Published:Updated:

ஏற்றத் தாழ்வுகளை ஏன் படைத்தான் இறைவன்?

சக்தி சங்கமம்... எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் வாசகர்கள் கலந்துரையாடல்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கிரைம் கதை மன்னன், எழுத்தாளர் ராஜேஷ்குமாரைச் சந்தித்து உரையாடலாம் என அறிவிப்பு வெளியிட்ட இரண்டொரு நாட்களிலேயே ஆர்வத்துடன் எத்தனை எத்தனைக் கடிதங்கள்..! எத்தனை விதமான கேள்விகள்..!

மிக சுவாரஸ்யமான, வித்தியாசமான கேள்விகளாகத் தேர்வு செய்து, ராஜேஷ் குமாரைச் சந்தித்து உரையாட ஆறு பேரைத் தேர்ந்தெடுத்தோம். ''சார்! வாசகர்கள் ரெடி! எப்போது உங்களைப் பார்க்க வரலாம்?'' என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''நானும் ரெடி! இப்பவே வாங்களேன்!'' என ராஜேஷ்குமார் உடனடியாக அழைத்து இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நாங்கள். ''சார்! தங்கள் வசதியைத் தெரிந்துகொண்டு, அதன்பின் வாசகர்களுக்குச் சொல்லலாம் என்று இருந்தோம். வெளியூரிலிருந்தும் சிலர் வரவேண்டியுள்ளதே! எனவே, வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு வசதிப்படுமா?'' என்று கேட்டோம். ''சனிக்கிழமை வாருங்கள்!'' என்றார்.

அதன்படி, 23.11.2013 சனிக்கிழமையன்று, கோவை- வடவள்ளி பகுதியில் உள்ள ராஜேஷ்குமாரின் இல்லத்தில், தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள் ஆறு பேரும் மதியம் 3 மணியளவில் கூடினார்கள்.

ராஜேஷ்குமாரின் கிரைம் நாவலைப் போலவே எடுத்த எடுப்பில் மிகச் சுறுசுறுப்பாகத் தொடங்கியது கலந்துரையாடல்.

• ''இறைவன் அன்பானவன், கருணையானவன் என்கிறோம். ஆனால், மனிதர்களில் ஏன் சார் இத்தனை ஏற்றத்தாழ்வுகளைப் படைத்தான்? ஏழை- பணக்காரன், மூடன்- அறிவாளி, அழகன்- குரூபி என்கிற வித்தியாசங்கள் எல்லாம் இல்லாமல், எல்லோரையும் சமமாகப் படைத்திருந்தால் என்ன?'' என்று முதல் கேள்வியே துப்பாக்கிக் குண்டு போல் சீறிக்கொண்டு வந்தது, வாசகர்   மூர்த்தியிடம் இருந்து.

மெல்லிய புன்னகையுடன் பதிலளிக்கத் தொடங்கினார் ராஜேஷ்குமார். ''எல்லோருமே பல்லக்கில் பயணம் செய்பவர்களாக இருந்துவிட்டால், பல்லக்கைத் தூக்குபவர்கள் யார் என்று கேள்வி வருகிறதே? எல்லோருமே அம்பானிகளாகவும், டாடா-பிர்லாக்களாகவும் இருந்துவிட்டால், வயலில் இறங்குபவர் யார்? நீங்கள் ஹோட்டலில் போய் உட்கார்ந்ததும், 'என்ன சார் சாப்பிடறீங்க?’ என்று கேட்பவர் யார்? நீங்கள் பணம் எடுக்க பேங்குக்குப் போனால், உங்களுக்கு டோக்கன் கொடுப்பது யார்? நீங்கள் உடனடியாய் ரயிலைப் பிடிக்க ஸ்டேஷனுக்குப் போகவேண்டுமென்றால் ஆட்டோவையோ டாக்ஸியையோ ஓட்டுவது யார்? நீங்கள் தெருவில் வேகமாக நடந்துகொண்டிருக்கும்போது செருப்பின் வார் அறுந்துவிட்டால், அதைத் தைத்துக் கொடுப்பது யார்? எல்.கே.ஜி படிக்கும் உங்கள் குழந்தைக்கு அனா ஆவன்னா சொல்லிக் கொடுப்பது யார்? இப்படியான வேறுபாடுகள் இருந்தால்தான், இந்த உலகம் சொர்க்கமாய் இருக்கும். இல்லையென்றால் நரகமாக மாறிவிடும். ஆனால், இவை தொழில்ரீதியினாலான வேறுபாடுகள்தானே தவிர, மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் என்று எதுவும் இல்லை. அப்படி யாரையும் இறைவன் படைக்கவில்லை. இறைவனின் படைப்பில் எல்லோரும் உயர்ந்தவர்களே! மனிதன்தான் தனது படிப்பு மற்றும் செல்வச் செழிப்பு காரணமாக தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறான்.''

ஏற்றத் தாழ்வுகளை ஏன் படைத்தான் இறைவன்?

• ''இமயமலைக்குப் போனால் மன அமைதி கிடைக்கும் என்று சிலர் போய் வருகிறார்களே... உண்மையிலேயே அங்கு போனால் மன அமைதி கிடைக்குமா?'' என்று கேட்டார் சந்தோஷ்குமார்.

''சந்தேகமே வேண்டாம். கண்டிப்பாகக் கிடைக்கும். போவதற்கு முன்னால், உங்களிடம் இரண்டு தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும். 1. அன்பும் அடக்கமும் அமையப் பெற்ற குணவதியான ஒரு பெண் உங்களுக்கு மனைவியாக அமைந்திருக்க வேண்டும். பெண்களாக இருந்தால், மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கக்கூடிய, மனைவிக்கு உரிய மரியாதையை அளிக்கக்கூடிய அருமையான கணவன் வாய்த்திருக்க வேண்டும். 2. நல்ல ஒழுக்கத்தோடு கூடிய பிள்ளைகளைப் பெற்று இருக்க வேண்டும்.

'என்னது... இந்த இரண்டு தகுதிகள் இருந்தால், மன அமைதியைத் தேடி இமயமலைக்குப் போவானேன்?’ என்கிறீர்களா? அதுவும் சரிதான்!'' - சிரிக்கிறார் ராஜேஷ்குமார்.

• ''சார், எனக்கொரு சந்தேகம்! கோயில் விசேஷமாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷமாக இருந்தாலும் சரி... மாவிலைகளைத் தோரணமாய்க் கட்டுவதும், கும்பத்தில் மாவிலைகளைச் சொருகி வைப்பதும் வழக்கத்தில் இருக்கிறது. எத்தனையோ மரங்களில் இலைகள் இருக்க, பூஜைகளில் மாவிலைகளை மட்டும் பயன்படுத்த ஏதாவது விசேஷ காரணம் உண்டா?'' என்று கேட்டார் சரோஜா பாலசுப்ரமணியம்.

''நமக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர்கள் காரண காரியம் இல்லாமல் பூஜைக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். நான்கு பருவ காலங்களில் இலையுதிர்காலமும் ஒன்று. இந்தப் பருவத்தில் எல்லா மரங்களுமே இலைகளை உதிர்த்துவிட்டு, சில நாட்களுக்கு மொட்டை மரமாகக் காட்சி அளிக்கும். பிறகு, மெதுவாகத் துளிர் பிடித்து, இலைகளாக உருமாறும். ஆனால், மாமரம் மட்டும் இலையுதிர்காலத்தில் மட்டும் அல்ல, எப்போதுமே தன்னுடைய இலைகளை உதிரவிடுவதில்லை. இலைகளைத் தனது கிளைகளிலேயே தக்க வைத்துக்கொண்டு, புதிய மாந்தளிர்களைத் துளிர்க்க வைக்கும். முற்றிப்போன மாவிலைகளை நாமாகப் பறித்தால்தான் உண்டு. இப்படி, இலையுதிர்காலம் எல்லா மரங்களுக்கும் உண்டு; மாமரத்துக்கு மட்டும் இல்லை என்பதால், மாவிலைக்கு அந்த மாபெரும் சிறப்பு கிடைத்துள்ளது. இறைவனை வணங்கும் பக்தர்களும் அவர்களின் குடும்பமும் எந்நாளும் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும் என்னும் நோக்கிலேயே பூஜைக் காரியங்களில் எந்நாளும் உதிராத மாவிலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் பெரியோர் என்றுதான் நான் நினைக்கிறேன். மாவிலை எந்த அளவுக்குப் புனிதமாகக் கருதப்படுகிறதோ, அதே அளவு மாம்பூவும் கருதப்படுகிறது. காரணம், விநாயகப் பெருமானை துதி செய்யும் பாடலில், 'வாக்குண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம்’ என்று ஒரு வரி வரும். அதில் 'மாமலராள்’ என்பது ஸ்ரீலட்சுமியைக் குறிக்கும் சொல். மாம்பூவில் ஸ்ரீலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் 'மாமலராள்’ என்று அந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது'' என்று ராஜேஷ்குமார் மாமரத்தின் சிறப்புகளை விவரிக்க, வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள் வாசகர்கள்.

• ''மாமரத்துக்கு வேறென்னென்ன சிறப்புகள் இருக்கிறது, சார்?'' என்று கேட்டார் - ஜெயராமன்.

''மாவிலைக்கு சக்தியைக் கடத்தும் திறன் உண்டு. அதேபோல், தர்ப்பைப் புல்லுக்கும் சக்தியைக் கடத்தும் திறன் உண்டு. கும்பாபிஷேகத்தில், யாகசாலை பூஜையில் வேத மந்திரங்கள் சொல்லி, யாகம் நடைபெறும். பூர்ணாஹுதி நடைபெற்றதும் தர்ப்பையை ஒன்றுடன் ஒன்று இணைத்து முறுக்கிக் கயிறுபோல் செய்து, அதன்மூலம் வேத மந்திரசக்தி மாவிலைகள் சொருகப்பட்ட கடத்தில் உள்ள தீர்த்தத்துக்குள் செலுத்தப்பட்டு, பின்னர் அந்தக் கும்ப தீர்த்தம் கோபுர கலசங்களின் மேல் அபிஷேகம் செய்யப்படும். மாவிலைக் கொத்தால்தான் அந்தத் தீர்த்தத்தை பக்தர்களின் மீது தெளிப்பார்கள். மந்திரசக்தி நிரம்பிய அந்தப் புனித நீர் பக்தர்கள்மேல் படுவதால் அவர்களின் உடலும் மனமும் தூய்மை பெறும். அந்த வகையிலும் மாவிலைக்குத் தனிச்சிறப்பு உண்டு.''

ஏற்றத் தாழ்வுகளை ஏன் படைத்தான் இறைவன்?

• ''குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று ஒரு திரைப்பாடல் உண்டு. அதன் பொருள் என்ன? எல்லாம் அறிந்த, சகல சக்திகளும் வாய்ந்த தெய்வமும், எதுவுமே அறியாத புத்தம் புதுத் தளிரான குழந்தையும் எப்படி ஒன்று ஆகும்?'' என்று கேட்டார் பத்மா செந்தில்குமார்.

''குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று என்று அடுத்த வரியிலேயே விளக்கியிருக்கிறாரே கவிஞர். நாம் ஒரு குழந்தையிடம் மனப்பூர்வமாக அன்பு காட்டி, பேசிச் சிரித்துப் பழகி வந்தால், அந்தக் குழந்தையும் நம்மிடம் அன்போடும் பாசத்தோடும் இருக்கும். நாம் அந்தக் குழந்தையிடம் எந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறோமோ அதற்கேற்ப அந்தக் குழந்தையும் நம்மிடம் ஒட்டிக் கொள்ளும். சும்மா சம்பிரதாயத்துக்கு ஒரு குழந்தைக்கு காட்பரீஸ் சாக்லேட்டோ, புது டிரஸ்ஸோ வாங்கிப் பரிசளித்துவிட்டு, அதன்மீது உண்மையான அன்பு இல்லாதிருந்தால், அதை அந்தக் குழந்தையால் நன்கு புரிந்துகொள்ள முடியும். பரிசுப் பொருள்களுக்கு அந்தக் குழந்தை மயங்காது; உண்மையான அன்புக்கு மட்டுமே அது தலைவணங்கும். அதேபோல், கோயிலில் இருக்கும் தெய்வத்தை பண்டிகைகள் என்ற பெயரிலும், விசேஷ நாட்களிலும் நாம் உண்மை யான பக்தி சிரத்தையோடு கொண்டாடி வந்தால், தெய்வம் அகம் மகிழ்ந்து அந்தக் கோயிலையே தனது நிரந்தர இருப்பிடமாய் வைத்துக்கொண்டு, நம்மை விட்டு நீங்காது இருக்கும்.

குழந்தை மட்டுமல்ல, தெய்வத்தைக்கூடக் குழந்தையாக பாவித்து பக்தி செலுத்தும்போது, அற்புதமான பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்பதும் உண்மைதான். உதாரணமாக, பழநி பாலமுருகன், குருவாயூர் கிருஷ்ணன் போன்ற தெய்வங்களைக் குறிப்பிடலாம். இறைவனைக் குழந்தையாக எண்ணி பக்தி செலுத்தும்போது, நமது மனமும் கள்ளங்கபடமற்ற குழந்தை மனமாக மாறிவிடும். அப்படிக் குழந்தை மனம் நமக்கு ஏற்படும் போது, அதில் எந்த மாசு மருவும் இன்றி, அன்பு மட்டுமே நிறைந்திருக்கும். கண்ணனைக் குழந்தை யாகவும் தம்மை யசோதையாகவும் பாவித்துப் பல பாசுரங்களைப் பாடியதால்தான், விஷ்ணுசித்தர் பெரியாழ்வார் எனும் பெயர் பெற்றார். ஆக, குழந்தைத் தெய்வம் கொண்டாடப்படும் இடத்தில் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!''

• ''ஒரு கோயிலில் கும்பாபிஷேகம் நடந்ததும் 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்படுகின்றது. அது என்ன 48 நாள் கணக்கு?'' - இது அபர்ணாவின் கேள்வி.

''இந்த 48 எண்ணிக்கையில் மூன்று பேர் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். 1. நட்சத்திரங்கள், 2. ராசிகள், 3. கிரகங்கள். இதில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27; ராசிகளின் எண்ணிக்கை 12; கிரகங்களின் எண்ணிக்கை 9; இந்த மூன்றையும் கூட்டிப் பாருங்கள் 48 என்று கூட்டு எண் வரும். இதுவே, சில கோயில்களில் 108 எண்ணாக உயரும். அதற்குக் காரணம் 48 என்ற எண்ணிக்கையோடு, 60 தமிழ் வருடங்களையும் சேர்த்துக் கொள்வார் கள். ஒரு கோயிலில் பூஜை நடக்கும்போது, எந்த ஒரு அம்சமும் விட்டுப் போய்விடக்கூடாது என்பதற் காக இப்படியரு கூட்டணியை ஏற்படுத்தி வைத்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!'' என்று விளக்கினார் ராஜேஷ்குமார்.

'நாட்களில் நல்ல நாள், கெட்ட நாள் என்று உண்டா?’, 'மாட்டுக்குப் பொங்கல் வைத்துக் கொண்டாடுவதை சிலர் கேலி செய்கிறார் களே..?’ என அடுத்தடுத்துப் பறந்து வந்த கேள்விக் கணைகளுக்குச் சற்றும் சளைக் காமல் பதில் தந்தார் ராஜேஷ்குமார். அவை...அடுத்த இதழில்!

- சந்திப்பு தொடரும்

படங்கள்: தி.விஜய்

ஏற்றத் தாழ்வுகளை ஏன் படைத்தான் இறைவன்?

தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்கள் சிலரின் உடல்நிலை, பயணத்துக்கான பஸ், ரயில் டிக்கெட் கிடைக்காமை போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களால் இந்தக் கலந்துரையாடலில் பங்கு பெற இயலவில்லை. எனினும், அவர்கள் அனுப்பியிருந்த கேள்விகள் ராஜேஷ்குமாரிடம் கேட்கப்பட்டு, அவற்றுக்கும் பதில் பெறப்பட்டது

• ''என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷங்கள் குறைவே! என்னைத் தவிர, மற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதுபோல் உணர்கிறேன். நான் சந்தோஷமாக இருக்க என்ன வழி?'' - லாவண்யா பிரபு, ஸ்ரீரங்கம்.

''மரங்கள் அடர்ந்த காட்டு வழியே நடக்கும்போது, மரத்தின் கிளைகள் காற்றில் அசைவதற்கு ஏற்றாற்போல் இடுக்குகளின் வழியே கொஞ்சமாய் சூர்ய வெளிச்சம் எட்டிப் பார்த்துவிட்டு, உடனே மறைந்து போகும். நிழல் நம்மை வந்து மூடிக்கொள்ளும். மனித வாழ்க்கையில் சந்தோஷம் என்பதும், அந்த சூர்ய வெளிச்சம் போன்றதுதான். சிலருக்கு அந்தச் சூர்ய வெளிச்சம் நீண்ட நேரம் கிடைக்கும். சிலருக்கு அது கிடைத்து, அடுத்த சில விநாடிகளிலேயே மறைந்தும் போகும். ஆனால், ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த உலகில் வாழும் எந்த ஒரு மனிதருக்கும் நிரந்தர சந்தோஷம் என்பது கிடையாது. எல்லா மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் வரத்தான் செய்யும். பெரிய பெரிய பணக்காரர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதைப் பற்றிச் செய்தித்தாள்களில் படிக்கிறோமே! எத்தனை மனத் துயரம் இருந்தால் அவர்கள் அந்த முடிவை எடுத்திருப்பார்கள்! எனவே, ஒரு சிலர் எப்போதும் சந்தோஷமாக இருப்பதுபோல் தோன்றுவது ஒரு பிரமையே! அவர்களுடைய ஆழ்மனங்களிலும் ஆறாத் துயரம் புதைந்து கிடக்கும். அவற்றைத் தாண்டித்தான் அவர்கள் யதார்த்த வாழ்க்கையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். துயரமும், சந்தோஷமும் நம்மோடு பிறந்தவை. நம் பூர்வ

ஏற்றத் தாழ்வுகளை ஏன் படைத்தான் இறைவன்?

கர்மாவின் பயனாக இந்த இன்ப துன்பங்களுக்கு நாம் முன்பே விதை போட்டு இருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழியில்லை. இவற்றைச் சமாளித்து வாழ்வதில்தான் நமது திறமை இருக்கிறது. 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி, உணர்ந்து பார்த்து நிம்மதி நாடு’ என்கிற கவிஞர் கண்ணதாசனின் வரிகளை மனத்தில் கொள்ளுங்கள்!''

• ''செவ்வாய் தோஷம் இருப்பது உண்மையா?'' - ரமேஷ், கம்பம்

''செவ்வாய் இருப்பது உண்மை!''

• ''திருமணம் என்பது சாபமா, வரமா, சார்?'' - எஸ்.வெங்கடராமன், பவானி.

''வாழ்க்கைத் துணை 'முள்’ மாதிரி இருந்தால், அது சாபம்; 'பூ’ மாதிரி இருந்தால் வரம்!

''நாலு பேர் நம்மை மெச்சும்படியாய் வாழ வேண்டும் என்று சொல்கிறார்களே... யார் சார் அந்த நாலு பேர்?'' - பாலா, திருவாரூர்

''வேறு யார்? மாதா, பிதா, குரு, தெய்வம்தான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு