
ஆலயம் ஆயிரம்! முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
##~## |
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மஞ்சக்குடி எனும் சிறிய கிராமத்தில் திகழும் சிவாலயமும் விஷ்ணு ஆலயமும் சமீபகாலம் வரை புதர் மண்டிய நிலையில் இடிபாடுகளுடன் திகழ்ந்தன. அந்த ஊர் இளைஞர்களின் பெருமுயற்சியால், புதர்களும் இடிபாடுகளும் அகற்றப்பட்டன. பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்து பார்த்தபோது, இந்த ஆலயங்கள் அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை என்பது தெரியவந்தது.
புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னர், மஞ்சக்குடி எனும் ஊரில் இருந்தபடி ஆட்சி செய்ததால், அவர் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
இவரின் மரபு வழியே வந்தவர்கள், அறந்தாங்கியில் கோட்டைக் கொத்தளங்கள் அமைத்து, அந்த ஊரையே தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள். ஆவுடையார்கோவில் கலைச்செல்வங்கள் முதலானவை இவர்களின் பெருங்கொடையே!
மஞ்சக்குடியுடையார் தான் பிறந்த ஊரில், அதாவது மஞ்சக்குடியில் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அந்த சைவ- வைணவ ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் இறைத் திருமேனிகளை தான் எப்போதும் வணங்கும் கோலத்தில், சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள தனது உருவச்சிலைகளை நிறுவியுள்ளார்.
மஞ்சக்குடி சிவாலயத்தின் மூலவர் லிங்கத்தின் பாணம், கல்லாக மாறிய மரப்படிவப் பாறையாகும். பழங்காலத்தில் நடுதறி என்று சொல்லி நடப்பட்டு வணங்கப்படும் மரத்தாலான லிங்க பாணம் இங்கு கல்லாகக் காட்சி அளிக்கிறது. இந்தக் கோயிலின் அம்பாள் திருமேனி, பாண்டிய நாட்டுக்கே உரிய வகையில் இரண்டு திருக்கரங்களுடன், ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைத் தொடை மேல் வைத்தும் அருமையாகக் காட்சி தருகிறது.

இங்கே உள்ள மரத்தடியில் காட்சி தரும் ஸ்ரீபைரவர், கலைமகள், அமர்ந்த கோலத்திலான தேவி ஆகியோரின் திருவடிவங்கள் நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளன. சூரியனின் ஒரு கரம் உடைந்து பின்னப்பட்டுக் காணப்பட்டாலும், திருமுகம் பேரெழிலுடன் திகழ்கிறது. கருவறையின் பின்பக்க தேவ கோஷ்டத்தில் காணப்படும் லிங்கோத்பவர் வடிவமும் சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளது.


சோதி வடிவாகிய பெருந்தூணின் மேற்புறம் மாலை சுற்றப்பட்டுள்ளது. அருகே, அண்ணலின் முடி காணப் பறந்து செல்லும் அன்னமும் (பிரமனும்), அடி காண பூமியை அகழ்ந்து செல்லும் ஏனமும் (விஷ்ணு) காணப்பெறுகின்றன. அடிமுடி காட்டாவண்ணம் அண்ணாமலையார் மான் மழு ஏந்தியவாறு அருட்காட்சி தருகின்றார்.
இந்த ஆலயத்தில் காணப்பெறும் ஸ்ரீதுர்கையின் திருவடிவமும், கணபதியாரின் திருவுருவமும் கல்லா அல்லது உலோகமா என நம்மை மயங்க வைக்கின்றன.

மஞ்சக்குடி ஆலயத்துச் சிற்பங்கள் வரிசையில் மகுடமெனத் திகழ்வது, லிங்கத்துக்குப் பால் சொரிந்தவாறு நிற்கும் காராம்பசுவின் சிற்பமே! ஒரு கல்லாலான பலகை மீது நான்கு கால்களுடன் நிற்கும் இந்தப் பசு தன் மடியை லிங்கத்தின் மீது வைத்தவாறு பால் சொரிகின்றது. அவ்வண்ணமே நின்றவாறு, அது தன் தலையைத் திருப்பி, நாக்கால் அந்த லிங்கத்தை வருடும் நிலையில் காணப்பெறுகின்றது. இக்காட்சிகள் அனைத்தும் ஒரே கல்லில் வடிக்கப் பெற்றவையாகும்.
பொதுவாக, தமிழகத்திலுள்ள திருக்கோயில் களில் இக்காட்சிக்குரிய பசு சிற்பங்களை தூண்களிலும், சுவர்களிலும் புடைப்புச் சிற்பங்களாகப் பாதி உடல் மட்டுமே வெளியில் தெரியுமாறு அமைத்திருப்பர். இங்கு மட்டுமே முழுத் தனிச்சிற்பமாகப் பசுவும் லிங்கமும் இணைந்த நிலையில் காணப்பெறுகின்றன.
மறைஞானசம்பந்தர் அருளிய 'சிவதரு மோத்திரம்’ என்னும் நூலில் நத்தை, பத்திரை, சுரபி, சுசீலை, சுனை என்ற சிவலோகத்து ஐவகைப் பசுக்கள் பற்றிக் குறிக்கப்பெற்றுள்ளன. உமாதேவியே பசு வடிவம் எடுத்து, திருவாவடுதுறை லிங்கப் பெருமான் மீது பால் பொழிந்ததாக அவ்வூர் தல புராணம் குறிக்கின்றது. மஞ்சக்குடியில் காணப்பெறும் பசுவின் திருவடிவை உமாதேவியாகவே கொண்டு நாம் வணங்கிப் போற்றுவோம்!
- புரட்டுவோம்