Published:Updated:

நட்சத்திர பலன்கள்

வழக்குகளில் வெற்றி யாருக்கு? நவம்பர் 26 முதல் டிசம்பர் 9 வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

நட்சத்திர பலன்கள்

வழக்குகளில் வெற்றி யாருக்கு? நவம்பர் 26 முதல் டிசம்பர் 9 வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

Published:Updated:
##~##

சூரியன் - 2-ந் தேதி வரை அனுஷம் நட்சத்திரத்திலும், 3-ந் தேதி முதல் கேட்டை நட்சத்திரத்திலும்... செவ்வாய் - உத்திரம் நட்சத்திரத்திலும்...

புதன் - 29-ந் தேதி வரை விசாகம்; 30-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை அனுஷம்; 8-ந் தேதி முதல் கேட்டையில்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரு - புனர்பூசம்; சுக்ரன் - 28-ந் தேதி வரை பூராடத்தில் 29-ந் தேதி முதல் உத்திராடத்தில்  

சனி, ராகு - சுவாதியிலும், கேது - அசுவினியிலும் பயணம் செய்கின்றனர்.

புனர்பூசம், பூரம், அனுஷம், பூராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்குத் தொட்ட தெல்லாம் துலங்கும்.

திருவாதிரை, உத்திரம், கேட்டை, உத்திராடம் ஆகிய நட்சத்திரக் காரர்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, அகலும்.

 அசுவினி

நட்சத்திர பலன்கள்

சூரியன் உங்களுக்குச் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள் அரசால் அனுகூலம் உண்டு. மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் பிடிவாத குணம் தளரும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ராசிநாதன் செவ்வாய் சாதகமாக இல்லாததால் முன்கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். சொத்துப் பிரச்னை தலைதூக்கும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அடிவயிற்றில் வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள் ஏற்படக்கூடும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களின் போராட்டங்கள் மற்றவர்களுக்குப் புரியவில்லையே என வருந்துவீர்கள்.

பரணி

குரு உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். ராகுவும், சனியும் உங்களுக்குப் பகைத் தாரையில் செல்வதால் மனஇறுக்கம், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், பணப்பற்றாக்குறை வந்து செல்லும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கிருத்திகை

 ராகுவும், சனியும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துகொள்வார்கள். செவ்வாய் ஜென்மத் தாரையிலேயே நிற்பதாலும், சூரியன் 3-ந் தேதி முதல் வதைத் தாரையில் செல்வதாலும் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். அரசு காரியங்கள் இழுபறியாகும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள்.

ரோகிணி

 ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். புது வேலை அமையும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். மனைவி வழியில் நல்லது நடக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 3-ந் தேதி முதல் சூரியன் சாதகமாவதால் தடைப்பட்ட அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாததால் ஏமாற்றம், ஈகோ பிரச்னை, பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

 மிருகசீரிடம்

ங்களின் நட்சத்திராதிபதி செவ்வாய் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். 3-ந் தேதி முதல் சூரியன் சாதகமாக இல்லாததால் வீண் டென்ஷன், வேலைச்சுமை, காரியத் தாமதம் வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். குருவின் போக்கு சரியில்லாததால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஷேர், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

திருவாதிரை

குரு உங்களுக்கு தனத் தாரையில் செல்வதால் எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி, உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். 3-ந் தேதி முதல் சூரியன் சாதகமாவதால் கோபம் குறையும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். செவ்வாய் வதைத் தாரையில் செல்வதால் கணவன்-மனைவிக்குள் ஒளிவு, மறைவில்லாமல் பழகுவது நல்லது. சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிக்குப் பல ஆலோசனைகள் தருவீர்கள்.

புனர்பூசம்

செவ்வாய் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். கேது சுகத்தாரையில் நிற்பதால் வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சாதுக்கள் உதவுவார்கள். உங்களின் ஜென்ம நட்சத்திரத்திலேயே குரு சென்று கொண்டிருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படக்கூடும். ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி எந்தப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.

பூசம்

3-ந் தேதி முதல் சூரியன் ஜென்மத் தாரையை விட்டு விலகுவதால் கோபம் குறையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய சொந்த-பந்தங்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுக்கிரன் சாதகமாக இல்லாததால் வீண் செலவுகள், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும். சகோதரர்களை நினைத்துக் கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

ஆயில்யம்

கேது தனத்தாரையில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றம் செய்வீர்கள். தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சனியும், ராகுவும் வதைத் தாரையில் செல்வதால் எல்லோருக்கும் நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தானே மிஞ்சுகிறது என்று ஆதங்கப்படுவீர்கள். மனைவிவழியில் உங்களை தவறாகப் புரிந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.

மகம்

ங்கள் ராசிநாதன் சூரியன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தைரியம் கூடும். மனோபலம் அதிகரிக்கும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீண் பகை, திடீர்ப் பயணம், சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்துச் சிக்கல்கள் வந்து செல்லும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம்.

பூரம்

புதன் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தில் சீர்த்திருத்தம் செய்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வீட்டைப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அரசு காரியங்கள் சுலபமாக முடியும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். வழக்கு சாதகமாகத் திரும்பும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ராகுவும், சனியும் உங்களுக்குப் பகைத் தாரையில் செல்வதால், சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பு உணர்வு, கசப்பு உணர்வு வந்து செல்லும். யாரையும் நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி மட்டத்தில் செல்வாக்கு கூடும்.

உத்திரம்  

னியும், ராகுவும் உங்களுக்கு சுகத் தாரையில் செல்வதால், தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். என்றாலும், செவ்வாய் உங்களின் நட்சத்திரத்திலே செல்வதால் முன்கோபம், உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, ஒருவித படபடப்பு, சகோதர வகையில் அலைச்சல் வந்து நீங்கும். சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். 29-ந் தேதி முதல் சுக்கிரனும் உங்களின் அனு ஜென்மத் தாரையிலேயே நுழைவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மற்றவர் விஷயங்களில் தலையிட வேண்டாம்.

அஸ்தம் 

குரு சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், ஓரளவு பணவரவு உண்டு. உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். புது வேலை அமையும். வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். கேதுவின் போக்கு சரியில்லாததால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். உங்களிடம் பழகுபவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என நம்பி ஏமாற வேண்டாம். நீண்ட நாட்களாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்.

சித்திரை 

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பால்ய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டு பேசுவீர்கள். குரு சாதகமாக இல்லாததால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வீண் பழிச் சொல் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். சந்தை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு புது ஏஜென்சி எடுப்பீர்கள். சில நேரங்களில் உயரதிகாரி வெறுப்பாகப் பேசினாலும், காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

சுவாதி

ல கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், முக்கிய கிரகமான குரு உங்களுக்கு தனத் தாரையில் செல்வதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருக்கும். பணவரவு ஓரளவு உண்டு. சூரியன் உங்கள் ராசிக்கு 2-ல் நிற்பதால் பேச்சிலே கவனம் தேவை. நீங்கள் யதார்த்தமாக சிலவற்றை சொல்லப் போய் அதை ஒருசிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். சனியும், ராகுவும் உங்களுடைய நட்சத்திரத்திலேயே செல்வதால் அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்புகள் வரும். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். வியாபாரம் மந்தமாக இருக்கும். கடன் பிரச்னைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளும், வேலைச்சுமையும் இருக்கும்.

விசாகம் 

செவ்வாய் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்குகள் சாதகமாகும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய திரிஜென்மத் தாரையிலேயே உங்களின் நட்சத்திர நாயகனான குரு செல்வதால் அவ்வப்போது வயிற்று வலி வரக்கூடும். குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், பழைய நகையைத் தந்துவிட்டு, புது டிசைனில் வாங்குவீர்கள். கேதுவால் கல்வியாளர்கள், பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் மத்தியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் இரும்பு, தானிய வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் கெடுபிடிகள் குறைந்து கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

 அனுஷம்

 2-ந் தேதி வரை உங்களுடைய நட்சத்திரத்திலேயே சூரியன் பயணிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சளித் தொந்தரவால் மூச்சுத் திணறல் வரும். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். புதனும் 30-ந் தேதி முதல் உங்கள் நட்சத்திரத்திலேயே செல்வதால் நீண்ட நெடுநாட்களாக நெருங்கிப் பழகிய நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். குருபகவான் சாதகமாக இருப்பதால், பணவரவு உண்டு. சுக்கிரன் சாதகமாக இல்லாததால் வாகனச் செலவு அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தடைப்பட்டு முடியும். கேது சாதகமாக இல்லாததால் அலைச்சல், தூக்கமின்மை வந்து செல்லும். உங்களைவிட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கேட்டை

 3-ந் தேதி முதல் சூரியன் உங்கள் நட்சத்திரத்திலேயே செல்வதால் லேசாக கண் எரிச்சல் வந்து போகும். ராசிநாதன் செவ்வாய் யோகாதிபதியின் சாரத்தில் செல்வதால் புது வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வீடு கட்டும் பணி நிறைவடையும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமுகமாகும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய உறவினர், நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். குரு சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளிடம் இருந்து வந்த பிடிவாதம் தளரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உங்களை நம்பி சிலர் முதலீடு செய்வார்கள். உத்தியோகத்தில் புதுச் சலுகைகள் கிடைக்கும்.

மூலம்

30-ந் தேதி முதல் புதன் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால், மனைவி வழியில் உதவிகள் உண்டு. புது வேலை அமையும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சூரியன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தந்தைவழியில் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். வதைத் தாரையில் குரு செல்வதால், யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். வங்கி சேமிப்புக் கணக்கில் இருப்புத் தொகையை சரிபார்த்து விட்டுப் பிறகு காசோலை தருவது நல்லது. சுக்கிரனும் சாதகமாக இல்லாததால், மனைவியிடம் எதையும் மறைக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

 பூராடம்

29-ந் தேதி முதல் உங்களுடைய நட்சத்திரத்தை விட்டு நட்சத்திர நாயகனான சுக்கிரன் விலகி தனத் தாரையில் செல்வதால் அழகு, இளமை கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். சவாலான காரியங்களையும் சிறப்பாக முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து மோதல்கள் விலகும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சூரியன் சாதகமாக இல்லாததால், அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். சளித் தொந்தரவு வந்து நீங்கும். செவ்வாய் தனத் தாரையில் செல்வதால் புறநகர்ப் பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

 உத்திராடம்

செவ்வாய் உங்களின் திரிஜென்மத் தாரையில் செல்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். மற்றவர்களைக் குறைகூறுவதில் எந்தப் பலனும் இல்லை. சந்தர்ப்பச்சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் அனுசரித்துப் போவது நல்லது. சுக்கிரன் உங்களுடைய நட்சத்திரத்திலேயே செல்வதால் கண் எரிச்சல், காது வலி வந்து நீங்கும். 30-ந் தேதி முதல் புதன் சாதகமாவதால் நெளிவு, சுளிவுகளை வாழ்க்கையில் கற்றுக் கொள்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். 2-ந் தேதி வரை நட்சத்திராதிபதி சூரியன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். குரு சாதகமாக இல்லாததால் வீண்பழி வந்து போகும். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகள் ஆதரவாகப் பேசுவார்கள்.

 திருவோணம்

ங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் தடைகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் நீங்கும். எதிர்பார்த்திருந்த பணம் வரும். மகன் பொறுப்பாக நடந்துகொள்வார். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைந்திருந்தாலும் சுகத் தாரையில் செல்வதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பீர்கள். செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைந்திருந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால், சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னையும், பணத் தட்டுப்பாடும் வந்து நீங்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் வேண்டாம்.

 அவிட்டம்

குருபகவானைத் தவிர மற்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை உண்டாகும். தடைகள் உடைபடும். குடும்பத்தில் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பணம் வரத் தொடங்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் இருந்த சச்சரவு நீங்கும். அயல்நாடு செல்லவும் விசா வரும். அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். புகழ், கௌரவம் ஒருபடி உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய உறவினர், நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் லாபம் கூடும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள்.

சதயம்

 முக்கிய கிரகங்களெல்லாம் பலவீனமாக இருப்பதால் முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். ஒருவகையான எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வரும். சின்னச் சின்ன பிரச்னைகளெல்லாம் பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். குருபகவான் மட்டும் சாதகமாக இருப்பதால், பணவரவு உண்டு. பிள்ளைகளால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மறதியால் விலை உயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் போட்டிகள் கடுமையாகும். தெரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். புது ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.

 பூரட்டாதி

கேதுபகவான் சாதகமாக இருப்பதால் அனுபவப் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மனஇறுக்கங்கள் நீங்கும். குருபகவான் உங்களின் திரிஜென்மத் தாரையில் செல்வதால் அவ்வப்போது குழம்புவீர்கள். கடந்த கால இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். சனியும், ராகுவும் சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். வீடு வாங்குவது, கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் தைரியமாகச் சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். 30-ந் தேதி முதல் புதன் சாதகமாவதால் அரசால் அனுகூலம் உண்டு. வியாபார நஷ்டங்களைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவி கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

 உத்திரட்டாதி

குருபகவான் உங்களின் அதிநட்புத் தாரையில் செல்வதால் புகழ், கௌரவம் ஒரு படி உயரும். மனஉளைச்சல் குறையும். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பணவரவு உண்டு. கோபப்படுவது கொஞ்சம் குறையும். யதார்த்தமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். சனியும், ராகுவும் 8-ல் மறைந்திருந்தாலும் நட்புத் தாரையில் செல்வதால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பயணங்கள் அதிகமாகிக் கொண்டே போகும். 30-ந் தேதி முதல் புதனும், 2-ந் தேதி வரை சூரியனும் உங்களின் அனுஜென்மத் தாரையில் செல்வதால் சளி, காய்ச்சல் தொந்தரவு வந்து நீங்கும். வியாபாரத்தில் அவசரப்படாதீர்கள். முதலீடுகள் செய்வதற்கு முன்பாக யோசிப்பது நல்லது. அனுபவமில்லாத துறையில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

 ரேவதி

னி, ராகுவைத் தவிர மற்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய முயற்சிகள் யாவும் பலிதமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பணத்தட்டுப்பாடு குறையும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் செல்வாக்கு கூடும். வீடு கட்டும் பணி விரைவடையும். உங்கள் ராசிநாதன் குரு 4-ம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களுக்கு வேலைச்சுமையைத் தந்தாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதால் உங்களுடைய நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவார். எதையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism