2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 4

விதையும் வேரும்... டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியங்கள்: அரஸ்

##~##

ரு மரத்தில் இருந்து விழுந்த பழம் சிதறி, அதனுள்ளிருந்த விதை ஒன்று பூமிக்கு மேலே படர்ந்திருந்த அந்த மரத்தின் வேரின் மீது விழுந்தது. அது அந்த வேரைப் பார்த்து, ''யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?'' என்று கேட்டது.

அப்போது வேர், ''நண்பா! உன்னைப் போன்ற ஒரு சிறு விதையில் இருந்து வந்தவன்தான் நான். இந்த மரத்தைத் தாங்கி நிற்பதற்கு, விதை உருவாக்கிய ஆதாரத் தூண்தான் நான்'' என்றது. ''இந்தப் பழத்தை உருவாக்கிய மரம் நீ. இந்தப் பழத்திலிருந்து நான் வந்தேன். அப்படியானால் நான் உன் குழந்தைதானே?'' என்று கேட்டது விதை. ''இல்லையில்லை, என்னை உருவாக்கியது நீதான். எனவே நீ என் தாய்'' என்றது வேர்.

'விதையிலிருந்து மரம் வந்ததா? மரத்தி லிருந்து விதை வந்ததா?’ என்று காலம் காலமாகக் கேட்கப்பட்டு, விடை காண முடியாமல் உள்ள கேள்விகள் இவை.

''கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழியா?'' என்பது போன்ற கேள்விதான்.

விதை தாயானால் விருட்சம் குழந்தை;

விருட்சம் தாயானால் விதை குழந்தை.

இதைத் தெரிந்து கொள்ளும்போது விடைகாண முடியாத கேள்விகளுக்கு ஒரு விதத்தில் விடை கிடைக்கிறதல்லவா?

விதைக்குள் விருட்சம் - 4

காயமே கோயிலாக....

பஞ்ச பூதங்களின் கூட்டுப்பொருளால் ஆனது மனிதனின் உடல். அடுத்ததாக, அந்த உடலில் அமைந்த இந்திரியங்களால் உண்டாகும் - ஆசாபாசங்களிலும் உணர்ச்சிகளிலும் கட்டுப்பட்டுத் தவிக்கும் அவன் மனம். மூன்றாவது, அந்த மனத்தைக் கட்டுப்படுத்தி அடக்கியாள நினைத்து, அதனால் உண்டாகும் வெற்றி-தோல்விகளால் பாதிக்கப்படும் அவன் அறிவு. நான்காவது, மனித உடலில் இயங்கு சக்தியாகவும் இயக்க சக்தியாகவும் இருந்து, உடல்- மனம்- அறிவு மூன்றும் தனித்தனியாகவும் ஒன்றையன்று சார்ந்தும் இயங்கக் காரணமான, ஒரு விசித்திர சக்தியான ஆன்மா.

காயமே இது பொய்யடா
காற்றடைத்த பையடா
மாயனார் குயவன் செய்த
மண்ணுபாண்ட ஓடடா

- என்று 'இந்த உடல் நிலையற்றது, பயனற்றது’ எனக் கூறிய சித்தர்களும் இருக்கிறார்கள்.

முதலில் மனித உடலை எடுத்துக் கொள்வோம். 'காயமே இது பொய்யடா’ என்று பாடிய அதே நேரத்தில், 'காயமே கோயிலாக’ எனக்கூறி, இந்த உடலை ஒரு தேவாலயம் போன்று போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்று வழிகாட்டிய பெரியோர்களும் உண்டு.

'மெய்’ என்ற சொல்லுக்கு 'உண்மை’ என்று பொருள். 'மெய்’ எனும் சொல் மனித உடலையும் குறிக்கும். 'பொய்’யான ஒன்றுக்கு 'மெய்’ என்று பெயரிடுவானேன்?

விதைக்குள் விருட்சம் - 4

வளர்ந்து, வலுவடைந்து, தளர்ந்து, தேய்ந்து, அழியக்கூடியது மனித உடல் என்பது, உயிருள்ள ஒவ்வோர் மனிதனுக்கும் தெரிந்த உண்மைதான். இருப்பினும் அந்த உடல்தான், ஒவ்வொரு மனிதனாலும் மிக அதிகமாக விரும்பப்படுகிறது. இன்பமும், துன்பமும் உடல் வாயிலாகவே மனிதனால் உணரப்படுகிறது. இன்ப- துன்பங்களால் ஏற்படும் அனுபவத்தின் மூலம் உண்மை அதாவது மெய் எது என்பதை எடுத்துக்காட்ட ஒரு சாதனமாகச் செயல்படுவதால், அழியும் உடலுக்கு 'மெய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. நமது ஆசாபாசங்கள், அதனால் எழும் பிரச்னைகள், அவற்றைச் சமாளிக்க நமக்குத் தேவையான திறமைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள, உடலைப் பற்றிய அறிவு மிக அவசியம்.

ஐந்து என்ற எண்ணுக்கும், மனித உடலுக்கும் ஏதோ ஓர் அற்புத சம்பந்தம் இருக்க வேண்டும். அதனால்தான் ஐந்து பூதங்களால் அமைந்த மனித உடலில் ஐம்புலன்கள் அமைந்துள்ளன போலும். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களில் மெய்யினால் ஏற்படும் தொடு உணர்வில்தான், மனிதனின் இன்ப துன்பங்களும், மனப் போராட்டங்களும் அடங்கியுள்ளன. அதனால்தான் புலன்களில் அது முதன்மையாகக் குறிப்பிடப்பட்டது. குழந்தையை சமாதானப் படுத்தித் தூங்கச் செய்ய, அன்னை அதனைத் தோளோடு அணைத்து, முதுகில் இதமாகத் தட்டுகிறாள். தாய், சேய், இருவருக்குமே மகிழ்வும், மன நிறைவும் ஏற்படுகிறது. ஆக, மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களில் தொடு உணர்வினால் ஏற்படும் பாதிப்பு, மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

- விருட்சம் வளரும்...

விதைக்குள் விருட்சம் - 4

உலகை சரிசெய்ய...

ந்தை முக்கிய வேலையாக இருந்தார். அப்போது அவருடைய எட்டு வயது மகன்

அடிக்கடி அங்கு வந்து, தந்தையிடம் பல்வேறு வினாக்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

''உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது? சூரியன் ஏன் கிழக்கே உதிக்கிறது? வானம் ஏன் நீலமாக இருக்கிறது?’ என்றெல்லாம் ஆராய்ச்சிக்கு உரிய கேள்விகளை அவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது, தந்தைக்குத் தொந்தரவாக இருந்தது.

தன் மகனுக்கு விளையாட்டாக ஏதேனும் ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால், தனது வேலை கெடாது என்று நினைத்தார் அவர். தனது மேஜையின் மேலிருந்த உலக வரைபடத்தை எடுத்து மகனிடம் காண்பித்து, ''இது என்ன?'' என்று கேட்டார். ''ஓ... தெரியுமே! இது உலகப்படம். எங்கள் ஆசிரியர் இதைக் காண்பித்திருக்கிறார்'' என்றான் மகன்.

உடனே அப்பா, மேஜையின் மீதிருந்த ஒரு கத்தரிக்கோலை எடுத்து, உலக வரைபடத்தைத் துண்டுத் துண்டாக வெட்டி, சீட்டுக் கலைப்பது போல் கலைத்தார். அதை மகனிடம் கொடுத்து, ''இந்த உலகப் படத்தை முதலில் இருந்தது போல் ஒரு காகிதத்தில் ஒழுங்காக ஒட்டிக்கொண்டு வா! உனக்கு ஒரு பரிசு தருகிறேன்'' என்று கூறினார்.

'விவரம் தெரிந்த பெரியவர்களுக்கே இதைச் செய்து முடிக்கச் சில மணி நேரம் ஆகும். தன் மகனால் இதை அவ்வளவு சுலபமாக ஒட்டிவிட முடியாது!’ என்று தந்தை நினைத்தார். ஆனால், முற்றிலும் சரியாக ஒட்டப்பட்ட உலகப் படத்துடன் பத்தே நிமிடத்தில் வந்து நின்றான் மகன். தந்தைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

''இதை இவ்வளவு சீக்கிரம் எப்படிச் செய்து முடித்தாய்?’ என்று கேட்டார்.

''அப்பா, நீங்கள் கிழித்துக்கொடுத்த காகிதத்தின் மறு பக்கத்தில், ஒரு மனிதனின் படம் துண்டுத் துண்டாக இருந்தது. அந்த மனிதனின் உருவத்தை நான் சரி செய்தேன். உலகம் தானாகவே சரியாகிவிட்டது'' என்றான் மகன். எத்தனை பெரிய உண்மை! 'Set the man right, the world becomes alright’. 'தனி மனிதனை சரிசெய். உலகம் சரியாகிவிடும்’ என்ற தத்துவத்தை இந்தச் சம்பவத்தின் மூலம் தெரிந்துகொண்டார் அந்தத் தந்தை.