மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

? நாகரிகம் வளர்ந்துவிட்ட இன்றையச் சூழலில், பாலியல் பலாத்காரங்களும்  பெருகி வருகின்றன. முற்காலத்தில் சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். அதனால், இதுபோன்ற குற்றங்கள் அன்றைக்கு அபூர்வம். இன்றைக்கு தாமதத் திருமணம், பாலியல் கல்வி குறித்த விழிப்பு உணர்வு இல்லாமை போன்ற காரணங்களாலேயே பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதற்குத் தீர்வுதான் என்ன?

- கே. கன்னியப்பன், சாத்தூர்

தாம்பத்ய உறவுக்கு ஏங்கும் மனமானது, உச்ச கட்டமாக பாலியல் பலாத்காரத்தில் இறங்குவது உண்டு. செல்வமும் செல்வாக்கும் பெற்ற மனம், சிலநேரம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடத் தயங்காது. தாம்பத்தியத்தில் திருப்தி இருந்தும் தருணம் ஏற்பட்டால் திரைமறைவில் பலாத்காரத்தை அரங்கேற்றுவது உண்டு. ஏழ்மையுடனும், பாதுகாப்பு இல்லாமலும் இருக்கும் பெண்மையும் பலாத்காரத்துக்கு இரையாகும்.

வெளிச்சத்துக்கு வந்த பாலியல் பலாத்காரங் களைவிட, இருட்டில் மறைந்த பலாத்காரங்கள் ஏராளம். இளம் சிறுமிகள் மட்டுமல்ல... சாதி, மதம், வயது பாகுபாடுகளைக் கடந்து பலாத்காரம் வெற்றி பெறுவது உண்டு. 'திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்து, அவர்களில் தோன்றிய மழலைகளுக்கு அங்கீகாரம் அளிக்க சட்டம் இயற்ற வேண்டும். அவர்களது உறவை திருமண உறவாக மதிக்கும் எண்ணம் இருக்க வேண்டும்’

என்று சிபாரிசு செய்யப்படுகிறது. பலாத்காரத்தைத் தட்டிக்கேட்க இயலாத நிலையில்... பாதிக்கப்படும் பெண்மை, விருப்பம் இல்லாவிட்டாலும் தன்னை பாதிப்புக்கு ஆளாக்குபவரின் மனைவியாகவோ சின்ன வீடாகவோ வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவது பரிதாபம்.

ஆண்- பெண் சரிசமம் என்பது சொல்லளவில் இருந்தாலும், ஆணவம் வரம்பு மீறி செயல்படுவது, சமுதாயச் சீரழிவுக்குக் காரணமாகிவிடுகிறது. பாதுகாக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஆண்மையே பயிரை மேய்வது மகாபாவம்.

பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?

?கடுமையான தண்டனைகள் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்குமா?

பண்டைய காலத்தில் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள்,  கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். தவற்றுக்குக் காரண மான உடல் அவயவங்களை இழக்கும் தண்ட னைகள் தரப்பட்டன. சர்க்கரை வியாதிக்கு ஆளானவன், உயிரைத் தக்கவைக்கும் பொருட்டு காலை இழப்பதற்குத் தயங்குவதில்லை. பாம்பு தீண்டி விஷம் பரவிய விரலை இழக்கவும் சுணக்கமுற மாட்டோம். 'தவறு எதுவாக இருந்தாலும் மரண தண்டனை கூடாது’ என்று புதிய சிந்தனையாளர்கள், தங்களை நவீன புத்தராகப் பிரகடனப்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதன் பக்க விளைவுகள், கொடுமையான குற்றங்களால் புரையேற்றி சமுதாயத்தைச் சாய்த்துவிடும் என்பதை மறந்துபோகிறார்கள்.

'தனது உயிரை தன்னிச்சையாக மாய்த்துக் கொள்ளவே அதிகாரம் இல்லாத நிலையில், மற்றவர்களுக்கு மரண தண்டனை அளிப்பது கூடாது’ என்பது வாதத்துக்கு வேண்டுமானால் பொருந்தும். அதேநேரம், கொலையைவிடவும் அதிக சித்ரவதைக்கு மற்றவர்களை ஆளாக்குவதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதையும் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது சமுதாயத்தில் பலாத்கார பாதிப்புகள் குறையும்.

?அரசாங்கம் நினைத்தால் முறையான சட்டங்கள் மூலம் பாலியல் குற்றங்களைத் தடுக்கலாமே?

நெருப்பைத் துணியால் மூட இயலாது. சந்தனத்தின் நறுமணம் பரவுவதையும் கட்டுப்படுத்த இயலாது. கொசுவை அடித்து ஒழித்துவிட இயலாது. குடும்பக்கட்டுப்பாடு, விவாகரத்து, மறுமணம் ஆகியனவும் பாலியல் பலாத்காரத்துக்கு மறைமுகமாக ஊக்கமளிக்கின்றன. காமாந்தக்காரர்களை அடையாளம் கண்டு, அவர்களை சட்டத்தால் அடக்க இயலாது. மனமாற்றம் ஒன்றுதான் மருந்து. சட்டத்தை இயற்றி வெற்றி பெறலாம் என்று நினைப்பது, இதுபோன்ற தவறுகளை மறைமுகமாக வளர்க்கவும், அதன் வளர்ச்சியைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்குமே வழிவகுக்கும்.

குடியரசில் தலைவனின் எண்ணமும் கொள்கையும் தொண்டர் களின் எண்ணமாக மாறிவிடுகிறது. அதுவே, சட்டமாக உருவெடுக் கிறது. மக்களின் எண்ணம் சட்டமாக மாறக்கூடாது. மக்களை மேம்படுத்தும் எண்ணங்களே சட்டமாக வேண்டும். மக்களின் மேம்பாடுதான் குடியரசின் உயிரோட்டம். மாற்றத்துக்கு உள்ளாகும் மக்களின் விருப்பங்கள் சட்டமாக்கப்பட்டால், காலப் போக்கில் சட்டப்புத்தகம் பெரிய புத்தகமாகக் காட்சியளிக்குமே தவிர, சமுதாயக் கொந்தளிப்புகள் அடங்காது. சட்டம் இயற்றுவது என்பது தலைவர்களின் அன்றாட அலுவலாகிப் போகும்.

பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?

?ஆக, சட்டங்களால் மட்டுமே பாலியல் பலாத் காரத்தை ஒழித்துவிட முடியாது என்கிறீர்களா? பிறகு, வேறு எந்த வகையில் தீர்வு காணமுடியும்?

மக்களிடம் பண்பும், பாசமும், நேசமும், சகிப்புத் தன்மையும், புலனடக்கமும் வளர வேண்டும். பண்டைய அறநூல்கள் யாவும், பாலியல் பலாத்காரத்தை மனத்தளவிலும் எண்ணாதபடி செய்தன. மக்கள், எவருடைய தூண்டுதலும் போதனையும் இல்லாமலேயே அந்த பாவச் செயலில் இருந்து விலகிச் சென்றார்கள். தனக்கு உரிமை இல்லாத பெண்மையின் மீது தவறான எண்ணம் மனத்தில் உருவாவது தவறு என்று உணர்ந்திருந்தார்கள் அன்றைய மக்கள். கடைக்கண் பார்வை, தொட்டுப் பேசுவது, அரவணைப்பது, சேர்ந்து வாழ்வது ஆகிய அத்தனையும் உடலுறவுக்குச் சமம் என்று சுட்டிக்காட்டி, பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் பார்க்கும் பாங்கை ஊட்டி வளர்த்தார்கள். அது, ராம ராஜ்ஜியமாகத் திகழ்ந்தது.

பால்ய விவாகத்தின் கொடுமையை அகற்ற 'சாரதா’ சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இன்றைக்கும் பால்ய விவாஹம் அரங்கேறுகிறது. ஆக, எப்போதும் மனத்தைப் பக்குவப்படுத்த  சட்டம் பயன்பட்டது இல்லை. அறக் கல்வியே பயன்பட்டது.

'பாலியல் பாடம் பாடத் திட்டத்தில் இருக்க வேண்டும்’ என்ற புது சிந்தனையாளர்களின் கூற்று ஆராயாமல் எடுத்த முடிவு. அத்தனை உயிரினங்களுக்கும் இயற்கை போதித்த பாடத்தை, ஆறாவது அறிவுபெற்ற மனிதனுக்கு புத்தக வடிவில் கொடுத்து, திரும்பவும் அசைபோட வைப்பது அறியாமையின் வெளிப்பாடு. அறக்கல்வியை மனத்தில் சொருகினால், பாலியல் பலாத்காரம் அறவே மறைந்துவிடும்.

ங்களது கூற்று பொருத்தமற்றது. பண்டையகால சட்ட திட்டங்கள் இன்றைய புதிய தலைமுறையின் சிந்தனைக்கு ஒத்து வராது. அறக்கல்வி தேவையற்றது.

சுமுகமான சூழலுக்கு உகந்த அத்தனையும் அறக்கல்வியே. 2-ம் உலகப் போர் தந்த அனுபவத்தில் அன்றைய சிந்தனையாளர் கள் ஐ.நா சபையை ஏற்படுத்தி, உலக நாடுகளின் ஒற்றுமையை நிலைப்படுத்தினார்கள். அத்தனை உறுப்பு நாடுகளும் தங்களை வளமாக்கிக் கொண்டிருக்கின்றன. அத்தனை நாடுகளும் இடையூறின்றி குடியரசை ஏற்று, விஞ்ஞானக் கல்வியில் புதுப்புது எண்ணங்களுக்கு உகந்தவாறு புதுப்புது சுவையைச் சுவைத்து மகிழ்கின்றன.  பழைய கண்ணோட்டத்தையே பிடித்துக்கொண்டிருந்தால் எல்லாம் பிழையாகவே தெரியும்.

பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா?

?எனில், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால், சரியாகிவிடுமா?

ஆமாம்! சரி, தவறு என்பதெல்லாம் கண்ணோட்டத்தைப் பொறுத்ததே. அன்றைய அறமும் அப்படித்தான். பால்ய விவாகத்தை நிறைவாகப் பார்த்தது அறம். புதிய சிந்தனையோ குறையாகப் பார்க்கிறது. அதனால், பல இளம் விதவைகள் உருவாவதைத் தடுக்க முடிந்தது. அன்றைக்கு விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. இன்றைக்கு விவாகரத்து என்பது, வாழ்நாள் முழுதும் சித்ரவதையில் துயரப்படும் தம்பதிகளுக்கு விடுதலை அளித்து மகிழவைக்கிறது. அன்றைக்குக் குடும்பக்கட்டுப்பாடு தவறாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு, உற்பத்தியாகும் உணவைப் பகிர்ந்தளிக்க முடியாத அளவுக்கு, நாடு ஏழ்மையைச் சந்திக்கும் ஒரு நிலையை அண்டவிடாமல் தடுக்க, குடும்பக்கட்டுப்பாடு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.

வாழும் உரிமையுள்ள விதவையை வாழவிடாமல் தடுத்தது அறம்; மறுமணம் அளித்து அவளை வாழ வைத்தது புது சிந்தனை. பிறந்த மனிதர்கள் எல்லோரும் சமம் என்ற சட்டம் மனத்தில் ஆழமாகப் பதியும்போது, குற்றங்கள் சிறுகச் சிறுக மறையும். எனவே, முன்னதாகவே பாலியல் பாடத்தை மனத்தில் பதிக்கும்போது, அதன் தரத்தை உணர்ந்து தன்னிச்சையாகவே எச்சரிக்கையுடன் பழகும் பாங்கும் மனத்தில் தோன்றிவிடும்.

?சரி! புதிய கண்ணோட்டத்தையே ஏற்பதாக வைத்துக்கொள்வோம். அதன் வழி தீர்வுகள்தான் என்ன?

தற்போதைய சூழலில், பண்டைய அறத்தின் வாசனையற்ற மனம் படைத்தவர்களில், பழைய கோட் பாடுகள் அரங்கேறாது. சந்தர்ப்பம், சூழல், சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சட்டங்கள் உருவாகவேண்டும். காமாந்தகக்காரர்கள் என்றென்றும் இருப்பார்கள். அவர்களைத் தண்டிப்பதால் மட்டுமே விருப்பம் ஈடேறிவிடாது. எல்லோரும் மனம்விட்டு இணைந்து பழகி, எண்ணங்களின் பரிமாற்றம் நிகழும்போது, பாலியல் பலாத்காரம் தலைதூக்காது. அதை, தற்போது இமாலய தவறாகப் பெரிதுபடுத்து வது பழைய சிந்தனை. புதிய சிந்தனை அதை எதிர்பாராமல் நிகழ்ந்த ஒரு செயலாகவே ஏற்கும். மக்களை வாழவைப்பது குடியரசு. தண்டிப்பது மட்டுமே அதன் வேலையல்ல.

செயலின் விளைவை விளக்கி, நல்ல மனிதனாக்கி சமுதாய ஓட்டத்தில் அவனையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வாழப் பிறந்தவர்கள் மக்கள். அவர்களைத் துயரத்தில் ஆழ்த்தும் செயல்களைச் சுமத்துவது, அவர்களுடைய பிறப்புரிமையைப் பறிப்பதாகும். ஆகையால் பண்டைய அறம் குறித்த விஷயத்தில் மனமாற்றம் வேண்டும். வாழ்க்கை முறைக்கும் புது சிந்தனைக்கும் உகந்த முறையில் ஏற்படுத்தும் சட்டங்கள் குறையை இல்லாமல் செய்துவிடும். தங்கள் கண்ணோட்டம் மாறினால் இது தவறாகாது.

சொல்வளத்துடன் கூடிய உங்கள் கருத்துக்கள், புதிய சிந்தனை யாளர்களின் மனத்தைத் தொடலாம். ஆனால், அவை உண்மை ஆகிவிடாது.

மக்களின் விருப்பம் சட்டமாக மாறுவதால் அவர்கள் ஏற்பார்கள், மதிப்பார்கள், பாராட்டுவார்கள். மக்களின் எதிர்காலத்தில் அக்கறை இல்லாத  செயல்பாடுகள் சட்டமாக்கப்பட்டாலும், தலைவனுக்குக் கட்டுப்பட்ட மக்கள் விருப்பம் இல்லையென்றாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

? பெரும்பான்மை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும் அத்தனைச் சட்டங்களும், பக்க விளைவுகளையே சுமக்கவைக்கும் என்கிறீர்களா?

சரியாகச் சொன்னீர்கள்! தொலை நோக்குடன், எத்தகைய சிந்தனை மாற்றத்துக்கும் பொருந்தும் நலமான சட்டங்களே தேவைப் படுகின்றன.

பண்டைய காலத்துத் திருமணம் உடலுறவை முன்வைத்து நிகழவில்லை. ஆகையால், அப்போது பெண்ணானவள் பெரியவள் ஆவதற்கு (பூப்பெய்துவதற்கு) முன்பே திருமணம் அரங்கேறும். ஆண்-பெண் இருவரது நட்பைத் திருமணம் இறுக்கமாக்கும். அப்படி பல வருடங்கள் நட்பில் இணைந்த இருவரிடமும், இளமை எண்ணங்கள் வளர்ந்து அதை நிறைவேற்றத் துடிக்கும் வேளையில், ஏற்கெனவே நட்பில் இணைந்த இருவரிடமும் பரிபூரணமான நிறைவைத் தந்து மகிழவைக்கும். இன்பத்தின் எல்லை இதுதான் என்ற எண்ணம் மனத்தில் பதிந்துவிடும். அடிக்கடி உறவுக்கான எண்ணம் மிகுந்தாலும், பழைய இன்பத்தின் நினைவிலேயே இணைந்து மகிழ்வார்கள். அவர்களின் மனம் வேறொருவரை ஏறிட்டுப் பார்க்காது. பாலியல் பலாத்காரம் என்ற சொல்லே அவர்கள் மனத்தில் தோன்றாது.

வயிறு நிறையச் சாப்பிட்டவன், அந்த உணவு எத்தனை ருசியாக  இருந்தாலும் உடனடியாக மீண்டும் ஒருமுறை சாப்பிட முற்பட மாட்டான். அதேபோன்று, தங்கு தடையின்றி நட்போடும் அன்போடும் இணையும் தம்பதிகள் சுவையின் முழுமையை எட்டும்போது, இன்னொருவரிடத்தில் அன்பு சுரக்க இடமிருக்காது.

? போகாத ஊருக்கு வழி சொல்லக்கூடாது. பால்ய விவாகங்களிலும் குறைகள் உண்டு அல்லவா?

பால்ய விவாகத்தை குறையாகப் பார்த்து, புதுச் சட்டங்கள் மூலம் கட்டவிழ்த்துவிட்டது, பாலியல் பலாத்காரம் தாண்டவமாட இடமளித்துவிட்டது. அடிக்கடி திருமணத்தை சந்திக்கும் நிலையை உருவாக்குவது விவாகரத்து. அதில் புகுந்தவர்கள், பண்பை உதாசீனப்படுத்தி, பாலியலில் இருக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்பவர்களாக மாறிவிடுவதும் உண்டு. கட்டுக்கடங்காத பெண்ணாசை பாலியல் பலாத்காரத்துக்கு வழிகோலும். நட்பில் இணைந்த தம்பதிகளின் பிணைப்பு, கட்டுக்கடங்காமல் உடல் வேட்கை வளர்வதை காலப் போக்கில் தடுத்து முறையாக, சுதந்திரமாக, இயல்பாக உறவின் நிறைவை எட்டவைக்கும். அவர்கள் காமாந்தகர்களாக மாறும் நிலையே தலைதூக்காது.

பால்ய விவாகம் என்று முத்திரை குத்தி, அதில் ஏற்படும் எதிர் விளைவுகளை இமாலயமாகக் காட்டி எல்லோரையும் நம்ப வைத்ததனால்,  கட்டுக்கடங்காத பாலியல் பலாத்காரத்தை மக்கள் சந்திக்க நேர்ந்ததை நினைவுகூர வேண்டும். பால்ய விவாகங்களைவிடவும், வயது வந்த விவாகங்களில் விதவைகளின் எண்ணிக்கை அதிகம். நல்லெண்ணத்தில் பால்ய விவாகம் நிறுத்தப்பட்டது. அதன் பக்கவிளைவு, பாலியல் பலாத்காரத்துக்கு ஊக்கமளிக்கிறது.

அறக்கல்வியை போதித்து மனமாற்றத்தை ஏற்படுத்தினால் வெற்றிபெறலாம். சட்டங்கள் மூலம் சாதிக்க நினைத்தால், எதிரிடையான பலனை ஏற்க நேரிடும். இன்றையச் சூழலில் பெரும்பாலும் பால்ய விவாகம் நிகழ அவகாசம் இல்லை. இருபாலரும் கல்வியை முடிக்க 25 வயது வரை காலம் வேண்டியிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பால்ய விவாகம் நிகழ்ந்தாலும், படித்துப் பட்டம் பெற்ற பெண்கள் திருமணத்தை சிறு வயதில் ஏற்பதில்லை. கல்விக்கூடங்களில் பண்புக் கல்வி போதிக்கப்பட்டால், காலப்போக்கில் பாலியல் பலாத்காரம் தானாக மறையும்.

ங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

பாலியல் பலாத்காரம் என்பது இருவரையும் பாதிக்கிறது. பெண்மை எங்கு போற்றப்படுகிறதோ அங்கு தேவதைகள் அருள் பாலிப்பார்கள் என்ற ஸனாதனத்தின் அறிவுரை மனத்தில் பதிய வேண்டும். அதற்கு, சிறு வயதிலேயே பண்பை போதிக்க வேண்டும். இன்று அதன் மறைவு, பாலியல் பலாத்காரத்தை வளரவைத்திருக்கிறது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.