Published:Updated:

சக்தி சங்கமம்...

''இயல்பாக இருங்கள்... சந்தோஷமாக இருங்கள்!''

சக்தி சங்கமம்...

''இயல்பாக இருங்கள்... சந்தோஷமாக இருங்கள்!''

Published:Updated:
##~##

ஓவியர் கோபுலுவுடனான சந்திப்பு உரையாடல் விறுவிறுப்பாகத் தொடர்கிறது...

''கடவுள் உருவங்களை வரைவதற்கு சிறப்புப் பயிற்சி ஏதேனும் தேவையா? ஓவியம் வரையத் தெரிந்த எல்லோருமே வரையலாமா?'' என்ற வாசகர் மாங்குடியின் கேள்விக்கு...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சிறப்புப் பயிற்சி தேவைதான். அதுதான் பக்தி!'' என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார் ஓவியர் கோபுலு.

''பொதுவாக, எந்தப் படம் வரைவதானாலும், ஒருமுகமாய் மனத்தைக் கட்டுப்படுத்திப் பயிற்சியில் ஈடுபடவேண்டும். பக்தியில் மனத்தை ஒருமுகப்படுத்த வழிபாடு கைகொடுக்கும். இப்படியான பக்தியும் ஒருமித்த மனநிலையுமே கடவுளர் திருவுருவங்களை வரையும்போது தேவை!'' என்கிறார் கோபுலு.

''சார்! கவிஞர் வாலி எழுதிய ராமானுஜ காவியத்துக்கு மிக முதிர்ந்த வயதில் ஆனந்தவிகடனில் அற்புதமாக ஓவியங்கள் வரைந்தீர்கள். இத்தனை வயதில் உங்களுக்குத் தெரிந்து வேறு எந்த ஓவியராவது வரைந்திருக்கிறார்களா?'' என்றார் பாலசந்தர்.

''நான் வரைந்தது இருக்கட்டும். வேறு எவரும் கவிஞர் வாலி போல் அத்தனை வயதில் எழுதியதாகவும் தெரியவில்லையே?'' என்று சிரிக்கிறார் கோபுலு. தொடர்ந்து, ''என் வயதை ஒத்த நிறையப் பேர் படங்கள் வரைந்திருக்கலாம். ஆனால், இப்படி ஒரு தொடருக்கு வாராவாரம் வரைந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ராமானுஜ காவியத்துக்கு விகடனிலிருந்து என்னிடம் படம் வரையக் கேட்டபோது ரொம்பவும் மகிழ்ந்தேன். அது ஒரு பாக்கியம்! ஆனால், எதிர்பாராத விதமாக என் உடல்நிலை பாதிப்படைந்ததால், என்னால் தொடர்ந்து அந்தக் காவியத்துக்குப் படம் வரைய இயலவில்லை. 'உன் ஸ்ட்ரோக்ஸ் (ஓவியக் கோடுகள்) பிரமாதமா இருக்குன்னு மத்தவங்க பாராட்டுறதா பெருமைப்பட்டுக்கறியே... நான் உனக்குப் போடறேன் ஸ்ட்ரோக். இது எப்படி இருக்கு?’னு கடவுள் நினைச்சிருப்பார்போல! (சிரிக்கிறார்) என்னைத் தொடர்ந்து அந்தக் காவியத்துக்கு ஓவியர் மாருதி சிறப்பாகப் படங்கள் வரைந்தார்.''

சக்தி சங்கமம்...

''தெய்விக ஓவியர் சில்பியின் ஓவியங்கள் குறித்து...'' - வாசகர் முருகேசன் கேட்டு முடிப்பதற்குள், பதில் வருகிறது கோபுலுவிடம் இருந்து...

''இறையருள் ஓவியரும், தெய்வ அருள் பெற்றவருமான சில்பியும் நானும் ஆருயிர் நண்பர்கள். இன்றைக்குத் தமிழ்நாடும், ஏன் ஒட்டுமொத்த ஓவிய உலகமே போற்றும் சில்பியின் சிறப்பை விவரிக்கப் பல புத்தகங்கள் எழுதினாலும் போதாது. ஓர் உதாரணம் சொல்றேன். சுவாமி விக்கிரகம், அதில் அணியப்பட்டிருக்கும் நகைகள்னு வரையணும் என்றால், பொதுவாக ஓவியர்கள் என்ன பண்ணுவார்கள். அந்த விக்கிரகத்தை ஸ்கெட்ச் செய்துகொண்டு, அதன் மீது தோராயமாக அந்த நகைகளின் டிசைனை வரைவார்கள் இல்லையா... ஆனால், சில்பி அவ்விதம் செய்ய மாட்டார். ஒரு குறிப்பிட்ட விக்கிரகத்தின் கழுத்தில் உள்ள ஹாரத்தில் 300 கற்கள் இருக்கிறது என்றால், சரியாக இவரும் 300 கற்கள் வரைவார். இப்படி அவர் வரையும் ஆபரணங்கள் ஒவ்வொண்ணுமே மிகத் துல்லியமாக இருக்கும். இதற்காக, காஞ்சி மகா பெரியவாளின் சிபாரிசுக் கடிதத்தோடு அந்தக் கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று, ராத்திரி அந்தக் கோயிலில் தங்குவார். ஸ்வாமி அலங்காரங்களை அகற்றி, அந்த ஆபரணங்களை சில்பி முன் வெச்சுடுவாங்க. அவர் அவற்றைப் பார்த்துத் துல்லியமாக வரைவார். அந்த அளவுக்கு சிரத்தையெடுத்து ஒவ்வொரு படத்தையும் வரைஞ்சார். படத்தில் ஒவ்வொரு கோடு இழுக்கும்போதும் மனசுக்குள்ள ஸ்வாமி பேரை உச்சரிச்சுக்கிட்டேதான் வரைவார் அவர்.''

ஓவியர் சில்பி பற்றி கோபுலு சொன்னதைக் கேட்டுச் சிலிர்த்துப் போனார்கள் வாசகர்கள். சில விநாடிகளுக்கு அங்கே அமைதி!

சக்தி சங்கமம்...

''அந்தக் காலத்தில் விகடன் தீபாவளி மலருக்காக தெய்விக ஓவியங்கள் வரைந்திருப்பீர் கள். அப்போது உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத சம்பவம் ஏதேனும் உண்டா? - ஜனனியின் இந்தக் கேள்விக்கு சற்று விரிவாகவே பதில் சொன்னார் கோபுலு.

''ஆனந்தவிகடனில் என் குருநாதர் மாலி. என்னை லெட்டர் போட்டு வரவழைத்து, விகடனில் வேலைக்குச் சேர்த்தவர் அவர்தான். 1942-ம் வருடம், என்னையும் சில்பியையும் அந்த வருடத்துக்கான விகடன் தீபாவளி மலருக்குப் படங்கள் போடும்படி சொன்னார். அந்த ஆண்டு தீபாவளி மலரில் தியாகப்பிரம்மம், ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள், கோவிந்தபுரம் போதேந்தர ஸ்வாமிகள் என்று சமகாலத்து மகான்களைப் பற்றிய தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டோம்.

அதற்காக, நாங்கள் வித்வான் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயரையும் அழைத்துக்கொண்டு திருவையாறு சென்றோம். அங்கே, தியாகப்பிரம்மம் வசித்த வீட்டுக்கும், அவரது சமாதிக்கும் சென்றோம். வீட்டில் தியாகப்பிரம்மம் பூஜித்த ஸ்ரீராம பட்டாபிஷேக படம் இருந்தது. அதை அப்படியே பார்த்து வரையும்படி என்னைப் பணித்திருந்தார் என் குருநாதர்.

சக்தி சங்கமம்...

நான்கு நாட்கள் அங்கேயே தங்கி படம் வரைந்தோம். தியாகப்பிரம்மம் வசித்த அந்த வீட்டின் திண்ணையில்தான் எங்களுக்கு ஊண், உறக்கம் எல்லாம்! சில்பிக்கும்கூட அதே திண்ணையில்தான் படுக்கை. நாங்கள் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தோம். நடு இரவில் தியாகப்பிரம்மம் பாடுவது போன்று கனவு. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தால், ஆர்மோனியம் இசைப்பது மாதிரி ஒரு ரீங்காரம். சங்கீதக் கச்சேரி கேட்பதுபோன்று ஓர் உணர்வு! எங்கிருந்து இந்த ஒலி வருகிறது என்று தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை, தியாகப்பிரம்மத்தின் சிஷ்யர் யாராவது பாடுகிறாரோ என்றும் தோன்றியது.

அரைத் தூக்கத்துடன், சில்பியைத் தட்டி எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். நான் அனுபவித்த சங்கீதத்தைக் கேட்கச் சொன்னேன். அவரோ கொஞ்சம் உற்றுக் கேட்டுவிட்டு, 'ஏய்... தூங்கறியா? கனவுடா! எழுந்திருடா!’ என்று என்னை நன்கு உசுப்பி எழுப்பினார். நன்கு விழித்தபின்புதான் தெரிந்தது... பாடுவது மனிதக் குரலோ, ஆர்மோனியமோ இல்லை. புகழ்பெற்ற திருவையாறு கொசுக்கள் இசைக்கும் சங்கீதம்! சில்பி, இந்தச் சம்பவத்தை அடிக்கடி நினைவூட்டிச் சிரிப்பார்.''

''பாவ- புண்ணியங்களில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'' என்று கேட்டார் பாலசந்தர்.

''உண்டு! உண்டு! உண்டு!'' - அழுத்தம்திருத்தமாக பதில் வருகிறது கோபுலுவிடம் இருந்து.

''மனிதன் ஒழுக்கமாக வாழ இறை நம்பிக்கை அவசியமா, சார்?'' - இது வாசகர் மாங்குடியின் கேள்வி.

சக்தி சங்கமம்...

''அவசியம். அதி அவசியம்! அதில் சந்தேகம் வேண்டாம்!'' என்ற கோபுலு, ''ஆனால், இறை நம்பிக்கை என்றால் என்ன என்பது பற்றிய ஞானம் வேண்டும். வெறுமே கோயிலுக்குப் போவதும்,

உதட்டளவில் பக்திப் பாடல்கள், ஸ்லோகங்கள் உச்சரிப்பதும், மதச் சின்னங்கள் தரிப்பதும் இறை நம்பிக்கை ஆகாது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். நமக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும்; சிரத்தையாகச் செய்யவேண்டும். அதுதான் முக்கியம். இறை நம்பிக்கை என்பதும் அப்படித்தான்! உண்மையிலேயே ஒழுக்கமாகவும் மனித நேயத்துடனும் வாழ்பவர்களிடம் அப்படியான ஆத்மார்த்தமான இறை நம்பிக்கை இருக்கிறது என்றே அர்த்தம்!'' என்றார்.

''சார்... எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உங்களோட அறிவுரை என்ன?'' - இதுவும் மாங்குடியின் கேள்விதான்.

அதைக் கேட்டு மெள்ளப் புன்னகைத்த கோபுலு, ''இயல்பாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள்! அதற்கு முன், உண்மையான சந்தோஷம் எதில் என்பதை ஆழ்ந்து உணர்ந்துகொள்ளுங்கள்!'' என்றார்.

அது எல்லோருக்குமான அறிவுரையாகவே இருந்தது!

(சங்கமிப்போம்)

படங்கள்: ரா.மூகாம்பிகை

அடுத்த இதழில்...

எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் சக்தி விகடன் வாசகர்கள் கலந்துரையாடுகிறார்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism