தொடர்கள்
Published:Updated:

பக்தி இசை பூஜை!

பக்தி இசை பூஜை!

##~##

''இசையும் பக்தியும் பிரிக்க முடியாதவை. 'பண்ணும் பக்தியும் இருந்தால் போதும், இறைவன் நம் வசப்படுவான்’ என்பதற்குப் புராண உதாரணங்கள் நிறைய உண்டு. அப்படியான ஒரு வாய்ப்பு நமக்கும் வேண்டாமா! அப்படி, தெய்வீக ராகங்களில் கரைந்து, நாமும் தெய்வம் உணர்வதற்கான சிறு முயற்சிதான் பக்தி இசை பூஜை'' என்கிறார் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு- லஷ்மன்.

ஆமாம்! லஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவுடன் ஐயப்ப சேவா சங்கங்கள் மற்றும் உபயதாரர்கள் பலரும் இணைந்து, ஒவ்வொரு வருடமும் கார்த்திகை- மார்கழி மாதங்களில் மாலை அணியும் ஐயப்பமார்கள் கண்டுகளிக்கும் பொருட்டு, சென்னையில் பிரமாண்டமாக பக்தி இசை பூஜை நடத்தி வருகிறார்கள். பிரபலமான இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் பங்களிக்க, 23 வருடங்களாகத் தொடர்கிறது இந்த பக்தி இசைத் திருவிழா!

வேறு என்னென்ன சிறப்பம்சங்கள் இந்த வைபவத்தில்? அவரிடமே கேட்டோம்.

''தெய்வப் பாடல்கள், இசைக் கச்சேரி மட்டுமின்றி, ஐயப்பனுக்குச் சிறப்பு அலங்காரம், சபரி நாதனுக்கு வாழை அம்பலம் (வாழை மரத்தில் சிறு கோயில் போன்று), பிரசாதம்... என ஒரு கோயில் விழாவாகவே களைகட்டும் இந்த நிகழ்ச்சி! ஒவ்வொரு வருடமும் மூத்த கலைஞர்களை, ஏ.பி.கோமளா, பி.பி.ஸ்ரீனிவாஸ், பித்துக்குளி முருகதாஸ் போன்ற இசையுலகப் பிதாமகர்களை அழைத்து, நினைவுப் பரிசளித்து கௌரவிப்பது எங்கள் நிகழ்ச்சியின் சிறப்பம்சம்'' என்று  பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட லஷ்மன், தொடர்ந்தார்...

பக்தி இசை பூஜை!

''சிறு வயதில், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கோயிலில் நடந்த ஐயப்பன் பூஜையும், பஜனையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. சினிமாக்களுக்குப் போவதென்றாலும், பக்திப் படங்களுக்குத்தான் எங்களை அழைத்துச் செல்வார் அம்மா. இதுமாதிரியான தாக்கங்களாலோ என்னவோ, பக்தி மார்க்கத்தில் எனக்கு அதிகம் ஈடுபாடு உண்டு. தவிர, பக்திப் பாடல்களை ரசிப்பதற்கென்றே பக்தர்கள் கூட்டம் நிறைய உண்டு. வீட்டில் விரிவான பூஜைகளும் பஜனைகளும் செய்து வழிபட வாய்ப்பு இல்லாத ஐயப்பமார்களும் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த விசேஷ பக்தி இசை பூஜை!'' என்று நெகிழ்கிறார் லஷ்மன்.

பக்தி இசை பூஜை!

வரும் 23.11.13 சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு, இவர்களின் 24-வது பக்தி இசை பூஜை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. ஐயப்பமார்கள், பக்தி இசையில் ஆர்வம் உள்ள யாவரும் கலந்துகொண்டு, ஐயனின் அருள்பெறலாம்.