Published:Updated:

விழாக்கள்

யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி விழா!

விழாக்கள்

யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி விழா!

Published:Updated:
விழாக்கள்

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை க்ஷேத்திரத்தில்,  அந்தப் புண்ணிய பூமியில், வலம் வராத மகான்களே இல்லை என்பார்கள். அப்படிப்பட்ட திருத்தலத்தில், நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த அற்புதமான மகான் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார்.

விசிறி சுவாமிகள், விசிறி சாமியார் எனப் பலராலும் அழைக்கப்படும் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் அவதார தினம், டிசம்பர் 1-ஆம் தேதி திருவண்ணாமலையில் உள்ள அவரின் ஆஸ்ரமம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல ஊர்களில் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில், மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்தார், எழுத்தாளர் பாலகுமாரனுடன் இணைந்து வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடி வரும் யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி விழா, இந்த முறை டிசம்பர் 1-ஆம் தேதி அன்று திருவல்லிக்கேணியில் உள்ள சிங்கராச்சாரி தெருவில் உள்ள ஸ்ரீராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறுகிறது. இது, பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 95-வது ஜயந்தி விழா.

மாலை 5.30 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை, யோகியாரின் நாமாவளி பஜனைப் பாடல்கள், அதையடுத்தி கர்னாடக இசைக் கலைஞர் கலைமாமணி ஓ.எஸ்.அருண் அவர்களின் தமிழ் பக்திப் பாடல்கள் கொண்ட இசை விருந்து என நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

விழாக்கள்

பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி நாளில், 'யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜெயகுரு ராயா’ என்று மனதாரச் சொல்லிப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீடு தேடி வந்து அருளிச் செல்வார் யோகியார்! உங்கள் இல்லமும் உள்ளமும் வளமாகும்!

கோடி அர்ச்சனை விழா...

ஐயப்ப பக்தர்களே வாருங்கள்

கவானுக்கு ஒருமுறை அர்ச்சனை செய்து, ஆத்மார்த்தமாக வழிபட்டால், நம்மையும் நம் சந்ததியையும் காத்தருள்வான் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி. அப்படியிருக்க... கோடி அர்ச்சனை செய்து வழிபட்டால்... தன் பக்தர்களை எப்படியெல்லாம் காத்தருள்வான் ஸ்வாமி!

விழாக்கள்

சென்னை நங்கநல்லூர், ஆதம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒன்றிணைந்து, நங்கநல்லூர் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில், கோடி அர்ச்சனை செய்து ஐயனை வழிபட முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டில் இறங்கியுள்ளனர்.

டிசம்பர் 7-ஆம் தேதி காலை 5 மணிக்குத் துவங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும் கோடி அர்ச்சனை விழா, சுமார் 54 லட்சம் ரூபாய் செலவில் நடைபெறுவதாகத் தெரிவிக்கின்றனர், பக்தர்கள். கேரள தந்திரிகள், நங்கநல்லூர் மணிகண்ட ஸ்வாமி, டிரஸ்ட் ஸ்தாபகர் வெங்கட்ராம குருஜி, வேதகான சாஸ்தா டிரஸ்ட் கிருஷ்ணன் குருஜி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கோடி அர்ச்சனை விழாவில் தினமும் சிறப்பு பூஜை, விசேஷ பிரசாதம், அன்னதானம் ஆகியவை சிறப்புற நடைபெறும்.

''கும்பத்தில் ஆவாஹனம் செய்யப்பட்ட நெய், தேன், விபூதி ஆகியவற்றை நிறைவு நாளில் எடுத்து, அங்கே சந்நிதியில் உள்ள ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, அதைப் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்க உள்ளோம். தவிர, தினமும் மதியம் மற்றும் இரவில் அன்னதானமும் நடைபெறுகிறது.  இந்தப் பூஜைக்கு அரிசி, பணம், திரவியம் எனப் பொருளுதவி செய்வதும் வரவேற்கப்படுகிறது. குறிப்பாக, கோடி அர்ச்சனையில் கலந்துகொண்டு, ஐயப்ப ஸ்வாமியின் நாமாவளியைச் சொல்வதற்கு தினமும் 700-க்கும் குறையாத அன்பர்கள் தேவை. ஆர்வம் உள்ள ஐயப்ப பக்தர்கள் தாராளமாகக் கலந்துகொள்ளலாம்'' என்கிறார்கள் நிர்வாகிகள்.

கார்த்திகை, மார்கழி வேளையில், ஸ்ரீஐயப்பனின் பக்தர்களுக்கு இது அருமையான வாய்ப்பு. பங்கேற்று, பலன் பெறுங்கள்! நங்கநல்லூரில் சொல்கிற சரண கோஷம், சபரிமலையில் எதிரொலிக்கட்டும்!

வீரமணி ராஜூ நடத்தும்  'மலர் பூஜை... படி பூஜை’ விழா!

டிசம்பர் 1-ஆம் தேதி அன்று, சென்னை காமராஜர் அரங்கத்தில், ஐயப்ப ஸ்வாமியின் பாடல்களைப் பாடும் கலைமாமணி வீரமணி ராஜுவின் கச்சேரி உண்டு என்று நண்பர்களிடம் பந்தயமே கட்டலாம். வருடாவருடம், அந்த நாளில், தன் ரசிகர்களுக்கு நேரம் ஒதுக்கி, விழாவில் கலந்து கொண்டு பாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் வீரமணி ராஜூ.

''உங்கள் பாடல்கள்தான் எங்களுக்கு கார்த்திகை, மார்கழியில் தேசியகீதம். உங்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் சார். என்ன வேண்டும்'' என்று என் ரசிகர்கள் சிலர் கூட்டமாக வந்து கேட்டார்கள். ஐயப்ப பக்தர்கள், கோயில் வாசலிலும் ஊர் மைதானத்திலும் என் பாடலைக் கேட்கிறார்கள். அவர்களை ஒரு ஏ.ஸி. ஹாலில் அமரவைத்து, அவர்களுக்கு நானொரு சிறப்புக் கச்சேரி செய்ய வேண்டும். அது, நான் அவர்களுக்குச் செய்யும் மரியாதை. அப்படியரு விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்றாராம் வீரமணிராஜு.

விழாக்கள்

அதன்படி, வருடாவருடம் இந்த நாளில், சென்னை தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில், கோலாகலமாக நடை பெறுகிறது 'மலர் பூஜை - படி பூஜை விழா’.

''இது 10-வது வருஷ விழா. மாலை 6 மணிக்கு துவங்கி 9 மணி வரை விழா நடைபெறும். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி விக்கிரகம் வைத்து, பாலபிஷேகம், இளநீர் அபிஷேகம், தேனபிஷேகம் எனச் செய்து, சிறப்பு அலங்காரமும் செய்வோம், ஐயப்ப ஸ்வாமிக்கு! இந்த முறை ஊஞ்சல் சேவையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பிறகு பாட்டு, கச்சேரி என களை கட்டுகிற விழாவின் நிறைவில், எல்லோருக்கும் அன்ன தானப் பிரசாதமும் வழங்கப்படும்'' என்று உற்சாகத்துடன் சொல்கிறார் வீரமணிராஜு.

சாஸ்தா பூஜையில்... பெண்களுக்காக திருவிளக்கு பூஜை!

கார்த்திகை மற்றும் மார்கழி வந்துவிட்டால், எங்கு திரும்பினாலும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு வழிபாடுகள், பஜனைகள், சிறப்பு பூஜைகள் என நடைபெறும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஐயப்பனை வீட்டில் இருந்தபடியே பக்தியுடன் வழிபடுகிற பெண்களுக்காகவும் சில ஊர்களில் திருவிளக்கு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.

விழாக்கள்

சென்னை தேனாம்பேட்டை நாட்டுமுத்துத் தெரு வில் உள்ள ஸ்ரீவிளையாட்டு விநாயகர் - ஸ்ரீஹரிஹர புத்ர ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீஹரிஹர புத்ரன் பக்தர்கள் சேவா சங்கத்தினர் கடந்த 14 வருடங்களாக, ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கான விழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இந்த வருடம், டிசம்பர் 5-ஆம் தேதி மற்றும் 6-ஆம் தேதிகளில், சம்வத்ஸரோத்ஸவ விழாவும், திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. சிறப்பு ஹோமங்கள், சர்வ அலங்கார ஆராதனைகள், தொட்டில் உத்ஸவ வழிபாடு, புஷ்பாபிஷேகம், திருவிளக்கு பூஜை, அன்னாபிஷேகம், திருவாபரணப் பெட்டி ஊர்வலம் என விழாவின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அமர்க்களமாகவும் ஆன்மிகத்தைப் பரப்புவதாகவும் இருக்கும் என்கின்றனர் ஐயப்ப ஸ்வாமி பக்தர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism