Published:Updated:

குருவருள் திருவருள் - 4

சித்தமெல்லாம் சிவமயமே வி.ராம்ஜி

பிரீமியம் ஸ்டோரி
##~##

'தலைமுறை இடைவெளி’ என்கிற சொல்லாடலை அடிக்கடி சொல்லிக் கேட்டிருப்போம். 'நம்ம காலத்துல நாம எப்படியெல்லாம் இருந்தோம்! ஹூம்... இந்தக் காலத்து இளவட்டப் புள்ளைங்க சிந்தனையே வேற மாதிரி ஆகிப்போச்சு!’ என்று அலுப்பும் சலிப்புமாகச் சொல்லாத மூத்தவர்களே இருக்கமுடியாது. வயது வித்தியாசம், வாழ்க்கை அனுபவம், பழக்க வழக்கங்கள், கலாசார மாற்றங்கள் என தலைமுறை இடைவெளிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

'எப்பப் பாத்தாலும் இதைச் செய், அதைப் பண்ணாதேன்னு ஆர்டர் போட்டுக்கிட்டே இருக்கார் அப்பா!’ என்று பிள்ளைகள் வருந்து வார்கள். 'இன்னும் சுதந்திரத்துக்கு முந்தின காலத்திலேயே இருந்தா எப்படிப்பா? கம்ப்யூட்டர் யுகத்துக்கு வா!’ என்று பொருமுவார்கள்.

இப்படியான தகப்பனுக்கும் பிள்ளைக்குமான உரசல்கள் நம்மைப் போன்ற மனிதர்களிடையே மட்டுமல்ல; ஆனானப்பட்ட, சிவனாருக்கும் அவரின் மைந்தனான முருகக் கடவுளுக்கும் இடையேகூட நிகழ்ந்திருக்கின்றன. பழத்துக்காகக் கோபித்துக்கொண்டு, கந்தவேள் தனி இடம் தேடிச் சென்று நின்று, தன் ராஜ்ஜியத்தை அடையாளம் காட்டி, சேவற்கொடியையும் பறக்கவிட்ட புராணத்தை நாம் அறிவோம்தானே! பிரணவப் பொருள் தெரியாதவர் பிரம்மாவே ஆனாலும், குற்றம் குற்றம்தான் என எடுத்துரைத்து, சிறை வைத்த சிங்காரவேலவனைப் பற்றி எழுதியதைப் படித்திருக்கிறோம்; பண்டிதர்கள் சொல்ல விழிகள் விரியக் கேட்டிருக்கிறோம்.

குருவருள் திருவருள் - 4

அப்படி, கிழக்கும் மேற்குமாக இருந்த அப்பாவும் பிள்ளையும் இணக்கத்துடன் இருக்கும் தலம்... எழுச்சூர் நல்லிணக்கேஸ்வரர் ஆலயம். இங்கே, ஸ்ரீசுப்ரமணியரைப் பார்த்தாலே பரவசமாகிவிடுவோம்! கொள்ளை அழகுடன் கூடிய மூர்த்தம்.

கிழக்குப் பார்த்தபடி காட்சி தரும் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர்; தெற்குப் பார்த்தபடி தரிசனம் தரும் ஸ்ரீதெய்வநாயகி அம்பாள்; நடுவே, வடக்குப் பார்த்தபடி முருகப்பெருமான் காட்சி தருவதைப் பார்த்தாலே, நம் மனத்தில் உள்ள துக்கமும் ஏக்கமும் பறந்தோடிவிடும்.

இங்கே உள்ள முருகப்பெருமான் ஸ்ரீசுப்ரமணியராக, ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானை சமேதராக, பன்னிரண்டு திருக்கரங்களும் ஆறுமுகங்களும் கொண்டு, தேவ மயிலுடன் காட்சி தருகிறார். முகத்தில் சாந்தமும், கண்களில் கருணையும் ததும்புகிற அற்புதக் கோலத்தில் இருப்பவரைத் தரிசிப்பது, மகா பாக்கியம்!

குருவருள் திருவருள் - 4

''எந்தக் கடவுளாக இருந்தாலும், கோயிலின் தீர்த்தக் குளத்தைப் பார்த்தவண்ணம் காட்சி தந்தால், அந்தத் தெய்வத் திருமேனியில் சாந்நித்தியங்கள் மேலும் பெருகியிருக்கும் என்பது ஐதீகம். இதோ, இந்த எழுச்சூர் தலத்தில், கோயிலுக்கு அருகில் உள்ள திருக்குளத்தைப் பார்த்தபடி தரிசனம் தருகிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி!'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார் ராமமூர்த்தி எனும் அன்பர்.

''காஞ்சி சங்கர மடத்தின் 54-வது பீடாதிபதியான ஸ்ரீவியாஸாசல சுவாமிகள், நமக்கெல்லாம் குரு. நம் காஞ்சி மகா பெரியவாளுக்கும் முன்னோடியாகவும் குருவாகவும் இருந்தவர். அவரின் அதிஷ்டானம் அமைந்துள்ள இந்தக் கோயிலில், முருகப் பெருமான் இப்படி விசேஷ பார்வை பார்ப்பதால், குருவுக்கு நிகரானவராக இருந்து கல்வியையும் ஞானத்தையும் தந்தருள்கிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி'' என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

குருவருள் திருவருள் - 4

செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெறுகின்றன. அன்றைய நாளில் வந்து, ஸ்ரீசுப்ரமணியருக்கு பாலபிஷேகம் செய்து, முடிந்தால் வஸ்திரமும் சார்த்தி வழிபட்டால், தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்.

அதேபோல், மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திர நாளிலும், சஷ்டி திதி நாளிலும் முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை, சச்சரவு, கருத்து வேற்றுமை எனப் பிரிந்து இருப்பவர்கள், இங்கு வந்து ஒரேயரு முறை முருகக் கடவுளிடம் நின்று, மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டால் போதும்... விரைவில் தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது உறுதி எனப் பூரிப்புடன் தெரிவிக்கிறார்கள் எழுச்சூர் கிராம மக்கள்.

குருவருள் திருவருள் - 4

''இப்படித்தான், காஞ்சிபுரத்துக்குப் பக்கத்துல இருக்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒரு பையன் வந்தான். முருகப்பெருமானுக்கு வஸ்திரம் வாங்கியிருந்தான். அரளிப் பூமாலையும் முல்லைப்பூ மாலையும் கொண்டு வந்திருந்தான். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் பண்ணணும்னு சொன்னான். தீபாராதனை காட்டும்போது, என்ன நினைச்சுக்கிட்டானோ... கதறி அழுதுட்டான்! அவனை ஆறுதல்படுத்தவே முடியலை.

கொஞ்ச நேரம் கழிச்சு அவனே சொன்னான்... 'எனக்கும் எங்க அப்பாவுக்கும் சின்னதா சண்டை. நான் பிளஸ் டூ படிக்கும்போது சொல்லாம கொள்ளாம சினிமாவுக்குப் போயிட்டு வந்தேன்னு என்னை அடிச்சார் அப்பா. அப்பலேருந்து அவர்கிட்ட நான் பேசுறதே இல்லை. ஆனா, நாளாக நாளாக அந்த வருத்தம் குறைஞ்சு, அவர்கிட்ட பேசணும்னு ஆசையா இருந்தது. ஒவ்வொரு முறை அவர்கிட்ட பேச நினைக்கும்போதும், பாழாப் போன ஈகோ வந்து தடுத்து, எல்லாத்தையும் குலைச்சுப் போட்டுடும். அப்படி இப்படின்னு, மூணு வருஷம் ஓடிப் போச்சு.

குருவருள் திருவருள் - 4

சென்னைல உறவினர் வீட்டுக் கல்யாண விழாவுக்குப் போயிட்டுத் திரும்பும்போது, இந்தக் கோயிலுக்கு நான், அப்பா, அம்மா எல்லாருமே வந்தோம். 'அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையாவாச்சே நீ. நான் என் அப்பாகூட பழையபடி பேசணும். அதுக்கு நீதான் அருள்புரியணும்’னு சொல்லி வேண்டிக்கிட்டுப் போனேன். அடுத்த நாலாம் நாள், முக்கியமான விஷயமா வீட்ல அப்பா பேசிட்டிருந்தப்ப, சட்டுன்னு நான் பேசிட்டேன், அவர்கிட்ட! அவருக்குமே கண் கலங்கிப் போச்சு! 'அப்பாங்கற உறவை, அந்த நல்ல மனிதரை, நாம இப்படிப் பேசாம இருந்து காயப்படுத்திட்டோமேனு ரொம்பவே கலங்கிப் போனேன்’னு அழுதுக்கிட்டே சொன்னான்!'' என்று நெகிழ்வும் மகிழ்வுமாகச் சொல்கிறார்கள் ஊர்மக்கள்.

குருவருள் திருவருள் - 4

எழுச்சூர் எனும் புண்ணிய பூமி... இப்படித்தான் பல எழுச்சிகளையும் மலர்ச்சிகளையும் நம்முள் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது. பணத்துக்காகப் பிரிந்தவர்கள், பாகம் கேட்டுப் பிரிந்தவர்கள், ஈகோ எனும் கர்வத்தால் கலைந்து போனவர்கள்,  வறட்டுப் பிடிவாதத்தால் திசை மாறி நிற்பவர்கள் என எவராக இருந்தாலும், வாழ்வில் ஒரேயரு முறை எழுச்சூர் ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் கோயிலுக்கு வந்து, ஸ்ரீநல்லிணக்கேஸ்வரரையும் ஸ்ரீசுப்ரமணியரையும் கண்களில் நீர் கசிய, மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும்... பிரிந்தவர்கள் தேடி வருவார்கள்; பழையபடி உறவாடுவார்கள். நட்பும் உறவும் பேணி வாழலாம்!

'இவரை விட்டுப் பிரிஞ்சது தப்பு. இவரோட பேசாம இருக்கிறது முட்டாள்தனம். பழையபடி இவருடைய நட்பு தொடரணும். இவருடனான உறவு மீண்டும் மலரணும்!’ என வாழ்வில் எவரை நினைத்திருக்கிறீர்களோ, அவரை மனத்தில் நினைத்துக்கொண்டு, இங்கு வந்து வழிபடுங்கள். அதன்பின் நடக்கும் அதிசயத்தை நீங்களே அனுபவபூர்வமாக உணருங்கள்!

- அருள் சுரக்கும்

படங்கள்: ரா.மூகாம்பிகை

எங்கே இருக்கிறது?

சென்னை, தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே  காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஒரகடம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது எழுச்சூர் கிராமம். பிரதான சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. பயணித்தால், ஸ்ரீநல்லிணக்கேஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு