2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தவமாய் தவமிருந்து...

தசாவதார திருத்தலங்கள்! தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

வம்- இந்தப் பதத்துக்கு என்ன பொருள்? விரும்பியதை அடைவதற்கான தீவிர முயற்சியே தவம் என்று விளக்கம் தருகின்றன ஞானநூல்கள். நம்மவர்கள் பலரும் தவமாய் தவமிருந்து வீடு, மனை, மக்கள், சொத்து, சுகம் என்று பூர்த்தி செய்துகொண்ட விருப்பங்கள் ஏராளம் உண்டு. ஆனால், உண்மையான தவம் எதற்கானதாக இருக்க வேண்டும் தெரியுமா?

எம்பெருமானின் திருவடி தரிசனம் காண தவம் இருக்கவேண்டும். கணப்பொழுதும் மறவாமல் அவனையே சிந்தித்திருக்கும் பேறு வேண்டி தவம் இருக்க வேண்டும். மாலவனின் புகழ்பாடும் இன்பம் போதும்; இந்திரலோகத்தை ஆளும் பேறு கிடைத்தாலும் வேண்டாம் என்று ஆன்றோர்கள் பாடிவைக்கவில்லையா? அப்படி, அனுதினமும் அவன் புகழ்பாடவும், அவன் அணுக்கம் வேண்டியும் தவம் கிடக்க வேண்டும்.

அப்படியான தவத்தைக் கடைப்பிடிக்கும் அடியார்களை வைகுண்டம் வரவேற்கும்; அவர்களின் பாதுகாப்பை சுதர்சனம் ஏற்றுக்கொள்ளும். அவர்களது தர்மசிந்தனைக்கு குந்தகம் நேர்ந்தால் பேரொலி எழுப்பி தஞ்சம் அளிக்கும், பாஞ்சஜன்யம்!

ஆஹா, எப்பேர்ப்பட்ட பேறு?!

திருநெல்வேலிக்கு அருகில் கிருஷ்ணாபுரத்துக் கோயிலில்... நாயக்க மன்னர்கள் மற்றும் அவர்களால் பணியமர்த்தப்பட்ட சிற்பிகளின் தவம் வேறுவிதமாக வெளிப்பட்டது. ஆமாம், கலை வடிவாய்க் கடவுளைக் கண்டவர்கள், அந்த இறைத்தன்மையைச் சிற்பத்தில் புகுத்தினார்கள். அதற்குச் சான்றாகத் திகழ்கிறது கிருஷ்ணாபுரத்தின் கர்ணார்ஜுன தூண் சிற்பங்கள். பரந்தாமனே கதியென்று களம் கண்டிருந்தான் அர்ஜுனன். அவன் மீது நாகாஸ்திரத்தைக் கர்ணன் தொடுக்க... பார்த்தசாரதி பார்த்துக்கொண்டிருப்பானா? தனது பெருவிரலால் தேர்த் தட்டை அழுத்தி, அர்ஜுனனைக் காப்பாற்றினான். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் எனும்படியான நன்றி பாவனை அர்ஜுனனின் திருமுகத்தில். மிகத் தத்ரூபமாக வடித்துள்ளார்கள் இந்தச் சிற்பங்களை.

தவமாய் தவமிருந்து...

மற்றொரு சிற்பம்... வேட்டையாட வந்த இடத்தில் தான் கண்ணுற்ற அரசிளங்குமரியைக் கவர்ந்து செல்கிறான் வேடன் ஒருவன். அரசப்படையினர் துரத்துகிறார்கள். அவர்களுடைய ஆயுதப் பாய்ச்சலும், வேடவனின் தீரமும்... உண்மையில் சிற்ப அற்புதங்கள்தான்!

இறைவனிடம் எதை வேண்டுவது? 'அவன்தான் வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது உசத்தி. சரி! அவனுக்கு எதைக் காணிக்கையாக்குவது? தன்னிடம் இருப் பதில் சிறந்ததிலும் சிறந்ததை! அப்படி, தங்களின் சிறப்பான சிற்பக் கலையை இங்கே கிருஷ்ணாபுரத்தில் காணிக்கையாக்கியிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்!

கிருஷ்ணாபுரத்துச் சிற்பிகளின் தவம் இப்படியென்றால், அவர்களுக்கும் முற்காலத்தில் திருமங்கையாழ்வாரின் தவம் எப்படி இருந்தது தெரியுமா? பாதம்தோய நடந்து, பரந்தாமனின் தலங்களைத் தேடித் தேடித் தரிசித்து, அவன் புகழைப் பாடிப் பாடி இன்புற்றார். திருவெவ்வுளூர் எனும் திருவள்ளூர் திருத்தலத்தில் அவர் கண்ட காட்சியும், பாடிய பாடலும் ஈடு இணை இல்லாதவை. அழகினும் அழகான இந்த க்ஷேத்திரத்தில் நாகத்தணையில் துயிலும் பெருமாள், ஆழ்வாருக்குக் கண்ணனாகவே காட்சியளிக்கிறார்!

கிருஷ்ணாவதார காலத்தில் பாண்டவர்களுக்காக அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றவர் அல்லவா இவர்! தூது செல்லுதல் என்பது சாதாரணமானவர்கள் செய்யும் செயல். அப்படியான செயலை தன் பக்தர்களுக்காகச் செய்தாரே! இவர் எவ்வளவு எளியவர். இந்தத் தூது விஷயத்தில் ஒரு விசேஷமும் உண்டு என்று சிலாகிப்பார்கள் பெரி யோர்கள். ராமாவதாரத்தில் ஸ்ரீராம னுக்காக இலங்கைக்கு தூது சென்றார் அல்லவா அனுமன். அங்கே சீதாப் பிராட்டியைக் கண்டு மோதிரம் அளித்து, அசோகவனத்தை அழித்து, ராவணனுடன் வாதிட்டு, இலங்கைக்கு எரியூட்டி வந்த அனுமனின் அந்தத் தூதும் பெரிதாகப் புகழப்படுகிறதே!

அதைப் பார்த்த எம்பெருமானுக்கு தானும் தூது செல்ல வேண்டும் என்று ஆசை உண்டானதாம். அது ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் நிறைவேறியதாம். அப்படி, கௌரவர்களின் அவையில் தூதனாகப் போய் நின்றவரே, இங்கே திருவெள்ளூர் எனும் இந்தத் தலத்தில் களைப்புத் தீர கிடந்தகோலத்தில் உறங்குகிறார் என்று அனுபவிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

முன்ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால் மாளமுனிந்து - அவனே
பின்ஓர் தூது ஆகுமன்னர்க்காகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் எனநின்றான் எவ்வுள் கிடந்தானே

- எனப்பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்கவேண்டிய க்ஷேத்திரம் இது!

திருமழிசை எனும் தலத்தில் வேறு ஒரு தவம் நிகழ்ந்தது. இங்கே தவம் செய்தவர்கள் பிருகு, மார்க்கண்டேயர் ஆகியோர். ஜகத்ரட்சகனாம் திருமாலைத் தரிசிக்கும் விருப்பத்துடன், அந்த விருப்பத்தை அடைவதற்கான தீவிர முயற்சியாய் பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்ற முனைந்தனர் இருவரும். ஆனால், ஆறு ஆண்டுகள்

மட்டுமே நீடித்தது தவம். ஆனாலும், அதற்குப் பலன் கிடைத்தது. பூரி எனும் திருத்தலத்தில் பாதியளவு திருமேனியுடன் ஸ்ரீஜெகந்நாதனாக அவர்களுக்குக் காட்சி தந்தார் பெருமாள். இதனை அர்த்தஸேவை என்பார்கள். சரி! பரம்பொருளின் முழுமையான ஸேவையைத் தரிசிப்பது எப்படி? அதற்கும் பரம்பொருளே பதில் சொன்னது. 'பிரம்மதேவனின் துலாக்கோல், நிறுவை செய்து சுட்டிக்காட்டும் திருத்தலத்தில் தவமியற்றுங்கள்’ என்று அவர்களுக்கு அருளப்பட்டது.

தவமாய் தவமிருந்து...

அவ்வண்ணமே செய்ய விரும்பிய முனிவர்கள் இருவரும் சத்யலோகம் சென்று பிரம்மனை வணங்கினார்கள். ''பூலோகத்தில் மிகச்சிறந்த விஷ்ணு க்ஷேத்திரத்தில் தவமியற்ற ஆசைப்படுகிறோம். அத்தகைய தலம் எது என்பதைத் தாங்கள் அறிவுறுத்த வேண்டும்'' என்று வேண்டினார்கள். பிரம்மதேவனும் இசைந்தார். அவரது  ஆணைப்படி துலாக்கோலில் ஒரு தட்டில் திருமழிசை தலமும் மற்றொன்றில் ஏனைய பூவுலகு மொத்தமும் வைக்கப்பட்டது. திருமழிசை இருந்த தட்டே எடைகூடித் தாழ்ந்தது. முனிவர்கள் நிதர்சனத்தைக் கண்டனர். திருமழிசையின் மகிமையை உணர்ந்தனர்,.

அற்புதமான அந்தத் திருத்தலத்தில் தவமியற்றி, ஸ்ரீஜெகந்நாதரின் முழு உருவ திருக்காட்சியைக் காணும் பாக்கியம் பெற்றார்கள். இதனால் இந்தத் தலத்துக்கு மத்திய ஜெகந்நாதம் என்ற சிறப்பு உண்டு. பூரி திருத்தலம் உத்தர ஜெகந்நாதம்; ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணி திருத்தலம் தட்சிண ஜெகந்நாதம்.

சென்னையில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் பூந்தமல்லியை அடுத்துள்ளது திருமழிசை. இந்தத் திருத்தலத்தில்தான் திருமழிசை ஆழ்வார் அவதரித்தார். அழகு மிளிரும் ஆலயத்தில் கிழக்கு நோக்கியவண்ணம் சத்யபாமா, ருக்மிணி சமேதராக அருள்பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீஜெகந்நாதப் பெருமாள். மிகுந்த விருப்பத்துடன் பக்தர்களை அருகில் அழைத்து  அருள்பாலிக்கும் கோலத்தில் திகழும் இந்தப் பெருமாளைக் காணக் கண்கோடி வேண்டும். அருகிலேயே பிருகு முனிவரும், மார்க்கண்டேயரும். உற்ஸவர் ஜெகந்நாதர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக அருள்கிறார்.

'மகிசார க்ஷேத்திரம்’ எனப் புராணங்கள் போற்றும் இந்தத் திருத்தலத்துக்கு ஒருமுறையாவது வந்து, பிருகு முனிவரும் மார்க்கண்டேயரும் தவமாய் தவமிருந்து தரிசித்த ஸ்ரீஜெகந்நாதப் பெருமாளையும், இந்தத் தலத்துப் பெருமாளாம் ஸ்ரீவீற்றிருந்த பெருமாளையும் வழிபட்டு, திருமழிசையாழ்வாரின் பதம் பணிந்து வணங்கி வாருங்கள், உங்கள் வாழ்விலும் மகிமைகள் சூழும். சகல சௌபாக்கியங்களும் அஷ்ட ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தைச் சேர, தவமாய் தவம் கிடக்கும்.

- அவதாரம் தொடரும்...