Published:Updated:

150 வருடங்களாக... கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீவீரட்டீஸ்வரர்!

ஆலயம் தேடுவோம்! செய்யாறு - காழியூர் ஸ்ரீவீரட்டீஸ்வரர் கோயில்வி.ராம்ஜி

பிரீமியம் ஸ்டோரி
##~##

பாடல் பெற்ற தலங்கள், வைப்புத் தலங்கள், திருவிளையாடற் புராணம் நிகழ்ந்த தலங்கள் என்பதைப் போல, சிவனாரின் வீரம் வெளிப்பட்ட தலங்களும் உள்ளன. இதனை அட்ட வீரட்டத் திருத்தலங்கள் என்று சொல்லுவார்கள்.

அதாவது, ஸ்ரீபிரம்மாவின் சிரம் அறுத்து அவரின் செருக்கை, கர்வத்தை ஒடுக்கிய தலம்- திருக்கண்டியூர். இது தஞ்சாவூர் திருவையாறுக்கு அருகில் உள்ளது. அடுத்து, அந்தகாசுரனை அழித்து வதம் செய்த தலம் என்று திருக்கோவலூர் எனப்படும் திருக்கோவிலூர் தலத்தைச் சொல்வார்கள். விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ளது இந்த ஊர்.

இதேபோல், திரிபுரத்தை எரித்த தலம் என்று திருவதிகையையும், தட்சனின் தலையைத் தகர்த்து ஆணவத்தை அழித்த தலமாக திருப்பறியலூரையும் சொல்லுவார்கள், சிவபக்தர்கள். சலந்தராசுரன் என்பவனை அழித்தொழித்ததாக திருவிற்குடி தலத்தையும், கயமுகாசுரன் என்பவனைக் கொன்று அவனின் தோலைக் கிழித்து உடுத்திக்கொண்டதாக திருவழுவூர் தலத்தையும் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

சிவனார் மன்மதனை எரித்துக் கொன்றது திருக்குறுக்கை என்கிற தலத்தில்; மார்க்கண் டேயனைக் காத்தருளும் பொருட்டு, பாசக்கயிறு வீசிய எமனை உதைத்த தலம் திருக்கடவூர்.

150 வருடங்களாக... கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீவீரட்டீஸ்வரர்!

தேவாரப் பாடல் பெற்ற தலங்களைத் தவிர்த்தும் பல கோயில்கள் உள்ளன. மாடக் கோயில்கள், சாளரம் வழியே சிவனாரைத் தரிசிக்கும் தலங்கள், நந்தி விலகிய தலங்கள், வைப்புத் தலங்கள், திருமணக் கோலம் காட்டி அருளிய தலங்கள் என்றும் சொல்லுவது போல, இந்த அட்ட வீரட்டத் தலங்கள் தவிரவும், ஸ்ரீவீரட்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவனார் கோயில் கொண்டிருக்கும் தலங்கள் நிறையவே உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில், புளியரம்பாக்கத்தில் இருந்து உள்ளே சுமார் 4 கி.மீ. தொலைவு செல்ல... அங்கே காழியூர் எனும் கிராமம் உள்ளது. அங்குதான் ஸ்ரீவீரட்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் சிவ ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு அம்பாளின் திருநாமம் - ஸ்ரீகாமாட்சி அம்பாள்.

குளமும் கோயிலுமாகப் பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருந்திருக்கிறது ஒரு காலத்தில். குளம் இப்போது சகதிக் குட்டையாகிவிட்டது. கோயில் முழுவதுமாகச் சிதிலம் அடைந்து, வழிபாடுகளே இல்லாமல் அவல நிலையில் உள்ளது.

150 வருடங்களாக... கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீவீரட்டீஸ்வரர்!

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் காழியூர் கோட்டத்து, காழியூர் நாட்டு ஆளுடையார் திருவோத்தூர் உடையார் எனப்படும் செய்யாறு ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில், காழியூர் தலம் குறித்த கல்வெட்டுகள் உள்ளன. ஒருகாலத்தில், திருவோத்தூர் எனப்படும் செய்யாறு, குடநகர், பனம்பூர் எனப் பல ஊர்களும் காழியூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஊர்களாக இருந்திருக்கின்றன. சோழர்கள் காலத்தில் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயிலும், காழியூர் ஸ்ரீவீரட்டீஸ்வரர் கோயிலும் கட்டப்பட்டுள்ளன.

அந்தக் காலத்தில், காழியூரில் ஸ்ரீவீரட்டீஸ்வரர் கோயிலில் திருவாதிரையையும் மகா சிவராத்திரியையும் அமர்க்களமாகக் கொண்டாடியிருக்கிறார்கள், ஊர்மக்கள். சிவனாரைத் தரிசிப்பதற்காகச் செய்யாறில் இருந்தும், அந்தப் பக்கம் வந்தவாசியில் இருந்தும், காஞ்சிபுரத்தில் இருந்தும் வெள்ளமெனத் திரண்டு வந்து ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் ஜனங்கள். ஆனால், இன்றைக்கு வழிபாடுகளும் இல்லை; விசேஷங்களும் கொண்டாட வசதியில்லை.

மூன்று கால பூஜைகள் நடந்த இந்தக் கோயிலில் இன்று ஒருகால பூஜைகூட நடக்க வழியில்லாமல், புது வஸ்திரமோ நைவேத்தியமோ இல்லாமல், பக்தர்களின் வருகைக்காகவும் அவர்களுக்கு அருள்வதற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் ஸ்ரீவீரட்டீஸ்வரரும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும்.

150 வருடங்களாக... கும்பாபிஷேகத்துக்குக் காத்திருக்கிறார் ஸ்ரீவீரட்டீஸ்வரர்!

''எங்க பூர்வீக கிராமம் இது. இந்தக் கோயில்ல எப்ப கும்பாபிஷேகம் நடந்துச்சுன்னு எங்க தாத்தாவுக்குக்கூட தெரியலை. எப்படியும் கும்பாபிஷேகம் நடந்து 150 வருஷமாவது இருக்கும். ரொம்பச் சக்தி வாய்ந்த கோயில்னு அப்பா சொல்லிக்கிட்டே இருப்பார். செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் மார்கழி உத்ஸவத்துல எங்களுக்குன்னு ஒருநாள் மண்டகப்படி இருக்கு. அன்னிக்கி அபிஷேகம், பூஜையெல்லாம் எங்களுது தான்! 'இதேபோல நம்மூர் வீரட்டீஸ்வரர் கோயில்ல சிதிலம் அடைஞ்ச நிலை மாறி, கோயில் பொலிவோடு விளங்கணும். சீக்கிரமே  கும்பாபிஷேகம் நடக்கணும்’னு அப்பா புலம்பிக்கிட்டே இருந்தார். அவர் காலத்துல அது நடக்காம போயிடுச்சு. எங்க காலத்துலயாவது திருப்பணிகள் நடந்து, கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடக்கணுங்கறதுதான் எங்க ஊர் மக்களோட பிரார்த்தனை! அதுக்கு அந்த சிவனார்தான் அருள்புரியணும்'' என்று கண்ணில் நீர் ததும்பச் சொல்கிறார் காழியூர் தட்சிணாமூர்த்தி.  

''எதிரிகள் தொல்லை, செய்வினைக் கோளாறுன்னு குடும்பத்துல எதுனா பிரச்னை இருந்துச்சுன்னா, இங்கே வீரட்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து வேண்டிக்கிட்டுப் போவாங்க. சதுர வடிவ ஆவுடையாரைப் பார்க்கும்போதே, நம்ம பாவமெல்லாம் பறந்தோடிடும். எதிரிகள் தொல்லையெல்லாம் ஒழிஞ்சிடும். அத்தனைக் கம்பீரம்!

அதேபோல, இங்கே இருக்கிற ஸ்ரீகாமாட்சி அம்பாளும் வரப்பிரசாதி. கருணைத் தாய். இவளுக்குப் புடவை சார்த்தி, குங்கும அர்ச்சனை பண்ணி, அரளிப்பூ மாலை போட்டு இவளை வேண்டிக்கிட்டாப் போதும்... ருதுவாகாம இருக்கிற பெண்கள் சீக்கிரமே ருதுவாகிடு வாங்க. நல்ல வரன் அமைஞ்சு மனசுக்கு நிறைவா கல்யாணம் நடக்கும். வீட்டுல சகல சுபிட்சங்களும் நிறைஞ்சிருக்கும்னு சொல்லுவாங்க. இத்தனை சக்தி வாய்ந்த காமாட்சி அம்பாளைக் கவனிக்காம இருக்கோமே... அவளுக்கு அலங்காரம் பண்ணி, பூஜை பண்ண முடியாம கோயில் இப்படி இடிஞ்சும் சிதைஞ்சும் கிடக்குதேனு ஆதங்கமாவும் வருத்தமாவும் இருக்கு'' என்கிறார் காழியூர் கிராமத்துப் பெரியவர் ஒருவர்.

ஸ்ரீவீரட்டீஸ்வரர் கோயிலில் விழாக்கள் நடைபெற வேண்டாமா? ஸ்ரீகாமாட்சி அம்பாள் குடிகொண்டி ருக்கும் ஆலயம் களையுடன் மிளிர வேண்டாமா? கல்யாண வரம் தரும் ஆலயத்தில் நைவேத்தியமும் பூஜைகளும், ஸ்வாமிக்கும் அம்பாளுக் கும் அபிஷேகங்களும் நடந்தால்தானே காழியூர் நாட்டு மக்களின் கழனிக ளெல்லாம் செழித்து வளரும்! கழனிகள் செழித்து வளர்ந்தால்தானே, பசியாறுவார்கள் மக்கள்.

'புல்லினால் ஐந்து கோடி, புது மண்ணால் பத்துகோடி,
செல்லுமா ஞாலம் தன்னில் செங்கல்லால் நூறு கோடி,
அல்லியம் கோதை கேளாய் அரன் உறை ஆலயத்தை
கல்லினால் செய்வித்தோர்கள் கயிலைவிட்டு அகலாரன்றே!’

எனும் சொல்லுக்கு ஏற்ப, திருப்பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இங்கே, மண்ணாகவும் செங்கல்லாகவும் சிமென்ட்டாகவும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய் வோம். திருப்பணியில் பங்கேற்போம். நாமும் நம் சந்ததியும் காலகாலத்துக்கும் சிறப்புடன் வாழ்வோம்!

படங்கள்: தி.குமரகுருபரன்

எங்கே இருக்கிறது?

திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது புளியரம்பாக்கம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், சுமார் 4 கி.மீ. பயணித்தால், காழியூரை அடையலாம். ஆரணியில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு. செய்யாறில் இருந்து பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ வசதி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு