Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 18

ஆலயம் ஆயிரம்! முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 18

ஆலயம் ஆயிரம்! முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

ங்கைகொண்ட சோழபுரத்து கங்கை கொண்ட சோழீச்சரம் எனும் பெரிய கோயிலிலும், திருவையாற்று ஐயாறப்பர் திருக் கோயிலிலும் மூலவர் திருக்கோயிலைத் தவிர, தெற்குப் பிராகாரத்தில் தென்கயிலாயம் (தக்ஷிண கைலாசம்) எனும் ஒரு சிவாலயமும், வடக்குப் பிராகாரத்தில் வடகயிலாயம் (உத்ர கைலாசம்) எனும் தனித்த சிவாலயம் ஒன்றும் இருப்பதைக் காணலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்து தென்கயிலாயக் கோயிலின் கருவறையில் தற்போது மூலவர் லிங்கம் காணப்பெறவில்லை. வட கயிலாயமோ பின்னாளில் அம்மன் கோயிலாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், திருவையாற்று தென் கயிலாயமும் வடகயிலாயமும் தற்போது வழிபாட்டில் திகழும் சிவாலயங்களாகவே விளங்குகின்றன.

தென்கயிலாயத்தை முதலாம் ராஜேந்திர சோழனின் தேவி பஞ்சவன் மாதேவியார் கற்கோயிலாக எடுத்தார் என்பதை அந்த ஆலயத்திலுள்ள ராஜேந்திர சோழனின் 31-ம் ஆட்சியாண்டு (கி.பி.1143) கல்வெட்டு எடுத்துக் கூறுகிறது. வடகயிலாயத்தை ராஜராஜ சோழனின் தேவி தந்தி சக்தி விடங்கி எனும் லோகமாதேவியார் எடுப்பித்தார் என்பதை அந்த ஆலயத்துக் கல்வெட்டு கூறுகின்றது.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 18

பஞ்சவன் மாதேவியாரால் கற்கோயிலாகப் புதுப்பிக்கப்பெற்ற தென் கயிலாயம், திருநாவுக்கரசர் எனும் அப்பர் அடிகளின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடைய திருக்கோயிலாகும். 'திருக்கயிலையை கண்டல்லால் மீளேன்’ - என ஈசனிடமே சபதம் உரைத்து, வடபுலம் நோக்கிச் சென்ற அப்பரடிகள், இறுதியில் பரமேஸ்வரன் தன் கையில்

கொண்டு வந்த புனல் தடமொன்றில் (குளத்தில்) மூழ்கியதும் சுவடு படாமல் திருவையாற்றுக் குளத்திலிருந்து எழுந்தார். உடன் அவருக்குக் கயிலை தரிசனம் கிடைத்தது. இணை இணையாக வந்த விலங்கு களையும் பறவைகளையும் சிவசக்தியாகவே கண்டார்.

'மாதர் பிறைக் கண்ணியானை’ எனத் தொடங்கும் பாடலோடு பதினொரு பாடல்கள் உடைய திருப்பதிகம் (தேவாரம்) பாடியருளினார். அவர் கயிலை தரிசனம் செய்த இடமே தென் கயிலாயம் எனும் திருவையாற்றுத் திருக்கோயிலாகும்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 18

கருவறையுடன் கூடிய ஸ்ரீவிமானம், அர்த்த மண்டபம், முகமண்டபம், திருச்சுற்று மாளிகை எனும் சுற்றுப்பிராகார மண்டபம், திருக்கோபுரம் ஆகியவற்றுடன் தென் கயிலாயம் எனும் இத்திருக் கோயில் திகழ்கின்றது. வடதிசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் தென்கயிலாய நாதர் சிவலிங்க வடிவில் காணப்பெறுகிறார். முகமண்டபத்தில் அப்பர் அடிகளார் உழவாரம் ஏந்திய நிலையில் ஈசனைத் தொழுகின்றவராகக் காணப்பெறுகின்றார்.

ஸ்ரீவிமானத்தின் கீழ் திசையில் மூன்று தேவ கோஷ்டங்களும், தென்திசையில் ஒரு தேவ கோஷ்டமும், மேற்கு திசையில் மூன்று தேவ கோஷ்டங்களும் உள்ளன. கீழ்த்திசை கோஷ்டங்களில் முறையே பைரவர், கணபதியார், அமர்ந்த கோல சிவபெருமான் திருவுருவங்களும், தென் திசையில் அமர்ந்த கோல கயிலைநாதனின் வடிவமும், மேற்குத்திசையில் அமர்ந்த கோல ஈசனின் வடிவத்தோடு துர்கை, முருகப்பெருமான் திருவடிவங்களும் இடம் பெற்றுள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 18

பொதுவாக கருவறையின் மூன்று புற கோஷ்டங்களில் முறையே தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருவுருவங் களே காணப்பெறும். ஆனால் இவ்வாலயத்தில் அந்த திருவுருவங்கள் இடம் பெறாமல், அமர்ந்த கோல சிவனாரின் மாறுபட்ட வடிவங்களே காணப்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மதில் சுவருடன் இணைந்து திகழும் தென் கயிலாயத்துத் திருசுற்றுமாளிகையை 46 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இவற்றில் 45 தூண்கள் தமிழ்நாட்டுக் கலைப்பாணியில் அமையாது, நுளம்பர் கலைப்பாணியில் காட்சி தருகின்றன.

நுளம்பபாடி என்பது மைசூர் ராஜ்ஜியத்தின் கீழ்ப்பகுதியையும் பல்லாரி மாவட்டத்தையும் தன்பாற் கொண்ட நாடாகும். அந்த நாட்டை ராஜேந்திர சோழனின் படை வெற்றி கண்டது. அப்போது, அவர்களின் கலையில் மயங்கிய சோழர் படை அந்த நாட்டிலிருந்த அழகிய கலைப்படைப்புகளில் சிலவற்றை எடுத்து வந்து சோழநாட்டுக் கோயில்களில் இடம்பெறச் செய்தது. அவ்வாறு மைசூர் பகுதியிலிருந்து திருவையாற்றுக்கு எடுத்து வரப்பெற்றவையே இந்த 45 தூண்களுமாகும். மரத்தை கடைசல் செய்து அமைத்தது போலவே கல்லில் மிக நேர்த்தியாக இத்தூண்களை வடிவமைத்துள்ளனர்.

இங்குக் காணப்பெறும் நுளம்பர் தூண்கள் சிலவற்றின் நடுப்பகுதியில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன. நாட்டியக் கலைஞர்கள், சூரியன், சந்திரன், ராம-லக்குவன் காண வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுதல், கஜசம்ஹார மூர்த்தி, பூரண கும்பம் எனப் பல நுட்பமிகு வேலைப் பாடுகளைக் காணமுடிகின்றது.

பஞ்சநதீஸ்வரர் என்னும் ஐயாறப்பர் திருக்கோயிலுக்குச் செல்வோர் மறக்காமல் பார்க்க வேண்டிய திருக்கோயில் தென் கயிலாயமாகும்.

- புரட்டுவோம்