்திலிருந்து தோன்றியவையே. மென்மையான ரோஜாவில் முள்ளும் இருக்கும். சில மரங்களில் இலையோடு முள்ளும் பல வடிவங்களில் தென்படும்.

வானளாவிய அரச மரத்தின் காய்கள் சிறிய வடிவிலும், கொடியில் விளையும் பூசணி, பரங்கிக்காய் போன்றவை பெரியதாகவும் இருக்கும். சில தாவரங்களில் வேரிலும் காய் தோன்றும். அது, அவற்றின் இயல்பு என்றே முடிவுக்கு வரவேண்டும். மாறாக 'விதி’ என்று இல்லாத ஒன்றை சுட்டிக்காட்டி, வாயடைக்க வைப்பது, திறமையல்ல.

வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?

மடிந்தவனையும் ஜீவாணுக்களில் உயிர் பெற வைக்கும் முயற்சியில் வெற்றிநடை போடும் மனித முயற்சி, அவனது சிந்தனை கண்ணுக்குப் புலப்படாத அத்தனை அதிசயங் களையும் அடையாளம் காட்டும். இதையும் மீறி 'விதி’ என்பதெல்லாம் பிறக்காத குழந்தை.

சொல்வளத்தால் மனித மனத்தை வசப் படுத்துவது, தற்காலிக வெற்றியாகவே இருக்கும். வசப்பட்ட மனம் அதிலிருந்து வெளி வந்து செயல்பட்டால், சொல்வளம் எல்லாம் செல்லாக்காசாக மாறிவிடும்!

இல்லை! மனிதனின் சிந்தனை வளமே எல்லாவற்றுக்கும் மேலானது என்பதுபோன்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிணியின் காரணத்தை ஆராயும் மருத்துவம், காரணம் தென்படாமல் தவிக்கும்போது அவனது பரம்பரையை ஆராய்கிறது. அப்பனும் பாட்டனும் மறைந்தாலும், அவர்களில் தென்பட்ட பிணியானது மகனிடமும் தோன்றும் என்ற முடிவை மருத்துவர்கள் ஏற்பது உண்டு. இந்த விஷயத்தில்... 'பூத உடல் மறைந்த

பிறகு, பிணியும் இறந்துவிட்டது. அப்படியிருக்க மகனின் சர்க்கரை வியாதிக்கு, அப்பனின் சர்க்கரை வியாதியே காரணம் என்பது பொருத்தமற்றது’ என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

மறைந்த பூத உடலின் உருவம் மகனிடம் அப்படியே தெரிகிறது. அப்பனின் இயல்பும் மகனிடம் தென்படும். எந்தப் பிணிக்கும் பரம்பரைத் தேடல் என்பது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இசை வல்லுநர்கள், தச்சர்கள், கலைஞர்கள் என அத்தனைப் பேருடைய வாரிசுகளிடமும் தந்தையின் கலை பளிச்சிடும். ஆக, அவன் (மனிதன்) மறைந்தாலும் வாசனை மறைவது இல்லை. பெருங்காயச் சொம்பில் உள்ள பெருங்காயம் காலியாகிவிட்டாலும், அதன் வாசனை மறையாது!

? ஆக, உடலுக்குத்தான் அழிவு; பூர்வ ஜென்ம வாசனைக்கு அழிவு இல்லை என்கிறீர்களா?

அப்பன் மறைந்ததும் அவனுடைய சொத்து மீதான உரிமையும் அகன்றுவிடும்; அவன் மகனுக்கு எப்படி அளிக்கலாம் என்று எவரும் வாதாடுவது இல்லையே! ஜீவாணுக்களின் சம்பந்தத்தைக் காரணம் காட்டி, அவனுக்கு அளித்துவிடுவார்கள். அப்பன் அழியும்போது, அவன் ஜீவாணுக்களும் அழிந்துவிடுமே என்று சிந்திப்பதில்லை. அதன் மறு பகுதி மகனிடம் தொடர்வதால், அவனுக்கு உரிமை உண்டு என்பார்கள்! அப்பனின் அதே அணு அதன் வடிவில் இல்லை என்றாலும், அதிலிருந்து உருப்பெற்ற ஜீவாணுக்களில் தோன்றியவன் மகன் என்பதை மறுக்க முடியாது.

அப்படித்தான்... முற்பிறவியில் செய்த செயல்பாடுகளும் பூத உடலில் மறையாமல் இருந்துகொண்டு, புது உடல் எடுத்ததும், அதை அடையாளம் கண்டு மனத்தில் வாசனை வடிவில் பற்றிக் கொண்டுவிடும். பிணி, பூத உடலுடன் மறைந்தாலும், வாசனை வடிவில் புது உடலில் ஊடுருவிவிடும் என்பதை ஏற்க வேண்டிய கட்டாயம் உண்டு.

? சரி! நீங்கள் சொல்வதுபோன்றே பூர்வஜென்ம வாசனை பிறவிகள்தோறும் தொடர்கிறது எனில், அது வெளிப்படுவது எப்படி?

வாழ்வை நிர்ணயிப்பது விதியா? மதியா?

பிறந்த குழந்தை தானாகவே தாய்ப்பால் குடிக்கிறது. தரையில்  தவழ்கிறது. முட்டுக்குத்தி நடக்கிறது. அதற்கு எவரும் கற்றுக் கொடுக்க வில்லை. அப்புறம் எப்படித் தெரிந்தது? இங்கே, பூர்வ ஜென்ம வாசனை வெளிப்பட்டுச் செயல்படுகிறது.

நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பவனை, 'என்ன... நீ மாடா?’ என்று கேட்பது உண்டு. சிந்தனையைச் செயல்படுத்தாதவனை கழுதை என்றும். நம்ப வைத்து ஏமாற்றுபவனை குள்ளநரி என்றும் சொல்வது உண்டு. இங்கெல்லாம் பிற இனத்தில் இயல்பு தென்படுவதற்கு, முற்பிறவி வாசனையே காரணம் என்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல இயலாது.

? அப்படியென்றால், ஒருவன் செய்யும் நல்லது- கெட்டது அனைத்துக்கும் அவனது விதிப்பயன்தான் காரணமா?

எந்த விளக்கத்தை உள்வாங்கினாலும் மனத்தில் படிந்திருக்கும் வாசனையின் தொடர்பானது, மாற்று விளக்கத்தை ஏற்றுச் செயல் பட வைக்கும். உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ள, மாசு முற்றிலும் அகன்றிருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதன் மூலம், பூர்வ ஜென்ம வினைகள் மனத்தில் பதிந்துவிட, அதன் சேர்க்கையில் தோன்றும் சிந்தனையே விபரீத விளைவுகள் அத்தனைக்கும் காரணம் என்றும் சொல்கிறது.

முழுமூச்சாக முயற்சி வலுப்பெற்ற நிலையில் வாசனை வலுவிழக்கும்; முயற்சி வெல்லும். முயற்சியானது சுணக்கமுற்றால் முன்ஜென்ம வினை வலுப்பெற்று வென்றுவிடும். இப்படியான வினைக்குப் பெயர் எதுவாக இருந்தாலும்... அது, நம்மைக் கட்டாயமாக ஏற்க வைப்பதால், விதி என்ற பெயரே பொருத்தமாக இருக்கிறது.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனத்தில் இருக்கும் எண்ணம், அதாவது நாம் எட்டிப்பிடிக்க வேண்டிய வாழ்க்கையின் வரைபடம் அப்படியே நடைமுறைக்கு வருவ தில்லை. ஒருவேளை, அதைவிடவும் உயர்வானதாக- சிறப்பானதாக வாழ்க்கையை உணர்வான். அல்லது அடிக்கடி தோல்வியுற்று துயரத்தில் ஆழ்வான். மனம் விரும்பிய வடிவை வாழ்க்கையில் சந்தித்தவர்கள் மிக மிக அரிது. அதை மாற்றி அமைப்பது பூர்வஜென்ம வினையின் விளையாட்டு. அப்படியான வினையை விதியாக அறிமுகம் செய்வதில் தவறில்லை.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.