Published:Updated:

ஸ்ரீ சத்ய சாயிபாபா

Vikatan Correspondent

தெய்வம் மனுஷ்ய ரூபேண!

##~##

ஸ்ரீசத்ய சாயிபாபாவின் தீவிர பக்தர் படேல். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அந்தச் சிறுவனால் சரியாக நடக்க  முடியாது, நிற்கவும் முடியாது. மற்ற வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் போது, தன் மகன் மட்டும் வீட்டிலேயே இருப்பதை நினைத்து படேல் மனம் வருந்தினார். ஸ்ரீசத்ய சாயிபாபாவால் மட்டுமே தன் கவலையைத் தீர்க்க முடியும் என்று தீர்க்கமாய் நம்பிக்கை  கொண்ட படேல், உடனே  பாபாவின் ஆசியைப் பெறுவதற்காக புட்டபர்த்தி புறப்பட்டார்.

படேலின் மனைவிக்கு பாபாவின் சக்திகளில் நம்பிக்கை கிடையாது. எனவே, படேல் புட்டபர்த்திக்குப் போவது வீண் என்று நினைத்தார். ஆனால், சத்ய சாயிபாபாவே துணை என்று படேல் புட்டபர்த்திக்குக் கிளம்பிச் சென்றார்.

படேல் புட்டபர்த்திக்கு சென்றிருந்த தினம், சிவராத்திரி நன்னாள். அதனால், ஏராளமான பக்தர்கள் பாபாவின் தரிசனத்துக்காக காத்திருந்தனர். எப்படியும் பாபாவை சந்தித்து விட வேண்டும் என்ற உறுதியை மட்டும் படேல் கைவிடவில்லை. பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், படேலுக்கு பாபாவின் நேரடி தரிசனம் கிடைக்கவே இல்லை. வேதனை அடைந்த படேல், பாபாவுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.அதில் தன் மகனின் நோயைப் பற்றி எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தையாவது பாபாவிடம் சேர்க்கவேண்டும் என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். பாபாவைத் தவிர, அந்தக் கடிதத்தை வேறு யாரிடமும் கொடுப்பதாக படேல் தயாராக  இல்லை. பாபாவும் படேலின் கடிதத்தைக் கேட்கவில்லை; இவரும் கொடுக்கவில்லை. எனினும், பாபாவின் ஆசீர்வாதத்தை மட்டும் தன்னுடன் வீட்டுக்குக் கொண்டு சென்றார் படேல்.

ஸ்ரீ சத்ய சாயிபாபா

ஊருக்கு திரும்பும்போது படேலுக்கு வருத்தம்... கடிதத்தை பாபா கேட்டுப் பெறவில்லையே என்று! தன் மனைவி கேலி செய்வாள் என்ற எண்ணம் படேலை வருந்தச் செய்தது. .ஆனாலும், அவருக்கு  பாபாவின் மேலிருந்த நம்பிக்கை மட்டும் சிறிதும் குறையவில்லை.

மறுநாள், வீட்டுக்குச் சென்ற படேலுக்கு ஒரே அதிசயம்...  'அப்பா’ என்று அழைத்துக் கொண்டு படேலின் மகன் நடந்து வந்தான். அவரால் நம்பவேமுடியவில்லை. அவரது கண்கள் ஆனந்தத்தில் நிறைந்திருக்கும்போது, படேலின்  மனைவி அங்கே வந்தார். நடந்ததை அறிந்த படேலின் மனைவிக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. மகன் நடந்து விட்டான் என்ற சந்தோஷம் ஒருபுறம், சத்ய சாயிபாபாவை உணர்ந்து கொண்ட சந்தோஷம் மறுபுறம்!

- ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய 'ஸ்ரீ சத்ய சாயிபாபா’ என்ற நூலில் இருந்து...