மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

'அல்லிக்கேணி குளத்தருகில்...’ தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

'அர்ஜுனன்! அவனுக்கு மட்டும் அப்படியென்ன சிறப்பு? ஆசாரியர் துரோணருக்கு, அவனிடம் மட்டும் அதீத அன்பு, கரிசனம்! விளைவு... எந்தவொரு வித்தையானாலும் அவனே முதலிடம் பிடிக்கிறான். மற்றவர்களை ஆசாரியர் புறக்கணிக்கிறார் என்றே தோன்றுகிறது. இதை, தாத்தாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்’ பொறாமையில் பொருமிய துரியோதனன், விஷயத்தை பீஷ்மரிடம் கொண்டு சென்றான்.

அவர், துரோணரை நன்கு அறிவார். துரியோதனன் சிறுவன்.  அறியாமையால் புகார் தெரிவிக்கிறான். அர்ஜுனனின் சிறப்புக்கு அவனே காரணம் என்பதை இவனுக்குப் புரியவைக்க வேண்டும். துரோணர் பக்குவமாகப் புரியவைப்பார். அதற்காகவாவது அவரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

தமது குடிலுக்கு வருகை தந்த பீஷ்மரை வரவேற்று உபசரித்தார் துரோணர். வருகைக்கான காரணத்தையும் விசாரித்தார். 'இதற்காகத்தான் வந்தேன்’ என்று விஷயத்தை சட்டென்று உடைக்க முடியுமா என்ன? எனவே, ''மரியாதை நிமித்தம் தங்களைச் சந்திக்க வந்தேன்'' என்று மழுப்பலாக பதில் தந்தார் பீஷ்மர். ஆனால், துரியோதனனின் முகக் குறிப்பையும் பீஷ்மரின் தவிப்பையும் அறிந்து, அவர் எதற்காக வந்திருக்கிறார் என்பதை ஒருவாறு உணர்ந்துகொண்ட துரோணர், ''ஆற்றுக்கு நீராடச் செல்கிறேன். நீங்களும் வாருங்கள்’ பேசிக்கொண்டே போக லாம்'' என்றார். அனைவரும் புறப்பட்டார்கள்.

தசாவதார திருத்தலங்கள்!

பாதி வழியில், ''அர்ஜுனா! எண்ணெய்க் கிண்ணத்தை கொண்டு வர மறந்துபோனேன். நீ சென்று எடுத்து வா'' என்று ஆணையிட்டார் துரோணர். அர்ஜுனனும் கிளம்பினான். அடுத்து சிறிது தூரத்தில் பெரியதொரு விருட்சம் வந்தது. அதன் நிழலில் நின்ற துரோணர், தரையில் ஒரு மந்திரத்தை எழுதி னார். துரியோதனனை அழைத்தார். ''இந்த மந்திரத்தைப் படித்து மனத்தில் தியானித்தபடி அஸ்திரத்தை மரத்தில் ஏவு'' என்றார்.

அதன்படியே செய்தான் துரியோதனன். அவனது அஸ்திரம் விருட்சத்தின் அனைத்து இலைகளிலும் துளையிட்டுத் திரும்பியது. அதைக் கண்டு துரியோதனனுக்கு மிக்க சந்தோஷம். 'தாத்தா வந்ததால் எனது எண்ணம் நிறைவேறியது. இனி, எனக்குத்தான் சிறப்பிடம்’ என்று மனத்துக்குள் குதூகலப்பட்டான்!

அங்கிருந்து அவர்கள் நகர்ந்தனர். ஆற்றை அடைந்தபோது அர்ஜுனனும் எண்ணெய்க் கிண்ணத்துடன் வந்து சேர்ந்தான். திரும்பும் வழியில் அதே விருட்சத்தின் நிழலில் தங்கினர். யதேச்சையாக இலைகளைக் கவனித்த வர்களுக்கு அதிர்ச்சி. ஆம்! விருட்சத்தின் ஒவ்வோர் இலையிலும் இரண்டு துளைகள்!

தசாவதார திருத்தலங்கள்!

''துரியோதனா! நீ இரண்டு முறை அஸ்திரம் ஏவினாயா?'' என்று கேட்டார் துரோணர். ''இல்லை'' என்று பதிலளித்தான் அவன். ''அப்படியென்றால், வேறு யாருடைய வேலை இது?'' என்று கர்ஜித்தார். அர்ஜுனன் முன் வந்தான். அவரைப் பணிந்து வணங்கியவன், ''குருதேவா! எண்ணெய்க் கிண்ணத்துடன் நான் வந்தபோது, இந்த விருட்சத்தின் கீழே நீங்கள் அனைவரும் சற்று தங்கிச் சென்றதற்கான தடயங்களைக் கவனித்தேன். தரையில் எழுதப்பட்டிருந்த மந்திரத்தையும் பார்த்தேன். ஆக, இந்த இடத்தில் ஏதோ பாடம் நடத்தப்பட்டிருக்கிறது என்று கணித்தேன். மந்திரத்தை மனத்தில் ஏற்றி, அஸ்திரம் ஏவினேன். எனது கணிப்பு பலித்தது. இலைகளில் இரண்டாவது துளைக்குக் காரணம் எனது அஸ்திரமே'' என்றான்.

அதுதான் அர்ஜுனன்! வித்தைகளில் அவனது ஆர்வமும், ஈர்ப்பும் அலாதியானது. குருநாதரின் உள்ளக் குறிப்பை தன் மனத்தில் ஏற்று, செயலாக வெளிப்படுத்துவான். அவனது குறிக்கோளும் இலக்கும் மிகத் துல்லியமானவை.

ஆனால், அதே அர்ஜுனனின் நிலைமை குருக்ஷேத்திரப் போரின் துவக்கத்தில் எப்படி இருந்தது தெரியுமா?

எதிர் சேனையில் தாத்தா, குருநாதர் மற்று முள்ள உறவுகளைக் கண்டதும் நிலை குலைந்து போனான். யுத்தமா? சொந்த பந்தங்களா..? தனது இலக்கு எதுவெனத் தெரியாமல் குழம்பித் தவித்தான்.

தசாவதார திருத்தலங்கள்!

எல்லாம் இறைவன் செயல்! பார்த்தனை கருவியாகக் கொண்டு, பாருக்கு உபதேசிக்க திருவுளம் கொண்டான் பகவான். ஸ்ரீமத்பகவத் கீதை உதயமானது.

குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அனார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்த்திகரமர்ஜுன...

''அர்ஜுனா! வீரனுக்கு அடாததும், சுவர்க்கத் தைத் தடுப்பதும், புகழைப் போக்குவதுமான இந்த உள்ளச் சோர்வு, இந்த நெருக்கடியில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது?'' எனும் கேள்வியுடன் துவங்கி, பல்வேறு யோகங் களை விவரித்து... ஒட்டுமொத்த சாராம்சமாக ''கடமையைச் செய். பலனைக் குறித்துக் கவலைப்படாதே. விளைவுகளை என்னி டத்தில் ஒப்படைத்துவிடு!'' என்று உணர்த்தி, பகவான் நிகழ்த்திய உபதேசம், அர்ஜுனனுக்கு மட்டுமல்ல நமக்காகவும்தான்.

அந்த உபதேசங்கள் ஒவ்வொன்றையும் படிக்கும்போது, கீதாசாரியனை, பார்த்தனுக்காக தேரோட்டிய ஸ்ரீபார்த்தசாரதியை நேரில் தரிசிக்கும் ஆசை உண்டாகும்தான் இல்லையா? வாருங்கள், அல்லிக்கேணிக்குச் செல்லலாம்...

ஆதியை அமுதை என்னை ஆளுடை
அப்பனை ஒப்புவர் இல்லா
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத்
திருவல்லிக்கேணி கண்டேனே...

- என்று திருமங்கையாழ்வார் பாடிப் பரவிய தலம். தன்னுடன் ஊடல் கொண்டு பாற்கடலைப் பிரிந்து, பூமியில்- பிருந்தாரண் யத்தில் குழந்தையாய் அவதரித்து, வேத வல்லியாக வளர்ந்த திருமகளை மணம் புரிந்து, பிருகு முனிவரின் வேண்டுதலின்படி, பரம்பொருள் கோயில் கொண்ட க்ஷேத்திரம்.

தசாவதார திருத்தலங்கள்!

''கலியுகம் கொடுமைகளிலிருந்து மீள... தென்னகத்தில் பிருந்தாரண்யம் எனும் வனம் உள்ளது. அங்கே கைரவினி எனும் குளத்தருகில் சுமதி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பிருகு முதலான முனிவர்களும் வசிக்கிறார்கள். அங்கு சென்று பகவானை ஆராதித்து வந்தால், சகல மங்கலங்களும் உண்டாகும்'' என்று ஆத்ரேய மகரிஷிக்கு வியாசரால் சுட்டிக்காட்டப்பட்ட புண்ணிய பூமி- திருவல்லிக்கேணி! பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய மூவரும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள்.

இங்கே... ருக்மிணி, பிரத்யும்னன், அநிருத்தன், பலராமன் மற்றும் சாத்யகி ஆகியோருடன் ஸ்ரீவேங்கட கிருஷ்ணனாக அருள்கிறார் மூலவர். உற்ஸவர்-  ஸ்ரீபார்த்தஸாரதி.முகத்தில் அம்புகளால் விளைந்த வடுக்களுடன் காட்சி தருகிறார். சுமதி என்ற அடியாருக்கு அருளும் பொருட்டு திருவேங்கடவன்  ஸ்ரீபார்த்தசாரதி கோலத்தில் காட்சி தந்ததாக தலபுராணம் விவரிக்கிறது.

ஸ்வாமி உடலில் விழுப்புண்களுடன் திகழ்வதால், திருக்கோயில் நைவேத்திய தளிகைகளில் மிளகாய் சேர்ப்பதில்லை. புளியோதரை தவிர மற்ற தளிகைகளில் நெய்யே சேர்க்கப்படுகிறது.

சித்திரை பிரம்மோத்ஸவம், வைகாசி வசந்த உத்ஸவம், ஆனியில் நரசிம்மருக்கு பிரம்மோத் ஸவம், கோடை உத்ஸவம், ஆடியில் திருவாடிப்பூரம், ஆவணியில் பவித்ரோத்ஸவம், ஐப்பசியில் அன்னக்கூடை... முதலான விழாக்கள் இங்கே பிரசித்தம். மேலும் ஸ்ரீரெங்கநாதர் (திருவரங்கம்), ஸ்ரீவேங்கட கிருஷ்ணன் (திருப்பதி), ஸ்ரீராமன் (அயோத்தி), ஸ்ரீவரதராஜர் (காஞ்சி), ஸ்ரீதெள்ளிய சிங்கர் (அகோபிலம்) ஆகிய 5 திருத்தல மூர்த்திகளையும் ஒரே தலத்தில் தரிசிக்கும் பாக்கியத்தை, 'அஞ்சுவை அமுதம்’ எனச் சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள்!

வேங்கடகிருஷ்ணனால் அல்லிக்கேணி மகிமை பெற்றது என்றால், ஸ்ரீகிருஷ்ணனின் திருப்பெயர் கொண்டு சிறப்புப் பெற்ற ஊர் கிருஷ்ணாபுரம். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது கிருஷ்ணாபுரம்.

பாண்டிய நாட்டில் சொக்கநாத நாயக்கருக்குப் பிறகு, அவரது மைந்தன் கிருஷ்ணப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்தார் (கி.பி 1563-1573).  சிறந்த பெருமாள் பக்தரான இவர், தனது தேசத்தில் திருவேங்கடவனுக்கு ஆலயம் எழுப்ப விரும்பினார். அப்படி உருவானதே கிருஷ்ணாபுரம் ஆலயம். திருப்பதிக்குச் செல்ல இயலாத பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து திருவேங்கடவனைத் தரிசித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிச் செல்கிறார்கள்.

ரங்கமண்டபம் - கிருஷ்ணாபுரம் ஆலயத்தின் கலைப் பொக்கிஷம். இங்கிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் ஒரு கதையைச் சொல்லும். குறிப்பாக, கர்ண- அர்ஜுன தூண் சிற்பங்கள்!

- அவதாரம் தொடரும்...