தொடர்கள்
Published:Updated:

விதைக்குள் விருட்சம்! - 3

மகத்தான மானிட சக்தி!டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: அரஸ்

##~##

இன்றைய சமுதாயத்தில் பலருக்குத் தீயவை, தீமை பயக்காமல் நன்மைகளைத் தந்துகொண்டிருக்கின்றன. தினை விதைத்துத் திண்டாடும் பல கோடிப் பேரையும், வினை விதைத்தும் நல்ல விளைச்சலை அறுவடை செய்து உல்லாசமாக வாழும் சில கோடிப் பேரையும் சமுதாயத்தில் காண்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன?

சத்தியமே ஜெயிக்கும், தர்மமே வெல்லும் என்கிறார்கள். ஆனால், சத்தியத்தால் வென்றவர்கள் மட்டுமல்ல; தோற்றவர்களும் இருக்கிறார்கள். இது ஏன்? சத்தியத்தின் வலிமை அல்லது பலவீனமா? அல்லது, அவரவர் நல்வினை, தீவினைப் பயனா?

இது போன்று பல கேள்விகள் நம் மனத்துள் உலா வந்துகொண்டு இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் விடை காண இந்து மதத்தையே சோதனைச் சாலையாக்கி, வேத- உபநிடதத் தத்துவங்களை உபகரணங் களாக்கி, நம் பகுத்தறிவையும் விவேகத்தையும் ஆற்றல்களாகக் கொண்டு ஒரு பரிசோதனை நடத்திப் பார்க்கவேண்டும் என்று சென்ற இதழில் பார்த்தோம்.

அப்படியான பரிசோதனையில், முக்கியமான சோதனைப் பொருட்கள் நான்கு. அவை, மனிதனின் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகியவை. மானிட சக்தியின் பரிமாணத்தைக் கணக்கிட அல்லது அளக்க இந்த நான்கு கூறுகளாகத்தான் மனிதனை அணுகவேண்டும். மனித உடலின் அமைப்பு, மனித மனத்தின் உணர்வுகள், மனித அறிவின் சிந்தனைகள், இவற்றுக்கெல்லாம் சக்தி தந்து இயக்கும் ஆன்மா ஆகிய நான்கு அம்சங்களும் முக்கியமானவை.

விதைக்குள் விருட்சம்! - 3

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று முகங்கள் அல்லது மூன்று வகைப் பரிமாணங்கள் உண்டு.

What you think you are?
What others think you are?
What you really are?

உன்னைப் பற்றி நீ என்ன நினைக்கிறாயோ, அது ஒரு பரிமாணம்; உன்னைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார் களோ, அது இரண்டாவது பரிமாணம்; உண்மையில் நீ யாராக இருக்கிறாயோ, அது உன் மூன்றாவது பரிமாணம்.

இந்த மூன்று பரிமாணங்களையும் கணக்கிட்டு, ஒப்பிட்டுப் பார்த்து முடிவெடுக் கும்போதுதான், ஒருவனின் உண்மையான பரிமாணமும், சக்தியும் தெரிய வருகிறது. இதற்காகத்தான் உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளாகப் பிரித்துக்கொண்டு தனித்தனியாகவும், ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தியும் ஆராய வேண்டும்.

ஒரு யந்திரம் செயல்படும் முறையை விஞ்ஞான ரீதியாகத் தெரிந்துகொள்ள, அதை இரண்டு பகுதிகளாக விளக்குவது வழக்கம். ஒன்று Structure; யந்திரத்தின் அமைப்பு. இரண்டாவது Function; அதாவது, அதன் செயல்பாடு. முதலில், யந்திரத்தின் ஒவ்வொரு பாகமும் என்ன அமைப்பைப் பெற்றுள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, பின்பு அது என்னென்ன பணிகளைத் தனியாகவோ அல்லது மற்றொரு பாகத்துடன் சேர்ந்தோ செய்கின்றது என்பதையும் தெரிந்துகொண்டு, யந்திரத்தின் செயலாற்றலைக் கணிக்கும்போதுதான், யந்திரத்தைப் பற்றிய முழு அறிவும் ஏற்படும்.

விதைக்குள் விருட்சம்! - 3

இதே அடிப்படையில், மேலே சொன்ன உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கின் அமைப்பையும் செயல்திறனையும் தனித்தனியே கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. அவற்றினுள்ளே ஒளிர்ந்துகொண்டிருக்கும் உன்னத சக்தியை உணரும்போது, மனிதன் எதைக் கண்டும் அஞ்சாத தைரியத்தைப் பெறுகிறான். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிகிறான்.

விதைக்குள் விருட்சம்! - 3

'தடைகள் ஒரு தடையல்ல; அதைத் தாண்டிவிடலாம். எதிர்ப்புகள் ஒரு பிரச்னை அல்ல; வாழ்க்கையில் மனிதன் ஒரு மகத்தான சக்தியைப் பெறவே பிரச்னைகளும், போராட்டங்களும், தோல்விகளும், ஏமாற்றமும் ஏற்படுகின்றன’ என்பதை உணர்கிறான்.

பிரச்னைகளும் போராட்டங்களும் இல்லாமல் மனிதன் வாழட்டும் என்று கடவுள் நினைத்திருந்தால், மனித இனம் எதிர்ப்புச் சக்திகளே இல்லாத ஊனமான உயிரினமாகத்தான் இருந்திருக்கும்!

- விருட்சம் வளரும்

வண்ணத்துப்பூச்சியின் போராட்டம்

இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த மனிதன் ஒருவன், ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழுவைக் கண்டான்.

அந்தக் கூட்டுப்புழுவின் கூட்டில், ஒரு சிறு விரிசல் ஏற்படுவதைக் கவனித்தான். சில நிமிடங்கள் கழித்து அந்தக் கூட்டில் இருந்து வண்ணத்துப் பூச்சி ஒன்று வெளியே வர முயற்சிப்பதைப் பார்த்தான். அந்த வண்ணத்துப்பூச்சி சில மணி நேரங்களாக வெளியே வரப் போராடிக்கொண்டு இருந்தது. கருணை உள்ளம் கொண்ட அந்த மனிதன், ஓர் ஊசியை எடுத்து கூட்டின் துவாரத்தில் குத்தி அதைப் பெரிதாக்கி, வண்ணத்துப்பூச்சி வெளியே வர உதவி செய்தான்.

சில நொடிகளில், வண்ணத்துப்பூச்சி சுலபமாக வெளியே வந்தது. ஆனால், அதன் உடல் பெருத்திருந்தது. சிறகுகள் விரியாமல் உடம்போடு ஒட்டியிருந்தன. அது பறக்கமுடியாமல் கீழே விழுந்து, ஊர்வதற்கு முயற்சித்தது. வண்ணத்துப் பூச்சி பறந்துவிடும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான் அந்த மனிதன். ஆனால், அது பறக்கவில்லை. பருத்த உடலுடன், சிறகுகள் விரியாமல் தரையில் தவழ்ந்துகொண்டுதான் இருந்தது.

கூட்டுப்புழு பருவத்தில் உருவாகும் வண்ணத்துப்பூச்சி, தன் சுய முயற்சியால் கூட்டைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்போதுதான், அதன் வயிற்றுப் பகுதியிலுள்ள நீர் வெளியேறி, சிறகுகளுக்குச் சக்தி கிடைத்து, தானாகவே பறக்கும் திறன் கிடைக்கும். இது இறைவன் வகுத்த நியதி. அந்த வண்ணத்துப்பூச்சியானது தனக்குக் கிடைக்கும் புதிய பரிமாண வளர்ச்சிக்காகவும், சுதந்திரத்துக்காகவுமே போராடுகிறது என்பதை, பாவம் அந்த மனிதன் உணரவில்லை.