மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 30

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

##~##

 'காகமென்ற ரூபமாயிருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையைப் பார்க்க
வெகுதூரம் சுற்றியின்னம் விபரம் காணேன்
மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி
மூர்க்கமுடன் பரவெளியை மனவெளிதாக்க
நாகரிகமாகவுந் தானண்டமேவி
நடுவணைய முச்சிநடு மத்தி தானே!’

- காக புஜண்டர்

காகம் கயிலையில் சிவகலையாக பிறப்பெடுத்து வந்தது; பின், அது மானிடப் பிறப்பெடுத்தது; சிவ கலைக்கு அழிவில்லாத தால், அது காலத்தால் பிறவிகளைத் தொடர்ந்தது குறித்தும், காகபுஜண்டர் எனும் பெயருக்கான காரணம் குறித்தும், அந்தப் பெயர்க் காரணத்தை மறுப்பவர்களும் உண்டு என்றும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

சுகப்பிரம்ம ரிஷி எழுதிய ஞான சூத்திரத்தின் வாயிலாகவே இந்தச் சங்கதிகள் தெரிய வருகின்றன. இதிலிருந்து, காகபுஜண்டர் காலத்தால் அழிவற்றவர், காலத்தை எதிரொலிப்பவர், காலத்தால் நடக்க இருக்கும் பிற விஷயங்களை, ஊழியை முன்னதாக அறிய முடிந்தவர் என்பதெல்லாம் தெளிவாகிறது. அதை முன்னதாக உணர்த்தும் ஆற்றலும் மிக்கவர் என்பதும் புலனாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, நெடிய கால கதியை தன் வரையில் மட்டுமல்ல, பிறர் வரையிலும் இவரால் அறிந்துகொள்ள முடிந்தது. கால மாற்றமும் அழிவும் நேரும்போதெல்லாம், இவர் காக வடிவெடுத்து வெளியில் பறந்து தப்பிப்பார். பின் புதிய யுகம் தோன்றும்போது, இவரும் வந்து இணைந்துகொள்வார்.

'கயிலையில் ஓர் அன்னத்தின் வயிற்றில் பிறந்த காரணத்தாலா இந்தத் தன்மை?’ என்கிற கேள்வி எழலாம். இதற்கு வேறு வகையிலும் ஒரு விடை காணக்கிடைக்கிறது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 30

முதலில், அன்னம் வயிற்றில் பிறந்த காகமாகி, பின் மானிடப் பிறப்பெடுத்த வேளையில், இவருக்குள் சிவபக்தியே மிகுதியாக இருந்தது. கூடவே, தன்னை விஞ்சிய ஒரு சிவபக்தன் இல்லை என்கிற மமதையும் இருந்தது.

அந்தப் பிறப்பில், ஓர் அந்தணர் இவருக்குக் குருவாக அமையும் ஒரு விதிப்பாடு இருந்தது. அந்த அந்தணரிடம் பாடம் கற்றுக்கொண்ட இவர், அவரைவிட தான் மிகவும் புத்திசாலி என்பதோடு, அவரை விடவே தலைசிறந்த பக்திமான் என்று தன்னைக் கருதிக்கொண்டு, குருவைப் பெரிதாகக் கருதாமல் அலட்சியப் படுத்தத் தொடங்கிவிட்டார்.

ஒருமுறை, மகாகாலர் எனும் ஆலயத்தில் பெரும் வேள்வி நடைபெற்றது. அதில் பங்கெடுத்துக்கொண்டிருந்த நிலையில், இவரது அந்தண குரு அந்த யாகத்தில் பங்குகொள்ள வந்தபோது, இவர் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. அவரை அலட்சியப்படுத்தி நிந்திக்கவும்... அதுவரை பூஜைகளை ஏற்றுக்கொண்டு அருளாசி வழங்கியபடி இருந்த அந்த மகாகாலனாகிய ஈசனே நேரில் தோன்றி, குருவை நிந்தித்த இவரைச் சபிக்க முனைந்தான்.

எப்படித் தெரியுமா?

'இந்த உலகில் வாழும் அத்தனை உயிரினங்களாகவும் பிறக்கக் கடவது’ என்று சாபமளித்துவிட்டான். இந்தச் சாபப்படி காகபுஜண்டர் ஒவ்வொரு பிறப்பாக எடுத்துக் கொண்டே இருக்கவேண்டியதுதான். அந்தப் பிறப்புக்கு ஏற்ப வாழ்ந்து, மடியவேண்டும். ஒரு முறைதான் அந்தப் பிறப்பு. அடுத்து, இன்னொரு பிறப்பு. கிட்டத்தட்ட பதினாயிரம் பிறப்பு!

சித்தம்... சிவம்... சாகசம்! - 30

இதைக் கேட்டு காகபுஜண்டர் மிகவே வருந்தினார். தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கோரினார். ஆனால் மகாகாலரோ, 'பாவத்தில் பெரும் பாவம் குருவை அவமதிப்பது. துரோகத்தில் பெரும் துரோகம் குருவுக்குப் புரிவது. நீ இரண்டையும் செய்தவன்’ என்றிட, அந்த குருவாகிய அந்தணரே காகபுஜண்ட ருக்குப் பரிந்து பேசினார். மகாகாலரும் அவரின் பரிவை ஏற்று, காக புஜண்டருக்குத் தந்த சாபத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அதன்படி, 'எந்தப் பிறப்பிலும் உலகின் மாயையாகிய துன்பங்கள் இவரை எதுவும் செய்யாது. அதே நேரம் அந்த மாயை பற்றியும், துன்பங்கள் பற்றியும் உணர்ந்து, ஓர் உத்தம குருவின் இடத்தில் இருந்து, இவர் எவருக்கு வேண்டுமானாலும் அருளலாம்’ என்று திருத்தம் செய்து தந்தார் மகாகாலர். அதன்பின், காகபுஜண்டரின் பிறப்புகள் காலந்தோறும் தொடர்ந்தன. ஒவ்வோர் உயிரினமாகப் பிறந்ததும், அதன் தன்மையும் அனுபவமாகப் படிந்தது. இதனால், சகல உயிர்களின் வாழ்க்கைப்பாட்டை உணரமுடிந்த ஓர் ஆத்மாவாக காகபுஜண்டர் திகழ்ந்தார். இது, இந்த உலகில் காகபுஜண்டருக்கு முன்னும் பின்னும் எவருக்கும் கிடைத்திராத ஒரு வாய்ப்பாகும்.

இதனால், அண்டத்தின் அனைத்து உயிர் அனுபவங்களையும் தன் தோள்மேல் சுமந்தவரான இவருக்கு, ஒரு பிராமணப் பிறப்பும் ஏற்பட்டது. அப்பிறப்பில், லோமசர்  எனும் முனிவரின் சீடனாகும் பாக்கியமும் வாய்த்தது. இவரின் இப்பிறப்பில் அந்தத் திருமாலின் ராமாவதாரம் முற்றுப்பெற்று, ராமனின் சரிதம் சொல்லப்படுவதும் கேட்கப்படுவதும் பெரிய புண்ணியமாகும் என்னும் கருத்து இவருக்குக் கூறப்பட, 'அந்த ராமனைத் தன்னால் காணமுடியுமா?’ எனும் கேள்வி இவருக்குள் எழும்பியது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 30

குரு லோமசரிடம் இவர் தனக்கு ராம தரிசனம் சித்திக்கச் செய்யுமாறு வற்புறுத்தினார். லோமசரோ, ''அதற்கு உனக்குப் பக்குவம் வரவேண்டும். உன்னுள் பக்தி முதிர வேண்டும்!'' என்றார். உடனே, ''எப்படி பக்தி புரியவேண்டும்?'' என்று இவர் கேட்டார். ''அது சொல்லி வருவதல்ல; உணர்வால் வருவது'' என்றார் லோமசர்.

''உணர்வால் எப்படி வரும்?'' என்று கேட்டார் இவர். லோமசர் சொன்ன எதையும் புரிந்துகொள்ளாமல், சிறுபிள்ளைத்தனமாக அவரிடம் தான் பேசியதே பேச்சு என்று பேசவும், லோமசர் தன் திருஷ்டியாலே இவரின் முதல் பிறப்பு காகம் என்பதை உணர்ந்து, அந்தக் காகம் போலவே இவர் விடாது கரைவது கண்டு, ''நீ உன் பூர்வ பிறப்பை எடுப்பாயாக!'' என்று சபித்துவிட, இவர் மீண்டும் காகமானார். பின்னரே, சாப விமோசனம் கிடைத்து, காகபுஜண்டர் ஆனார் என்பார்கள்.

லோமச முனிவரின் சாபத் தால், தன் பழைய பிறப்பான காக்கைப் பிறப்பை புஜண்டர் எடுத்துவிட்ட நிலையில், லோமச முனிவரிடமே ஒரு சலன சஞ்சலம் இதனால் ஏற்பட்டது. ஒரு சீடனை நெறிப்படுத்தி வழிப்படுத்த வேண்டியவனை அவசரப்பட்டு சபித்துவிட்டோமோ என்று அவர் தனக்குள்ளேயே தடுமாற ஆரம்பித்தார். நல்ல ஒரு தவசிக்குக் கோபமே வரக்கூடாது. கோப தாபங்களை வெல்ல முடிந்தாலே, மனமானது ஒரு புள்ளியில் அடங்கி தவம் வசப்படும். தவம் வசப்பட்டாலே வரங்கள் கிட்டும்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 30

இப்படி ஒரு நிலையை ஒரு முனிவர் ஒரு நாளின் ஒரு பொழுதில் அடைந்துவிடுவதில்லை. ஆனால், கோபவயப்பட்டுச் சபிக்கும்போது, அத்தனை நாட்களாய்ச் சேர்த்த அத்தனை தவ சக்தியும் ஒரு நொடியில் அந்தக் கோபத்தால் வெளியேறி, திரும்பவும் ஆரம்ப நிலையை  சபித்தவர் அடைந்துவிடும் ஒரு ஆபத்து உண்டு. அப்படி ஒரு நிலையை ஒருவர் அடைந்து விட்டாலே மனம் சஞ்சலப்படும். அதில் குழப்பங்கள் ஏற்படும். சஞ்சலமும் குழப்பங்களும் கிரகங்களால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்களுக்கேயுரிய தன்மைகள்!

ஒரு முனிவனுக்கு அந்த நிலை ஏற்படுகிறதென்றால், அந்த முனிவன் உயர்ந்த முனி நிலையில் இருந்து இறங்கிவிட்டதாகவே பொருள்!

இதனாலேயே, கோபத்தில் சபித்துவிடும் பலர் பரிகாரம் கூறித் தங்களை நிமிர்த்திக்கொள்ளப் பார்ப்பார்கள். இதையெல்லாம் உணர்ந்தே, மகாபாரதத்தில் விதுரர் தான் வகுத்த 'விதுர நீதி’யில் கோபம்- சாபம் குறித்துத் தெளிவாகக் கூறியுள்ளார். 'கோபப்படுவதும், கோபத்துக்கு ஆளாவதும் உருவாக்கும் விஷயங்கள் என்ன தெரியுமா? கோபப்படுபவன் தன் வசம் உள்ள அருளம்சம் அவ்வளவையும் இழக்கிறான்; கோபத்துக்கு ஆளானவரோ அவ்வளவையும் அடைபவராகிறார். இந்த உண்மையை உணர்ந்தவன் எக்காரணம் கொண்டும் கோபிக்க மாட்டான். கோபித்து, தன்னை இழப்பாளியாக ஆக்கிக் கொள்ளமாட்டான். எனவே, யாரேனும் கோபித்தால் பதிலுக்கு நீங்களும் கோபித்து, அவர் தந்த அருளை இழந்துவிடாதீர்கள்!’ என்பது விதுர நீதி உணர்த்தும் ஒரு நுட்பமான உண்மையாகும். இதைத் தன் வாழ்நாளில் கடைப்பிடித்த ஒரே முனிவர் வசிஷ்டர்தான்!

வசிஷ்டரை விசுவாமித்திரர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக, வசிஷ்டரின் புதல்வனான சக்தியும் தந்தையை விஞ்சுமளவு தவமும், அதன் பயனும் உடையவன். அவனையே விசுவாமித்திரர் கல்மாஷபாதன் என்னும் சாபம் பெற்ற ராட்சசன் மூலம் கொல்கிறார்.

சக்தி உள்பட, வசிஷ்டருக்கு நூறு பிள்ளைகள். அவ்வளவு பேரையும் கல்மாஷபாதன் தானே உண்டு ஜீரணிக்கிறான். இதனால், தனது வாரிசுகள் அவ்வளவு பேரையும் வசிஷ்டர் இழக்கிறார். ஒரு கட்டத்தில் புத்திர சோகம் தாளாமல் தற்கொலைக்குக்கூட துணிகிறார். ஆனால், மறந்தும் கோபாவேசம் கொண்டு, தனது துக்கத்துக்குக் காரணமான விசுவா மித்திரரைச் சபிக்கவோ, அவர் மீது கோபப்படவோ செய்யவில்லை. இதனாலேயே வசிஷ்டரால் பிரம்ம ரிஷியாக இறுதிவரை வாழ முடிந்தது.

இதெல்லாம் லோமசருக்கும் நினைவுக்கு வருகிறது. உடனேயே பரிகாரம் காண விழைந்து, காகமாகிவிட்ட புஜண்டர் முன் தோன்றி, ''புஜண்டா! கோபத்தால் அவசரப்பட்டு உன்னைச் சபித்து விட்டேன். அதிலும், ஒரு காகமாக! காகம், அச்சம் மிகுந்த பிறவி. தன் இனத்துடன் கூடி ஒற்றுமையாக உண்ணத் தெரிந்த இதற்கு எச்சில் பேதம் இல்லை என்பது ஒரு குறை. அழகில்லாத ரூபமும், குரலும்கூட குறையே! இந்தக் குறைகள் உன் வரையில் நீங்கிட, நீ நினைத்த வடிவம் கொள்ளும் சக்தியை நான் உனக்கு வரமாகத் தருகிறேன். அது மட்டுமல்ல... அழிவே இல்லாதபடி யுகயுகமாக வாழ்ந்திடும் ஆயுளையும் தருகிறேன். யுகங்கள் அழிந்து புதிய யுகம் தோன்றிடும்போது, அதைக் காண முடிந்த கால தூதனாக நீ திகழ்வாய். மாறாதது மாற்றங்கள் மட்டுமே! அந்த மாற்றங்கள் எப்படிப்பட்டவை என்பதைக் காணவும் உணரவும் முடிந்த ஒரு பறவையாகவும் மானிடனாகவும் நீ திகழ்வாய். உன்னால் இந்த உலகம் அறியப்போவது, காலம் என்ற ஒன்றின் தன்மையாகும்.

இதற்கு, உனக்குக் கலங்காத தெளிந்த சித்தம் வாய்க்க வேண்டும். அதன் பொருட்டு நான் உனக்கு ராமநாமத்தை உபதேசிக்கிறேன். இந்த நாமமானது ஈசனின் ஜீவசக்தியும், திருமாலின் பிராண சக்தியும் கொண்டதாகும். பஞ்சாட்சர நமசிவாயத்தில் 'ம’ எனும் பதத்தில்தான் ஜீவசக்தி மையம் கொண்டு, பொதிந்து கிடக்கிறது.

அஷ்டாட்சர மந்திரமான நாராயணாவில் 'ரா’வில்தான் அதன் பிராணசக்தி மண்டிக் கிடக்கிறது. இரண்டும் இணைந்த மகா மந்திரச் சொல்லே 'ராமா’ எனும் நாமமாகும். இதை ஜெபிக்க, சித்தத்தில் ஜீவ பிராணசக்தியின் ஒளி ஏற்பட்டு, அதனால் அளப்பரிய சக்தியினை அடையவும் முடியும்.

'ராமா’ எனும்போது உயிர்ப்பும், அதையே திருப்பி 'மரா’ எனும்போது மரிப்பும் ஏற்படும். தொடர்ந்து இதைச் சொல்லும்போது நல்லன உயிர்க்கப் பெறும்; அல்லதெல்லாம் மரிக்கப் பெறும்!

உன்னிடமும் அது நிகழட்டும். காலத்தின் தூதனாய், சித்தர்களின் தலைமகனாய், இனி வருவோர்க்கெல்லாம் அவர்களின் முக்காலத்தை உரைப்பவனாய் நீ இருப்பாய். அதற்கான அத்தனை ஆற்றலையும் என் தபோசக்தியால் உளப்பூர்வமாக உனக்கு அளிக்கிறேன். காலம் உள்ள அளவும் நீ வாழ விரும்பினால் வாழ்வாயாக..!'' என்று லோமசர் கூறவும், காகபுஜண்டர் மிகவும் மகிழ்ந்தார். பின்பு, முதல் காரியமாக ராம நாமத்தை ஜெபித்து சித்த ஒளி பெறத் தயாராகிவிட்டார். நெடுங்காலம் தவமிருந்து, ஆயிரம் கோடிமுறை ராமநாமத்தை ஜெபித்து, பெரும் அறிவுத் தெளிவை அடைந்தார். பிரபஞ்சம் பற்றிய ஞானம் முதல், சகலமும் இதனால் இவருக்கு வசப்பட்டது.

காலமும் உருண்டதில், பலப்பல யுகங்கள் தோன்றி மறைந்தன. இதில், சிவ- விஷ்ணு- பிரம்மாக்களாய் பலர் தோன்றி மறைந்ததாக காகபுஜண்டர் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது, அவர்களின் அம்சங்களையே இவர் அவ்வாறு குறிப்பிடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பூவுலகில் சித்தர்களின் புகலிடமாகவும், அவர்கள் விரும்பும் ஒரு தலமாகவும் திகழுமிடம் சதுரகிரி மலைத்தலமாகும். சதுரகிரி என்பதை சதுர வடிவமானது என்று தவறாகப் பொருள் கொண்டுவிடக் கூடாது. சதுர் என்றால் நான்கு என்று பொருள். நான்கு கிரி, அதாவது நான்கு மலைகளை நாற்புறமும் உடையது என்பது பொருள். இந்த நான்கு மலைகளை, நான்கு வேதங்களோடு பொருத்திச் சொல்வார்கள்.

சிலிர்ப்போம்...