Published:Updated:

நாரதர் கதைகள்! - 17

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன்

##~##

கீழே ஏதோ ஒரு நல்ல மனம் சஞ்சலம் அடைந்து கிடக்கிறதே. மஹதி யாழ் மெள்ள ஸ்ருதி கலைகிறதே. தனக்கும் அந்த சஞ்சல உணர்வு ஏற்படுகிறதே. யார் வருத்தப்படுவது? நாரதர், வருத்தப்படும் இடம் நோக்கி மெள்ள நகர்ந்தார்.

அவர், உணர்வுமயமானவர். உன்னத புருஷர். மற்றவரின் துன்பம் எங்கிருந்தாலும் அவருக்குத் தெரியும். மனம் ஒருமித்து யார் என்று விசாரித்தால், எந்த இடத்தில் துக்கம் இருக்கிறதோ அங்கு போய்ச் சேர முடியும். நாரதர், பிரம்மாவின் மகன்.படைத்தவரின் பிள்ளை. எனவே, அவருக்கு விசேஷ குணங்கள் இருந்தன. நல்லவர்கள் வேதனைப் படக்கூடாது என்ற நல்ல மனம் இருக்கும்போது, இந்த மாதிரியான நகர்வுகள் எல்லாம் சாத்தியமாகின்றன. உண்மையாக மற்றவருக்காக அக்கறைப்படும்போது, எது வேண்டுமானாலும் செய்கின்ற திறன் வந்துவிடுகிறது. அன்பும் ஒருமுகப்பட்ட அக்கறையும் இணைபிரியாதவை.

நாரதர் பூமிக்கு அருகே வந்ததும் சஞ்சலப்படுபவர் வியாச மகரிஷி என்று தெரிந்துபோயிற்று. 'வியாசருக்கா சஞ்சலம்? மகா ஞானியாயிற்றே! இப்பேர்ப்பட்ட ஞானிகள் எல்லாம் சஞ்சலப்பட்டால் பூமியில் பயிர்ப் பச்சைகள் நன்கு வளராதே. மக்களால் சந்தோஷமாக இருக்க முடியாதே. என்ன கவலை? என்ன காரணம்? யார் துன்புறுத்துகிறார்கள்?’ அவர் இன்னும் நெருக்கமாக வியாசரிடம் வந்து சேர்ந்தார். அவருடைய ஆசிரமத்தில் இறங்கினார். மெள்ள நடந்தார். குனிந்து வணக்கம் செய்தார். கோவிந்த நாமாவளியைப் பாடினார். வியாசமகரிஷியும்

நாரதர் கதைகள்! - 17

கை கூப்பி நாரதரை வரவேற்றார். இனிமையான குரலில் நாரதர் பாடுவதைக் காது குளிரக் கேட்டார். மறுபடியும் வணக்கம் சொன்னார்.

''என்ன குரல், எவ்வளவு அமிர்தமான கானம்!'' என்று சிலாகித்தார்.

''ஏதோ கவலையாக இருப்பதுபோல் தெரிந்தது. அதனால்தான் காரணம் கேட்க வந்தேன். தவறாயின் மன்னிக்க'' என்று மிகுந்த விநயத்துடன் நாரதர் பேசினார்.

''உண்மை. முக்காலமும் அறிந்த ஞானியான உங்களுக்கு இந்த சாதாரண முனிவனின் சஞ்சலம் தெரிந்துவிட்டது.

நான் வேதங்களைத் தொகுத்து எழுதினேன். அனாதியாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்ற அந்தச் சொற்றொடர்களை செவிமடுத்து, நான்கு பாகங்களாகப் பிரித்துத் தொகுத்து முடித்தேன். மகாபாரத காவியம் எழுதினேன். இந்த பரத கண்டத்தில் நடந்த மிகப் பெரிய போரை, அதற்குக் காரணமான விஷயங்களைத் தொகுத்து எழுதினேன்.

இந்தப் போரின் காரணகர்த்தாவான கிருஷ்ணனையும் நான் உயர்த்தி எழுதினேன். நன்கு எழுதியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுதியதை மறுபடியும் படித்துப் பார்த்தால் திருப்தி உண்டாகிறது. எந்தத் திருத்தமும் செய்யத் தேவையில்லை. தானாகவே மகாபாரதம் செம்மையாக வந்துவிட்டது. வேத விஷயங்கள் நல்ல அடுக்காக உட்கார்ந்து விட்டன என்று தோன்றுகிறது. நன்கு செய்திருக்கிறோம் என்ற நிறைவு ஏற்பட்டாலும், இன்னும் ஏதோ ஒன்று நடைபெறவில்லை என்று தோன்றுகிறது. இவை இரண்டும் செய்வதற்காக மட்டும் நான் வரவில்லை. இன்னும் ஏதோ ஒன்று எழுத வேண்டும். எழுதினால்தான் என் மனம் நிம்மதி அடையும். நான் எழுதாதது என்ன? வேறு யாருடைய சரித்திரத்தை எழுத வேண்டும்? உலகம் முழுக்க சுற்ற வேண்டுமா? உலகத்தின் கதை எழுத வேண்டுமா?'' என்று வியாசர் மெள்ளக் கேட்க, நாரதர் பதில் சொன்னார்...

நாரதர் கதைகள்! - 17

''பாரதத்தின் கதைதான் உலகத்தின் கதை. வேறு எதுவும் எழுதுவதற்கில்லை. நீங்கள் மிக அற்புதமாக மகாபாரதம் எழுதியிருக்கிறீர்கள். வேதங்களை நீங்கள் தொகுத்ததுதான் மிகப்பெரிய விஷயம். வேறு எந்த மனிதராலும் செய்ய முடியாததை, மிகுந்த கவனத்தோடும் பொறுப்போடும் நீங்கள் செய்திருக்கிறீர்கள். சூரிய- சந்திரர்கள் உள்ள வரையிலும் இந்த விஷயங்கள் படிக்கப்படும்.அப்போது உங்களை மனிதர்கள் கொண்டாடுவார்கள். வியாச மகரிஷியே, ஏன் உங்களுக்கு சஞ்சலம் என்பதை உங்களுக்காக நான் யோசிக்கிறேன்'' என, நாரதர் அவரையே உற்றுப் பார்த்தார்.

''என்னால் இயலவில்லை. பல காலம் முயன்று ஏதோ ஒன்று குறை எனத் தெரிகிறதே தவிர, என்னவென்று தெரியவில்லை. எனக்காக முன் வந்து நீங்களே செய்கிறீர்கள் என்றால், அது என்னுடைய நல்ல காலம். நான் செய்த புண்ணியம். என் மூத்தோர் ஆசி. அதுமட்டுமல்ல, எல்லாம் வல்ல இறைவனின் ஆணையாகத்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள்'' என்று வியாச மகரிஷி சொன்னார்.

நாரதர் வாய்விட்டுச் சிரித்தார். அவரைக் கனிவோடு பார்த்தார்.

''வியாச மகரிஷியே, கடைசியில் சொன்ன வார்த்தை அற்புதமான வார்த்தை. இது இறைவனின் கட்டளையாகத்தான் இருக்கும். ஏனெனில், இந்த வழியாக நான் போகும்போது உங்கள் சஞ்சலம் என்னைத் தொடுவானேன்? நான் அதைக் கண்டு கவலைப்பட்டு இங்கு வருவானேன்? எல்லாம் வல்ல இறைவன் என்னையும் உங்களையும் இயக்கி இருக்கிறான். அவன் இயக்கியபடியே நாம் நடந்துகொண்டிருக்கிறோம். இப்போது என்ன என்பது பற்றி யோசிப்போம்.

யார் இயக்குகிறானோ, எந்த பரந்தாமன் இந்த விஷயத்தைச் செய்கிறானோ, எது பூமியினுடைய அசைவுக்கும், வளர்வுக்கும், மாறுதலுக்கும் காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம் உலகமாக இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்குக் காரணமான திருமாலைப் பற்றி நீங்கள் எழுத வேண்டாமா. மகாவிஷ்ணுவின் சரிதம் சொல்ல வேண்டாமா? இவரால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவர்தான் மூல காரணம். இவர்தான் இங்கு பூமியினுடைய சகல அசைவுக்கும் காரணகர்த்தா. படைத்தது பிரம்மா. இங்கு பிரளயத்தில் பூமி அழிய உதவி செய்யப் போவது சிவன். ஆனால், பூமி உயிர் வாழ வேண்டுமல்லவா? இங்குள்ள ஒவ்வோர் உயிரும் அதனுடைய பக்குவத்தை அடைய வேண்டுமல்லவா? மாறுபாடு செய்ய வேண்டுமல்லவா. அந்த மாறுதலை நிகழ்த்துவது விஷ்ணு என்கிற திருமால். அவர் கதையை நீங்கள் சொல்ல வேண்டும்.

அந்தத் திருமால் இந்த பூமியில் பிறந்து பல்வேறு விதமான அவதாரங்கள் எடுத்து அதன் காரணங்களை விரிவாக சொல்லியிருக்கிறார். தன்னுடைய நிலைமையைத் தெளிவாக விளக்கியிருக்கிறார். இங்கு, தான் யார் என்பதை நிரூபித்திருக்கிறார். எப்போது மறுபடியும் பிறப்பார் என்ற ஏக்கத்தோடேயே பூமி இருக்கிறது. பூமியில் அவர் பிறந்து செய்த லீலைகளை நீங்கள் தொகுக்க வேண்டும். அதற்கு பாகவதம் என்று பெயரிட வேண்டும். ஆமாம், நீங்கள் பாகவதம் எழுத வேண்டும். திருமாலின் பெயரை, அவதாரங்களை வரிசைப்படுத்தி அந்தக் கதையை பூமியில் உள்ளோருக்குச் சொல்ல வேண்டும். நீங்கள் தொகுத்த வேதங்களைப் போல, நீங்கள் எழுதிய மகாபாரதம் போல இந்த பாகவதமும் இந்த உலகத்தில் சந்திரர், சூரியர் உள்ள வரை நிலைத்து நிற்கும். பாகவதம் வெறும் கதையல்ல. தர்மத்தின் சரித்திரம். சாதுக்களை ரட்சிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டவும், அவதாரங்கள் எடுக்கப்பட்டன. எது தர்மம், எது அதர்மம், அதர்மத்தின் முடிவென்ன என்று உலகம் அறிய நடத்தப்பட்ட லீலைகள் பாகவதம்.

நாரதர் கதைகள்! - 17

இந்தக் குறைதான் உங்கள் மனத்தில் இருக்கிறது. இன்னும் ஏதோ எழுதவில்லையென்று இருக்கிறது. நீங்கள் யோசித்திருந்தால் தெரிந்திருக்கும். நான் வந்து இறங்கி உங்களுக்குச் சொல்லும்படியாகிவிட்டது. எனவே, வியாச முனிவரே, நல்ல நாள் பார்த்து பாகவதம் எழுதத் துவங்குங்கள்'' என்று சொல்ல, நாரதரின் கைகளைப் பற்றி வியாச முனிவர் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

''நல்லது, மிக அருமையாக வழி காட்டினீர்கள். மிகச் சிறப்பான விஷயத்தைச் சொன்னீர்கள். எனக்கு இப்போதுதான் புரிகிறது. பல அவதாரங்கள் திருமால் எடுத்திருப்பதும், பல்வேறு விதமாக இந்த உலகத்தை தீயதிலிருந்து காப்பாற்றியிருப்பதும், நல்லதை வளர்ப்பதும், அதற்காக அவர் முனைப்புடன் செயல்பட்டதும் எழுதப்பட வேண்டிய விஷயங்கள். பூமி யாரால் வாழ்கிறதோ, எவரால் வளர்கிறதோ அவரை போற்ற வேண்டியது அவசியம். நிச்சயம் செய்கிறேன்'' என்று சொன்னார்.

நாரதர் விடைபெற, சரஸ்வதி நதியில் போய் நீராடி, மனம் ஒருமித்து பாகவதம் எழுதுவதற்காக வியாச முனிவர் உட்கார்ந்தார்.

காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். அந்த அரசர் போய் இந்த அரசர் வரலாம். அந்த மதம் நகர்ந்து, வேறு மதம் வரலாம். ஆனால் தர்மம் மாறாதது. நிலைத்து இருக்க வேண்டிய விஷயம் இது. காலம் என்பதன் பிரமாண்டத்தையும், பல்வேறு காலங்களில் பிறந்த வலிமையுள்ளோரையும் அவர்களின் நல்லது கெட்டதுகளையும் சொல்லும் கதையாக பாகவதம் அமையவேண்டும். சாதாரண ஜனங்கள் வலிமையுள்ளோரால் வேதனைப் படக்கூடாது. பூமி அமைதியாய் இருத்தல் அவசியம். அதற்காகவே அவதாரங்கள்! வியாசர் மனம் ஒருமித்தார்.

இன்று நமக்குக் கிடைக்கின்ற பாகவதத்தி னுடைய ஆணிவேர்- ஆரம்பம், நாரத மகரிஷி. எழுதியவர் வியாசராக இருந்தாலும், அந்த விளக்கைத் தூண்டியது அந்த சிறிய துரும்பு. தன்னைக் கொஞ்சமும் முன்னிலைப்படுத்தாது விளக்கு எரிவதற்கே உதவி செய்த நாரதர் இந்த பூமியின் கரும்பு! 

 - தொடரும்...