Published:Updated:

அருள் கிடைத்த கதை!

ஐயப்ப மலர்கள்!வி.அரவிந்த் ஸுப்ரமண்யம்

##~##

சாஸ்தாவுக்கு உரிய மிக அற்புதமான விரதங்களில் முக்கியமானது உத்திர விரதம். இந்த விரதத்தை அனுஷ்டிப்பது பற்றிப் பார்த்தோம். அப்படி அனுஷ்டிப்பதால் உண்டாகிற பலன்களைச் சொல்லும் கதையன்றை இப்போது பார்ப்போம்.

ஒருமுறை, விருத்தாசுரன் எனும் அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். (விருத்ராசுரன் என்றும் சொல்வர்) அதில் ஆத்திரம் அடைந்த இந்திரன், சேனைகளின் துணையுடன் அசுரனை எதிர்த்தான். ஆனால், தோல்வியே மிஞ்சியது. இந்திரலோகம் அசுரர் வசமானது. இந்தக் கவலை யில் இந்திரன் இருந்தபோது, ''காலத்தின் பிரதிகூலத்தால் உண்டாகியிருக்கும் இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, துக்க நாசகரான ஸ்ரீமஹா சாஸ்தாவின் பேரருளைப் பெறுவது ஒன்றே வழி! ஐயன் ஸ்ரீசாஸ்தாவின் ஜன்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளில் விரதம் கடைப்பிடி. அதன் பயனாக நீ பராக்கிரமங்கள் பெற்று, அசுரர்களை எளிதில் வெல்லலாம்'' என்று கூறி, அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும் முறையையும் எடுத்துரைத்தார் குலகுருவான பிரகஸ்பதி.

இந்திரனும், ஓர் உத்திர நட்சத்திர நாளில், சாஸ்தா வின் மூல மந்திரத்தை ஜபித்தபடி, கடும் விரதம் மேற் கொண்டான். ஒரு வருட காலம் சாஸ்தாவை பக்தியுடன் பூஜித்தான். அவன் பக்தியையும், விரதத்தையும் மெச்சிய சாஸ்தா, அவன் முன் காட்சி தந்தருளினார்.

அருள் கிடைத்த கதை!

''அமரர்கோனே! உனது விரதத்தால் மகிழ்ந்தேன். உன் எதிரியான விருத்தாசுரனை வதைக்க நீ இப்போது வைத்திருக்கும் ஆயுதங்களால் பயனேதும் இல்லை. என் தந்தையின் பக்தரும் தவசீலருமான ததீசி முனிவரின் முதுகெலும்பை வேண்டிப் பெற்று, அந்த எலும்பைக் கொண்டு வலிமையான ஓர் வஜ்ராயுதம் தயார் செய்வாயாக! அந்த ஆயுதத்தால் மட்டுமே விருத்தாசுரனை அழிக்க முடியும்!'' என்று ஆசி கூறி மறைந்தார். இதனைக் கேட்ட தேவேந்திரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்து, அவரை வணங்கி, தான் வந்திருக்கும் காரணத்தைத் தயக்கத்துடன் கூறினான்.

ததீசி முனிவர் சற்றும் தயங்காமல், ''இந்திரா! இறந்த பின்பு யாருக்குமே பயன்படாமல் மண்ணுக்கு இரையா கும் இந்த உடலால் தேவர் குலத்துக்கு ஒரு நன்மை ஏற்படும் என்றால், அது என் பாக்கியம்!'' என்று மகிழ்ச்சியுடன் கூறி, யோக வலிமையால், தன் உயிரை உடலிலிருந்து பிரித்தார். உடனே, சிவ கணங்கள் அங்கே வந்து, ததீசி முனிவரின் உயிரை அழகியதொரு விமானத்தில் ஏற்றி, தக்க மரியாதைகளுடன் திருக் கயிலைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அருள் கிடைத்த கதை!

தேவேந்திரனும் முனிவரின் முதுகெலும்பைக் கொண்டு, வலிமை மிக்க வஜ்ராயுதத்தைத் தயார் செய்து கொண்டு மீண்டும் போருக்கு வந்தான். நொடிப் பொழுதில் அசுரக் கூட்டம் அழிந்தது. விருத்தாசுரன் அங்கிருந்து தப்பித்து, கடலுக்கடியில் சென்று மறைந்து கொண்டான்.

இந்திரன் மீண்டும் சாஸ்தாவை தியானித்து, அரக்கனை அழிக்க ஓர் உபாயம் கூறுமாறு வேண்டினான். சாஸ்தாவும் அசரீரியாக அவனுக்குப் பதில் உரைத்தார். ''இதற்கு உதவ என் பக்தனான அகத்தியனால்தான் முடியும். அவர் கடல் நீர் முழுவதை யும் குடித்துவிட்டாரானால், மறைந் திருக்கும் அசுரனை நீ எளிதில் கண்டுபிடித்துக் கொல்லலாம்'' என அருளினார்.

ஐயனின் ஆக்ஞையை குறு முனிவரிடம் சொல்லி, அவர் உதவியை நாடினர் தேவர்கள். அகத்தியரும் அலைகடல் முழுவதையும், ஓர் உளுந்தின் அளவாக்கி, தன் உள்ளங் கையில் வைத்து, சாஸ்தாவை தியானித்தபடி பருகினார். கடல் நீர் வற்றிப்போனது. உள்ளே இருந்த விருத்தாசுரன் வெளிப்பட்டான். இந்திரன் பகவானைப் பிரார்த்தித்து, வஜ்ராயுதத்தை அவன் மேல் ஏவ, அது அவனை அழித்தது. இவை அனைத்துக்கும் காரணம்... உத்திர நட்சத்திர விரதம்!

இதேபோல், உத்திர நட்சத்திர விரத மகிமையைச் சொல்லும் இன்னொரு கதையும் உண்டு.

அருள் கிடைத்த கதை!

பாஞ்சால தேச வேந்தனான வீரதேவனுக்கு சுமதி, லாவண்யா என இரண்டு மனைவிகள். இளைய மனைவியான லாவண்யா, மூத்தாளிடம் பொறாமை கொண்டு, அவளை ஒழிக்க எண்ணினாள். இந்த நிலையில், பட்டத்து ராணியான சுமதி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஊழ்வினையின் பயனாக, அந்தக் குழந்தை பிறக்கும்போதே குஷ்ட ரோகத்துடன் பிறந்தது. இதனைக் காரணம் காட்டி, இளைய மனைவி, மன்னனின் மனத்தைத் தூண்டிவிட்டு, மூத்தாளைக் காட்டுக்கு விரட்டினாள்.  

சாஸ்தா மீதான பக்தியையே துணையாகக் கொண்டு, தன் மகன் ஜெய தேவனுடன் சென்று, பல இடங்களில் உதவியை நாடினாள் சுமதி. தான் ஓர் அரசி என்பதை மறைத்து, அந்தணர் ஒருவரின்  இல்லத்தில் அடைக்கலம் புகுந்து, அங்கு பணிபுரிந்து வந்தாள்.

வருடங்கள் உருண்டோடின. ஜெய தேவனும் இளமைப் பருவத்தை அடைந்தான். ஆனாலும், அவன் நோய் மட்டும் குணமாகவே இல்லை. இந்த நிலையில், அவர்களின் வீட்டுக்கு வந்த சாஸ்தாவின் பக்தரான வேதியர் ஒருவர், ஐயனுக்கு உகந்த உத்திர நட்சத்திர விரதத்தின் பெருமையை எடுத்துரைத்தார்.  

சுமதியும், உத்திர நட்சத்திர நாளில் துவங்கி, ஒரு வருடம் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தாள். அதன் பயனாக, அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் ஜெயதேவனின் பெருநோய் குணமானதோடு, அவன் முன்னிலும் அழகனாகப் பிரகாசித்தான்.

அருள் கிடைத்த கதை!

அந்தத் தேசத்து அரசன், சாஸ்தாவின் அருளால் நடந்த அதிசயத்தைக் கேள்வியுற்று, தன் மகளை ஜெயதேவனுக்கு மணம் செய்து கொடுக்க விரும்பினான். சுமதியிடம் உண்மைகளைக் கேட்டறிந்த அந்த மன்னன், ஜெயதேவனின் தந்தையான பாஞ்சால அரசனிடம் விவரங்களைக் கூறி, சம்மதம் கேட்டான்.

அதுவரை பிள்ளைப் பேறில்லாமல் தவித்துக்கொண்டிருந்த பாஞ்சால அரசனும் நடந்ததையெல்லாம் அறிந்து தன் தவறுக்கு வருந்தி, மனைவியைச் சந்தித்து, அவளிடம் மன்னிப்புக் கேட்டான். பிறகு, உரிய முகூர்த்தத்தில் ஜெயதேவனுக்கும் இளவரசிக்கும் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.

ஹரிஹர சுதன், ஸ்ரீஐயன் ஐயப்ப ஸ்வாமியின் ஜன்ம நட்சத்திரமான உத்திர நட்சத்திர நாளில் அனுஷ்டிக்கப்படும் விரதம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. இந்த விரதம் அனுஷ்டித்த பலனால், பகாசுரனை அழித்து வென்றான் பீமன். அர்ஜுனன் துரியோதனாதியரை ஜெயித்தான்.  

சரணகோஷத்தின் சக்தியை அடுத்து அறிவோமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு