Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 44

'ஆனந்த சாகர ஸ்தவம்’பி.என்.பரசுராமன்

ஞானப் பொக்கிஷம்: 44

'ஆனந்த சாகர ஸ்தவம்’பி.என்.பரசுராமன்

Published:Updated:
##~##

தினேழாம் நூற்றாண்டு வரலாறு இது. மதுரையில், இப்போதும் நாம் காணும் 'புது மண்டபம்’ என்பது, 1626 முதல் 1633 வரை ஏழு வருடங்களில் உருவானது. சில்ப சாஸ்திர நிபுணரான சுமந்திர மூர்த்தி ஆச்சாரி என்பவரின் தலைமையில் ஏராளமான சிற்பிகள் அந்தப் புது மண்டபத்தை உருவாக்கினார்கள்.

அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அந்த மண்டபம் உருவானபோது, மதுரையில் திருமலை நாயக்கர் அரசராக இருந்தார். அவரிடம் ஸ்ரீநீலகண்ட தீட்சிதர் என்பவர் மந்திரியாக இருந்தார். இவருடைய பெரிய பாட்டனார்(தாத்தா)தான், ஈஸ்வர அவதாரமாகவே மதிக்கப்பட்ட ஸ்ரீஅப்பய்ய தீட்சிதர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் மகாஞானி; அம்பிகை மீனாட்சியின் அருளைப் பரிபூர்ணமாகப் பெற்றவர். அப்படிப்பட்ட ஸ்ரீதீட்சிதர் (இனிமேல் அவரை 'ஸ்ரீதீட்சிதர்’ என்றே பார்க்கலாம்) அவ்வப்போது போய் புது மண்டப வேலைகளை மேற்பார்வையிடுவார்.

ஒருநாள், நடுவரிசைத் தூண்களின் அருகில், சிற்பி ஒருவர் மிகுந்த துயரத்தோடு இருந்தார். அவர், ஸ்ரீதீட்சிதரைப் பார்த்ததும் ஓடி வந்து வணங்கி, ''ஸ்வாமி! இந்தத் தூண்களில் எல்லாம் மதுரை நாயக்க மன்னர்களின் வடிவங்களைச் செதுக்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால்...'' என்று விசும்பத் தொடங்கிவிட்டார்.

ஞானப் பொக்கிஷம்: 44

அதைக் கண்ட ஸ்ரீதீட்சிதர், ''அழாதே! அழாதே! என்ன நடந்தது? சொல்!'' என்றார்.

சிற்பி தொடர்ந்தார்... ''ஸ்வாமி! என்னதான் நான் பொறுப்போடு ஜாக்கிரதையாகச் செதுக்கியபோதும், நமது மன்னரின் மூத்த பட்டத்து அரசியின் சிலையில், இடது தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விழுந்துவிட்டது. வேறு சிலை செய்யலாம் என்று முயற்சித்தபோது, நீங்கள் வந்துவிட்டீர்கள்!'' என்றார். அதைக் கேட்ட ஸ்ரீதீட்சிதர் சற்று நேரம் யோசித்துப் பார்த்தார். அவர் முகம் மலர்ந்தது.

உடனே அவர் சிற்பியைப் பார்த்து, ''அப்பா! இனிமேல் நீ எவ்வளவு சிலைகள் செய்தாலும், இப்படித்தான் ஆகும். தூய்மையான உன் பக்திக்காகத்தான், இறைவன் இப்படிச் செய்திருக்கிறான். ஸாமுத்ரிகா லட்சணப்படி, உத்தம ஸ்திரீயான அந்த ராணிக்கு இடது தொடையில், இதே இடத்தில் பெரியதொரு மச்சம் இருக்கவேண்டும். அதனால்தான், நீ செதுக்கிய சிற்பத்தில் அப்படி ஆகிவிட்டது. அதை அப்படியே விட்டுவிடு! வேறு சிலை செய்ய வேண்டாம்'' என்றார்.

பின்னர், திருமலை நாயக்கர் அந்தச் சிலையைப் பார்வையிட்டபோது, சிலையின் பின்னமான பகுதி அவர் கண்களில் பட, அது குறித்து சிற்பியை விசாரித்தார் மன்னர். ''அரசிக்கு அந்த இடத்தில் மச்சம் இருக்கிறது; அதனால்தான் பின்னம் ஏற்பட்டது என்று ஸ்ரீதீட்சிதர் சொன்னார். அதை அப்படியே வைக்கும்படியும் அவர்தான் சொன்னார்'' என்றார் சிற்பி.

ஞானப் பொக்கிஷம்: 44

மன்னரின் மீசை துடித்தது; கண்கள் சிவந்தன. இரவு முழுவதும் அவருக்குத் தூக்கமில்லை. ஸ்ரீதீட்சிதரைத் தவறாக நினைத்துவிட்டார். விளைவு? ஸ்ரீதீட்சிதரின் பார்வையைப் பறித்துவிடத் தீர்மானித்தார். விடிந்ததும், அரண்மனை அதிகாரியை அழைத்து, ஸ்ரீதீட்சிதரை உடனே அழைத்து வர உத்தரவிட்டார்.

அதிகாரி போன நேரம்... ஸ்ரீதீட்சிதர் தன் வீட்டில், அம்பாள் பூஜையை முடித்துவிட்டுத் தீபாராதனை காட்டிக்கொண்டு இருந்தார். ஞான திருஷ்டி பெற்ற ஸ்ரீதீட்சிதருக்கு, மன்னரின் விபரீத எண்ணம் புரிந்தது. உடனே அவர், அம்பிகையிடம் தன் துயரத்தை வெளியிட்டு, தீபாராதனை காட்டி, எரியும் கற்பூரத்தைத் தன் இரு கண்களிலும் அப்படியே வைத்துக் கொண்டார். பார்வை பறிபோனது.

ஸ்ரீதீட்சிதர், ''மன்னர் எனக்குத் தருவதாக எண்ணியிருக்கும் தண்டனையை, நானே விதித்துக்கொண்டதாக அரசரிடம் போய்ச் சொல்லிவிடு!'' என்று அரண்மனை அதிகாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

பார்வை பறிபோன நிலையில், அம்பிகையைப் பாதாதிகேசமாக ஸ்ரீதீட்சிதர் துதித்தார். அதன் பலனாக அம்பிகை பிரத்யட் சமாகிப் பார்வையைக் கொடுத்தாள். அப்போது ஸ்ரீதீட்சிதர் பாடிய பாடல்கள் 'ஆனந்த சாகர ஸ்தவம்’ என அழைக்கப்படுகின்றன. 17-ஆம் நூற்றாண்டில் உருவான இந்த துதி நூலுக்கு, 70 ஆண்டுகளுக்கு முன்பு உரை வெளியானது. அதற்கு, காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் விரிவானதொரு ஸ்ரீமுகம் அருளியிருக்கிறார்.

'ஆனந்தக் கடல்’ எனும் அந்தத் துதி நூலி லிருந்து ஒரு சில அலைகளைப் (பாடல்களை) பார்க்கலாம்.

ஆக்ரந்திதம் ருதிதமாஹத மாநநே வா
கஸ்யார்த்ரமஸ்து ஹ்ருதயம் கிமத: பலம் வா
யஸ்யா மநோ த்ரவதி யா ஜகதாம் ஸ்வதந்த்ரா
தஸ்யாஸ் தவாம்ப புரத: கதயாமி கேதம்
  (பாடல் 3)

இந்தப் பாடலில் ஸ்ரீதீட்சிதர், அம்பிகையிடம் தன் மனக் குறையைத் தெளிவாகத் தெரிவிக்கிறார்.  

''தாயே! அம்பிகே! நான் கதறினேன்; அழுதேன்; முகத்திலும் அடித்துக்கொண்டேன். என்றாலும், எவனுடைய மனம் தயையால் இளகும்? இளகினாலும், அப்படி என்ன பலன் கிடைக்கப்போகிறது? அன்னையே! எவளுடைய மனம் உருகுமோ, எவள் ஜீவராசிகள் விஷயத்தில் எதையும் இஷ்டப்படி நடத்தக்கூடியவளோ, அப்படிப்பட்ட உன்னிடம் என் துயரத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!'' என்கிறார்.

துயரக் கடலிலேயே மூழ்கியிருக்கும் சக மனிதர்களால் நம்மைக் காப்பாற்ற முடியாது. அம்பிகைதான் காப்பாற்ற வேண்டும்.

ஞானப் பொக்கிஷம்: 44

எனவே, ஒரு தாயின் புடைவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு அழும் குழந்தையைப்போல, ஸ்ரீதீட்சிதர் அம்பிகையின் அருள் வேண்டி அழுகிறார்.

பாவங்கள் நீங்கி, தெய்வத்தின் அருளை அடையப் பலவிதமான வழிகளை நம் சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. அவற்றையெல்லாம் கற்று, அர்த்தம் புரிந்துகொண்டு, பிற்பாடு அவற்றில் எதை நாம் செய்யலாம் என்று தீர்மானிப்பதற்குள், என்னென்ன பாவங்கள் என்னென்ன பாதிப்புகளை உருவாக்கக் காத்திருக்கின்றனவோ? யாருக்குத் தெரியும்?

அதனால், ஸ்ரீ தீட்சிதர் கேட்கிறார்... ''தாயே! வழிகாட்டும் ஞான நூல்களை யெல்லாம் உணர்ந்து செயல்பட்டால்தான் உன் அருள் கிடைக்கும் என்பது எப்படித் தெரியுமா இருக்கிறது? மிகவும் பசியாக இருப்பவனுக்கு, 'நீ போய் கங்கைக் கரையில் இருக்கும் மணல் துகள்களையெல்லாம் கணக்கிட்டு எண்ணிக் கொண்டு வா! அதன்பிறகு, உனக்குச் சாப்பாடு போடுகிறேன் என்பதைப்போல இருக்கிறது. நடக்கிற காரியமா அது? இப்போதே அருள் செய்!'' என வேண்டுகிறார் ஸ்ரீ தீட்சிதர்.

இந்தக் கருத்தைச் சொல்லும் பாடல்,

பும்ஸ: க்ஷணர்தமபி ஸம்ஸரணாக்ஷமஸ்ய
ஸாங்க்யாதய: ஸரணயோந விசந்தி கர்ணம்
ஸங்க்யாய காங்கஸிகதா: ஸகலாஸ்ச ஸுக்ஷ்மா
புங்க்ஷ்வேதி வாகிவ மஹாக்ஷ§ தயார்தி தஸ்ய

                        (பாடல் எண் 21)

இதேபோல 108 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்குப் பதம் பதமாக அர்த்தம், கருத்து, ஆங்கில உரை என அற்புதமாக 'காம கோடி கோசஸ்தானம்’ பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டுள்ளது. ஒரு தடவை படித்தாலும் போதும்... அம்பிகை தானே வந்து உங்கள் உள்ளத்தில் அமர்ந்துகொள்வாள்!

- இன்னும் அள்ளுவோம்...