Published:Updated:

நாரதர் கதைகள்! - 18

இது நான்கு வேத சாரம்எழுத்துச் சித்தர் பாலகுமாரன், ஓவியம்: பத்மவாசன்

##~##

லகத்தில் ஜனங்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெகுதூரம் பயணப்பட்டு, நதி தீரங்களுக்குப் போய் அங்கு தங்கி, தினமும் ஸ்நானம் செய்து, ஜபம் செய்து, 'இது புண்ணிய தீர்த்தம். இப்படி நீராடுவதில் புண்ணியம் கிடைக்கிறது’ என்று சொல்கிறார்கள். அப்படியே செய்தும் வருகிறார்கள்.

உடம்பைச் சுத்தம் செய்துகொள்வது நீராட்டத்தால் முடியும். ஆனால், இந்த உடம்பைச் சுத்தம் செய்கிற நீராட்டம் மனத்தை எப்படிச் சுத்தம் செய்கிறது? எப்படிப் புண்ணியம் கிடைக்கிறது?

நாரத மகரிஷி தன் தந்தையும், படைப்புக் கடவுளுமான பிரம்மாவை நோக்கி வினவினார். கேட்ட கேள்விக்கு அப்பால் போய் சூட்சுமமான விஷயத்தை சொல்லித் தரத் தந்தைக்குத் தெரியும் என்ற தெளிவினால், மிகுந்த ஆவலு டன் வினா எழுப்பினார்.

'படைப்புக் கடவுளை யாரும் நெருங்க முடியாது; கேள்வி கேட்டு விவாதிக்க முடியாது; என்னால் நெருங்க முடியும். என் தகப்பனை நான் நெருங்குவதைப் போலவே சாதாரண மனிதர்களை யும் நான் நெருங்க முடியும். கல்விமான்களுக்கு நடுவே போய் உட்கார முடியும். தந்தை சொன்ன சூட்சுமத்தை அப்படியே உள்வாங்கி, கல்விமான்களிடமும் நல்ல மனிதர்களிடமும் பரப்பினால், அவர்கள் அதை உலகத்திலுள்ள சாதாரண ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வர். நான்முகனின் வாக்கு தேவ வாக்கு அல்லவா? அதை சாதாரண ஜனங்களும் தெரிந்துகொள்ள வேண் டும்’ என்ற தூய மனத்தோடு நாரதர் செயல்பட்டார்.

நாரதருக்குச் சாதாரண ஜனங்கள் மீது இடையறாத வாஞ்சை பொங்கிக் கொண்டே இருந்தது.

நாரதர் கதைகள்! - 18

''உடலைச் சுத்தம் செய்ய மனிதர்கள் நீரில் மூழ்குகிறார்கள். உடலைச் சுத்தம் செய்வதுபோல உள்ளத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இது மிக அவசியம். உடலின் சூடு அடங்கி, மூளையின் கொதிப்பு குறைந்து, குளிர்ந்த நீர் உடம்பில் படும்போது ஏற்படும் மகிழ்ச்சி மனத்தை லேசாக்கி, அமைதியாக்கி, ஆழ்ந்து தன்னுள்ளே நோக்குவதற்கு உதவி செய்கிறது.

எவனொருவன் தனக்குள்ளே பார்க்கத் துவங்குகிறானோ, அவனுக்கு ஞானம் கைகூட வாய்ப்பு இருக்கிறது. விடியல் நேரத்தில் குளியல் செய்வது என்பது மனத்தை குளிர்விக்கின்ற ஒரு முயற்சி. இது நிச்சயம் நல்ல பயனைத் தரும். ஆனால், இது மட்டுமே போதாது. ஸ்நானங்கள் பத்து வகைப்படும். அவற்றை நான் சொல்லச் சொல்ல, மனத்திலே குறித்துக் கொள்வாயாக.

நீரில் வெறுமனே நீந்திக் குளிக்காமல், கிழக்குப் பக்க மாகப் பார்த்து மந்திரங்கள் சொல்லி, தலை முழுவதும் நனையும்படி உள்ளுக் குள்ளே மூழ்கி மேலே எழுவதும், மறுபடி மூழ்குவதும் ஒரு நல்ல விதமான ஸ்நானம். இதற்கு வாருணம் என்று பெயர்.

நாரதர் கதைகள்! - 18

அக்னி ஹோத்திரத்தில் கிடைத்த சாம்பலை நெற்றியில் தரித்துக்கொள்வது, தலையில் தடவிக்கொள்வது ஆக்ஞேய ஸ்நானம். வெயில் அடிக்கும்போது மழையில்  நனைவது மிக திவ்யமானது. அது திவ்ய ஸ்நானம். பசுவின் குளம்பில் கிளம்பிய புழுதி நம் உடலில் படிய நேர்ந் தால், அது வாயவ்யம் என்கிற ஸ்நானம்.

நீரில் குளிக்காமலேயே, மந்திரங்களை ஓரிடத்திலே உட்கார்ந்து ஜபிப்பது பிராம்மம் என்கிற ஸ்நானம். மேலும், துளசியில் கிடந்த நீர், சிவலிங்கத்திலிருந்து வடிந்த நீர், பசுக்களின் கொம்புகளிலிருந்து வடிந்த நீர், வேத வித்துக்களின் பாத தீர்த்தம், குரு ஸ்தானத்தில் இருக்கின்றவரின் பாத தீர்த்தம் ஆகியவற்றைத் தலையில் தெளித்துக் கொள்வதும் மிக முக்கியமான ஸ்நானங்கள்.

இவையெல்லாம் மக்களை நல்வழிப் படுத்தும் என்றாலும், மனத்தில் சிறிதளவும் ஆசைக்கு இடம் கொடுக்காமல், தனது கடமைகளை எவனொருவன் செம்மை யாகச் செய்து வருகிறானோ, அது எல்லா ஸ்நானங்களைக்காட்டிலும் மேலானதொரு ஸ்நானம்.

புனிதப்படுத்துவதுதானே ஸ்நானத்தின் குறிக்கோள்! எது மனிதனைப் புனிதப் படுத்தும்? நெல்முனையளவும் ஆசை இல்லாது அமைதியாக வாழ்கிறவன் எவனோ, அவனே மிகப்பெரிய புண்ணிய ஸ்நானம் செய்தவனாகிறான். ஆசைகளற்ற மனம் எப்போதும் புனித மாகவே இருக்கிறது; எப்போதும் குளுமையாக இருக்கிறது; எப்போதும் அமைதியாக இருக்கிறது; எப்போதும் இறைவன் அடியில் இருக்கிறது. எனவே, ஆசையற்ற மனமே மிக உன்னதமான ஸ்நானம், இதைப் பற்றி ஒரு கதை இருக்கிறது, சொல்லவா?'' - நான்முகன் விசாரிக்க, நாரதர் கை கூப்பி, ''சொல்லுங்கள்'' என்று பிரியத்துடன் கேட்டார்.

''ஓர் ஊரில் ஏழை ஒருவன் இருந்தான். அவனுக்கென்று சொந்தமாக நிலம் கிடையாது. காடுகளில் கிடைக்கின்ற காய்- கனிகளையும், கீரைகளையும் பறித்து வந்து உணவாக்கி உண்ணுவான். சிதறிய தானியங்களை எடுத்து வந்து சுத்தம் செய்து, மனைவியிடம் கொடுத்துச் சமைக்கச் சொல்லுவான். மற்றபடி, அவன் யாரிடமும் கொடு என்று யாசகம் கேட்டதில்லை. 'நாம் வறுமையில் வாடுகிறோமே, ஏழையாக இருக்கிறோமே’ என்ற எண்ணமும் அவனுக்கு வரவில்லை. எந்நேரமும்  மகிழ்ச்சியாக இருந்தான்; மலர்ச்சியாக இருந்தான். நகரங் களுக்குப் போய், அங்குள்ள மக்கள் சொல்லும் வேலைகளைக் கடுமையாக உழைத்துச் செய்வான். அவர்கள் கொடுக்கும் காசுக்கு உடைகளும் பண்டங்களும் வாங்கி வந்து, மனைவியிடம் கொடுப்பான். 'இப்படி காசு பற்றிய சிந்தனையே இல்லாமல், சொத்து சுகம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக் கிறீர்களே’ என்று அவன் மனைவி அடிக்கடி வருத்தப்படுவாள்.

நாரதர் கதைகள்! - 18

'காடு நிறைய கனிகள் இருக்கின்றன. பல்வேறு விதைகள் இருக்கின்றன. தானியங்கள் இருக்கின்றன. பின்பு, எதற்காக இயற்கை கொடுத்த வரத்தைப் புறக்கணித்துவிட்டு, இன் னும் அதிகம் வேண்டும் என்று சம்பாதிக்க வேண்டும்? உடம்பை மறைக்க நமக்குப் போதுமான துணிகள் இருக்கின்றன. இவை போதுமானவை. இதைத் தாண்டி அதிகம் துணிகள் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறோம்? நம் வீடு திறந்தே இருக்கிறது. காற்று எப்போதும் சுகமாக வீசுகிறது. அருவியில் நீர் கொட்டுகிறது. ஆற்றில் வழிந்து ஓடுகிறது. அந்த ஆறும் அருகில்தான் இருக்கிறது. இப்படி எல்லாவித வசதிகளும் இருக்கிறபொழுது, எதற்குச் சொத்து சேர்க்க வேண்டும்? எதுவுமே இல்லாத இந்த வீட்டுக்குக் கள்வர் பயம் இல்லை. யாரேனும் விருந்தினர் வந்தால் உபசரிக்க, காடுகளில் பொருட்கள் உண்டு. குடிப்பதற்கு நீர் உண்டு. இதைத் தாண்டி, நமக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறாய்? எனக்கு இது போதும்!’ என்று தீர்மானமாக மறுத்துவிட்டான்.

அவனுக்குக் காசு ஆசை வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினாள் அவன் மனைவி. அவன் மனத்தை மாற்ற வேண்டும் என்று கெஞ்சினாள். இறைவன் அவளுக்கு உதவி செய்யத் தீர்மானித்தான்.

ஒருநாள், அந்த ஏழை பழம் பறிக்கப் போனபோது ஒரு தங்கக் கட்டியை அங்கே இருக்கும்படி வைத்தான். பழங்களைப் பறித்தவன், அந்தத் தங்கக்கட்டியை எடுத்துப் பார்த்தான்.

'அடடே! எவ்வளவு பெரிய தங்கக் கட்டி! இதைக்கொண்டு மனைவி கேட்பது அத்தனை யும் வாங்கிவிட முடியுமே! இதை ஏன் நான் எடுத்துக்கொள்ளக் கூடாது?’ என்று எண்ணினான். அவன் மனம் தடுமாறிற்று.

கடவுள் அவன் என்ன செய்கிறான் என்று கவனித்தார். 'காட்டில் கிடைக்கும் பழங்களை நான் பொறுக்கி எடுத்துக்கொள்கிறேன். அதை உண்கிறேன். அதேபோல, காட்டில் ஒரு தங்கக் கட்டி கிடைக்கிறது. இதை எடுத்துக் கொண்டால் என்ன தவறு? நான் யாசகம் கேட்கவில்லை; கொள்ளை அடிக்கவில்லை; பிறரைத் துன்புறுத்தி இந்தத் தங்கக்கட்டியை அடையவில்லை. இதை கூலியாகக்கூடப் பெறவில்லை. வெறுமே துணிமணிகளை, உண்ணும் பண்டங்களை நான் காசு கொடுத்து வாங்குவது வழக்கம். இப்படித் தங்கக்கட்டி கிடைத்திருக்கும்போது, அதை விற்றுக் காசாக்கி, அவற்றை ஏன் நான் வாங்கிக்கொள்ளக் கூடாது? கடவுள் பழம் கொடுப்பதுபோல தங்கக் கட்டி கொடுத்திருக்கிறார். அவ்வளவுதானே? இதை எடுத்துக்கொள்வதில் தவறில்லை!’ என்று யோசித்தான்.

தங்கக் கட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டான். உடனே இன்னொரு யோசனை. 'கூடாது! கூடுதலாக ஒரு பொருளை நான் சேமித்துக் கொள்ளக் கூடாது. எனக்கு இந்தத் தங்கக் கட்டி வேண்டாம். பசிக்குப் பழம் இருக்கிறது. காய் இருக்கிறது. கீரை இருக்கிறது. மரத்தண்டுகள் இருக்கின்றன. குடிக்க நீர் இருக்கிறது. எனக்கு அவை போதும். வேறு எதுவும் வேண்டாம்’ என்று தங்கத்தைக் கீழே போட்டான். வீடு நோக்கி நடந்தான்.

நாரதர் கதைகள்! - 18

நாராயணர் சட்டென்று ஒரு ஜோதிடர் உருவம் எடுத்தார். நேரே அவன் மனைவியிடம் போனார். ''உன் கணவனின் ஜாதகப்படி இந்த நேரம் அவனுக்கு ஒரு தங்கக் கட்டி கிடைத் திருக்க வேண்டும். ஆனால், கிடைத்த பிறகும் அந்தத் தங்கத்தை உன் புருஷன் உதறிவிட்டு வருகிறான். இது தவறு. பின்னால் பெருத்த வறுமை வந்து சேரும். தங்கக் கட்டியை எடுத்து வரச் சொல்'' என்று தூண்டினார்.

அந்த ஏழை வீட்டுக்கு வந்தவுடன் மனைவி விசாரித்தாள். ஜோதிடர் சொன்னதைச்  சொன்னாள். ஜோதிடரும் அதை விவரித்தார்.

''ஆமாம். தங்கக்கட்டி இருந்தது. அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டேன். எனக்கு எதற்கு தங்கக் கட்டி?'' என்று கேட்டான் ஏழை.

''உடனே போய் அதை எடுத்து வாருங்கள். அல்லது, எங்கிருக்கிறது என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்து வருகிறேன்'' என்று மனைவி தவித்தாள். ஜோதிடரின் காலில் விழுந்து, கணவனின் மனத்தை மாற்றும் விதமாக அவனிடம் பேசச் சொன்னாள். ஜோதிடரும், ''தானாக வரும் ஸ்ரீதேவியை ஏன் வேண்டாமென்று தள்ளுகிறாய்? போய் எடுத்துக் கொண்டு வா!'' என்றார்.

'தங்கம் வீட்டுக்கு வந்து சேர்ந்தால், அதைப் பாதுகாக்கின்ற பயம் வந்து சேரும். என்னிடம் தங்கம் இருப்பது தெரிந்தால், உற்றார் உறவினர் நாடி வருவார்கள். தங்களுக்கும் பங்கு கேட்பார்கள். பங்கு பிரிப்பதில் தகராறு வரும். வம்புகள் வரும். ஊர் இரண்டு படும். உறவுகள் இரண்டு படும். கள்வர்கள் இந்த இடத்தை நாடி வருவார்கள். சண்டை வரும். எங்களைச் சிலர் நையப் புடைப்பார்கள். தங்கத்தை கொண்டு வருவானேன்; சிலரின் பகையைச் சம்பாதித்துக் கொள்வானேன். இப்போது மிகுந்த நிம்மதியாக இருக்கிறேன். எனக்கு அது போதும். தங்கம் வேண்டாம்!'' என்று தீர்மானமாக மறுத்து வீட்டுக்குள் வந்து அமர்ந்தான். அவன் மனைவி திகைத்தபடி பார்க்க, ஜோதிடராக வந்த ஸ்ரீநாராயணர் தன் திவ்ய ரூபத்தை அவர்களுக்குக் காட்டினார். அவள் மயக்கத்திலிருந்து மீண்டு, தெளிவான சிந்தனை உடையவள் ஆனாள்.

''நாரதா, இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆசை இல்லாமல் வாழ்வதே பெரிய தர்மம். கோபத்தை ஜெயிப்பதே மிகப்பெரிய புண்ணிய ஸ்நானம். தயவுகொள்ளும் நெஞ்சத்தைக் கொள்வதே பெரிய ஜபம். திருப்தியே தனம். காய்கறி வகை ஆகாரமே அமிர்தம். உபவாசமே தவம். இவற்றைப் பெற்றவனே புனிதன். இகத்திலும் பரத்திலும் அவன் சுகமாக வாழ்வான்'' என்றார் பிரம்மன்.

நாரதர் தெளிவு பெற்றார். தந்தையை வணங்கினார். இதை மற்றவருக்குச் சொல்ல, அங்கிருந்து கிளம்பினார்.

- தொடரும்...