தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

ராதே... ராதே! தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

'புல்லாய்ப் பிறக்க வேண்டும். புல்லாகப் பிறந்தாலும் நெடுநாள் வாழ்க்கை இல்லை. எனவே கல்லாய்ப் பிறக்க வேண்டும். அப்படி நான் கல்லாகக் கிடக்கும்போது... கண்ணா நீ மட்டுமல்ல, ராதையும் சேர்ந்தாட இடம் தருவேன்’ எனும் பொருளில் கசிந்துருகி கண்ணனைப் பிரார்த்தித்துப் பாடுகிறார் ஊத்துக்காடு வேங்கடகவி.

இவர் மட்டுமா? கண்ணனைப் பாடிய அருளாளர்கள் பலரும் ராதையையும் பாடுகிறார்கள். ஆமாம்! 'ராதா கிருஷ்ணா’ என்பதே அவர்களது தாரக மந்திரமாகத் திகழ்ந்தது.

'ராதை- பிரேம பக்தியின் ஆதார வடிவம்’ என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம். ஸ்ரீகிருஷ்ணனின் ஆத்ம சக்தி என்றும் வேறு சில ஞான நூல்கள் போற்றுகின்றன. 'கிருஷ்ணன் பரமாத்மா; ராதை ஜீவாத்மாக்களின் உருவகம்’ என்பது பெரியோர் வாக்கு.

திரேதா யுகத்தில் சீதாதேவியுடன் வனவாசம் சென்ற ஸ்ரீராமன், வனங் களில் மகரிஷிகளையும், முனிவர்களையும் தரிசித்து வணங்கினான். அவனை ஆரத்தழுவி மகிழ்ந்த முனிவர்கள், அந்தப் பேரானந்தம் நீண்டகாலம் நீடிக்க வேண்டும் என்று விரும்பினர். ஆனால், அவனோ ஓரிடத்தில் தங்காது நகர்ந்துகொண்டிருந்தான். ஒரு நாள் அனைவரும் ஒன்று கூடி ஸ்ரீராமனிடம் சென்று தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். அண்ணல் ராமன், 'எமது அடுத்த அவதாரத்தில் உங்கள்

தசாவதார திருத்தலங்கள்!

விருப்பம் நிறைவேறும்’ என்று அருளினான். அதன்படியே ரிஷிகளும் முனிவர்களும் துவாபர யுகத்தில் கோபியர்களாகப் பிறந்தார்களாம்.அப்போது அவர்களின் பக்தியை அதிகரிக்கும் வகையில், ஸ்ரீகிருஷ்ணனின் சங்கல்பப்படி பிருந்தாவனத்தின் அருகில் வர்ஷனா எனும் கிராமத்தில் விருஷயினி- கமலாவதி தம்பதிக்கு மகளாக, ராதை பிறந்தாள்.

இந்த யுகத்திலும் கோபியர் கண்ணனைப் பிரியும் தருணம் வந்தது. அவன் மதுராவுக்குப் புறப்பட்டபோது, தேர்ச் சக்கரத்தை நகரவிடாமல் பிடித்துக்கொண்டார்கள். இன்னும் சில கோபியர்கள் தேரின் எதிரில் நின்று அவனை வழிமறித்துக் கதறி அழுதார்கள். ராதையும்தான். கண்ணன் தன் நிலையை விளக்கி, அவர்களை ஆற்றுப் படுத்தினான். அப்போது ராதை, 'கண்ணா! உன்னில் ஓர் அம்சம், எப்போதும் என்னை நீங்காமல் இருக்க அருள்புரிய வேண்டும்’ எனப் பிரார்த்தித்தாள். கண்ண னும் இசைந்தான். தன் அம்சத்தில் ஒரு பகுதியை புல்லாங்குழலில் நிலைநிறுத்தி, அவளிடம் தந்து சென்றான். ஸ்ரீகிருஷ்ண பக்தியின் ஒட்டுமொத்த வடிவமான ராதையும் வேணு கானத்திலேயே லயித்துப்போனாள். புல்லாங் குழலோசையில் புருஷோத்தமனையே தரிசிப்பதாய் மகிழ்ந்து வாழ்வைக் கழித்தாள்  என்கின்றன புராணங்கள்.

ராதையின் அவதார ஸ்தலத்தைத் தரிசிக்க நாம் விரஜா பூமிக்குச் செல்ல வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும்பகுதியும், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங் களில் சிறு பகுதிகளுமாகத்  திகழ்கிறது விரஜபூமி. பிருந்தாவனம், மதுரா ஆகிய தலங்கள் இருப்பதுவும் இந்த புண்ணிய பூமியில்தான். இங்குள்ள ஆலயங்களைத் தரிசிப்பது பெரும்பேறு.

முதலில்... ராதையுடன் சேர்ந்து அடியார் ஒருவருக்கு கண்ணன் அருளிய ஓர் ஆலயத்தைத் தரிசிப்போம். அந்தக் கோயிலின் திருப் பெயர் பாங்கே விஹாரி மந்திர்!  'பாங்கே’ என்றால் வளைவுகள் என்று பொருள். விஹாரி என்றால் விளையாட்டுப் பிள்ளை என்று அர்த்தம். தீராத விளை யாட்டுப் பிள்ளையான கண்ணன் இங்கு, அங்கம் வளைத்து ஒயிலாகக் காட்சி தருவதால், பாங்கே விஹாரி என்று திருநாமம் அமைந்ததாம்.

தசாவதார திருத்தலங்கள்!

மொகலாயர் படையெடுப்பின் போது, துறவி ஒருவருக்குக் கிருஷ்ண விக்கிரகம் ஒன்று கிடைத்தது. அதைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் புதைத்து வைத்தார் துறவி. சிலகாலம் கழித்து, ஸ்வாமி ஹரிதாஸ் எனும் அருளாளர் இங்கு தங்கி ஓய்வெடுத்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய கண்ணன், அந்த இடத்தில் விக்கிரகம் புதைந்திருக்கும் விஷயத்தை விவரித்தானாம். திடுக்கிட்டு விழித்த ஸ்வாமி ஹரிதாஸ், கிருஷ்ண விக்கிரகத்தைத் தோண்டி எடுத்து, ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து கோயிலும் எழுப்பினாராம்.

இவருக்கு கண்ணனும் ராதையும் சேர்ந்து தரிசனம் தந்தனராம். அப்போது இவர், கண்ணனையும் ராதையையும் ஓருருவில் தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் எனப் பிரார்த்தித்தாராம். அப்படியே காட்சி தந்த ஸ்ரீகிருஷ்ணர், பக்தர் ஆசைப்பட்டபடி அமைந்த தமது விக்கிரகம் ஒன்றையும் அவருக்குக் கொடுத்ததாகச் சொல்வர்.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம்... அவ்வப்போது கருவறையில் ஸ்வாமியை திரையிட்டு மறைத்து விடுகிறார்கள். நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தால், இத்தலத்து இறைவனான குட்டிக் கிருஷ்ணன், பக்தர்கள் கூட்டத்துக்குள் ஓடி மறைந்து விளையாட்டு காட்டுவான் என்பதாக நம்பிக்கை!

தசாவதார திருத்தலங்கள்!

பிருந்தாவனத்தில் ராதைக்கு சிறப்பு தரும் கோயில், ராதா வல்லப் மந்திர். மூன்றடுக்குகளுடன் திகழும் இக்கோயிலை, 16-ஆம் நூற்றாண்டில் ஹிட் ஹரிவம்ச கோஸ்வாமி என்பவர் கட்டி இருக்கிறார். தொல்பொருள் இலாகா, பாதுகாக்கப்பட்ட சின்னமாக இதை ஏற்றிருக்கிறது. ஹோலி, ஜன்மாஷ்டமி போன்ற வைபவங்கள் இங்கே விசேஷம்.

இன்னும் பல கோயில்கள் உண்டு இங்கே. அவற்றைத் தெரிந்து கொள்வதற்கு முன், நம் தமிழ்நாட்டில் ஸ்ரீகிருஷ்ணன்

அருளும் அற்புத  ஆலயங்களைத் தரிசித்துவிடுவோம்.

கனவில் வந்த சதுர்புஜ கிருஷ்ணன்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது வேப்பங்கொண்டபாளையம். முற்காலத்தில், வேணுகோபால புரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரில், மலைகளும் பசுமையும் சூழ அமைந்துள்ளது கோயில். வலது புறம் உள்ள மலையை கருடாத்ரி மலை என்றும், இடது புற மலையை ரிஷபாத்ரி மலை என்றும் சொல்வர்.

தசாவதார திருத்தலங்கள்!

பல்லவ மன்னன் ஒருவனுக்கு, அவன் வேட்டைக் குச் செல்லும் வனத்தில் ஓரிடத்தை கனவில் உணர்த்தி, அங்கே தனக்குக் கோயில் கட்டும்படி அருளினாராம் ஸ்ரீகிருஷ்ணன். அதன்படி பல்லவ மன்னன் எழுப்பிய ஆலயம் இது என்கிறார்கள். இங்கே ஸ்ரீருக்மிணி- ஸ்ரீசத்யபாமாவுடன், நான்கு கரங்களோடு காட்சி தருகிறார் ஸ்ரீசந்தானவேணு கோபாலன். தாயாரின் திருநாமம்- ஸ்ரீபத்மவல்லி நாயகி. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து திருமஞ்சனம் செய்து பிரார்த்தித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

வாழ்க்கையை இனிப்பாக்கும் பால்பாயசம்!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது பீம நகர். இங்கே, ஹீபர் ரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் கோயில்.

ஆங்கிலேயர் காலத்தில் பட்டாலியன்களின் மிகப் பெரிய முகாமாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாகத் தோன்றி அருளிய காளிதேவிக்குக் கோயில் அமைத்திருந்தார்கள் பக்தர்கள். பின்னாளில், இந்தப் பகுதியில் உள்ள யாதவ மக்களில் பக்தர் ஒருவர், கண்ணனுக்கும் இந்தக் கோயிலில் சந்நிதி அமைக்க விரும்பினாராம். இதன்பொருட்டு அம்பாளின் அருளையும் அனுமதியையும் வேண்ட, அவளும் சம்மதித்து அருளினாம். அதையடுத்து, அழகு கொஞ்சும் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனின் விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள். இந்தக் கண்ணனுக்குப் பால் பாயசம் சமர்ப்பித்து வழிபட குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி முதலான வரங்கள் தந்து நம் வாழ்வை இனிமையாக்குவார்.

ஸ்ரீகிருஷ்ணரின் அருட்கடாட்சத்துடன், சிற்பபொக்கிஷங்களும் நிறைந்து திகழ்கிறது நெல்லை மாவட்டத்தின் கோயில் ஒன்று. அதுபற்றி அடுத்த இதழில் பார்ப்போம்!

- அவதாரம் தொடரும்...