Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

கிரகங்களின் அமைப்பு பலனை வரையறுக்கும். ஆண் - பெண் என்ற பாகுபாடு, அதை மாற்றியமைக்காது. ஒருவன் பிறந்த வேளையின் அட்டவணையே கிரகநிலை. ஆணுக்குச் சொல்லும் அத்தனை பலன்களும் பெண்ணுக்கும் பொருந்தும்.

இயற்கை அளித்த உடல் உறுப்புகளின் பாகுபாடு சில பலன்களை பொய்யாக்கிவிடும். பெண் ஜாதகத்தில் 'விருஷணநாச யோகம்’ (ஆண் உறுப்பிற்கு கீழ் தொங்கும் அண்டத்தின் அழிவு) இருக்கும். ஆனால், அப்படியான உறுப்பே இல்லாத பெண்ணில், அந்த யோகம் செயல்படாது. அது ஜோதிடத்தின் குறை ஆகாது. விண்ணப்ப படிவத்தில் 1. பெயர், 2. வயது, 3. பிறந்த நேரம்- தேதி, 4. கணவனின் பெயர் அல்லது மனைவியின் பெயர் என்று வரிசையாக தகவலை அளிக்கச் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், திருமணம் ஆகாதவன், 4-வது வரிசைக்கு விடையளிக்க இயலாது. அதற்காக விண்ணப்பப் படிவம் சரியில்லை என்ற முடிவுக்கு வரமாட்டோம். 'பொருந்தாதவற்றை விட்டுவிடுங்கள்’ என்று படிவத்தில் குறிப்பு இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணம், ரத்தத்தின் தொடர்பால் உடல் இணைப்பை ஏற்படுத்தும். ஓர் உடலில் ஏற்பட்ட பாதிப்பானது ரத்தத்தின் தொடர்பால், மறு உடலிலும் பிரதிபலிக்கும். தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்கள். அடி பட்ட உடலின் வேதனையை, ரத்தத்துடன் இணைந்த மற்ற உடலும் உணரும் எனச் சொல்வது உண்டு. ஆக, பெண்ணுக்குப் பொருந்தாத யோகம் அவளுடைய கணவனில் தென்படலாம் என்று விளக்கம் அளிக்கும் ஜோதிடம். யோகம் பொய்த்துப் போகாமல் இருக்க, இந்த விளக்கத்தையும்  ஜோதிடம் ஏற்கும் (யத்யத்பலம் நரபவேஷம மங்கனானாம்...). கடன் பத்திரத்தில் பொறுப்பாளியாக கையெழுத்து போட்ட இருவரில் ஒருவர் இறந்துபோனால், மிஞ்சியவரிடம் இறந்து போனவரின் பொறுப்பும் இணைந்துவிடும்; விட்டுப்போவதில்லை.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலத்தின் அட்டவணை அதாவது கிரக நிலையானது, யோகத் தின் அமைப்பை வெளியிடும். அந்த யோகம் செயல்பட்டே ஆக வேண்டும். எங்கு செயல்பட இடம் இருக்கிறதோ, அங்கு செயல் பட்டு நடைமுறைப்படுத்திவிடும்; வீண் ஆகாது. மனைவியின் இழப்பு அல்லது பிரிவை 'களத்ர தோஷம்’ என்று ஜோதிடம் சொல்லும். அது, ஆண் ஜாதகத்துக்கு மட்டும்தான் பொருந்தும். பெண் ஜாதகத்தில் களத்ர தோஷம் வராது. பெண் ஜாதகத்தில் 'மனைவியின் இழப்பு’ பொருத்தமில்லாத ஒன்று.

பெண் ஜாதக அமைப்பில் சுக்கிரனுக்கு இரு பக்கமும் பாப யோகம் (சனி / சுக்கிரன்/ சூரியன்) களத்ர தோஷமாக செயல்படாது.  கணவனுக்கு, மனைவியிழப்பு என்பது களத்ர தோஷம். 'களத்ரம்’ என்ற சொல்லுக்கு மனைவி என்று அர்த்தம். மனைவிக்கு மனைவி இருக்க முடியாது. ஆகவே, அதை மனைவிக்கும் சித்திரிப்பது தவறு. சில விஞ்ஞான ஜோதிடர்கள், மனைவிக்குக் களத்ர தோஷத்தை சுட்டிக்காட்டுவது, ஜோதிடத் தகவல்கள் முழுமையாக அவர்களை எட்ட வில்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.

புருஷ ஜாதகத்தில் கன்னி லக்னம் - 7-ல் (மீனத்தில்) குரு. அவன் மீன ராசிக்கு அதிபதி. 7-ம் வீட்டுக்குக் 'கேந்திரம்’ என்று பெயர் உண்டு. ராசிக்கு அதிபதியான குரு, கேந்திரத்துக்கு அதிபதியாகிறார். குருவுக்கு கேந்திராதிபத்யம் என்ற தகுதி உண்டு. அந்தத் தகுதியானது களத்ரத்தை இழக்கச் செய்யும் என்கிறது ஜோதிடம். குரு 7-ல் (கேந்திரத்தில்) வீற்றிருப்பதால், 7-க்கு உடைய மனைவியை பாதிப்பு அடையச் செய்கிறார் என்று பொருள். பெண் ஜாதகத்தில் இந்த தோஷம் தலைதூக்காது. சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் பல தகவல்களை வாரி இறைக்கும் ஜோதிடம், இருவரில் ஒருவருக்கு மட்டும் பொருந்தும் முடிவுகளையும் வரையறுக்கும். அலசி ஆராய்ந்து அணுக வேண்டிய பொறுப்பு ஜோதிடருக்கு உண்டு.

சந்திரனுக்கு இரு பக்கமும் கிரகங்கள் இல்லாமல் இருந்து, கேந்திரங்களிலும் சுபக் கிரகங்கள் இல்லாமல் இருந்தால், அதை 'கேமத்ரும யோகம்’ என்கிறது ஜோதிடம். இது ஏழ்மையை உணர வைக்கும் யோகம். இங்கு, சந்திரனின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றில் ராகுவோ, கேதுவோ வீற்றிருந்தாலும், அவற்றை கிரகம் வீற்றிருக்கும் பக்கங்களாக எடுத்துக்கொள்ளாது ஜோதிடம். ராகுவோ கேதுவோ இருந்தால் கிரகம் இல்லாததாக... அதாவது, சூன்யமாகக் கருத வேண்டும். அதாவது இந்த யோகத்தில் ராகுவையோ கேதுவையோ மற்ற கிரகங்களின் தரத்தில் பார்ப்பதில்லை. ஆக, இரு பக்கங்களில் ஒன்றில் ராகுவோ கேதுவோ இருந்தாலும் கேமத்ரும யோகம் உதயமாகும் என்று பொருள்.

அதுபோல், சுக்கிரனுக்கு இரு பக்கங்களிலும் இரண்டு பாபக் கிரகங்கள் அமைந்து, சுக்கிரனுக்கு களத்ர தோஷத்தை வெளியிடும் இடத்திலும், ஒரு பக்கத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால், இரு பக்க பாப கிரகங் களாக ஏற்காது. அங்கு களத்ர தோஷமும் உதயமாகாது. இங்கும், ராகு- கேதுக்களுக்கு மற்ற கிரகங்களின் தகுதி அளிக்கப்படுவதில்லை. இப்படி கேமத்ரும யோகத்திலும், பாப யோகத்திலும் இடமளிக்காத இவர்களை முன்னிலைப்படுத்தி பலனளிக்க முற்படுவது, எல்லா இடங்களுக்கும் பொருந்தாது.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி அதன் பிறகு நட்சத்திரங்கள் - இந்த வரிசையில் ஆகாயத்தில் ப்ரவஹம் என்ற காற்றினால் சுழன்று கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் ராகு-கேதுக்களை இணைக்க வில்லை வான சாஸ்திரம். இரண்டாம் தரமாகப் பார்க்கப்படும் இவ்விருவரையும் (ராகு-கேது) நவக்கிரகங்களில் முதல் வரிசையில் இருத்தி செயல்படுவது, ஜோதிடத்துக்கு ஏற்புடையதல்ல.

சந்திரனுக்கு இருபுறமும் கிரகம் இல்லாமல் இருந்து, கேந்திரத்திலும் சுபக்கிரஹம் இல்லாமல் இருந்தால் கேமத்ரும் யோகம். கேந்திரத்தில் குரு இருந்தால் கேமத்ரும யோகம் உருவாகவில்லை என்று பொருள். கேமத்ரும யோகம் தரும் ஏழ்மை யானது, குரு கேந்திரத்தில் இருந்தால் விலகிவிடும் என்று பொருள். இதை, தன யோகமாகச் சித்திரித்து மக்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத் துவது முறையாகாது. 'கஜகேஸரி யோகம்’ என்ற பட்டத்தை முன்வைத்து, 'பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்’ என விளக்குவதும் பொருந்தாது. 75 விழுக்காடு ஜாதகங்களில் கஜகேஸரி யோகம் தென்படும். உலக செல்வந்தர்களின் அட்டவணையில் இவர்களையும் சேர்த்தால் போதும், பாரதம் என்றென்றைக்கும் முதல் இடத்தில் இருக்கும்!

உருவத்தில் சிறிய சிம்மம், பெரிய யானையை எப்படி அழித்துவிடுமோ, அப்படி சந்திர கேந்திரத்தில் இருக்கும் குருவானவர்,  உருவத்தில் சின்னதாக இருந்தாலும் ஆழமான அசைக்க முடியாத ஏழ்மையை அகற்றிவிடுவார் என்று விளக்கும் ஜோதிடம். அதற்காக, இப்படியான அமைப்பு பணக்காரனாக உயர்த்திவிடும் என்று பொருள்கொள்ள முடியாது. ஏழ்மை அகன்ற அத்தனைப் பேரும் செல்வந்தர்கள் அல்ல. கேசரி என்றால் சிம்மம்; கஜம் என்றால் யானை. உவமையைக் கையாண்டு ஏழ்மை விலகல் என்பதை விளக்குகிறது செய்யுள். கணினிகள், பொறுப்பு இல்லாமல் கஜகேசரி யோகத்தை யோகங்களின் தலைவனாகச் சித்திரித்துக் காட்டுவது பரிதாபம்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ராகு, பாஹு பலத்தை அளிப்பார்; கேது, குல உயர்வை அளிப்பார் என்று பலன் கூறுவர். ராகு, சில கட்டங்களில் கெடுக்கிற ராகு; சில கட்டங்களில் அதாவது ராசியில், கொடுக்கிற ராகு. கேது மோட்சக்காரகன். இப்படியும் விளக்குவார்கள். ராசிச் சக்கரத்தில் ராகுவுக்கு வீடு இல்லை. ஆகையால் ராசி பலன் அளிக்க முடியாது.

ராகு எந்த ராசியில் இருக்கிறாரோ அந்த ராசிக்கு உடையவனின் பலத்தைக் கவர்ந்து அளிப்பார். சுயமாக பலனளிக்கும் தகுதி இல்லை என்கிறது ஜோதிடம். யோககாரக கிரகத்தின் சேர்க்கையில், ராகு நல்ல பலனை அளிப்பவராக மாறுவார் எனச் சொல்லும் (யோககாரக ஸம்பர்க்காத்...). இங்கு ராகு தனியாக பலன் அளிக்கவில்லை. யோக காரக கிரகச் சேர்க்கையில், அதன் பலத்தை இவர் அளிக்கிறார் என்றும் விளக்கும். 'காரகன்’ என்றால் செயல்படுபவன் என்று பொருள். நடைமுறைப்படுத்துபவன் என்றும் சொல்லலாம். சட்டத்தை இயற்றுபவன் வேறு, நடைமுறைப்படுத்துபவன் வேறு. சட்டத்தை இயற்றுவது அரசாங்கம் நடைமுறைப் படுத்துவது அதிகாரிகள். கேது மோட்சத்தை அளிப்பவர் அன்று. நடைமுறைப்படுத்துபவர். 'மோட்சத்தை நடைமுறைப்படுத்து’ என்று உத்தரவு வந்தால், அதை நடைமுறைப் படுத்தும் கருவியாகத் திகழ்பவர் 'காரகன்’. மோட்சத்தை அளிப்பவர் கேது என்பதை ஏற்றால். 'டெஸ்பாட்ச் கிளார்க்’ வேலை பார்ப்பவரை, உத்தரவிடும் அதிகாரி என்று சொல்லவேண்டி வரும்.

7-ல் ராகு இருந்தால் கலப்புத் திருமணம். 5-ல் ராகு இருந்தால் குழந்தை இருக்காது என்ற விளக்கங்கள், பாமரர்களை வெகுவாக பாதிக்கிறது. அதுவரையிலும் சும்மா இருந்த பெண், கலப்புத் திருமணம் என்று கேட்டதும், தன்னிச்சையாக கலப்புத் திருமணத்தைத் தேடிப் பெறுகிறாள். வாழ்க்கை துயரத்தில் ஆழ்ந்துவிடுகிறது. குழந்தை இருக்காது என்று கேட்டதும், செயற்கை முறை குழந்தையைப் பெறத் துடிக்கிறாள். குழந்தைச் செல்வம் பெற்று பல இன்னல்களுக்கு ஆளாகிறாள். ஜோதிடர்களை தெய்வமாக மதிப்பவர்களும், அவர்கள் சொல்லும் வார்த்தைகளை வேதவாக் காக ஏற்கும் மக்களும் ஏராளம் இருக்கிறார்கள். ஜோதிடத்துக்கு ஏற்புடையது அல்லாத விளக்கங்களால், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது சிறப்பல்ல.

ராகு எந்த ராசியில் இருந்தாலும் எந்தக் கிரஹத்தோடு இணைந் தாலும்... எதிரிடையான பலன்களை ஆராயாமல் கூறுவது, ஜோதிடத்தின் உண்மைக்குச் சவால்விடுவதாகும். அதென்ன! சிந்தனை செய்தும், ஆராய்ந்தும், விடை கிடைக்கவில்லை! நாடகத்தில் வில்லன் போல், நவக்கிரகத்தில் இடம்பிடித்த ராகுவை வில்லனாக உயர்த்துவது கொஞ்சம் மிகையாகத் தென்படவில்லையா? நமது சிந்தனையை ஜோதிடத்தில் கலக்காமல் சுத்தமான ஜோதிட விளக்கங்களை மட்டும் விளக்கினாலே போதும். தெளிவான முடிவு எட்டப்பட்டுவிடும்.

பராசரஹோரை, ஸ்கந்தஹோரை, சௌக ஹோரை, பாதராயண ஹோரை, பிரஹத் ஜாதகம், ஜாதகபாரிஜாதம், ஸாராவளி ஸர்வார்த்த சிந்தாமணி, பலதீபிகை, ஜாதகாதேச மார்க்கம் - போன்ற எண்ணற்ற நூல்கள், ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெண்ணை போல் பலனை உருட்டித் தந்திருக்கின்றன. மனித சிந்தனையின் எல்லையை எட்டி, எக்காலத்திலும் நிகழும் தகவல் களை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு,  சுய சிந்தனையில், விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து காலத்துக்கு உகந்த முறையில் பலன் சொல்லும் மரபை ஏற்பது, சரியல்ல. சிந்தனைக்கு எட்டாத விஷயங்களை விளக்குவதுதான் ஜோதிடத் தின் குறிக்கோள். நமது சிந்தனைக்கு எட்டிய தகவல்கள் அத்தனையும் ஜோதிடம் ஆகாது. அருள்வாக்காக வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.

காரண காரியங்களுடன் அலசி ஆராய்ந்து கிடைத்த முடிவு ஜோதிடம்; நமது திறமையில் விளைந்த முடிவு அருள்வாக்கு. சரித்திரம், பூகோளம், ரசாயனம், கணக்கு, மருத்துவம் போன்றவற்றை, தகுந்த நூல்களைப் படித்து ஆராய்ந்து தெளிவோம். அதுபோல், ஜோதிடத்தையும் படித்து ஆராய்ந்து விளக்கத்தை அளிக்கவேண்டும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism