Published:Updated:

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

காலக் கணிதத்தின் சூத்திரம்!சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

பிறப்புரிமை பறிபோய்விடாமல் காப்பாற்றும் முயற்சியில் எச்சரிக்கையுடன் செயல்படும் ஜோதிடம். ஆயுள், ஆரோக்கியம், கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மகிழ்ச்சி, வீடுபேறு போன்ற விஷயங்களில் அவரவர் சேமித்த புண்ணியத்தின் (நன்மையின்) கண்ணோட்டத்தில், நிறைவின் அளவை அது வரையறுக்கும்.

சிந்தனையின் போக்கானது, முன்ஜென்ம வாசனையின் இணைப்பில் மாறுபட வாய்ப்பு உண்டு. கர்மவினை, வாழ்க்கைப் பயணத்தின் வரைபடத்தை நிர்ணயிக்கும். ஒருவேளை, துயரம் தோய்ந்த பயணமாக மாறுமானால், அதிலிருந்து எளிதில் வெளிவருவதற்கு வழியும் சொல்லும். மகிழ்ச்சியான வாழ்க்கையை ஈட்டித்தர ஒத்துழைக்கும். ஒருவேளை, வாழ்க்கைப் பயணம் எல்லா வழியிலும் மகிழ்ச்சி பொங்கும் அளவுக்கு இருக்குமானால், அதனால் ஏற்படும் இறுமாப்பின் காரணமாக, தடுமாறாமல் இருக்கவும் வழிமுறைகளைச் சொல்லி எச்சரிக்கும்.

கிரக நிலை அமைப்பை அடிப்படையாக வைத்து, முன்ஜென்ம கர்மவினையை வெளிச்சத்துக்குக் கொண்டுவர உதவும் முனிவர்களின் சிந்தனையை இணைத்து, ஜாதகனின் வாழ்க்கைப் பயணத்தைப் படம் போட்டுக் காட்டுவார் ஜோதிடர். அவருடைய தனிப்பட்ட சிந்தனை அதில் கலக்காது. முனிவர்களின் சிந்தனை மட்டுமே அதை வெளிக்கொண்டு வருவதற்கான தகுதி பெற்றது. தவம், பண்பு, பொதுநலன் குறித்த அக்கறை, பாரபட்சம் இல்லாத சிந்தனை, உலக நன்மை ஆகியவற்றில் உறைந்த மனம் படைத்தவர்களாக மாறும்போது, முனிவர்களின் சிந்தனைகளோடு இணைய இயலும்.

தற்காலச் சூழலில் அப்படியொரு சிந்தனையை நாம் எட்ட முடியாது. மனித சிந்தனையின் அளவு ஒட்டுமொத்தமாக சிறு வட்டத்தில் ஒடுங்கிவிட்டது. மறைவில் இருக்கும் கர்மவினையை வெளிக்கொண்டு வருவதில் விஞ்ஞானம் இன்னும் வெற்றி பெறவில்லை. மருத்துவத்துறை யில் ஊடுருவிய விஞ்ஞானம், மூளையின் செல்லில் உறைந் திருக்கும் அதிசயத்தையோ, அபாயத் தையோ முழுமையாக அறிந்துகொள்ள இயலாமல் மௌனம் சாதிக்கிறது. வெளியுலகில் நிகழும் சீரழிவுக்கும் சீர்திருத்தத்துக்குமான மூலப்பொருள் அந்த செல்லில் ஒளிந்துகொண்டிருக்கிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

உலக சாம்ராட்டாக விஸ்வரூபம் எடுத்து விளங்கும் நவீன மருத்துவம், பிணியோடு சேர்ந்து வாழ வைக்கிறது; பிணியை அகற்றி வாழவைக்க அதனால் இயலவில்லை. முனிவர்களின் சிந்தனைக்கு மேலாக தனது சிந்தனையை மிகைப்படுத்திக்கொண்டு பலன் சொல்பவர்கள், மனச்சாட்சிக்கு மாறாக மக்களைத் திசை திருப்பு பவர்களே ஆவர். சாதாரண மனிதனால் உண்மைப் பலனை எடுத்துரைக்க இயலாது. முனிவர் களுடைய சிந்தனைகளின் துணையில் அது இருக்க வேண்டும். ஜோதிடத்தின் தனி உருவத்தைத் தெரிந்துகொள்ள இயலாத சிந்தனை, அதன் ஆராய்ச்சியில் இறங்குவது அதிசயமாக இருக்கிறது.

மக்கள் மாக்கள் அல்ல. சொல் வளத்தில் நிழலாடும் உட்கருத்து அவர்களுக்குப் புலப்படும். பலன் சொல்பவர் ஏமாற்றத்தைத் தழுவுவதும் உண்டு. ஆக... கிரக நிலையை வைத்து, முனிவர்களின் சிந்தனையை இணைத்து வருங்காலத்தை வரையறுக்கும் திறமை இருந்தால் போதும். சுய சிந்தனையை நுழைத்து நவீன ஜோதிடத்தை உருவாக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆராய்ச்சி தேவை இல்லை. அதை அறியும் திறன் வேண்டும். ஓர் உயர்ந்த சிந்தனையில் விளைந்த தகவலைப் பொய் என்று சொல்வதற்கு, அதுகுறித்த அறிவு தேவையில்லை. உண்மை என்று நிரூபிக்கவே அதிகம் பாடுபட வேண்டும்.

லோகாயத வாழ்வுடன் முற்றுப்பெற்றுவிடாது ஜோதிடம். ஆன்மிக வாழ்வே அதன் எல்லை. அதை அடைவது பிறப்புரிமை. பூமியில் பிறக்கும் ஒருவனுக்கு, அது கிடைக்காமல் இருக்கக் கூடாது. கர்மவினை மனத்தில் தோன்ற, புத்தி அதை ஆராய்ந்து முடிவை எட்டிச் செயல்பட்டு, சுக- துக்கங்களை ஏற்க வைக்கும். சுக- துக்கங்களின் தாக்கம் உடலிலும் உடல் உறுப்புகளிலும் பரவி வளர்வதால், கர்மவினையானது பிணியையும் தோற்றுவிக்கும். 'முன்ஜென்ம வினைகள் பிணியாக மாறி துன்பத்தை நடைமுறைப்படுத்துகின்றன’ என்கிறது கர்மவிபாகம் (பூர்வஜன்மகிருதம் பாபம் வியாதிரூபேண பாததே).

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

ஒரு பொருளின் இயல்பானது, அந்தப் பொருள் உருவாகும்போதே ஒட்டிக் கொண்டிருக்கும். இளமையில் உடலுழைப்பை இழந்தவன், முதுமையில் துயரத்தைத் தழுவுவான். இளமையில் அளவுக்கு மீறிய உடலுழைப்பை ஏற்றவனும் முதுமையில் கண்கலங்குவான். செய்த தவறு, தண்டனையை உணரவைக்காமல் மறையாது. கரும்பின் இனிப்பும், பாகையின் கசப்பும் பிற்பாடு இணைந்த சுவையன்று. கரு உருவாகும்போதே இயல்பு ஒட்டிக்கொண்டுவிடும். அது, அவன் செய்து பழக்கப்பட்ட கர்மவினையின் மறு உருவம். அவன் சுதந்திரன் இல்லை; கர்மவினைக்குக் கட்டுப்பட்டவன். மனம் போன போக்கு அவனது இயல்பாக இருக்கிறது. அந்த அழுக்கில் இருந்து அவனை மீட்க, அத்தனை தரிசனங்களும் ஓயாமல் பரிந்துரைக்கின்றன. ஜோதிடம் ஒரு தரிசனம். ஆண்- பெண் பாகுபாடின்றி, அத்தனைப் பேரும் விளையாட்டாகக் கையாளுகிறார்கள் என்பதால், அதன் தரம் மங்கிவிடாது. மழலைகள் இன்டர்நெட்டை கையாளுகின்றனர். எனினும், அதன் தரம் குறையவில்லையே!

திருமணம் பிறப்புரிமையில் அடங்கும். அது, தகுதியிருந்தும் மறுக்கப்படக்கூடாது என்று ஜோதிடம் எண்ணும். கர்மவினை அதற்கு இடையூறாக இருந்தால், அதனைத் தோற்கடித்து பிறப்புரிமையை நிலைநாட்ட வழி சொல்லும். மனத்தை கர்மவினையின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு, சுய சிந்தனையால் கர்ம வினையை அடக்கி வெற்றிபெற வைக்கும். இதைப் பரிகாரம் என்றும் சொல்லலாம். 'பிணி பரிகாரத்தால் மறைந்துவிடும்’ என்று கர்ம விபாகம் அறிவுறுத்தும் (தச்சாந்திநௌஷதை: தா: நை: ஜபஹோமார்ச்சனாதிபி:).

கர்மவினையைச் செயல்படாமல் செய்யவோ, செயல்பட்டாலும் அதை நீர்த்துப்போக வைக்கவோ பரிகாரத்துக்குத் திறமை உண்டு. மனத்துடன் இணைந்த பரிகாரம், மனத்தைத் தட்டி எழுப்பி கர்ம வினையில் இருந்து அகற்றி, சுய சிந்தனையில் செயல்படவைக்கும். 'செழிப்புடன் வளர்ந்தோங்கி காய்த்துக் குலுங்கும் மரத்தின் வேர் அறுக்கப்பட்டால், அத்தனையும் ஒரு நொடியில் பட்டுப்போய் மறைந்துவிடும். அதுபோல், உடலிலும் உள்ளத்திலும் துயரம் பரவி, பூதாகரமாக வளர்ந்தோங்கும்போது, அதன் வேரான கர்ம வினை அறுபடும்போது, மொத்த துயரமும் சடுதியில் மறைந்துவிடும்’ என்கிறது, பரிகாரத்தை அறிமுகம் செய்த கர்ம விபாகம். முனிவர்களுடைய பரிகார நூலை அறவே ஒதுக்கி, பொது அறத்தைப் பரிகாரமாகச் சித்தரித்து விளையாடு பவர்களும் இருக்கிறார்கள் என்பதால், பரிகாரத்தின் தரம் குறைந்துவிடாது.

வெறும் தகவலைத் திரட்டித் தருவது மட்டுமே ஜோதிடத்தின் வேலையன்று. கசப்பான உணர்வுகளில் இருந்து மீட்டுத் தரும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது ஜோதிடம். விஷக்கிருமிகளில் தோன்றிய பிணிக்கிருமிகளை அழிக்கும்போது, பிணி அகன்றுவிடுகிறது. அறியாமை அல்லலுக்குக் காரணம் ஆகும்போது, அறியாமையை விலக்கினால், அல்லல் அகன்றுவிடும். கொந்தளிப்பு உருவாகும்போது, அதற்குக் காரணமானவர்களை அடக்கிவிட்டால், கொந்தளிப்பு தணிந்துவிடும். பித்தம் அதிகமாகி காமாலையில் ஆழ்ந்துவிடும் போது, பித்தத்தைக் கட்டுப்படுத்தினால் காமாலை அகன்றுவிடும். தவறான சிந்தனைகள் துயரத்துக்குக் காரணமாகும்போது, அந்தச் சிந்தனைகளுக்குக் காரணமான கர்மவினை யைப் பரிகாரத்தால் விலக்கினால், துயரம் அகன்றுவிடும்.

சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்

துயரத்திலிருந்து விடுபட முனிவர்கள் அறிமுகம் செய்த பரிகாரத்தை, ஜோதிடம் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. வராஹமிஹிரர் தனது பிருஹத்ஸம்ஹிதையில் பரிகாரங்களைத் தொகுத்து அளித்திருக்கிறார் (அதகர்மவிபாக: உச்யதே).

பெண் ஜாதகம் லக்னத்திலிருந்து 8-வது வீடு, வரும் கணவனின் ஆயுளை வரையறுக்கும். 7-ம் வீடு, கணவனிடம் இருந்து பெறும் இன்பத்தின் அளவை வரையறுக்கும். அத்துடன் அவனுடைய இயல்பையும் சுட்டிக்காட்டும். லக்னம், சந்திர லக்னம் - இரண்டையும் அலசி, அவளது உடல், உள்ளம், அழகு, ஆயுள் ஆகிய அத்தனையையும் வரையறுக்க வேண்டும். லக்னத்துக்குக் காரகன் சூரியன். அவன் ஆன்மா. ஆன்மகாரகன் சூரியன்; மனத்துக்குக் காரகன் சந்திரன். ஆன்மாவும் மனமும் இணைந்தால் வாழ்வு முளைக்கும். அடிப்படையான தகுதி, நிறைவு. அதை லக்னமும் சந்திர லக்னமும் உறுதி செய்யும் என்கிறது ஜோதிடம் (ஆன்மா மனஸாஸம்யுஜ்யதே...).

உடல் இருந்தாலும், பலனை அனுபவிப்பது மனம். அதுவே மகிழ்ச்சியையும் துயரத்தையும் உணரும். ஆன்மா உணராது; உணரும் தகுதியை மனத்துக்கு அளிக்கும். இந்த சூரிய, சந்திரர்களின் இணைப்பை உறுதி செய்த பிறகு, அவர்கள் எட்ட வேண்டிய பலனை இணைக்க வேண்டும்.

சூரியன் வெப்பம்; சந்திரன் தட்பம். தட்பத்தில் இணைந்த கர்ம வாசனையை... வெப்பம் மாறுபாட்டை விளைவித்து, பலனைச் சுவைக்க வைக்கிறது. தட்பத்தில் இருக்கும் தாமரை மொட்டு அளவான வெப்பத்தின் சேர்க்கையில் மலருகிறது. மாறுபாட்டை ஏற்படுத்த வெப்பத்தின் பங்கு வேண்டும். உற்பத்தியை ஏற்படுத்த தட்பத்தின் பங்கு அவசியம். மனத்தில் ஒட்டிக்கொண்ட வாசனையை வளரவைக்கிறது தட்பம். அதன் மாறு பாட்டை நடைமுறைப்படுத்துகிறது வெப்பம். ஆகையால் சூரிய, சந்திரர்கள் இணைப்பு எல்லாவற்றுக்கும் ஆதாரம். லக்னம்- சந்திர லக்னம் இவற்றின் இணைப்பை சூரிய, சந்திரர்களின் இணைப் பாகச் சுட்டிக்காட்டி, அவற்றுக்கான இயல்புகளின் இணைப்பு, கர்மவிபாகத்தின் தோற்றத்தையும் மாற்றத்தையும் நிகழவைக்கிறது (தாஸாம்து பர்த்ருமரணம் நிதநெலபு:ச).

நீண்ட தாம்பத்தியத்துக்கு கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டும். 8-ம் பாவத்தை வைத்து அதை வரையறுக்கச் சொல்லும் ஜோதிடம். 7-ம் பாவம் தனது விருப்பம் நிறைவேறுவதைச் சுட்டிக்காட்டும். அத்துடன் கணவனின் ஆரோக்கியம், மனத்தெளிவு ஆகியவற்றை வரையறுக்கும். அவளின் தகுதி, கணவனின் தகுதி ஆகிய அத்தனையும் தெரியும்போது, வாழ்க்கைக்கு ஆதாரமான இணையை அடையாளம் கண்டுகொள்ள இயலும்.

லக்னத்தை வைத்தும் சந்திர லக்னத்தை வைத்தும் இதை ஆராய வேண்டும். இரண்டில் எது சிறப்பாக இருக்குமோ, அதை ஏற்க வேண்டும். லக்னத்தைவிட, சந்திரனில் இருக்கும் கிரக நிலை சிறப்பாக இருந்தால், அது நடைமுறைக்கு வரும். சந்திரன் மனம். அதற்கு லக்னத்தின் தகுதி உண்டு. இன்னும் சொல்லப்போனால், சந்திர லக்னம் சிறப்பாக இருந்தாலும், உள்ளத்தின் இணைப்பில் பலனின் உறுதிக்கு உத்தரவாதமாக மாறிவிடும். லக்னத்தில் இருந்தாலும் அது மனத்தோடு இணைந்து செயல்படுவதால், லக்னம் பலமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்று ஜோதிடம் தகவல் தரும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு