Published:Updated:

ராகு கேது தோஷம், புத்திரபாக்கியத் தடையை நீக்கும் நாக வழிபாடு!

ராகு கேது தோஷம், புத்திரபாக்கியத் தடையை நீக்கும் நாக வழிபாடு!
News
ராகு கேது தோஷம், புத்திரபாக்கியத் தடையை நீக்கும் நாக வழிபாடு!

ராகு கேது தோஷம், புத்திரபாக்கியத் தடையை நீக்கும் நாக வழிபாடு!

நாகங்களை வழிபடுவது என்பது காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாடு. உயிருள்ள நாகங்கள் வசிக்கும் புற்றுக்குப் பால் ஊற்றி வழிபடுவதை நம் நாட்டுப் பெண்கள் ஒரு விரதமாகவே மேற்கொண்டிருக்கிறார்கள். கோயில்களில் அரசமரம், வேப்பமரம் ஆகிய மரங்களின் அடியில் நாகர்களின் உருவங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவதும் நடைமுறையில் இருக்கிறது. நாகர்கோவிலில் உள்ள நாகராஜா ஆலயம் நாகர் வழிபாட்டுக்கு மிகவும் பிரசித்தியான ஆலயம்.

நாகங்களை வழிபடுவதால் அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கிவிடுகின்றன என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக இருக்கிறது. நாக தேவதை வழிபாடு பற்றி தேவி பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. 

தன்னுடைய அம்சமான நாகங்களை பூமியில் உள்ள மனிதர்கள் வழிபடவேண்டும் என்று அம்பிகை திருவுள்ளம் கொண்டாள். அவளின் திருவுள்ளப்படியே நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நாகங்களின் தலைவியாக இருப்பவள் மானஸாதேவி. 

பிரம்மாவின் மானஸ புத்திரர் காச்யப மகரிஷி. மகரிஷியே ஆனாலும் அவருடைய மனதிலும் ஓர் ஆசை தோன்றியது. அந்த ஆசைதான், அன்னை பராசக்தியின் அம்சமாகத் திகழும் பாம்புகள் உலகத்தில் தோன்ற காரணமாகிவிட்டது. 

காச்யப முனிவர் தமக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று விரும்பினார். தம்முடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நினைத்த மகரிஷி, இப்போது மானஸரோவர் என்று அழைக்கப்படுவதும், புராண காலத்தில் சுந்தரவனம் என்று அழைக்கப்பட்டதுமான பகுதிக்குச் சென்று சிவபெருமானை வேண்டி தவம் இயற்றினார்.

காச்யபரின் தவம் கண்டு மனம் கனிந்த சிவபெருமான், காச்யபர் மகரிஷி என்பதால், அவருடைய மனதிலிருந்து ஒரு பெண்குழந்தை தோன்றுமாறு அருள்புரிந்தார். அப்படியே காச்யபரின் மனதிலிருந்து அம்பிகையின் அம்சமான நாகம் மிகுந்த அழகும், சந்திரனைப் போன்ற குளிர்ச்சியான ஒளி பொருந்திய முகமும் கொண்ட ஒரு பெண்ணாக வெளிப்பட்டாள். மகரிஷியின் மனதிலிருந்து தோன்றியதால், அந்தப் பெண்ணுக்கு மானஸா தேவி என்ற பெயர் ஏற்பட்டது.

மானஸாதேவிக்கு உரிய பருவம் வந்ததும், அவளை ஜரத்காரூரர் என்ற மகரிஷிக்குத் திருமணம் செய்து வைத்தார். காலப் போக்கில் அவர்கள் இருவருக்கும் ஆயிரக்கணக்கான சர்ப்பக் குழந்தைகள் பிறந்தன. அந்தச் சர்ப்பக் குழந்தைகளுள் ஆஸ்திகன் என்ற குழந்தையை மட்டும் தங்கள் பாதுகாப்புக்காக வைத்துக்கொண்டு, மற்றவைகளை எல்லாம் பூமிக்கு அனுப்பி, பகல் பொழுதுகளில் பூமிக்கடியில் இருக்கும்படியும், இரவு வேளைகளில் பூமியின் மேல் சஞ்சாரம் செய்து இரை தேடிக்கொள்ளவும் அனுமதி அளித்தனர்.

சிறிது காலம் சென்றதும் மானஸாதேவி மானஸரோவர் பகுதியில் நாக தேவதையாக உருவம் கொண்டு அமர்ந்தாள். சிவபெருமானின் அருளால் மானஸரோவரில் நாக தேவதையாக அமர்ந்த மானஸா தேவி வழிபாடுதான் நாக வழிபாடு என்று ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் நடைபெற்று வருகிறது. 

ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பரிகார வழிபாடாக நாக வழிபாடு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பாலும் பழமும் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், சர்ப்ப தோஷத்தால் புத்திரபாக்கியம் தடைப்பட்டவர்களுக்குத் தடை நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும். 

- புவனா கண்ணன்