Published:Updated:

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

சரணம் ஐயப்பா! இ.லோகேஸ்வரி

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

சரணம் ஐயப்பா! இ.லோகேஸ்வரி

Published:Updated:
##~##

ஹரிவராஸனம் விச்வமோஹனம்
ஹரிததீச்வரமாராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

உன்னதமான சிம்மாசனத்தில் வீற்றிருப்பவரும், உலகத்தையே தன் மாயா சக்தியால் மோஹிக்கச் செய்பவரும், சூரியனால் ஆராதிக்கப்படும் திருவடிகளை உடையவரும், (ஸத்கர்மங்களின்) சத்ருக்களை அழிப்பவரும், நித்யம் ஆனந்த நர்த்தனம் புரிபவரும் ஆகிய ஹரிஹர புத்திரனே... உம்மைச் சரணடைகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் துவக்கும் ஐயப்பமார்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் அனுதினமும் ஒலிக்கும் 'ஹரிஹராத்மஜா தேவாஷ்டகம்’ எனும் அற்புதமான இந்தத் துதிப்பாடலை அருளியது கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.

சபரிமலையில் ஸ்ரீஐயப்பனைத் தரிசித்த பரவசத்தில், ஒவ்வொரு வார்த்தையையும் பகவானே எடுத்துச் சொல்வதாக உணர்ந்து ஸ்ரீகுளத்து ஐயர் அருளியது என்பதால், இந்தப் பாடலுக்கு அதீத மகத்துவம் உண்டு. பாடலுக்கு மட்டுமல்ல, ஸ்ரீகுளத்துஐயர் பிறத்த கம்பங்குடி வம்சத்துக்கும் ஒரு மகத்துவம் உண்டு.  

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

அடியார்க்கு அடியவன் இறைவன் என்பதற்கேற்ப, இந்த வம்சத் தவரின் அன்புக்கு சுவாமி ஐயப்பன் அடிமையான கதையை ஒட்டியே 'கம்பங்குடி’ எனும் பெயர் வந்ததாம்! அதென்ன கதை?

அதே வம்சத்தில் பிறந்த பெரியவர் கம்பங்குடி கே.எஸ். கிருஷ்ணன், அந்தப் புண்ணிய கதையை விவரித்தார்: ''அன்னைக்காக புலிப்பால் கொண்டுவர ஐயப்பன் வனம் சென்ற கதை நமக்குத் தெரியும். வனத்தில் பசியும் களைப்பும் அதிகமாக, வழியில் இருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார் ஸ்வாமி. அந்த வீட்டில் இருந்த தம்பதியர் அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்களுக்கு உணவளித்து உபசரிப்பது வழக்கம். ஏழைகள்தான் என்றாலும், தங்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல் அன்னமிடும் உத்தமர்கள் அவர்கள்.  

மணிகண்டனையும் வரவேற்று உபசரித்தனர். ஆனால், அன்றைய தினம் அவர்கள் இல்லத்தில் கம்பு (தானியம்) தவிர, வேறு எதுவும் இல்லை. எனவே கம்பங்கூழ் சமைத்து மணிகண்டனுக்குத் தந்தார்கள். அவர்களின் அன்பாலும் ஏழைகளுக்குச் செய்யும் தொண்டாலும் மகிழ்ந்தான் ஐயப்பன். தான் யாரென்பதை அவர்களுக்கு உணர்த்தினான். வேண்டும் வரத்தைக் கேட்கும்படி பணித்தான். பகவானே வீட்டுக்கு வந்து விருந்துண்ட பிறகு, வேறென்ன வேண்டும் அவர்களுக்கு? எப்போதும் பக்தி நிலையில் இருந்து மாறாதிருக்க அருளும்படி வேண்டினார்கள்.

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

மணிகண்ட பிரபு இன்னும் மகிழ்ந்தான். 'நீங்கள் கொடுத்த கம்பங்கூழுக்கு மட்டுமல்ல, உங்கள் அன்புக்கும் என்றென்றும் நான் அடிமை. நீங்கள் என்னை நினைத்து எப்போது என்ன வேண்டினாலும் தந்தருள்வேன்’ என்று கூறி ஆசிபுரிந்தான். அன்றுமுதல், அந்தத் தம்பதியின் வம்சத்தினர் கம்பங்குடி என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார்கள். அந்த வம்சத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்றால், அது நான் செய்த பாக்கியம்!'' என்கிறார் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன்.

கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த இன்னும் பல குடும்பத்தினர் சென்னை, மும்பை, பெங்களூரு, கேரளா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் வசிக்கிறார்களாம். 80 வயதான கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன் வசிப்பது மும்பையில். கம்பங்குடி வம்சத்தில் தற்போது மிக வயதானவர் இவர்தான். ஹரிஹரபுத்ர சமாஜம், தர்மசாஸ்தா ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு, இவர் செய்து வரும் இறைப்பணிகள் ஏராளம்!

ஐயப்பனின அருள்பெற்ற அந்தத் தம்பதி வாழ்ந்தது, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக் குறிச்சிக்கு  அருகே உள்ள கரந்தையார் பாளையம் என்று சொல்லும் கம்பங்குடி கே.எஸ்.கிருஷ்ணன், இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

''19-ம் நூற்றாண்டு வரையிலும் கம்பங்குடி வம்சத்து மூதாதையர்கள் கல்லிடைக்குறிச்சி யில்தான் இருந்தார்கள். கம்பங்குடி ஸ்ரீவீரமணி சுந்தரம் ஐயர் காலத்தில்தான்,  கல்லிடைக்குறிச்சியை விட்டு கேரளா மாநிலம் - சேலக்கரை கிராமத்துக்கு நகர்ந்தார்கள்.

''அன்புக்கு அடிமையானான் ஐயப்பன்!'

கம்பங்குடி ஸ்ரீவீரமணி சுந்தரம் ஐயர் கொச்சி, ஆலப்புழை ஆகிய ஊர்களில் சாஸ்தா ப்ரீதிகளில் ஸ்தானம் பெற்றவர். பிற்காலத்தில் புகழ்பெற்ற பாலாபாஸ்கர ஐயர், தளிப்பரம்பு நீலகண்ட ஐயர் ஆகியோர் இவரது சிஷ்யர் கள்தான்'' என்று சொல்லி நிறுத்தி, சற்று யோசனையில் ஆழ்ந்தவர், சுவாமி ஐயப்பனின் வாகனமான வெள்ளை யானையைத் தரிசித்த தங்கள் வம்சத்து பெரிவரைப் பற்றி விவரித்தார்.

''கம்பங்குடி ஸ்ரீ சுந்தரம்ஐயர், ஐயப்பனின் யானையை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர். ஒருநாள் அதிகாலை  பெரியானைவட்டம் எனும் இடத்துக்குக் குளிக்கச் சென்றார் இவர். அப்போது வெள்ளை யானை ஒன்று கம்பீரமாக பவனி வருவதைக் கண்டார். ஐயன் ஐயப்பன் எழுந்தருளும் வாகனம் அல்லவா அது என்று அதிசயித்தவர், அருகில் இருந்தவர்களிடம் அதைச் சுட்டிக் காட்டினார். ஆனால், அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை. அவருக்கு மட்டும்தான் வெள்ளை யானையின் தரிசனம் கிடைத்தது.

இப்படி, பல்வேறு தருணங்களில் பல்வேறு விதமாக அருளாடல் புரிந்து, எங்கள் மூதாதை யருக்கு அருளியபடி எங்கள் வம்சத்தவருக்கு அன்பையும் ஆசியையும் வாரி வழங்குகிறான் சுவாமி ஐயப்பன்!'' என்றவர், மற்றுமொரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார்.  

வாய்பேச முடியாத சிறுவன் ஒருவனுக்கு, ஐயனின் அருளால் பேசும் வல்லமை கிடைத்ததைச் சொல்லும், அந்த அற்புதம்...

- அடுத்த இதழில்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism