மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 31

சித்தம் அறிவோம்... இந்திரா சௌந்தர்ராஜன்

##~##

'கண்டு கொள்வர் ஒளி தெரிந்த சீடன்தன்னை
கண்ணான ஞானக் கண் கொண்டு தானே
விண்டு சொல்லார் அங்கிருந்து கெவுனம் பாய்வார்
மெய் சிலிர்த்து நின்றதொரு சீடன் முன்னே
கண்டு கொள்ள வந்தனென்றே சொல்லி - நிற்பார்
கதவடைத்து இருட்டறையிலிருந்தாலுந்தான்
கொண்டு வந்து காதிலுறை உபதேசங்கள்
கொண்ட மட்டும் ஊட்டுவிப்பார் கோடி - தானே?’

- காக புஜண்டர்

பிரம்மனைக் கொண்டு மகாவிஷ்ணு படைத்த நான்கு வேதங்களும், அவற்றுக்குண்டான சப்தாகமங்களும் சதுரகிரியில் திட வடிவம் கொண்டு நான்கு மலைகளாய், அவற்றின்கண் உள்ள மூலிகைகளாய் எழும்பி நிற்கின்றன. இதன் காரணமாக, பஞ்ச பூதங்கள் இங்கே சமச்சீரோடு திகழ்வதாகவும் கூறலாம். பஞ்ச பூதங்கள் சம பலத்துடன் உள்ள ஓர் இடம், பூகோள ரீதியாகப் பலவிதங்களில் வலிமைமிக்கது.

இந்த உலகில் பிறந்துவிட்ட உயிரினங்கள், உடலில் உருவாகிடும் பசி, தாகத்தை வெல்ல முனைந்து, நீரையும் உணவையும் தேடி அலைந்து, அவ்வாறு தேடித் தின்னவே வாழ்வு என்று வாழ்ந்து வந்த நிலையில், மனிதன் மட்டும் அந்த நிலைப்பாட்டைத் தன் ஆறாம் அறிவால் உணர்ந்து, தேடிச் சோறு நிதம் தின்னுவது மட்டுமேவா வாழ்க்கை என்று கேட்டு, பின்பு அதற்கு மட்டுமில்லை என்று அறிந்துகொண்டான். பின்னர், மேன்மைகளைப் படிப்படியாக அடைந்து, ஒரு கட்டத்தில் பசி, தாகத்தையும் வென்று, வாய்த்த உடம்பையும் கல்ப உடம்பாக்கிக்கொள்ள சதுரகிரி எனும் தலமே பேருதவியாக அமைந்தது. காரணம், இதன் பஞ்சபூத பலம் மற்றும் இதன் புராதனச் சிறப்பு!

இதனாலேயே சித்தர்களுக்கு இந்தச் சதுரகிரி, அவர்களுக்கான பட்டினம் என்றானது.

சித்தம்... சிவம்... சாகசம்! - 31
சித்தம்... சிவம்... சாகசம்! - 31

'நிலவும் பதினெண் சித்தரெனும் நீர்மைக்கும்பன் முதலாகக்
குலவும் பெருமை கோரக்கர் ஈறாக் குறிக்குந் தவமுனிவர்
உலவும் மேன்மைதனைக் கொண்டே உமைதன் பாகன் அகத்திருக்கக்
கலவும் சதுரகிரிப் பெருமை கனிய வுரைப்பாங் காசினிக்கே.’

- எனும் பாடல் சதுரகிரிச் சருக்கத்தின் சிறப்பைக் கூறுகிறது. பூவுலகில் சித்தர்களுக்கு இது மட்டுமே சிறந்த புகலிடம் என்றும் கூறுகிறது. இந்தச் சதுரகிரிக்கு காகபுஜண்டரும் வந்து சேர்ந்து, இங்கே ஒரு குகையில் தவத்தோடு கூடிய இன்ப வாழ்வை வாழ்ந்தவராகவும், இன்னும் வாழ்ந்துகொண்டிருப்பவராகவும் திகழ்கிறார். இன்னும் அவர் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்னும் கேள்வியைப் பிறகு சிந்திப்போம். சதுரகிரியில் அவர் வாழ்ந்த நாளில், அவரால் இந்த உலகம் பல அரிய சங்கதிகளைத் தெரிந்துகொண்டது. அது என்னவெனக் காண்போம்.

ன்மார்த்தன் என்பவன் சுவேத மகாராஜாவின் பிள்ளைகளில் ஒருவன். இவன் அரச வாழ்வில் சலிப்புற்று, எது உண்மையான ஆனந்த வாழ்வு என்ற கேள்வியில் விழுகிறான். பின்பு, அதற்கான விடையைத் தேடிப் புறப்படுகிறான். ஒரே இடத்தில் இருந்துகொண்டு, திரும்பத் திரும்ப சிலரையே பார்த்துக்கொண்டு, வெந்ததைத் தின்று பசியை அடக்கி, பின் வேளை வந்து செத்துப்போவதல்ல வாழ்க்கை என்பதை உணருபவன், ஒரு நாடோடியைப் போல இந்த உலகைச் சுற்றி வரத் தயாராகிறான். குறிப்பாக, வனங்களுக்குள் புகுந்து, அங்கு வாழ்வை வெறுத்து தவம் செய்தபடி இருக்கும் முனிகள், ரிஷிகள், சித்தர்களைச் சந்தித்து, அவர்கள் மூலம் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிவெடுக்கிறான்.

தன்மார்த்தனை தனியாக அனுப்ப சுவேத மகாராஜா தயங்கவும், அவனோடு பிரம்மார்த்தன் எனும் அவனது சகோதரனும், அவ்விருவரின் மனைவியரும், அவர்களுடன் வீரசேனன் எனும் சகோதரனின் மனைவியும் என ஐந்து பேர் வனம் நோக்கி முதலில் புறப்படுகின்றனர்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 31

அவர்களது பூர்வ புண்ணியம், அவர்களை சதுரகிரி வனத்துக்குள் அழைத்துச் செல்கிறது. இந்த வனத்தில் ஏராளமான சித்தர்களுக்கான ஆசிரமங்கள், அவரவருக்குப் பிரியமான இடத்தில் அமைந்திருந்தன. அதில், மேற்குப் பக்கமாக அமைந்திருந்ததுதான் காகபுஜண்டரின் ஆசிரமக் குடில்.

இந்தக் குடிலுக்கு ஐவரும் வந்து, காகபுஜண்டரைப் பணிந்து நின்றனர். புஜண்டரும் தன் ஞான திருஷ்டியாலேயே அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். குறிப்பாக, தன்மார்த்தனைப் பார்த்து, ''அப்பனே! நீ இதுவரை பல பிறவிகளை எடுத்து இருக்கிறாய்'' என்று கூறியவர், அவன் எடுத்த பிறவிகளை வரிசையாகக் கூறினார்.

''உன் முதல் பிறப்பில் நீ ஒரு புழுவாக இருந்தாய். உன்னை உண்டு, ஒரு பறவை பசியாறியது. அந்தப் புண்ணியம் காரணமாக, அடுத்த பிறப்பு உனக்குக் கால்கள் கொண்ட பல்லியாக அமைந்தது. பல்லியாக இருந்த உன்னை ஒரு பாம்பு விழுங்கி, அதன் பசி அடங்கியது. அந்தப் புண்ணியம் உன்னை அடுத்து காலோடு சிறகு கொண்ட பறவையாக ஆக்கியது. பறவையான உன்னை ஒரு வேடன் வேட்டையாடி, அவன் பசி அடங்கிடக் காரணமானாய். அதன்பின், அறிவில் சற்றுச் சிறந்த நாயாகப் பிறந்தாய். எஜமான விசுவாசமுடன் வாழ்ந்து மடிந்த உன் அடுத்த பிறப்பு கருடபட்சியாக அமைந்தது. உன்னைக் கண்டு பலரும் வணங்கி, பக்தியில் மூழ்கிடக் காரணமானாய். அதனால் உனது அடுத்த பிறப்பு, யானையாக அமைந்தது. கோயில் யானையாகத் திகழ்ந்ததன் காரணமாக, அடுத்த பிறப்பில் வயலில் உழுதிடும் ரிஷபமானாய். உன்னால் பலருக்கும் நெல் கிடைத்துப் பசியாறினர். அந்தப் புண்ணியமே, நீ அரச புத்திரனாக ஜனிக்கக் காரணம்!'' என்று அவன் பிறப்பின் பின்னால் உள்ள ரகசியங்களைக் காரண காரியங்களோடு கூறவும், தன்மார்த்தன் ஆச்சரியமுற்றான்.

பின்பு, ''சுவாமி! ஓர் உயிர் அழியாமல் இப்படித் திரும்பத் திரும்பப் பிறப்பெடுத்துக் கொண்டேதான் இருக்குமா? இதில் இருந்து விடுபட முடியாதா?'' என்று கேட்டான்.

''பிறப்பில் இருந்து விடுபட, அரிய பிறப்பான மானுடப் பிறப்பை அடைவது முக்கியம். அதிலும், பாவ கர்மங்களில் சிக்கியிராதபடி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பது மிக முக்கியம். புண்ணியம் மிக்க வாழ்வு வாழ்ந்தாலே, தகுந்த குருவைக் காணும் வாய்ப்பு ஏற்படும். குருவைக் கண்ட பின், அவர் வழிகாட்டலால் பிறப்பிலிருந்து நிச்சயமாக விடுதலை பெற்று நித்ய இன்பத்தோடு வாழமுடியும்'' என்றார் காகபுஜண்டர்.

''என்னை உங்கள் சீடனாக ஏற்று, பிறப்பில் இருந்து விடுதலை அடைய வழிகாட்டுவீர்களா?''

''அதுதானே என் நோக்கம்! காலகாலமாக நான் அழிவின்றி வாழ்ந்துகொண்டிருப்பதே அதற்காகத்தானே?'' என்றவர், ''முதலில் நீங்கள் ஐவரும் இந்த வனத்தில் ஓடியபடி இருக்கும் நதிப்புலத்தில் நீராடிவிட்டு வாருங்கள். பசியாறுங்கள். பின்பு, ஆற அமர அமர்ந்து பேசலாம்!'' என்றார்.

சித்தம்... சிவம்... சாகசம்! - 31

அவர் அப்படிச் சொன்னதன் பின்னாலே ஒரு காரணமும் இருந்தது. ஆனால், தன்மார்த்தனும் சரி, அவன் சகோதரனும் சரி... அந்தக் காரணத்தை எண்ண இயலாதவர்களாக, நதி நீராடப் புறப்பட்டனர். வழியில் ஒரு பலாமரம்! அதில் ஏராளமாய் கனிகள். குறிப்பாக, வேர்ப்பாகத்தில் ஒரு பலா வெடித்திருந்தது; சுளைகள் பளிச்சென்று வெளித்தெரிந்தபடி இருந்தன. அதைக் கண்ட தன்மார்த்தனின் சகோதரன் பிரம்மார்த்தன், 'நீங்கள் முன்னே செல்லுங்கள். நான் இந்தப் பழத்தை உண்டு பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கூறியவனாக, அதை நோக்கிச் சென்றான்.

அது கூழைப்பலா! உள் நீர் அதிகம். எனவே, கொழகொழவென சுளைகளோடு கிடந்த அதன் ஒரு சுளையை எடுத்து ஆசையாகச் சாப்பிடத் தொடங்கினான் பிரம்மார்த்தன். சாப்பிட்ட சில நொடி களிலேயே, அவனுடைய உடலில் ஒரு வித மாற்றம்... மதி மயங்கி, மூச்சும் முட்ட ஆரம்பித்தது.

பிரம்மார்த்தன் பலாச் சுளைகளை சாப்பிட்டு மயங்கிக் கிடந்த நிலையில், நீராடச் சென்ற தன்மார்த்தனும் அவனுடன் சென்றவர்களும் நீராடி விட்டு, பிரம்மார்த்தன் நீராட வரவில்லையே என்னும் வருத்தத்தோடு திரும்ப வருகின்றனர். அவர்களின் பார்வை யில் பிரம்மார்த்தன் மயங்கிக் கிடக் கும் காட்சி தெரிகிறது. பதைத்துப் போகின்றனர். அவனைத் தட்டி எழுப்ப முனைகின்றனர். முடியவில்லை. அதே வேளையில், அவன் உடலில் நீலம் மெள்ள பாரிக்கத் தொடங்குகிறது.

பாம்பின் விஷம்தான் உடம்பில் நீலமாய் பாரிக்கும். அந்த யூகத்தின் அடிப்படையில் பார்த்தபோது பிரம்மார்த்தனை பாம்பு தீண்டி விட்டதாகக் கருதவேண்டி வந்தது. உடனேயே தன்மார்த்தன் பிரம்மார்த்தனைத் தன் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு, காக புஜண்டரின் ஆஸ்ரமக் குடில் நோக்கி வேகமாய் நடந்தான்.

காகபுஜண்டர் முன் பிரம்மார்த் தனின் உடம்பைக் கிடத்தி, அவரை கண்ணீருடன் பார்த்தான் தன் மார்த்தன். காகபுஜண்டர் பெரிதாகப் பதைக்க வில்லை. நாடி பிடித்துப் பார்த்தார். நயனங்களில் வெண் பகுதியை ஊடுருவி நோக்கினார். பின், மார்பின் மேல் காதை வைத்துப் பார்த்துவிட்டு, மென்மையாகச் சிரித்தார். அது தன்மார்த்தனையும் மற்றவர்களையும் சற்று சங்கடப்படுத்தியது.

''குருவே... பிரம்மார்த்தனை அரவம் தீண்டிவிட்டதாகக் கருதுகிறேன். தாங்கள்தான் எப்படியாவது இவனைக் காப்பாற்றி எழுப்ப வேண்டும்!'' என்றான் தன்மார்த்தன்.

''கவலை வேண்டாம். அரவம்  தீண்டவில்லை. ஆனால், அரவத்தின் விஷம்தான் உடம்பில் ரத்தத்தில் கலந்துள்ளது. எப்படி இப்படி ஆயிற்று என்று கூற முடியுமா?'' என்று கேட்டார்.

''குருவே... பழுத்து வெடித்த வேர்ப் பலாவை விரும்பிச் சாப்பிடச் சென்று, அப்படிச் சாப்பிட்ட இடத்திலேயே மயங்கிக் கிடந்தான். அங்கேதான் அரவம் தீண்டியதோ என்று கருத வேண்டியுள்ளது...''

சித்தம்... சிவம்... சாகசம்! - 31

''இப்போது புரிகிறது. அரவம் இவனைத் தீண்டவில்லை. அது வெடித்த பலாவைத்தான் தீண்டியுள்ளது. வேர்ப் பலா அருகில் அரவங்கள் சுருண்டு படுக்க வரும். அப்போது காற்று வீசவும் பலாக்கனி ஆடும். அது ஆடவும், அரவம் அச்சம் கொண்டு அதைக் கொத்தும். அப்போது அதன் விஷம் பழத்தில் இறங்கிவிடும். இது தெரியாமல் அதை உண்ணப்போய்த்தான் இப்போது இந்த நிலை.

நல்லவேளை... அரவமே தீண்டியிருந்தால் விஷம் உச்சியில் ஏறி மூளையில் பரவி, உயிரும் பிரிந்திருக்கும். விஷம் இப்போது வயிற்றில் மெல்ல ஜீரணமாகத் தொடங்கி, பின்னரே பரவியுள்ளது. இன்னமும் மூன்றரை நாழிகை வரை நாடித்துடிப்பு இருக்கும். சப்த நாடிகள் ஒவ்வொன்றாகவே அடங்கும். இதுவரையில் நான்கு நாடிகள் அடங்கிவிட்டன. இன்னமும் மூன்று நாடிகள் அடங்குவதற்குள் விஷத்தை முறித்து, ரத்த ஓட்டத்தில் உயிர் அம்சத்தைப் புகுத்தி, அடங்கிவிட்ட மற்ற நாடிகளையும் தட்டி எழுப்பி துடிக்கச் செய்து, மயக்கத்துக்குக் காரணமான காரணிகளை வெளியேற்றி, இவனை உயிர் பிழைக்கச் செய்துவிடலாம். இப்போது நாகதாளி எனும் செடியின் இலைகள் வேண்டும். அதைப் பறித்து அரைத்து, உடல்முழுக்க முதலில் பூச வேண்டும். அவ்வாறு பூசிடும்போது, அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்லியபடி பூசவேண்டும்'' என்ற காகபுஜண்டர் அவரே சென்று நாகதாளி செடியை வேரோடு பறித்து வந்தார்.

பின்பு, இலையை ஒரு கலயத்தில் போட்டு, மரத்தால் ஆன மத்து கொண்டு கடைந்து அரைத்து, அதில் நீர் விட்டுச் சாறு போலாக்கிக் கொண்டு, கிழக்குத் திசை நோக்கி நின்றவராக மந்திர உச்சாடனம் புரியத் தொடங்கினார். அப்படியே சாற்றை பிரம்மார்த்தன் உடல் முழுவதும் பூசினார். பூசும்போதும் மந்திரம் ஜெபித்தார்.

அதன்பின், நீலமாய்க் கிடந்தவன் பச்சையாக மாறினான். நேரம் உருண்டது. காலில் கட்டைவிரல் பாகத்தில் மெல்லிய அசைவு தெரிந்தது. அதைக் கவனித்த காகபுஜண்டர், 'அடங்கிவிட்ட ஒரு நாடி துடிக்கத் தொடங்கி விட்டது’ என்றார். பின்பு, கையில் ஆட்காட்டி விரலில் அசைவு! அடுத்த நாடியும் துடிக்கத் தொடங்கிவிட்டது.

இப்படி, ஒவ்வொரு அடங்கிய நாடியும் துடிக்கத் தொடங்கி, பிரம்மார்த்தனும் எழுந்து அமர்ந்தான். அனைவரிடமும் பெரும் மகிழ்வு!

காகபுஜண்டரும், 'ஒரு கண்டம் கடந்தாய் அப்பனே!’ என்றார்.

- சிலிர்ப்போம்...